Search This Blog

6.4.09

கலைஞரும், எம்.ஜி.ஆரும்


கலைஞரையும் எம்.ஜி. ஆரையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டேன்
தமிழர் தலைவர் வெளியிட்ட முக்கிய சம்பவம்


கலைஞர் அவர்களையும் எம்.ஜி.ஆர் அவர்களையும் இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டேன் என்று பழைய சம்வத்தை எடுத்துக்கூறி திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கமளித்து உரையாற்றினார்.

முரசொலி அறக்கட்டளை சார்பில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு கலைஞர் விருது மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி 31.03.09 சென்னை அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியிலே திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய முன்தினத் தொடர்ச்சி வருமாறு:-

அருமை நண்பர் சோலையை அடையாளம் கண்டிருக்கின்றீர்கள் நண்பர் யோகா ஒளிப்பட நிபுணர். அவர் மற்றவர்களைப் படம் எடுத்து படம் எடுத்துப் பழக்கப்பட்டவர்கள். இன்றைக்குத்தான் அவர் கேமரா இல்லாமல் உட்கார்ந்திருக்கின்றார்.
அவரை மற்றவர்கள் படமெடுக்கின்ற காட்சியைப் பார்க்கின்ற பொழுது எங்களுக்கு அளவு கடந்த மகிழ்ச்சி.

ஒரு தோழனை, ஒரு தொண்டனை அடையாளம் காட்டுவதிலே கலைஞருக்கு நிகர் கலை ஞரே தவிர, வேறு யாரும் கிடையாது. (கைதட்டல்)

அந்த வகையிலே சோலையை அவர்கள் எப்படி அற்புதமாகக் கண்டறிந்தார்களோ அதே போல நடிகர் தியாகு அவர்கள். அவருக்கு முரசொலிமாறன் அவர்களுடைய பெயராலே அமைந்த அந்த சிறப்பு விருதினை அவர்களுக்கு இங்கே தந்திருக்கின்றார்கள். இவர்கள் எல்லாம் நன்றி செலுத்துகின்ற நேரத்திலே ஒரு செய்தியை சொல்ல விழைகின்றேன். சிறிது நேரம் எடுத்துக் கொண்டாலும் அவைகளைப் பதிவு செய்ய வேண்டும்.

திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று இருந்தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எம். ஜி. ஆர் பிரிந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி ஒரு குறிப்பிட்ட காலம் நடத்தி விட்டார். அவர் நடத்தி முடித்து வெற்றிபெற்றவுடனே அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது.
இதுவரையிலே பல பேருக்கு இது தெரியாத செய்தி. ஆனால் இரண்டு சாட்சியங்கள் இங்கே இருக்கின்றார்கள். எனவே அதைச் சொல்லி இதைப் பதிய வைக்க வேண்டியது மிக முக்கியம்.
அவருக்கே ஒரு எண்ணம் தோன்றியது. தான் அ.தி.மு.க கட்சியைத் தொடங்கி தி.மு.க வைப் பிளந்தது நியாயமல்ல என்று உறுத்திய காரணத்தாலே மீண்டும் கலைஞர் அவர்களோடு சேர வேண்டும் என்று எம். ஜி. ஆர் அவர்கள் விரும்பினார். அதற்கு யாரைப் பிடிக்க வேண்டும் என்று பார்த்தார். யார் சொல்ல வேண்டும்? யார் முயற்சி எடுக்க வேண்டும்?
இனி திராவிடமுன் னேற்றக் கழகம் என்ற ஒரே ஒரு அமைப்பு தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்த நேரத்திலே என்னைப் பார்க்க எம்.ஜி.ஆர் அவர்கள் ஒருவரை அனுப்பினார்.

நேரே வந்து பார்க்க வேண்டும். இந்த காரியத்திற்காக என்று சொல்லி அவரிடம் சென்று இதைச் சொல்லி நீங்கள் அழைத்து வாருங்கள் என்று சொன்னார்கள்.

அப்படி வந்தவர் யார் என்றால், எழுத்தாளர் சோலை இதோ இங்கு இருக்கின்ற சோலை தான் அன்றைக்கு விடுதலை அலுவலகத்திற்கு வந்தார். இதுவரை நான் யாரிடத்திலும் சொல்ல வில்லை.

சோலை அவர்களை வைத்துக் கொண்டு சொல்கின்றேன். அவரே நேற்று சொன்னார் - என் சார்பாக நீங்கள் பேசி விடுங்கள். இதையும் பதிவு செய்து விடுங்கள். திராவிடர் இயக்க வரலாறு தெரியாதவர்கள் எல்லாம் இன்றைக்கு ஏதேதோ உளறிக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு இது தெரிய வேண்டும் என்பதற்காக இதைச் சொல்லுங்கள் என்று சொன்னார்.
உடனடியாக நான் எம்.ஜி.ஆர் அவர்களை முதல் முறையாக இராமாவரம் தோட்டத்திற்குப் போய் சந்திக்கின்றேன். எம்.ஜி.ஆர் இரண்டரை மணி நேரம் விளக்கமாகப் பேசினார். சிற் றுண்டி அளித்து பேசிக் கொண்டிருந்தார். சோலை அவர்கள் வெளியே இருந்தார். இவர்கள் இவ்வளவு நேரம் பேசுகிறார்களே என்று எண்ணிக்கொண்டிருந்தார். இவரைப் பார்த்த சில நண்பர்கள் என்ன பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவர் எதற்கு இங்கே வந்தார் என்று கேட்டார் கள்.

அதற்கு சோலை பதில் சொல்லியிருக்கிறார். அவர் ஏதோ கல்வி நிலையம் சம்பந்தமாக வந்திருக்கின்றார் என்று இவர் சொன்னார்.

பேசிக்கொண்டிருக்கின்ற பொழுது எம். ஜி. ஆர் சொன்னார், கலைஞர் அவர்களிடம் சொல் லுங்கள்-நான் கலைஞர் அவர்களைத்தான் என்றைக்கும் தலைவராக ஏற்றுக் கொண்டிருக் கின்றவன்.

எப்படியோ சூழ்நிலை - பிரிந்துவிட்டோம். ஆனால் இரு இயக்கங்களும் ஒன்றாக வேண்டும். நானும் அவரை எதிர்த்தேன். வெற்றி பெற்றுவிட்டேன். என்னுடைய மனம் - ஈகோ தன்முனைப்பு முடிந்துவிட்டது. இதற்கு மேல் அதைத் தொடர வேண்டிய அவ சியம்இருப்பதாக நான் கருதவில்லை.

எனவே நீங்கள் சென்று கலைஞரிடம் சொல்லுங்கள்.

நம்மிடையே பிரிவு தேவையில்லை. மீண்டும் ஒன்றாகலாம் என்று சொன்னார்.

நான் நேரடியாக கலைஞர் அவர்களிடம் சென்றேன். கலைஞர் அவர்கள் அப்பொழுது எதிர்கட் சித் தலைவர்.

கலைஞர்அவர்கள் ஆலிவர் சாலையில் உள்ள அவர்களுடைய வீட்டிலே இருக்கின்றார்கள். நான் அப்பொழுது வெளியூருக்குச் செல்ல வேண்டியிருந்தது. அப்பொழுது கலைஞர் அவர்களிடத்திலே சொன்னேன்.

நீங்கள் கலைஞர் அவர்களைப் பார்த்து விட்டு எனக்கு தொலைபேசியிலே பதில் சொன்னால் போதும் என்று எம்.ஜி.ஆர் தான் சொன்னார்.

நல்ல பதிலைச் சொல்லுங்கள் என்றும் சொன்னார். கலைஞர்அவர்களிடத்திலே இந்த செய் திகளை எல்லாம் நீண்ட நேரம் நான் சொன்னேன். அதைக் கேட்டுவிட்டுச் சொன்னார்கள்.
இதுவரை இது போன்று சிலர் முயற்சி எடுத்திருக்கின்றார்கள். அவர்கள் எல்லாம் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். அதில் நீங்கள் எந்த பட்டியலோ - அது எனக்குத் தெரியாது.
இருந்தாலும் உங்களுடைய முயற்சி என்பதை நான் வரவேற்கின்றேன். நல்லெண்ணத்தோடு அவர்கள் சொல்லியிருந்தால் அதை நான் மறுக்கத் தயாராக இல்லை. அதை எப்படிக்காட்டு வது? எப்படிச் சொல்லுவது? என்று சொன்னால் நாளைய மறுநாள் சட்ட மன்றத்திலே எதிர்கட்சித் தலைவருடைய உரை இருக்கிறது. அதிலே எம்.ஜி.ஆர். அவர்களை நான் கடுமையாகத் தாக்கிப் பேசப்போவதில்லை.

ஆகவே, அந்த ஒரு குறிப்பிலேயே அவர்கள் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம் என்று சொல்லி எம்.ஜி.ஆர் அவர்களிடத்திலே இதைச் சொல்லச் சொன்னார்கள்.
நான் தொலைபேசி மூலமாக சோலை அவர்களிடத்திலே சொல்லி விட்டு ஊருக்குப் புறப் பட்டேன்.

பிறகு பல சூழல்கள். அந்தச் சூழல்கள் நழுவிப் போனது.

ஒரு முறை இருவரும் சந்தித்தார்கள். கலைஞர் அவர்கள் கொள்கைக்காக எப்படி இருக்கக் கூடியவர்கள்? அவர் தலைமைப் பதவியை விரும்பியவர் அல்ல என்ற ஒரு செய்தியை தெரிந்துகொள்ள வேண்டும்.

ஒருமுறை கலைஞரும், எம்.ஜி.ஆரும் சந்தித்தார்கள். இருவரும் சந்தித்துப் பேசிய நேரத் திலே கூட நீங்களே தலைவராக இருக்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். சொன்னார். அதற்கு கலைஞர் ஒப்புக்கொண்டார். அடுத்தபடியாக நீங்கள் உருவாக்கிய கொடி கூட இருக்கலாம். அதைப்பற்றி ஒன்றுமில்லை. நீங்கள் முதல மைச்சராக இருங்கள். அதைப்பற்றி ஒன்று மில்லை. ஆனால் ஒன்பதாயிரம் ரூபாய் வருமான வரம்பு கொண்டு வந்தீர்களே - அந்த ஒன்பதாயிரம் ரூபாய் வருமான வரம்பை நீங்கள் கைவிட வேண்டும் அதற்குத் தயாரா? என்று எம். ஜி.ஆர். அவர்களிடத்தில் அன்றைக்கும் கொள்கைக்காக கேட்டவர் தான் நமது கலைஞர் அவர்கள்.

இதற்குப் பிறகு ஒப்புக் கொண்டு வந்தார். ஆனால் பல்வேறு சூழ்நிலைகள் - அது நடக்கவில்லை. அன்றைக்கு அது நடந்திருந்தால் இன்றைக்கு ஒரு திருப்பமே திராவிடர் இயக்கத்தில் ஏற்பட்டிருக்கும் என்பது மிக முக்கியமானது. அதற்குக் காரணமானவர் சோலை அவர்கள் இங்கே இருக்கிறார்கள்.

என்றாலும் கூட, திராவிடர் இயக்கம் என்று சொன்னால் இன்றைக்கு ஒன்றுதான் என்று சொல்லக்கூடிய அளவிலே சமுதாயத்திற்கு திராவிடர் கழகம். அரசியலிலே திராவிட முன் னேற்றக் கழகம். அதற்குரிய போர்க்கருவிகள் தான் விடுதலை- அதற்குரிய போர்க்கருவி தான் முரசொலி. அதை ஆதரிக்கக்கூடிய நாளேடுகள் இருக்கின்றன. இறுதியிலே ஒன்றைச் சொல்ல விழைகின்றேன். எங்களுக்கு ஒரு லட்ச ரூபாய் விருது கொடுத்திருக்கின்றீர்கள்.
உங்கள் அனுமதியோடு ஒன்றே ஒன்றை நான் சொல்ல விரும்புகின்றேன்.
தமிழ் ஏடுகளிலே பெரும்பாலும் இதழாளர்கள் (journalist) நம்மவர்கள் பெரும்பாலும் பயிற்சி பெற்றவர்களாக இல்லை.

அந்தப்பயிற்சியைப் பெறக்கூடிய அளவிலே பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் - நீங்கள் உருவாக்கிக் கொடுத்த பல்கலைக் கழகம்.

எனவே அந்தப் பல் கலைக் கழகத்திலே பெரியார் பெயராலே தமிழ் இதழியலாளர்கள் பயிற்சி என்ற ஒன்றை துவக்கி - அந்தப் பயிற்சிக்கு சோலை போன்றவர்கள் மற்றும் பல அனுபவம் உள்ள எழுத்தாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இவர்களை எல்லாம் பயன்படுத்தி - அந்த அமைப்பிற்கு புரவலராக கலைஞர் அவர்கள் இருப்பார்கள். ஏனென்றால் இந்தியாவினுடைய மூத்த பத்திரிகையாளர் கலைஞர் அவர்கள் இருக்கின்றார்கள். (கைதட்டல்). இங்கே நீங்கள் கொடுத்திருக்கின்ற ஒரு இலட்ச ரூபாயை நான் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திலே இதழியல் பிரிவு துவக்குவதற்காக உங்கள் அனுமதியோடு கொடுக்கிறேன் என்று கூறி, நன்றி! நன்றி! என்று கூறி என்னுடைய உரையை நிறைவு செய் கிறேன். (பலத்த கை தட்டல்) வணக்கம்.
இவ்வாறு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கவுரையாற்றினார்.

------------------"விடுதலை" 5-4-2009

2 comments:

Unknown said...

இதழியலாளர்கள் பயிற்சி தமிழர்களுக்கு அவசியமான பயிற்சி.அத்தியாவசியமான பயிற்சி. பத்திரிக்கைத் துரையில் உள்ள பார்ப்பனிய ஆதிக்கத்தை உடைக்க உதவும் பயிற்சி.
வரவேற்கிறேன்

தமிழ் ஓவியா said...

தங்கலின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இன்பா