Search This Blog

26.8.08

பெரியார் பற்றி திரு. வி.க.





கருத்து வேற்றுமைக்கு மதிப்பளிப்பவர்! - தமிழ்ப் பெரியார் திரு.வி.கல்யாண சுந்தரனாரவர்கள்


ஈரோட்டில் சென்னை மாகாணச சங்க இரண்டாம் ஆணடு மாநாடு (11,12-10-1919) இல் குழுமியது. அதன் தலைவர் திரு.லாட் கோவிந்ததாஸ் வரவேற்புத் தலைவர் திரு. ஈ.வெ.இராமசாமிப் பெரியார் நட்பை அம்மாநாட்டிலேயே யான் பெற்றேன்.

....நாயக்கர் சென்னை மாகாணச் சங்கத்தின் உதவித் தலைவருள் ஒருவர்; யான் அமைச்சருள் ஒருவன்.

டாக்டர் வரதராஜீலு நாயுடுவும் யானும் நாயக்கர் வீட்டில் தங்கினோம். நாயக்கர் தலையிலும் உடலிலும் இடுப்பிலும் பட்டணி ஒளி செய்தது. அவர் மனைவியார் தோற்றம் மணிபூத்த பொன் வண்ணமாகப் பொலிந்தது. அவர் ஜமீன்தாராகவும் இவர் ஜமீன்தாராராணியாகவும் காணப்பட்டனர்.

நாயக்கர் பேச்சில் கருத்துச் செலுத்தாத காலமுண்டு. அவர் பேச்சில் கருத்துச் செலுத்திய பின்னர் தமிழ்நாட்டுக் காளமேகமானார். நாயக்கர் பேச்சு மழையாகும். கன மழையாகும். கல் மழையாகும். மழை மூன்று மணிநேரம் - நான்கு மணிநேரம் பொழியும்.

முன்னாளில் தமிழ்நாட்டில் தொண்டு செய்தவர் என்ற முறையில் எவர்கேனும் பரிசில் வழங்கப்புகுந்தால் முதற்பரிசில் நாயக்கருக்கே செல்வதாகும். தமிழ்நாட்டுக் காங்கிரஸ் நாயக்கர் உழைப்பை நன்றாக உண்டு கொழுத்தது. அவர் காங்கிரசில் வெறி கொண்டு நானா பக்கமும் பறநது உழைத்ததை யான் நன்கு அறிவேன். நாயக்கரும் யானும் சேர்ந்து சேர்ந்து எங்கெங்கேயோ தொண்டு செய்தோம். காடு மலையேறிம் பணி புரிந்தோம்.


நாயக்கர் உத்துழையாமையில் உறுதி கொண்டு பலமுறை சிறை புகுந்தார். அவ்வுறுதிக்கு இடர் விளைவித்தது சுயராஜ்யக் கட்சியின் கிளர்ச்சிக்கு இணங்கிக் காங்கிரஸ் சட்டசபை நுழைவுக்கு ஆதரவு நல்கியதானது. நாயக்கருக்கு எரியூட்டிற்று....

....நாயக்கர் சுயராஜ்யக் கட்சி ஒத்துழையாமை உணர்வையே போக்கும், பட்டம் - பதவிக் கட்சியாகும் என்பார். தற்போது காங்கிரசில் உற்றுள்ள சோர்வை நீக்கிப் பழைய ஒததுழையாமையை உயிர்ப்பிக்கச் சுயராஜ்யக் கட்சியை ஒரு கருவியாகப் பயன்படுத்தல் வேண்டும் என்று யான் சொல்வேன். "மீண்டும் ஒத்துழையாமை எழுமா?" என்று அவர் கேட்பார். அது எழுந்தே தீரும். வேறு வழியில்லை என்று யான் உரைப்பேன். சுயராஜ்யக் கட்சியால் பிராமணர்க்கு ஏற்றமும் மற்றவர்க்கு இறக்கமும் உண்டாகும் என்று இராம சாமியார் கூறுவார். யான் அதை மறுப்பேன்.

நாயக்கர் ஜட்டிஸ் கட்சியில் சேர்ந்து சுயமரியாதை இயக்கங்கண்டு பிரசாரம செய்தார். அதனால் தென்னாட்டுக்குக் கேடு விளைதல் கண்டு யான் எதிர்ப் பிரசாரம் செய்தேன். இருவர் போரையும் தென்னாடு வேடிக்கை பார்த்தது. போரிட்டோம் பத்திரிக்கையில் போரிட்டோம். மேடையில் போரிட்டோம். என் உடல் நலம் குன்றும் வரையான் முன்னணியில் நின்று போர் புரிந்தே வந்தேன். போர் உச்சம் பெற்ற காலத்திலும் நாயக்கர் வீட்டுக்கு யான் செல்வேன். என் வீட்டிற்கு அவர் வருவார். எங்கள் நட்புக்கு குலையவ இல்லை. ஒரே மேடையில் இருவரும் பேசுவோம். அவர் கொள்கையை அவர் சொல்வார். என் கொள்கையை யான் சொல்வேன். ஒரே இடத்தில் உண்போம் உறங்குவொம் நட்பு முறையில் உறவாடுவோம்.
நாயக்கர் சுயமரியாதை எனது சன்மார்க்க இயக்கத்தினின்று பிறந்தது. அதற்கும் இதற்கும் நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு ஒற்றுமை பத்துப் பங்கு வேற்றுமைப் எங்களுக்குள் போர் மூட்டியது. வேற்றுமைப் பகுதி ஆக்கம் பெறவில்லை. ஆக்கம் பெறாமையும் எங்கள் போர் நிறுத்தத்துக்கு ஒரு காரணம்.

இளமையில் யான் பொறுமை காப்பது அரிதாகவே இருந்தது.... காஞ்சி மாநாட்டிலே நாயக்கருக்கும் எனக்கம் உற்ற கருத்து வேற்றுமை காரணமாக அவர் "குடிஅரசு" எய்த சொல்லம்புகள் பொறுமையை என்பால் நிலை பெறுத்தின. சொல்லம்புகளை யான் தாங்கப் பெருந்துணை செய்தவர் நண்பர் நாயக்கரே.... சாதி வேற்றுமையை ஒழித்தவர். அதை நாட்டினின்றுங் களைந்தெறிய முயல்பவர்.

வைக்கத்தில் (1924) தீண்டாமை ஒழிப்பப் போராட்டம் எழுந்தது. நாயக்கர் அங்கே சென்று சத்தியாக்கிரகஞ் செய்தார். திருவாங்கூர் அரசாங்கம் அவரைச் சிறைப்படுத்தியது. அப்பொழுது யான் வைக்கம் வீரர் என்ற தலைப்பீந்து, பெரியாரின் தியாகத்தை வியந்து வியந்து நவசக்தியில் எழுதுவேன். வைக்கம் வீரர் என்பது பெரியாருக்கொரு பட்டமாகவே வழங்கலாயிற்று.

இராமசாமியார் காங்கிரசில் தொண்டாற்றிய காலத்தில் இவர் முயற்சியால் ஈரோட்டில் இந்தி பகுப்பொன்று நடைபெற்றது. திறப்பு விழாவுக்கு யானும் சென்றிருந்தேன். தென்னாட்டில் இந்தி விதையிட்டவர் நாயக்கரே. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அது செடியாகி நின்றது. காங்கிரஸ் ஆட்சி அச்செடியைத் திடீரென மரமாக்கக் கட்டாயத்தில் இறங்கியது. அது இஷ்டப்படி வளரலாமே என்றார் நாயக்கர். இக்கருத்து வேற்றுமை பெருங்கிளர்ச்சித் தீயாயிற்று. நாயக்கர் கிளர்ச்சித் தலைவராக முன்னணியில் நின்றார். அவரது கெழுதகை நண்பர் இராஜகோபாலாச்சாரியார் காங்கிரஸ் ஆட்சித் தலைவராக வீற்றிருந்தார். அடக்குமுறை எழுந்தது. நாயக்கர் ஏறக்குறைய ஆயிரவருடன் சிறை புகுந்தார். அடக்குமுறையை யான் நவசக்தி வாயிலாக மறுத்து வந்தேன். அம்மறுப்பு நாயக்கர் கிளர்ச்சிக்குத் துணை போயிற்று.

வைக்கம் வீரர்க்குப் பலதிற அணிகளுண்டு. அவைகளுள் ஒன்று வைராக்கியம். மயிலை மந்தைவெளியிலே (08-03-1924) நாயக்கரால் நிகழ்த்தப் பெற்ற சொற்பொழிவிலே இராஜ நிந்தனை இயங்கியதென்று அவர் கைது செய்யப்பட்டார். வழக்கு நடந்தது. நாயக்கர் இராயப்பேட்டையிலே தங்கினார். ஓர் இரவு குகானந்த நிலையத்திலே நாயக்கர் ஒரு திண்ணையில் உறங்கினார். யான் மற்றொரு திண்ணையில் உறங்கினேன். பதினொரு மணிக்கு மழை தொடங்கியது. நண்பரை எழுப்பினேன். அவர் கண் விழிக்கவில்லை. மழை பெருகியது. மீண்டும் நேயரை எழுப்பினேன். கண்கள் மூடியபடியே இருந்தன. பெரியாரைப் பலமுறை எழுப்பி எழுப்பி பார்த்தேன். பயன் விளையவில்லை. நாலு மணிக்கு மழை நின்றது. ஆறு மணிக்கு வைக்கம் வீரர் எழுந்தார். எனக்குச் சொல்லொண்ணாச் சிரிப்பு. மழை பெய்தது தெரியுமா? என்று நண்பரைக் கேட்டேன். மழையா? என்றார். நாயக்கரைத் தீண்டியுள்ள பாம்பு 124-ஏ வழக்கு நடப்புக் காலம்! அந்நிலையில் நண்பருக்குக் கவலையற்ற உறக்கம்! என் எண்ணம் நாயக்கர் மனத்தின் மீது சென்றது. அவர் மனம் பொன்னா? சஞ்சலமுடையதா? என்ற ஆராய்ச்சியில் இறங்கினேன்.

1942 ஆம் ஆண்டு இராமசாமிப் பெரியார் ஜெனரல் ஆஸ்பத்திரியில் படுக்கையில் கிடந்தபோது அவரைக் காணச் சர்க்கரைச் செட்டியாரும் சண்முகானந்தசாமியும் ஜானகிராம் பிள்ளையும் யானும் சென்றோம். யான் அவர் கட்டிலிலே நெருங்கி அமர்ந்தேன். நாயக்கர் என் கையைப் பற்றிக் கதறினார். என் கைக்குட்டை நனைந்தது. இருவருங் கருத்து வேற்றுமையுடையவர் போரிட்டவர் பெரியார் கண்கள் ஏன் முத்துக்களை உகுத்தன? அக்காட்சி கண்டவர் இங்கே பலர் வருகிறார் போகிறார். எவரைக் கண்டும் பெரியார் அழுதாரில்லை. இவரைக் கண்டதும் அவருக்கு அழுகை ஏன் பெருகியது? என்று ஒருவரோடொருவர் பேசியது என் காதுக்கு எட்டியது. அழுகைக்குப் காரணம் என்ன?

அஞ்சாமையும் உண்மையும் உள்ள இடத்தில் கருத்து வேற்றுமைக்கு இடந்தரல் என்ற பெருங்குணம் அமைந்திருக்கும். கருத்து வேற்றுமைக்கு இடமுள்ள நாடுதான் நாகரிக நாடாக இருக்க முடியும்.கருத்து வேற்றுமைக்க இட்ங்கொடாத ஆட்சி கொடுங்கோல் ஆட்சியாகத்தான் மிருக ஆட்சியாகத்தான் காட்சியளிக்கும். நாங்கள் பல்லாண்டுகளாகக் கருத்து வேறுபாடுடையவராக இருந்தும் சென்னை வந்தால் அவர் இராயப்பேட்டையிலுள்ள என் வீட்டிற்கு வருவார். நானும் அவர் அழைக்கும் போதெல்லாம் ஈரோடு செல்வேன்.
இராமசாமிப் பெரியார் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர். அவர் தம் புகழோ தென்னாட்டிலும் வடநாட்டிலும் பிற நாடுகளிலும் மண்டிக் கிடக்கின்றது! காரணம் என்ன? தோழர் ஈ.வெ.ரா. வின் உண்மையும் வாய்மையும் மெய்மையுஞ் செறிந்த அறத் தொண்டாகும்.


ஈ.வெ.ரா.விடம் ஒருவித இயற்கைக்கூறு அமைந்துள்ளது. அதனின்றும் அவரது தொண்டு கனிந்தது. அதென்னை? அது அகவுணர்வு வளர்ந்து செல்லும் பேறு. இப்பேறு பலர்க்கு வாய்ப்பதில்லை. மிகச் சிலர்க்கே வாய்க்கும்.

உரிமை வேட்கை அஞ்சாமை முதலியன ஈ.வெ.ரா.வின் தோற்றத்திலேயே பொலிதல் வெள்ளிடைமலை. பெரியார் கல்லூரி காணாதவர். பாடசாலைப் படிப்புக் குறைவு. ஆனால் எவருக்கும் எளிதில் கிடைக்காத இயற்கையறிவை ஏராளமாகப் பெற்றிருக்கிறார்.
இவர் இயற்கைப் பெரியார். நான் என் வாழ்நாளில் இதுகாறும் செய்த ஆராய்ச்சிகளுள் அகப்படாத பல பெரியார் கருத்துக்களும் அரிய யோசனைகளும் இப்பெரியாரின் இயற்கையறிவில் உதித்திடக் காண்கிறேன்.


"தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்". இது பெரியாருக்குத்தான் பொருந்தும்.



-------------- சாமி.சிதம்பரனார் - நூல்:"தமிழர் தலைவர்" பக்கம் 200-204

0 comments: