Search This Blog

6.4.09

பெரியாரைத் தவிரவேறு யாரையும் தலைவராகத் கொள்ளாதவர் அண்ணா




"பெரியார் அவர்களுடன் இருந்து எதிர்ப்புகளை சந்தித்து
பிரச்சாரம் செய்த காலமே என் வாழ்வின் வசந்தகாலம்"

அண்ணா கூறிய கருத்துக்களை எடுத்துக்காட்டி தமிழர்தலைவர் பேச்சு


தான் பதவியில் இருந்த காலம் வசந்த காலமல்ல. தந்தை பெரியார் அவர்களுடன் காடு மேடுகளை சுற்றி வந்த காலமே வசந்த காலம், தந்தை பெரியார் அவர்களுடன் எதிர்ப் புகளை சந்தித்து பிரச்சாரம் செய்ததே என் வாழ்வின் வசந்த காலம் என்று அண்ணா அவர்கள் கூறிய செய்தியை எடுத்துக் காட்டி விளக்கமளித்தார் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் சென்னைப்பல்கலைக் கழகத்தில் - ஈரோடு முதல் காஞ்சி வரை என்ற தலைப்பில் அண்ணா நினைவுநாளில் 3.2.2009 அன்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் விடுதலையில் வெளிவந்த 1.4.09 அன்றைய தொடர்ச்சி வருமாறு:-

இங்கே போவார்களா? என்பது முக்கியமல்ல.

மக்கள் தீர்ப்பை விட பெரிய அப்பீல் வேறு எதுவுமே கிடையாது. அந்த நடராசனைப் பற்றி அண்ணா அவர்கள் சொல்கின்றார்.

தந்தை பெரியாருடைய தத்துவத்தைப் பிரச்சாரம் செய்வதற்காக அண்ணா அவர்கள் சொல்லுகின்ற நேரத்திலே எப்படி அவர்கள் சொல்வார்கள்?

சந்திரோதயம் என்று அண்ணா அவர்கள் எழுதிய நாடகம். அந்த சந்திரதோயம் நாடகத்திலே ஒரு காட்சி.

அவருடைய நாடகத்தில் அவருடைய நண்பர்களைத் தான் முழுக்க முழுக்க நடிக்க வைப் பார். அவரோடு பழகக் கூடிய நண்பர்களை எல்லாம் நடிகர்கள் ஆக்குவார்கள். நடிகர்கள் எல்லாம் அமைச்சர்தான் போரூர் சுப்பிரமணியம் என்பவர் கட்டையாக குண்டாக இருப்பார். அவர் ஒரு நண்பர்.

எப்படி சி.வி.எம் அண்ணாமலை அவர்கள் அக்கிரகாரத்தைச் சார்ந்தவராக அர்ச்சகராக நாடகத்திலே நடித்தார். பிறகு கலைஞர் ஆட்சியிலே அமைச்சராகக் கூட இருந்தார். இப்படி எல்லாம் நண்பர்கள் இருப்பார்கள். அந்த நண்பர்களிலே ஒரு நண்பர் போரூர் சுப்பிரமணியம்.

அவர் ஒரு வேலைக்காரராக நடிப்பார். வேலைக்காரன் வீராசாமி என்று அந்த பாத் திரத்திற்குப் பெயர்.

சந்திரோதயத்திலே அண்ணா அவர்கள் எசமானர். அவர் சமீன்தார். சமீன்தாரிடத்திலே அந்த வேலைக்காரன் வருவான். நாடகத்தில் முத்தமிழிலும் அண்ணா அவர்களுடைய சிறப்பு என்ன என்று சொல்கின்ற நேரத்தில் அதிலும் அவர்களுக்குப் பகுத்தறிவு பாதை.

சுயமரியாதை கருத்துகளைப் பரப்புவதற்குத் தான் அந்த நிலை. சந்திரோதயம் நாடகத்தைப் பார்க்கக்கூடிய அற்புதமான வாய்ப்பு எங்களுக் கெல்லாம் கிடைத்தவை.

சிறந்த தொழில் நடிகரைப் போல அண்ணா அவர்கள் நடிப்பார்கள். வேலைக்காரர் வீரா சாமியைப் பார்த்து அண்ணா கேட்பார். என்னப்பா வீராசாமி உன்னை ஒரு வாரமாகக் காணோமே என்று கேட்பார்.

நீ சொல்லிக்கொள்ளாமலே வேலைக்கு வரவில்லையே என்ன உடல் நிலை சரியில்லையா? என்று கேட்பார்.

வீராசாமி அவர்கள் இல்லையண்ணா என்று தலையை சொறிந்து கொண்டே நான் வெளி யூருக்குப் போயிருந்தேன் அண்ணா என்று சொன்னார். அண்ணா கேட்டார். நீ வெளியூருக்குப் போவதாக இருந்தால் என்னிடம் சொல்லி விட்டுப் போவாயே? என்று கேட்பார். இல்லை சொன்னால் உங்களுக்குப் பிடிக்காதே என்பதற்காக சொல்லாமல் சென்றுவிட்டேன் என்று சொல்வார்.

அந்தக் காட்சி ரொம்ப நன்றாக இயல்பாக இருக்கும் அப்படி என்ன எனக்குப் பிடிக்காத ஊருக்கு நீ போய் விட்டு வந்தாய் சொல் என்று கேட்பார்.

ஆருத்ரா தரிசனத்திற்குச் சென்றால் ரொம்ப புண்ணியம் என்பதற்காக அந்தக் காட்சியைப் பார்ப்பதற்காக நான் சென்றேன். உங்களுக்கெல்லாம் எஜமான் நம்பிக்கை இருக்காது.

அண்ணா அவர்கள் இல்லை, இல்லை என்ன தான் பார்த்தாய் கொஞ்சம் சொல்லேன் என்று கேட்பார். இல்லை எஜமான், நீங்கள்தான் நாத்திகர்கள் ஆயிற்றே. கடவுளை நம்பாதவர்கள் ஆயிற்றே.

நான் போய் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தைப் போய்ப் பார்த்தேன். ஆடிய பாதம் நடராஜன் எம்பெருமான் ஒரு காலைத்தூக்கி ஆடினார். அந்தக் காட்சியைப் பார்த்தேன் எனக்குப் பரவசமாக இருந்தது. பக்திப் பரவசம் தாங்க முடியவில்லை.

நானும் சொக்கிப் போய் ரொம்ப நேரம் நின்று கொண்டிருந்தேன் என்றெல்லாம் சொன் னவுடனே அவர் எப்படி இருந்தார் என்பதை எனக்குக் கொஞ்சம் காட்டப்பா. நீ அனுபவித்த பரவசத்தை நானும் கொஞ்சம் பார்க்கிறேனே என்று அண்ணா அவர்கள் சொன்னவுடனே, அப்படிங்களா? என்று கேட்பார். இல்லை நடராஜர் எப்படி இருந்தார் என்பதைக் கொஞ்சம் காட்டு என்று அண்ணா அவர்கள் சொல்வார். வேலைக்காரர் வீராசாமி உடனே ஒரு காலைத் தூக்கிக் கொண்டு நடராஜன் மாதிரியே நிற்பார்.

நடராஜன் இப்படித் தான் நின்றார் என்று சொல்லிவிட்டு காலைத் தூக்கி நிறுத்திக்காட்டி விட்டு, காலை கீழே வைத்து விடுவார்.

உடனே அண்ணா அவர்கள் சொல்வார்கள் காலை கீழே வைத்து விடக்கூடாது. நீ காலைத்தூக்கி வைத்திருப்பது ரொம்பப் பரவசமாக இருக்கிறது எனக்கு நீ அப்படியே கொஞ்ச நேரம் இரு என்று சொன்னார். இவர் காலைத் தூக்கிக் கொண்டே நிற்பார்.

அண்ணா அவர்கள் எதிரே அமர்ந்து ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருப்பார். அண்ணா அவர்கள் தன் வேலைக்காரர் வீராச்சாமியை நிமிர்ந்தே பார்க்க மாட்டார்.

வேலைக்காரர் கேட்பார். எஜமான், காலை கீழே போடட்டுமா? என்று கேட்பார்.

இல்லை, நான் சொல்லுகிற வரை காலை கீழே போடக்கூடாது. இதைப் பார்க்கும் பொழுது ரொம்பப் பரவசமாக இருக்கிறது. நான் பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும். இன்னும் கொஞ்ச நேரம் கழித்து அய்யா, கால் ரொம்ப வலிக்கு தய்யா காலை கீழே போடுகிறேன் என்று கேட்பார்.

அண்ணா, இல்லை இல்லை நீ காலை கீழே வைக்கக் கூடாது.

நடராஜர் எவ்வளவு நாளாக நிற்கிறார். நீ இரண்டு நிமிடம் நிற்பதற்கே காலை கீழே போட வேண்டும் என்று சொல்லி விட்டாயே.

நீ நடராஜனைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறாயே. நடராஜர் ரொம்ப காலமாக நிற்கிறார். நீ கொஞ்ச நேரம் கூட காலைத் தூக்கி வைத்து நிற்க முடியாதா? என்று அண்ணா அவர்கள் கேட்கின்றார்.

உடனே வீராசாமி அவர்கள் அது கல்லுங்க அது எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் நிற்கும். நான் மனிதனுங்க அவ்வளவு நேரம் நிற்க முடியாது என்று சொன்னவுடனே கைதட்டுவார்கள் வேறெதுவும் இருக்காது. அதோடு சீன் முடிந்து விடும். ஒரு மூடநம்பிக்கையை எதிர்த்து கலை என்ற பெயராலே மற்றவர்கள் பார்த்ததைக் கூட எதிர்த்து பகுத்தறிவு சிந்தனைகளை சிந்திக்கக் கூடிய அளவிற்கு நகைச்சுவையோடு எடுத்துச் சொன் னவர் அண்ணா
.

சொர்க்கவாசல் என்ற திரைப்படத்தை நீங்கள் பார்த்தீர்களேயானால் அய்யா அவர்களுடைய கருத்தை அண்ணா அவர்கள் முழுக்க முழுக்கப் பிரச்சாரம் செய்திருப்பார்கள். நடிப்பிசைப் புலவர் கே.ஆர்.ராமசாமி தான் நடித்திருப்பார்.

அந்தப்படத்தின் காட்சிகளை அதிகமான அளவுக்கு தணிக்கை என்ற பெயராலே பெரும் பகுதியை எடுத்துவிட்டார்கள்.

அதிலே ஒரு பாட்டு வரும். ஆத்திகம் எது? நாத்திகம் எது? அறிந்து சொல்வீரே நான்றாய் புரிந்து கொள்வீரே என்ற அடியை அண்ணா அவர்களுடைய கருத்தை முன்னாலே வைத்து உடுமலை நாராயணகவி எழுதியிருப்பார்கள். இது நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி அவர்கள் பாடுகின்ற பாட்டு அந்தப் பாட்டுக்கு உடனே கத்தரிக்கோலைப் போட்டுவிட்டார்கள்.

உடனே அண்ணா அவர்களிடம் சொன்னார்கள். அதைப்பற்றிக் கவலைப் பட வேண்டாம். பாட்டு வெளியாகி விட்டது.

அதிலே ஆத்திகம், நாத்திகம் என்ற வார்த்தை இருக்கிறது. படத்தில் தானே இந்த வார்த்தையை மட்டும் மாற்றுங்கள் என்று அண்ணா அவர்கள் எழுதிக் கொடுத்து விட்டார்.

ஆகும் நெறி எது? ஆகா நெறி எது? நாத்திகத்தை ஆகும் நெறி என்று சொன்னார். ஆத்திகத்தை ஆகா நெறி என்று சொன்னார். ஆகவே ஆகும் நெறி எது? ஆகா நெறி எது? அறிந்து சொல்வீரே என்று அப்பொழுதும் அவர் தன்னுடைய கொள்கைகளை விடாமல் பிரச்சாரம் செய்தவ
ர்; அண்ணா அவர்கள் பதவிக்கு வந்த நிலை. தந்தை பெரியார் பிறந்த நாளை ஒட்டி விடுதலை மலருக்கு கட்டுரை வேண்டி அண்ணா அவர்களிடம் கேட்டேன்.

நான் கொஞ்சம் அதிகமாகவே அவருக்கு தொல்லை கொடுத்தேன். ஏனென்றால் அவருக்கு அவ்வளவு நெருக்கடிகள். அவர் பதவிக்கு வந்து கொஞ்ச நாள் ஆகிறது. 1967 மார்ச்சிலே அண்ணா அவர்கள் பதவிக்கு வந்தார். அடுத்த ஆறு மாதத்தில் செப்டம்பரில் அய்யா பிறந்த நாளை ஒட்டி அவரிடம் மலருக்குக் கட்டுரை கேட்டேன்.

செப்டம்பர் மாதத்தில் ஏராளமான கோப்புகளை பார்த்துக் கொண்டிருந்தார். மற்றவர்களையும் பார்த்துக்கொண்டு இருந்தார்.

நான் போய் அண்ணா அவர்களிடம் நின்றவுடனே கட்டுரை தானே - எழுதி கொடுத்துவிடு கிறேனப்பா என்று ரொம்ப மகிழ்ச்சியாகச் சொன்னார்.

அண்ணா அவர்கள் அடுத்து மதுரைக்குச் சென்றார். அண்ணா அவர்களுக்குத் தெரியும் செப்டம்பர் 17 என்றால் அவருக்குத் தெரியும். அய்யா அவர்களுடைய விடுதலை மலரை 16ஆம் தேதியே வெளியிட்டுவிடுவோம். ஆகவே குறிப்பிட்ட காலத்திற்குள் மலர் வரவேண்டியது முக்கியம்.

மதுரை திருமங்கலம் என்ற திருநகர் பகுதிக்குச் சென்று ஆதித்தனார் அவர்களுடைய வீட்டில் அண்ணா அவர்கள் தனியே அமர்ந்து கட்டுரையை எழுதி விடுதலை அலுவலகத்தில் என்னி டம் நேரடியாக கொடுக்கும்படி ஒரு ஆளையே போட்டு அனுப்பினார்.

அண்ணா அவர்கள் எழுதிய அந்த கட்டுரையைப் படித்துவிட்டு அய்யா அவர்கள் எல் லையற்ற மகிழ்ச்சி அடைந்தார்.

அந்த கட்டுரைக்குத் தலைப்பே அந்த வசந்தம்! நான் இன்றைக்குக் கவலையோடு இருக் கின்றேன். பதவி பொறுப்புகளினால்.

ஆனால் நான் மகிழ்ச்சியோடு இருந்த காலம் எது? என்னுடைய வாழ்வில் வசந்த காலம் என்று ஒன்று இருக்கிறதென்றால் அதுதான் பெரியாருடன் இருந்து தொண்டு செய்தேனே - பெரியாருடன் சென்று எதிப்புகளை எல்லாம் சமாளித்தேனே - அது தான் என் வாழ்வின் வசந்த காலம் என்று அந்தக் கட்டுரையில் எழுதினார். தன்னுடைய அனுபவத்தை ரொம்ப அழகாகச் சொல்வார். அண்ணா அவர்கள் எழுதுகிறார். ஈரோட்டுக்குப் பக்கத்திலே இங்கூர் என்று ஊர் இருக்கிறது.

அந்த ஊரைப் பற்றி அண்ணா அவர்கள் எழுதுகிறார். இங்கூர் என்ற ஊர் ஒரு சிறு கிராமம். என்னையும் அழைத்துப் போகிறார் அந்தக் கூட்டத்திற்கு - கூட்டத்திலே தந்தை பெரியார் அவர்களையும், அண்ணா அவர்களையும் எதிர்த்து கல்லையும், மண்ணையும் வாரி இறைத்துக் கொண்டேயிருக்கின்றார்கள்.

அதைவிட ஒரு புதுத் திருப்பம் - அந்த ஊரிலே எப்படிப்பட்ட எதிர்ப்பு என்று சொன்னால் ஏரா ளமான சாம்பலை வைத்துக்கொண்டு மூட்டை, மூட்டையாக வைத்துக் கொண்டு வாரி இறைக்கின்றார்கள். மற்றவர்களுடைய கண் எரிந்து கண்ணீர் வரக்கூடிய அளவுக்கே கண்ணையே திறக்க முடியாத அளவுக்கு சாம்பலை வாரி, வாரி இறைக்கின்றார்கள்.

நீங்கள் முதலில் பேசுங்கள் என்று அய்யா அவர்கள் அண்ணா அவர்களைப் பார்த்துச் சொன்னார்.அண்ணா அவர்கள் எழுந்து பேசுகின்றார். இங்கே இருக்கின்றவர்கள். சாம்பலை வாரி, வாரி, வீசுகிறீர்கள். அதற்காகப் பேச்சை நிறுத்திவிடமாட்டோம்.

அடுத்து பெரியார் இன்னும் வேகமாகப் பேச இருக்கின்றார்கள். இப்பொழுது நான் சொல்கின்றேன். இந்த சாம்பலை வீசி எறிவ ினாலே ஒன்றுமில்லை.

பெரியாருடைய தாடி இன்னும் சரியாக வெளுக்கவில்லை. தாடி ஒரு பக்கம் கருப்பாக இருக்கிறது. சில பக்கம் வெள்ளையாக இருக்கிறது. நீங்கள் வீசுகிற சாம்பல் மூலமாக அவருடைய தாடி முழுமையாக வெள்ளையா கத் தெரிகிற அளவுக்கு வெண்தாடிக் காரராக ஆகிக்கொண்டிருப்பதா கத்தான் அவர் எடுத்துக் கொள்வார். என்றெல்லாம் ஆரம்பித்து அண்ணா அவர்கள் பேசினார். அண்ணா அவர்கள் ஒரு வரியை எழுதியிருந்தார்.

நான் கண்டதும் கொண்டதும் ஒரே தலைவர் பெரியார் என்று சொன்னார். இங்கேயிருக்கின்ற தாய்மார்கள், சகோதரிகளுக்குத் தெரியும். கண்டது என்ற சொல் சாதாரணம். தான் கண்டது என்பதோடு அண்ணா அவர்கள் நிறுத்தாமல் கண்டதும்- கொண்டதும் என்று சொன்னார்.

தந்தை பெரியார் அவர்களைத் தவிர, இறுதி வரையிலே வேறு யாரையும் தலைவராகத் கொள்ளாத ஒருவர்.

இப்படிப்பட்ட ஒரு கொள்கை மாவீரரை அண்ணா அவர்களைத் தவிர வேறு ஒருவரைப் பார்க்க முடியாது.

அண்ணா அவர்களுடைய நகைச்சுவையை சொல்ல வேண்டும் என்று சொன்னால் பல நாட் கள் சொல்லிக்கொண் டேயிருக்கலாம்.

சட்டமன்றத்திலே அண்ணா அவர்களிடம் ஒருவர் கேள்வி கேட்டது உங்களுக்கு நினைவிருக் கும். ரொம்ப வேகமாக நகைச்சுவையோடு எடுத்துச் சொல்வார்.

கூட்டங்களில் பேசும் பொழுதும்அண்ணா அவர்கள் அதே நகைச்சுவையோடு சொல்வார்கள்.

அண்ணா அவர்கள் சட்டமன்றத்திலே படிக்கின்றார். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் அரிசி விலை குறைந்தது. இன்னின்ன பொருள்களின் விலை குறைந்துள்ளது என்று சொல்கின்றார். புளி விலை குறைந்து விட்டது என்று இப்படி ஒவ்வொன்றாகச் சொல்லு கின்றார்.

உடனே எதிர்க்கட்சி வரிசையிலே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நண்பர் ஒரு கேள்வி கேட்டார்.

புளி விலை குறைந் திருக்கிறதே இது யாருடைய காரணம் என்று சொல்கின்றார்.

உடனே அண்ணா அவர்கள் தங்களுடைய ஆட்சியின் சாதனை என்று சொல்வார். அவரை மடக்கலாம் என்று நினைத்தார்கள். அது புளிய மரத்தின் சாதனை என்று அண்ணா அவர்கள் பளிச்சென்று பதில் சொன்னார். (சிரிப்பு - கைதட்டல்)


அது மாதிரி நகைச் சுவையோடு அண்ணா அவர்கள் எந்தக்கருத்தையும் சொல்லக்கூடியவர்.

அண்ணா அவர்கள் சட்டமன்றத்திலே எதிர்க்கட்சி வரிசையிலே இருக்கின்றார்.

அப்பொழுது காரைக்குடி பொதுக்கூட்டத்தில் அண்ணா அவர்கள் அவசரமாகப் பேசிவிட்டு இரயிலுக்குத் திரும்ப வேண்டும்.

வேண்டுமென்றே சில நண்பர்கள் தொல்லை கொடுப்பதற்காகவே அண்ணா அவர்களிடம் கேள்வி கேட்டு ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்தனர். அண்ணா அவர்கள் பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கியவுடன் இப்படி ஒரு துண்டுச் சீட்டைக் கொடுத்தனர்.

அண்ணாதுரையே! பதில் சொல்லிவிட்டுப் போங்கள் என்று சத்தம் போடுகிறார்கள்.

கீழே இறங்கிய அண்ணா அவர்கள் உடனே மேடைக்கு வந்து,ஒலி பெருக்கி முன்பு நின்று இப்படி ஒரு கேள்வியை நண்பர்கள் கேட்டிருக்கிறார்கள். அதற்கு பதில் சொல்லிவிட்டுப் போங்கள் என்று சொல்கிறார்கள்.

நான் பதில் சொல்லி விட்டே ரெயிலுக்கு போகிறேன்.


-------------------- தொடரும் ...நன்றி:-"விடுதலை" 6-4-2009

1 comments:

Unknown said...

சந்த்திரோதயம் நாடகத்தில் வரும் ஆருத்ரா தரிசன சம்பவமும், சட்டமன்றத்தில் கேட்கப்பட்ட புளி விலை சம்பந்தமான கேள்வியும் சுவையானவை.