
விநாயகன்
தன்னை வணங்கியவர்க்கு விக்கினத்தை(குறைகளை) நீக்குபவன் விநாயகன்.
தன்னை வணங்காதவர்க்கு விக்கினத்தை உண்டாக்குபவன் விநாயகன். சொல்கிறது புராணம்.
வேண்டியவர்க்கு நன்மையும், விலகியவர்க்குத் தீமையும் விளைவிப்பவனாம் இவன். இந்தப் பூச்சாண்டிக் கடவுளின் பிறவி வரலாற்றில் இரண்டு கதைகளை மட்டும் இங்கே பார்ப்போம்.
பரமசிவனுடைய மனைவி பார்வதி, ஒரு சமயம் குளிக்கப் போனாள். அப்போது தனது உடம்பிலிருந்து திரட்டிய அழுக்கைக் குவித்து , உருவமாக்கிக் காவலுக்கு வைத்தாள். அழுக்கில் உயிர்பெற்ற அந்த உருவத்தைப் பார்த்து, "யார் வந்தாலும் உள்ளே விடாதே" என்று கட்டளையிட்டுக் குளிக்கப் போய்விட்டாள். அச்சமயம் அங்கே பரமசிவன் வந்தான். அழுக்கு உருவமோ, அவனை உள்ளேவிட மறுக்கவே கோபங்கொண்ட பரமசிவன், தடுத்தவனின் தலையை வெட்டித் தள்ளிவிட்டு உள்ளே போய்விட்டான்.
குளித்துக்கொண்டிருந்த பார்வதி தன்னிடம் வந்த பரம சிவனைப் பார்த்து,"எப்படி இங்கே வந்தீர்கள் ? காவலுக்கு இருந்தவன் எங்கே?" என்றாள்!
காவல் காத்தவனை வெட்டி, ஒழித்துக் கட்டிவிட்டதாகப் பரமசிவன் சொன்னான்.
அழுக்கால் ஆக்கப்பட்ட தனது மகன் சாகடிக்கப்பட்டதை அறிந்து, அழுது புரண்டாள் பார்வதி.
பரமசிவன் பார்வதிக்கு ஆறுதல் கூறி வெளியே வருகையில், யானை ஒன்று எதிரே வந்தது, அதன் தலையை வெட்டி, அழுக் குருண்டைப் பிள்ளையின் முண்டத்தில் ஒட்டி, உயிர் தந்தான் சிவபெருமான்.
இது பிள்ளையார் பிறப்புக் கதைகளில் ஒன்று.
(ஆதாரம்: கந்த புராணம் மற்றும் சிவபுராணம்)
இன்னொன்று:
நந்தவனத்தில் உலவிவந்த சிவ- பார்வதி தம்பதிகள், ஒட்டி யிருந்த படர்ந்த காட்டில் எதற்கோ நுழைந்தனர். அங்கே யானைகள் இரண்டின் கலவிக் காட்சியைக் கண்டனர். கட்டுமீறிப்போன ஆசையில் கட்டிப்புரண்டனர் இந்தக் கடவுள் தம்பதிகள்.
தேவாரத்தில் சம்பந்தர் "பிடியதன்" என்று துவங்கும் பாட்டில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கட்டுக் குலையாத மேனிகளில் அரும்பு கட்டியது வியர்வைத் துளிகள். கலவிக் கோலங்கொண்ட யானையைப் பார்த்தே மனைவிக்கு ஆலிங்கன ஆணைகளைப் பிறப்பித்தான் சிவன்.
எனவேதான், பிறந்த பிள்ளையார் யானை மூஞ்சியாய்ப் பிறந்து மூஞ்சூறு சவாரியில் காலந்தள்ளினான். விநாயகப் பக்தர்களை வினவு கிறோம். பேதமைக்குச் சுழியடிக்கும் பிள்ளையார் சுழி ரசிகர்கள்,முகஞ்சுழியால், அகம் சலியாமல் பதிலைத் தரட்டும் பகுத்தறிவாளர்களுக்கு.
1) வேண்டியவர்க்கு நன்மையும்- இக்கொள்கையைத் தாண்டிய
வர்க்குத் தீமையும் புரிபவன் தான் கடவுளா? 'அன்பே சிவன்'
என்று வர்ணிக்கப்படும் உலக நாயகனின் உத்தமப்புத்திரன் இப்படி இருக்கலாமா?
2) குளிக்கப் போகிறாள் பார்வதி. குலவப் போகிறான் பரமசிவன்; தடுத்து நிறுத்துகிறான் 'திடீர்'ப்பிள்ளை; தலையைக்கொய்கிறான் தகப்பனாக வேண்டியவன்.
3) அழுக்கில்- அதுவும் சதை இன்பத்தில் புதையத் துடிக்கும் கடவுள் கதைகள் மக்களைப் பண்படுத்துமா?
இப்படியே கேள்விகளைப் பாய்ச்சி, தோல்விகளைச் சுமத்தி, பக்தர்களின் முகங்களில் விளக்கெண்ணெய் வடிக்க நமக்கு ஆசை இல்லை. இவ்வளவு, ஆபாசத்தைக் கும்பிடக் கோயிலுக்குச் சென்று நாம் "தாசிப்புத்திரர்" ஆகலாமா? பக்தர்களே சிந்தியுங்கள்!
உள்ளதற்குத்தான் ஒரு வரலாறு ; இல்லாததற்குக் கணக்கற்ற கதைகள். முக்கண்ணனின் முதல் மைந்தனுக்கு இன்னொரு பிறவிக் கதையும் உண்டு.
அது - இது:
கசமுக அசுரன் என்பவன் இறவா வரம் பெற்றவன். தேவர் களை வம்புக்கிழுத்து விளையாடுவதே இவனின் பொழுதுபோக்கு.
தன்னைச் சாகடிக்க யாருமில்லை என்ற தைரியம் வேறு இந்த அசுரனுக்கு! "நாமார்க்கும் குடியல்லோம்; நமனை அஞ்சோம்" என்று கண்ணாமூச்சி காட்டினான் தேவர்களிடம். வெறுப்பும், கொதிப்பும் கொண்ட தேவர் குலம், திணறித் திண்டாடிச் சிவனை அடைக்கலம் கொண்டது.
தம்பதி சமதராகத் தோட்டம் ஒன்றில் ஆட்டம் போட்டுக்கிடந்த உலகநாயகனும் நாயகியும், தற்காலிகமாகத் தங்கள் செயல்களை ஒத்தி வைத்து, வதைபடும் தேவர் இனத்தைப் பரிசீலித்தனர். அப்போது அவர்கள் கண்களில் - கலவி புரியும் யானைகளின் காட்சி தென்பட்டது.
அவ்வளவுதான்!
சிவனும் பார்வதியும் சும்மா இருப்பார்களா? உடனே யானையாக உருமாறி விட்டனர்!
பிறகென்ன! இரும்பும் காந்தமும்தான்!!
இதன் விளைவு-பிறந்தார் பிள்ளையார்.
பிறந்தவர் யானை முகமும், மனித உடலுமாக இருந்தார்.
(ஆதாரம்: வலிவலம் கோவில் சிவனைப் பற்றி திருஞானசம்பந்தர் "பிடியதன் உருவுமை" என்று தொடங்கிப் பாடிய தேவாரப் பாடல்)
சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தர் பாடிய அந்தப் பாடல் வருமாறு;
"வடிகொடு தனதடி வழிபடுமவரிடர்
கடிகண பதிவர வருளினன் மிகுகொடை"
- என்பதாகும்.
தோப்புக்கரணம் போட இடுப்பில் துண்டைக்கட்டி கைகளை மாறுகை போட்டு காதுகளைப் பற்றியழும் பக்திப் பழங்களுக்குச் சில கேள்விகள்:
1) ஒரு கடவுளின் பிறவிக்கு மூன்று கதைகளா? அதுவும் இப்படி "கொக்கோக" விளக்கங்களாகவா இருப்பது?
2) "செங்கருமங் கைகூடும்" என்று பக்தர் கூட்டத்தால் புகழ்ந்து போற்றப்படும் தெய்வத்திற்கு ஜீனியர்களாக இருக்கும் தேவர்கள் அசுரனுக்குப் பயந்து ஓடுவது எந்த வகையில் ஏற்புடையது?
3) உலகத்தை ரட்சித்து, அருள்பாலிக்கும் கடவுள் தம்பதிகள் , மிருக இச்சை கொண்டது மாத்திரமல்லாமல் மிருகமாய் மாறியும் இணைந்து நனைந்த இழிவுக்கதை பக்தியைப் பரப்புமா? பக்தனைப் படுக்கை அறைக்கு விரட்டுமா?
4) இந்தக் கடவுளைப் பூஜிக்கும் சமஸ்கிருத , மந்திரங்களில் யானைத்தலையன், கொழுக்கட்டைக் கையன், முறக்காதுப் பையன், சப்பாணி இடூப்பன் , சால்வயிற்றுக் கடவுள். கருத்துப் போன உடலான், ஒத்தைப்பல்லன் என்றெல்லாம் பூஜிக்கிறார்கள். இது பரவசத்திற்குரியதா? பரிகாசத்திற்குரியதா?
5) தாயைப் போல அழகி வேண்டும் என்று அலைந்து , அலுத்த தனதுபிள்ளையைஆற்றங்கரையில் குந்தி 'சுயம்வரம்' நடத்த பார்வதி அனுமதித்ததால்தான், அரசமர நிழலில்-குளக்கரையில் பிரம்மச்சாரியாய் கிடக்கிறான் விநாயகன்.
இவனைப் போய்க் கும்பிடப்போகும் பக்தசிகாமணிகள், பார்வதிபோல் தங்களது மனைவியின் தோற்றம் இருந்துவிட்டால் எவ்வளவு அபாயம்? விநாயகக் கடவுள் வேண்டுகோளைப் புறக்கணித்தால் வாழ்வில் விக்னம் ஏற்பட்டுவிடாதா? அதற்காக மானத்தை மறந்து, இயற்கை ஆக எந்தப் பக்தராவது இந்தக் காலத்தில் தயாராக முடியுமா? பக்தர்களே
சிந்தியுங்கள் !
------------- நூல்: சாமி அவர்கள் எழுதிய "கடவுளர் கதைகள்" பக்கம் 3-7
0 comments:
Post a Comment