Search This Blog

23.8.08

படமெடுத்தாடும் பக்தப் பாமரர்கள்!




சென்னை வில்லிவாக்கம் அகத்தீஸ்வரர் கோவி லில் நாகாத்தம்மன் புற்றுக்கு பால், முட்டை ஊற்றி பெண்கள் வழிபட்டனர் என்கிற செய்தியைப் படிக்கும்பொழுது, நம் நாட்டில் படித்த பெண் கள்கூட பாமர மூடர் அளவில் இருக்கிறார்களே என்று வேதனைப்பட வேண்டியுள்ளது.

முதலில் கடவுளுக்குப் பொருள்களைக் கொடுத்து திருப்திப்படுத்த முனைவதே - அவர்கள் கடவுளைக் கற்பித்த இலக்கணமுறைக்கே முரணானதாகும்.

கடவுளுக்கு ஒன்றைக் கொடுத்தால் நமக்கு இன்னொன்று செய்வார் என்பது ஒரு வியாபார முறையில்லாமல் வேறு என்ன இது?

நாம் செய்யும் நன்மை தீமைகளை - எல்லாம் அறிந்ததாகக் கூறப்படும் கடவுள் அறிய மாட்டாரா? அதன் அடிப்படையில் கூலி கொடுக்க மாட்டாரா? ஏன் இந்தத் திசையில் பக்தர்கள் சிந்திக்க மறுக் கிறார்கள்?

சரி.. பொருள்களைத்தான் படைக்கிறார்களே அதிலாவது பொருள் இருக்க வேண்டாமா?

பாம்பு புற்றுக்குப் பால் ஊற்றுகிறார்களே - முட்டை வைத்துப் படைக்கிறார்களே! பாம்பு அந்தப் பாலைக் குடிக்கிறதா? முட்டையை உடைத்துத்தான் சாப்பிடுமா?

பாம்பைப் பற்றிய கடுகு மூக்கு அளவு பொது அறிவு இருந்தால் இதனைச் செய்வார்களா? படித்துப் பட்டம் பெற்றவர்களுக்குக்கூட இவை யெல்லாம் தெரியாமல் போன மர்மம் என்ன?

பக்தி என்று வரும்போது புத்தியைச் செலவழிக் கக் கூடாது என்று எவ்வளவு சர்வ ஜாக்கிரதையாகச் சொல்லி, மக்களின் அறிவை மரத்துப் போகச் செய்து விட்டார்கள்.

அது மட்டுமல்ல - நம் நாட்டுப் படிப்பு என்பது வெறும் வயிற்றுப் பிழைப்புக்கு லைசென்ஸ் என்று தந்தை பெரியார் அவர்கள் மிக அழகாகப் படம் பிடித்து விட்டார்கள். இந்த நிலையில் உள்ளவர்கள் பகுத்தறிவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்க முடியும்? பாம்பின் நாக்கு என்பது பிளவுபட்ட தன்மை உடையதாகும். தண்ணீரையோ பாலையோ உறிஞ்சிக் குடிக்கும் ஆற்றல் என்பது பாம்புக்கு இயற்கையாகவே அதன் உடல் கூற்றின் அமைப் புப்படி கிடையாதே! அப்படியிருக்கும்போது பாம்பு எப்படி பாலைக் குடிக்க முடியும்?

பாலகர்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் நோயாளிகளுக்கும் மிகவும் தேவையான பாலினை பாம்புப் புற்றில் கொட்டுவதும், பாலாபிஷேகம் என்ற பெயரில் குழவிக் கற்களின்மீது (கோயில் சாமிகளின்மீது) ஊற்றுவதும் பக்கா கிரிமினல் செயல் அல்லவா!

உணவுப் பொருள் நாசத் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட வேண்டாமா? பாலில் தண்ணீர் கலந்தால் தண்டிக்கும் சட்டம், அந்தப் பாலை இப்படியெல்லாம் விரயப்படுத்துகிறார் களே - எங்கே போய் ஓடி ஒளிந்தது?

சாணியை சாமி என்றும், களிமண்ணை பிள்ளையார் என்றும் எப்படி இவர்களால் நம்ப முடிகிறது? சாணியையும் களிமண்ணையும்கூட கும்பிட வேண்டும் என்ற ஒரு நிலை உருவாக்கப்பட்டு இருப்பதும் அதனை ஆறறிவுள்ள மனிதன் ஏற்றுக் கொள்வதும் எவ்வளவு பெரிய விபரீதம்! - காட்டுவிலங் காண்டித்தனம்!

பாம்பு கடித்தால் மனிதன் சாவான் என்ற பயத்தில் பாம்பைப்பற்றி தப்பும் தவறுமாக நம்பித் தொலைக்கின்றனர்.

நவம்பர் 2005 பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் இதழில் பாம்பைப் பற்றி வெளிவந்த ஒரு கட் டுரையை - பக்தி என்னும் பாம்பால் கடிபட்டு நஞ்சு ஏறிய மூடப் பக்தர்களுக்குக் காணிக்கையாக் குகிறோம் படியுங்கள்.

நாம் அனைவரும் பாம்புகளைப் பார்த்திருப்போம். அவற்றைப்பற்றி அறிந்திருப்போமா என்றால் குறைவுதான். நம் நாட்டில் பாம்பு களைப்பற்றிய கட்டுக்கதைகள்தான். அதிகம். அந்தக் கட்டுக் கதைகளில் சில:

1. நல்ல பாம்பை அடித்துவிட்டால் தேடிவந்து பழிவாங்கும்.

2. கொம்பேறி மூர்க்கன் பாம்பு - தன்னால் கடிக்கப்பட்டவர்களை சுடுகாட்டில் வந்து எரிக்கிறார்களா? அல்லது புதைக்கிறார்களா என்று பார்க்கும்.

3. மண்ணுளிப் பாம்பு நக்கினால் தொழுநோய் வரும்.

4. மண்ணுளிப் பாம்புக்கு 6 மாதத்திற்கு ஒரு முறை தலை மாறும்.

5. மகுடி ஊதினால் பாம்பு வரும்.

6. மகுடி இசைக்கு ஏற்றபடி பாம்பு ஆடும்.

7. பச்சைப் பாம்பு கண்கொத்தும்.

8. நல்ல பாம்பு நூறு ஆண்டுகள் வாழ்ந்தால் ஒரு அடி அளவுக்குக் குட்டையாகி விடும்; இறக்கை முளைத்துவிடும்; மாணிக்கக்கல் கக்கி அந்த வெளிச்சத்தில் இரை தேடும்.

9. பாம்புக்கு பால் வைத்து கும்பிட்டால் வந்து குடிக்கும்.

10. நல்ல பாம்பும் சாரைப் பாம்பும் இணையும்.


இப்படிப் பலப்பல. இவைகளுக்கு முதலில் சில விளக்கங்கள் பார்ப்போம்!

பழி வாங்குமா நல்ல பாம்பு?

எந்தப் பாம்புக்கும் பழிவாங்கத் தெரியாது. அந்தப் பழக்கமெல்லாம் தீய மாந்தரிடம்தான் உள்ளது. பாம்புகளுக்கு நினைவாற்றல் கிடை யாது. ஆகையால் யார் அடித்தார்கள் என்ப தெல்லாம் அதற்குத் தெரியாது. பக்கத்தில் யார் இருக் கிறார்களோ அவர்களைப் போட்டுத் தள்ளும் அவ்வளவுதான். கொம்பேறி மூர்க்கன் நஞ்சற்ற பாம்பு. அது கடித்தால் யாரும் சாக மாட்டார்கள். பாம்புகளுக்கு காது என்பதே கிடையாது. பின் எப்படி மகுடி இசைக்கு ஆட முடியும்?

நூறு ஆண்டுகள் வாழும் நல்ல பாம்பு மாணிக்கக் கல் கக்குமா? மாணிக்கக் கல் என்பது பட்டை தீட்டினால் மட்டும் ஒளிரும். அதை பட்டை தீட்டி நல்ல பாம்பு வாயில் போடுப வர்கள் யார்? குடிக்காது. பால் பிடிக்காது என்றில்லை. பால் குடிக்க வேண்டிய தேவையில்லை. ஏனெனில் பாம்புக்குத் தேவையான நீர், அது உண்ணும் உணவிலிருந்தே போதுமான அளவு கிடைத்து விடுகிறது. அது மட்டுமின்றி அவற்றிற்கு உறிஞ்சு வதற்கென்று உறுப்புகள் இல்லை. எனவே, தனியாக நீரோ, பாலோ அருந்தத் தேவையில்லாமல் போகிறது.

ஆகவே, பாம்புகளைப் பற்றிய இப்படிப்பட்ட கட்டுக் கதைகளை நம்பாதீர்கள்!

இந்தியாவில் நஞ்சுள்ள பாம்புகள் சில வகைகள் மட்டுமே உள்ளன. அவை, நாகப்பாம்பு வகைகள், விரியன் வகைகள், சுருட்டை, சில கடற்பாம்புகள்; பெரும்பாலும் பாம்புகள் நஞ் சற்றவை. அது மட்டுமல்லாமல் பாம்புகள் நமக்கு நண்பர்களாகவும் உள்ளன.


-------------------- 23-8-2008 "விடுதலை" ஞாயிறுமலரில் மின்சாரம் அவர்கள் எழுதிய கட்டுரை

0 comments: