
இராமாயண சம்பிரதாயம் அன்று முதல் இன்று வரை :
சிவபெருமானுடைய கல்யாணத்தின்போது தேவர்களும், ரிஷிகளும் வந்து, தென்னாடு உயர்ந்து விட்டதென்றும் - வட நாடு தாழ்ந்துவிட்டதென்றும் அதற்குப் பரிகாரம் உடனடியாக செய்யப்பட வேண்டுமென்றும் விண்ணப்பம் செய்து கொள்கிறார்கள். இதிலிருந்து தென்னாட்டினர் உயர்வு - ஆரியர்களால் எவ்வளவு வெறுக்கப்பட்டது என்பது இனிது புலனாகிறது. சிவன் யார் கெட்டிக்காரன் என்று ஆலோசித்துப் பார்த்து அகத்தியனை அனுப்பியிருக்கிறார் பரிகாரம் செய்ய. மிக மட்டமான அதாவது சூழ்ச்சியில், தந்திரத்தில், வஞ்சகத்தில் கைதேர்ந்த ஒருவனை அனுப்பி வைக்கிறார். அவன் விந்திய மலையருகில் வரவும், அங்கு காவல் செய்துவந்த வாதாபியும் வில்லவனும் இவனை தடுத்து விடுகிறார்கள். இவர்கள் கந்த புராணத்தில் சித்தரிக்கப் படுகிற சூரனுடைய தங்கச்சியின் மக்கள் ஆவார்கள். இவர்கள் வட நாட்டிலிருந்து யார் வந்தாலும் அவர்களைக் கொன்று தின்று விடுகிறதாகக் கூறப்படுகிறது. அதே மாதிரியே அகத்தியரையும் தின்று விட்டதாகவும் - ஆனால், அவனை ஜீர்ணம் செய்ய முடியவில்லை என்றும் - அவனுடைய வயிற்றைக் கிழித்துக் கொண்டு அகத்தியன் வெளிப்பட்டுச் சென்றான் என்றும், சென்று தமிழ் வளர்த்தான் என்றும் காணப் படுகிறது. இந்தத் தமிழ்ப் புலவர்களும் ஆராய்ந்தறியாமல் இதை யொட்டி அகத்தியன் வளர்த்த தமிழ் என்று புகழ்பாடிவிட்டனர். அகத்தியன் இங்கு வந்து பாதிரிகள்போல் தமிழ் கற்று நமது தர்மங்களை - ஒழுக்கங்களை மாற்றியமைத்து இருக்கக் கூடும்.
அந்நியனுக்குத் தமிழ்ப் பண்டிதர் மரியாதை
இதற்காக அவனுக்கு நன்றி காட்டும் அளவுக்கு நன்றி யுடையவர்கள் நமது மடப் புலவர்கள். நாய் நன்றி காட்டுவ தெல்லாம் அந்நியரிடத்துத்தான் என்பது போல் பழங்கால இப் பண்டிதர்களும் அந்நிய அகத்தியனுக்கே மரியாதை செய்து விட்டனர். அந்த அகத்தியன் முடிவில் தமிழ்நாட்டிலிருந்து இராவணனைத் துரத்திவிட்டதாக வேறு காணப்படுகிறது. இதற்கும் ராணவனுடைய தம்பிக்கு ராமன் பட்டம் வாங்கி கொடுத்ததற்கும் ஏதேனும் பொருத்தம் இருக்கிறதா என்பதும் தெரியவில்லை. இக்கதைகளெல்லாம் அபிதான சிந்தாமணியில் தொகுத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரவர் படித்துப் பாருங்கள் தெரியும்
திராவிடர்- ஆரியர் போராட்டம் எப்போது ஏன் துவங்கியது என்று.
இப்போது, எப்படி சில திராவிடர் அறிவிழந்து ஆரிய வடவர்களையே தமது அரசியல் தலைவர்கள் என்று கொண்டு தாம் பணியாற்றும் வகையில், ஏனைய திராவிடர்களையும் எப்படி அவர்களுக்கு நிரந்தர அடிமைகளாக வைத்திருக்க முயற்சிக்கின்றனரோ - அதுபோல் வால்மீகி காலத்திலும் சில திராவிடர்கள் இருந்திருப்பதை - நாம் அவரது ராமாயணத்தை படிப்பதன் மூலம் நன்கு அறியலாம். அநியாயமாக வாலி கொல்லப்பட்ட பிறகு, விபீஷணனைக் கொண்டு வந்து அனுமார் சேர்க்கிறார். அப்போது சுக்ரீவன் கேட்கிறான், அண்ணனுக்கே துரோகம் செய்யும் இவன் நாளை உனக்கு மட்டும் துரோகம் செய்யமாட்டான் என்று எப்படி நம்ப முடியும்? என்று. அதற்கு இராமன் என்ன சொல்லுகிறான் பாருங்கள்;
இராமன் கூற்று!
என் லட்சியத்திற்கு அதைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. இராவணன் தோல்விதானே, அவனது முடிவுதானே எனக்கு வேண்டியது. அதற்கு உதவி செய்யத் தருந்தவன் யாராக இருந்தால், எப்படிப்பட்டவனாயிருந்தால் என்ன. அவனை நண்பனாகக் கொள்ள வேண்டியதுதானே! மேலும் அவன் எப்படி உனக்குத் துரோகம் செய்யமுடியும்? அவனுக்கு வேண்டுவது அண்ணனுடைய ராஜ்யமன்றோ. அண்ணன் செத்தால்தானே அவனுக்கு ராஜ்யம் வரும். ஆதலால் தனது அண்ணனை ஒழிக்க வழி நமக்குக்குக் கூறி உதவி செய்துதானே தீருவான். இந்த விஷயத்தில் அவன் நமக்கு துரோகம் செய்ய முடியாதே. அதன் பிறகு என்ன துரோகம் அவனால் நமக்குச் செய்யமுடியும். இவனை விட்டால், ராவணனை நமக்குக் காட்டிக் கொடுக்கக்கூடிய வேறு ஆள் ஏது? என்று சொல்லி விபீஷணனை ஏற்றுக்கொள்கிறான். இதே மாதிரிதான், நம்முடைய லட்சியத்தையையே குறிக்கோளாகக் கொண்டு இன்றைய பார்ப்பனர்களும் மானாபிமானம் அற்று, தன் கட்சிக்கு ஆள் தேடித் திரிகிறார்கள். நம்மை எவன் துரோகம் செய்கிறானோ அவன்தான் பார்ப்பனருக்கு ரொம்பவும் வேண்டியவன் - மகா தேசபக்தன், அவர்களுடைய போற்றதலுக்கு உரியவர்கள்; புகழ் பெறுபவர்கள். நம்முடைய துரோகிகளின் மூலம்தான் அன்று தொட்டு இன்றுவரையும் அவர்கள் சுகமாக வாழ்ந்து வருகிறார்கள். இதை இந்த நாசமாய்ப்போன துரோகம் செய்பவர்கள் உணர்ந்தால் தானே. தோழர்கள் ராமநாதனும் கே. வெங்கடசாமி நாயுடுவும் நமது கட்சியினின்று நீங்கிச் சென்றபோது, இவர்களைக் காந்தியாருக்கு அறிமுகம் செய்தபோது ராஜகோபாலாச்சாரியார், அன்று ஹனுமார் ராமனிடம் விபீஷணனை அறிமுகம் செய்து வைத்தது போன்றே செய்தாரே. ராமநாதன் வந்துவிட்டார் பழையபடி. அந்த சரணாகதிக்கு நீங்கள் மனமிரங்கி இடம் அளிக்க வேண்டும். ராமர் எப்படி விபீஷணனுக்கு அபயம் அளித்தாரோ அதேபோன்று இவருக்கும் தாங்கள் அபயம் அளித்தருள வேண்டும் என்று.
ராவணனை விட்டு விபீஷணன் நீங்கியதற்கும் - சுமரியாதைக் கட்சியை விட்டு ராமநாதன் நீங்கியதற்கும் ஒப்புதல் காட்டிவிட்டாரே- ராஜகோபாலாச்சாரியார், இது போலவே வெங்கிடசாமி நாயுடு விஷயத்திலும் சொன்னார். இந்த இராமாயண சம்பிரதாயம்தானே அன்று முதல் இன்று வரைக்கும் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
குறளும் பார்ப்பனரும்
நீங்களே சிந்தித்துப் பாருங்கள். பார்ப்பனர்கள் குறளுக்கு எவ்வளவு மரியாதை செய்கிறார்கள்; கீதைக்கு எவ்வளவு மரியாதை செய்கிறார்கள் என்பதை. அவர்கள் பகவத் கீதையை அச்சுப் போட்டு இனாமாக வழங்கி வருவதும் அதைப் பற்றிப் பெருமையோடு எங்கும் பேசி வருவதும் உங்களுக்குத் தெரியாத தல்லவே. இது ஏன் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா? கிருஷ்ணன் கீதையின் மூலம் நாலு ஜாதிமுறை உண்டென்பதையும் அதில் பார்ப்பனர்களே முதல் ஜாதியினர் என்பதையும் கடவுளுக்கும் பெரியவர்களுக்கும் பெரியவர்கள் பார்ப்பனர்கள் என்ற தத்துவம் இருப்பதோடு - எப்படியும் அதர்மம் செய்தவர்களுக்கு மன்னிப்பு உண்டு. வர்ணதர்மம் செய்பவர்களுக்கு மன்னிப்பு இல்லை என்று ஒப்புக் கொண்டிருப்பதுதான் அதற்குக் காரணம் என்பதை உணருக! வேதாந்திகளுக்கும் பார்ப்பனர்களுக்கும் கீதையில் 1000 வரி தெரிந்திருப்பது ஏன்? குறளில் 2 வரிகூடத் தெரியாதது ஏன்? என்பதையும், சிலர் காவி வேட்டி கட்டிக் கொண்டு திராவிடர் கூட கீதையை பிரச்சாரம் செய்து வருவது ஏன்? என்பதையும் யோசித்துப் பாருங்கள்.
தந்தைபெரியார் பேசியது -1948 --நன்றி : "விடுதலை" 3-8-2008 பக்கம் -5
2 comments:
வணக்கமய்யா! உம்மோடு சொல்லாடுவதில் தவறில்லை எனக்கருதுகிறேன். பார்ப்பனீயத்தை எதிர்க்கிறீர்கள் வரவேற்கிறேன். தமிழனுக்கும் தமிழ்மொழிக்கும் நிறையவே தீங்கு செய்திருக்கிறார்கள். அவர்கள்மீது தாங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஏற்கிறேன்.
சிற்றூர்களில் ஓர் மொழியுரைப்பார்கள். உமக்குத் தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். ஆடு பகை குட்டி உறவு என்பதே அம்மொழி!
பார்ப்பனீயமாகிய ஆட்டை எதிர்க்கும் தாங்கள் அதன் குட்டியாகிய பார்ப்பனீய மொழியை எதிர்க்காதது ஏன்?
உம்முடைய கட்டுரையில் பற்பல வடசொற்கள் கையாளப் பட்டுள்ளதைப் பார்த்தேன். நான் ஓர் தனித்தமிழ் பற்றாளன் என்பதால் உமது கருத்துகளோடு என்கருத்துகள் நேராயிருப்பதால் வினா தொடுக்கிறேன்.
பார்ப்பனீயத்தை எதிர்த்து பார்ப்பன மொழியாகிய வடமொழிச் சொற்களையும் கலந்து கட்டுரை வடித்தால் நல்லதமிழன் எவனும் உம் கருத்தை ஏற்பானா? என்பதுதான் என்வினா?
அகரம் அமுதா அவர்களுக்கு வணக்கம்.
தங்களின் கருத்தைப்படித்தென். எனக்கும் வடமொழி கலந்து எழுதுவதில் உடன் பாடு இல்லைதான். பெரும்பாலும் தூயதமிழில்தான் எழுதிவருகிறேன்.
நீங்கள் சுட்டிக் காட்டிய கட்டுரை என்பது பெரியார் 1948 -இல் பேசியது. அப்போது என்ன நிலையோ அதை அப்படியே தருவதுதான் சரியானது. அதுவும் ஒரு தலைவர் அவர்கள் பேசியதை, எழுதியதை அவருடைய நடையிலேயே தருவதுதான் அறிவு நாணயம். வேண்டுமானால் அதற்குரிய தூய தமிழ் சொல்லை அடைப்புக்குறிக்குள் நாம் தரலாம்.
தங்களின் கருத்துக்கு நன்றி.
Post a Comment