Search This Blog

18.8.08

ஆரியர் இந்தியாவுக்குரியவரா?

(மத்திய ஆசியாவிலிருந்து- மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் மேய்ச்சல் தரைகளைத் தேடி, இந்தியப் பகுதிக்கு வந்தவர்கள் ஆரியர்கள் என்கிற வரலாற்று உண்மையை மறைக்கப் பார்ப்பனர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்து வரும் இவ்வேளையில், இக்கட்டுரை மறுபதிப்புச் செய்யப்படுகிறது).

பூர்வம் 5000 வருஷங்களுக்கு முன் ஜோதியினிடங்களைக் கண்டு, காலபேதக் கணிதங்களையோர் சங்கத்தினர் வகுத்த காரணத்தால் சாக்கையரெனப் பெயர் பெற்று விளங்கினார். இவர்களை ஆறாவது சங்கத்தவரென, அருங்கலைச் செப்பு என்னும் பண்டைய நூல்நுவலா நிற்கும், பெருங்குறவஞ்சியெனு மருந்தமிழ் நூலுமிதனை மேற்கொண்டு முழங்குவதைக் காணலாம். இவ்வித கணித சாஸ்திரிகளாய் நின்ற சாக்கையர் குழுவிற்கு கவிவாகு சக்கரவர்த்தியே தலைவராய் நின்று - அறுபது வருஷம் அரசாட்சி புரிந்து வந்ததோடு, ஆண்ட ஒவ்வொரு வருஷத்திற்கும் பலா பலன்களுக்குத் தக்க பிரபவ, விப, பரிதாபி, சாதாரண என பாலிபாஷையில் அறுபது பெயர்களையும் வழங்கி அறுபதாவது வருடம் காலமாயினார்.

இவருக்குப்பின் கணித வல்லுநர்களாய்த் தோன்றினவர்கள் கலிவாகு வகுத்த அறுபது வருஷ பெயருக்கு மேல் வேறு பெயர்களை வகுக்காமலும் அவரது கணித வல்லபம் யாண்டும் உலகில் நிலவுவதற்காகவும் அவர் பெயரால் கலியுலகம் என வகுத்துச் சிறப்பு வழங்கி வரலாயினர். இக்கலியனது நெடுங் கணக்கு 5017 ஆக வழங்கி வருகின்றது. இதனையே தற்காலத்தவர் கலியுக மெனச் சாரமற்று வழங்கி வருகின்றனர். இக்கலியு கத்தின் 1816-ம் வருஷமாகிய சித்தார்த்தி வருடம் சுத்தோதன னுக்கும் மாயாதேவிக்கும் மகவாகப் பிறந்தவரே கவுதமபுத்தர். இவர் சாக்கைய வம்ஸவரிசையில் பிறந்தபடியால் சாக்கையபுத்த ரென்றும், சாக்கைய முனிவரென்றும் நூற்கள் நுவலாநிற்கும். இவர் - உலகில் மலிவுற்றுக் கிடந்த அந்தகாரத்தைப் போக்கித் தண்சுடர் பரப்பப் பேரொளிபோற் றோன்றி உண்மைக் காண் டலே தண்மையாந்துக்க நிவாரணமார்க்க மென்றோதாமலுணர்ந்து, எண்ணருஞ் சக்கிரவாள மெங்கணும் அண்ணல் அறக்கதிராழியைப் பரப்புவாராயினர். இவரது கலியாண தர்மத்தை விம்பாசாரன், பரதேசபரன், சந்திரகுப்தன், அசோகன், மணிவண்ணன் முதலிய பார்த்திபர்களெல்லாம் மேற்கொண்டு பிரவர்த்தித்ததோடு அநேக அரயர்களும் அருட்பிரவாகனைப் பின்பற்றித் துறவிகளாகித் தன்மப் பிரவர்த்தனர்களாய் நிலவி ஸ்ரீபுத்தரை ஆயிர நாமத்தாழிய னென்றும் சகஸ்திர நாம பகவனென்றும் கொண்டாடி வந்தனர்.
ஸ்ரீ புத்தேளது பேரறமாம் சத் தன்மத்தாலன்றோ நமது ஆசியா கண்டம் சாந்த நிலை கொண்டது. சாக்கிரடீஸ், ஹெரோடெத் முதலிய கிரேக்க நாட்டு சாஸ்திரிகளும் புத்தருக்குப் பின்பட் டவர்கள் தாமே! கிறிஸ்து, மஹமது முதலிய ஞானிகளும் - இன்னும் சில இந்து ஆசிரியர்களும், புத்தருக்குப் பிற்பட்டவர்களாக விளங்குகின்றனர்.

ஆகவே 1500 வருஷங்களுக்குமுன் நமதிந்திய நாட்டில் அரசர்கள் முதற்கொண்டு குடிகள் வரையும் யாதொரு ஜாதிபேதமின்றியும், மித்திரபேதமின்றியும், ஒப்புயர்வற்ற ஸ்ரீபுத்தரது தன்மத்தை மேற்கொண்டு சுகுணசித்தர்களாய் மங்கள வாழ்க்கையுற்று வந்தனரென்பது இனிதிற் புலனுறுவ தொன்றாம்.

இத்தகைய வாழ்க்கை நலம் பொருந்திய நமதிந்திய நாட்டில் ஆயிர வருஷங்களுக்கு முன் பஞ்சத்தால் வருந்தி பல தேசங் களுக்கும் குடிபுக வாரம் பித்த புருசீகர்களிற் சில கூட்டத்தவர் இந்து தேசத்திற் குடிபுகுந்து சிந்து நதியின் கரையோரங்களை யிருப்பிடமாக கொண்டு யாசக ஜீவனஞ் செய்து வந்தனர். இப்புருசீகர்கள் தீயை வணங்குகிறவர்களாயும், கொலையாடிப் புலாலுண்ணும் மாமிஸப் பட்சணிகளாய் இருந்தபடியாலும் பவுத்த இந்தியா அஹிம்சையை மேற்கொண்டிருந்தபடியாலும் இதற்கு யாதுசெய்வதெனத் திகைத்து, யாகம் எனு மோர் கொள்கையை மேற்கொண்டு, ஆடு, மாடு முதலியவைகளை நெருப்பிலிட்டு யாகஞ் செய்து தின்றால் தோஷமின்றெனத் தந்திரமாகக் கற்பித்து, மாமிஸ பட்சணத்தையும், தீவணக் கத்தையும் நமது நாட்டிற் புகுவித்தனர். இதனைக்கண்ட நமது முன்னோர்கள் புரூசீகர்களது இழிதொழிலுக்கொக்க ஆரியர் - வடமிலேச்சர் என வகுத்து நிராகரிக்க வாரம்பித்தனர். இதைக் கண்ட புருசீகர் அநேக இந்திய நாட்டு அரசர்களை மோகவலை யில் மூழ்த்தித் தமக்கிணங்கும்படி செய்து புத்த தன்மத்திற் கெதிரி டையான கிரியைகளை மேற்கொண்டு, அநேக கற்பிதங்களை யேற்படுத்தி புத்ததன்மத்தை நசித்து வந்ததோடு, பவுத்தவேந் தர்களை வஞ்சகமாய்க் கொலைபுரிந்து அரசுரிமைகளையுங் கைப்பற்றியிருக்கின்றனர். இதற்கு சீவக சிந்தாமணியும் மேரு மந்திர புராணமும் சாலுங்கரியாய் விளங்குகின்றன சச்சந்தனது, அரசபோகத்தை ஆரியனாகிய கட்டியன் வவ்வியதும், சீவகன், கட்டியங்காரனோடு, அமர்புரியுங்கால் அநேக செம்முகமி லேச்சர், சீவகனை யெதிர்த்துள்ளதும், ஊன்றி கவனித்துப் பார்க்கினிற் புலனுறும். இதன்றிசூளாமணியிலும் ஆரியரது கூத்துச் சிறிது விளக்கியுள, அஷவகோஷ போதிச்சத்வரும் ஆரியரைப்பற்றி விளக்கிக் கூறியுள்ளார். இன்னணம் பல வாதாரங்களை மேற்கொண்டு நோக்குழி, ஆரியர் இந்திய நாட்டுக்குரியவர் அன்றென்பது இனிதில் விளங்கும்.



--------------------- ஜி. அப்பாதுரையார், சாம்பியன் ரீப்ஸ்
"திராவிடன்" 7.7.1917

0 comments: