Search This Blog

11.8.08

கம்பன் விழா தேவையா?



கம்பன் கழகமாம் - ஆண்டுதோறும் சென்னையில் விழாவாம் - பலருக்கும் விருதாம் - பண முடிப்பாம்!

பேஷ்! பேஷ்!! இப்படி தடபுடலாக நடத்தக் கூடியவர்கள் தமிழர்களாகயிருக்கிறார்களே என்று எண்ணும் தொறும் எண்ணும் தொறும் இனநலன் பேணுவோர் நெஞ்சில் நெருப்புக் கணைகள் தாக்கத்தான் செய்யும்.

அதுவும் அண்ணாவின் தம்பி என்று தமக்குத் தாமே மார்தட்டிக் கொண்டு அந்த அண்ணாவின் பெயரால் கழகம் கண்ட (அண்ணா திமுக), எம்.ஜி.ஆர். அவர்களுக்கு இணை பிரியாத் தளபதி யாக விளங்கிய தமிழர் ஆர்.எம். வீரப்பன் போன்றவர்கள் இந்தக் காரியத்தை செய்யும்போது மனம் கனக்கத்தான் செய்யும்.

அதே நேரத்தில் வீரப்பன்கள் எப்பொழுதும் இப்படித்தான் என்று அறிந்தோர் அலட்சியம் காட்டுவார்கள்!

தடபுடலாகக் கம்பனுக்கு விழா நடத்தப்படும் பொழுது தமிழின நெஞ்சங்கள் தடுமாறி விடக் கூடாதே! கண்கவர் வித்தைகளாகக் காட்சிகளைச் சோடனை செய்தால் இளைஞர்கள் மூலத்தை மறந்து விட்டு நிழலின் சொரூபத்தில் மயங்கி விடக் கூடிய ஆபத்து உண்டே!
அதுவும் கம்பன் என்றால் கேட்கவா வேண்டும்? காமரசங்களைத் திரட்டிக் கொடுப்பதில் - கொக் கோகம் எழுதிய ஆசாமிகூட சலாம் போட்டு ஓட வேண்டுமே! வயோதிகர்கள் கம்பனைக் கட்டியணைப்பதில் இந்தக் கண்ணராவித்தனமும் காரணமாக இருக்கக் கூடுமோ என்ன எழவோ!

இராமனைக் காட்டி அரசியல் நடத்தும் ஆசாமிகள் தமிழ்நாட்டில் முகூர்த்தக்கால் நடக் காத்துக் கிடக்கிறார்கள்.

இராமனைக் காட்டி தமிழர்களின் நீண்டகாலக் கனவான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தின் கடையாணியைக் கழற்ற நினைக்கிறார்கள்; இந்த நேரத்தில் கம்பனுக்கு விழா - அதுவும் தலைநகரில் விழா! இந்தக் கால கட்டத்தில் சன் தொலைக் காட்சியில் ஞாயிறுதோறும் இராமாயண நாடக ஒளிபரப்பு! விபீஷணர்கள் சிரஞ்சீவிகள் என்று சொல்லப்படுவதன் பொருள் இப்பொழுது புரியத்தான் செய்கிறது.

கம்பர் விழா நடத்தும் கண்ணியவான்கள் வழக்கமாக ஒன்றைச் சொல்லுவார்கள்: கருத்து இருக்கட்டும் ஒருபுறம்; கம்பனின் காவியத்தைச் சுவைக்க வேண்டாமா? அந்தக் கற்கண்டுத் தமிழில் குளிக்க வேண்டாமா? அந்த அணி இலக்கியப் புரவியில் சவாரி செய்ய வேண்டாமா?
இலக்கியம் என்றால் இவர்களுக்கு என்ன தெரியும்? அந்த வறட்டு மனிதர்கள் இரசனையில்லாத இருள்மதியினர் என்று மேதாவி ஸ்தானத்தில் உட்கார்ந்து கொண்டு இருப்பது போல மிதப்பான வார்த்தைகளை அள்ளி வீசுவார்கள்.

இதுபோன்ற மேதாவி ஒருவர் தந்தை பெரியாரிடம் இப்படித்தான் கேட்டார் - அது நடந்தது தஞ்சையிலே.
பெரியார் ராமாயணத்தைக் குறை கூறுவது தவறு; கலை உணர்ச்சிக்காகவும் அதனைப் போற்ற வேண்டும் என்றார் அந்தத் தமிழன்.

அன்பரின் அந்தக் குற்றச்சாற்றுக்கு அந்த மேடையிலேயே அவரைப் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டு பதில் சொன்னார் தந்தை பெரியார்.
நான் கலை உணர்ச்சியையும், தமிழ் உணர்ச் சியையும் வேண்டாம் என்று கூறவில்லை. தங்கக் கிண்ணத்தில் அமேத்தியம் (மலம்) இருந்தால், தங்கக் கிண்ணம் என்பதற்காக அமேத்தியத்தைப் புசிக்க முடியுமா? அதுபோல கம்பராமாயணப் பாட்டுகள் சிறந்தவைதான்; அவைகளில் உள்ள மூடநம் பிக்கைக்கும் தமிழர் - இழிவுக்கும்ஆரியர் உயர்வுக்கும் - ஆதாரம னவைகளை வைத்துக் கொண்டு எப்படி அவைகளைப் பாராட்ட முடியும்? என்று பளிச் சென்று பதிலடி கொடுத்தார் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் (ஆதாரம்: தமிழர் தலைவர் பக்கம் 205-206).

இதற்கு மேலும் உரைக்கும்படி எப்படி தான் பதில் இறுக்க முடியும்? இதற்கு மேலும் எந்தத் தீவட்டியால்தான் சூடு போட முடியும் - எந்தச் சுளுக்கியால்தான் தமிழர்களின் தடித்த தோளில் சொரணையை ஏற்படுத்த முடியும்?

பெரியார் அப்படித்தான், அண்ணாவுக்கு இலக்கிய ரசனை உண்டு என்று மித்திரபேதம் செய்யும் திருமேனிகளுக்கும் அண்ணாவின் அழகு தமிழ் உண்டு. சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளையை நோக்கியும், பன்மொழிப் புலவர் சோமசுந்தர பாரதியாரை, நோக்கியும் அண்ணா வைத்த விவாதக் கணைகள் இதோ:

காடேக இராமன் கிளம்பும்போது உடன்வரப் புறப்பட்ட சீதையை இராவணன் எடுத்துச் சென்ற விதத்தையும், வால்மீகி கூறியுள்ளபடியே கம்பன் எடுத்தெழுதி யிருப்பின், அந்த ஆரியப் பாத்திரங்களிடம் ஆபாசக் குணங்கள் கிடந்ததைத் தமிழர்களுக்கு - அவர்களைத் தெய்வங்களென்று போற்றும் கீழ்நிலைக்கு வந்திருக்க மாட் டார்கள். கம்பரோ தமது கவித் திறமை யினால் ஆரிய இராமனைக் குறறங் குறை யற்ற சற்புத்திரனாக்கிக் காட்டி, வழிபாட்டுக் குரிய தெய்வமாக்கி விட்டார் (ஆதாரம்: தீ பரவட்டும்!)

அண்ணா அண்ணா என்று அடிக்கு ஒரு தரம் அர்ச்சனை செய்யும் அண் ணாவின் தம்பிகளான வீரப் பர்கள் அண்ணாவின் இந்தக் குற்றச்சாற்றுக்கு தங்கள் வசம் வைத்துள்ள பதில் என்ன?
ஆரிய இராமனை - திரா விடர்கள், தமிழர்கள் கடவு ளாகத் தண்டனிட்டு வழிபடும் இடத்துக்கு அல்லவா கம்பன் இழுத்துச் சென்று இருக் கிறான்? கம்பனின் காவியத் தமிழ் - தமிழினக் கழுத்தை யறுப்பதற்கல்லவா பயன் பட்டு இருக்கிறது? ஆரியர் திராவிடர் போராட்டத்தைச் சித்திரிப் பதுதான் இராமாயணம் என்று வரலாற்றாளர்கள் எடுத் துரைத்த பிறகு, ஆர்.எம்.வீ. களின் செயல்பாடுகள் எப் படியிருந்திருக்க வேண்டும்? அதற்கு மாறாக ஆம், ஆம், ஆரியர்களால் திராவிடர் அழிக்கப்பட்டது நியாயம் தான் - இழித்துரைக்கப்பட்டது ஏற்புடைத்ததுதான் என்பதற்குத் துணை போவது துரோகமானது அல்லவா!

ஏதோ திராவிடர் இயக் கத்தவர்கள் கம்பனைக் காய்கிறார்கள் என்று கருத வேண்டாம். தமிழ்க் கடலாகிய மறைமலை அடிகள்கூட என்ன எழுதுகிறார்?

கம்பர், நடவாத பொய்க் கதையாகிய இராமாய ணத்தைத் தமிழில் மொழி பெயர்த்துச் செய்தமையால், வடமொழி பொய் வழக்கிற் பழகிவிட்ட அவரது நா, அதன் கண் இலக்கியச் சுவை தோன்றக் கூற வேண்டும் இடங்களிலும் பொய்யா வனவே புனைந்து கூறி இழுக் கினார். இங்ஙனமே கம்பர்க் குப் பின் வந்த தமிழ்ப் புல வர்களெல்லாரும், பொது மக்களை ஏமாற்றுதற் பொருட்டு பார்ப்பனருங் கோயிற் குருக்கண்மாரும் வடமொழியில் வரைந்து வைத்த பொய்யான புராணங்களையுந்தலபுராணங்களையுமே பெரும்பாலும் தமிழில் மொழி பெயர்த்து வைத்துப் பண்டைத் தமிழ் மெய் வழக்கினை அடியோடழித்து விட்டார். இப்பிற்கால மொழி பெயர்ப்பு நூல்களி லும் ஒரோவிடங்களில் இலக்கியச் சுவை காணப்படுமே னும், முதலிலிருந்து முடிவு வரையில் அவற்றின்கட் பொய்யாவனவே தொடுக்கப்பட்டி ருத்தலால், அவற்றின் பயிற்று மக்கட்கு மெய்யுணர்வினையும் மெய்யறிவு விளக்கத்தி னையுந்தராது!


(ஆதாரம்: மறைமலையடிகளாரின் முற் கால பிற்காலத் தமிழ்ப் புலவோர் பக்கம் 145-146)

கம்பன் விழாவில் பங்கேற்கும் தமிழ்ப் புலவர்கள் தமிழ்க் கடலின் இந்தக் குற்றப் பத்தி ரிகைக்குக் கைவசம் வைத் துள்ள சரக்குகள் என்ன? கம்பன் கொடுத்த சழக்கான கடைச் சரக்கைத் தமிழ் மண்ணில் விநியோகம் செய்ப வர்கள் யாராகவிருந்தாலும் - ஓர் விஷமான விவசாயத்துக்கு ஏர் உழுது விதை விதைக்கும் ஆபத்தான பணியில் அறிந்தோ அறியாமலோ ஈடு பட்டுக் கொண்டு இருக்கின் றனர். இராமன் பெயரைச் சொல்லி இந்துத்துவா என்னும் திரிசூலத்தைத் தூக்கிக் கொண்டு அலையும் கும்பலுக்குத் துணைபோகும் துரோகத்துக்குத் துந்துபி பாடியவர் கள் என்ற குற்றச் சாற்றுத் தண்டனையிலிருந்து இவர்கள் தப்பிக்கவே முடியாது - முடியவே முடியாது! இது கல்லின் மேல் எழுத்தாகும்.

------------------9-8-2008 "விடுதலை" ஞாயிறுமலரில் "மின்சாரம்" அவர்கள் எழுதிய கட்டுரை

2 comments:

bala said...

//"மின்சாரம்//

தமிழ் ஓவியா அய்யா,

ஆ என்ன,இந்த மூஞ்சி மின்சாரமா?ஆர்க்காட்டு கொல்டி இதை தேடி அலைந்து கொண்டிருக்கிருதே.

பாலா

தமிழ் ஓவியா said...

கட்டுரைக்கு தொடர்பில்லாத ஆற்காட்டார் பெயரை இதில் வம்புக்கிழுப்பது எந்த வகை தர்க்கவாத்மோ?.
உம்முடைய பைத்தியகாரத்தனத்துக்கு அளவில்லாமல் போச்சு.

விவாதத்தை ஆரோக்கியமாக செய்யவும்.