Search This Blog

21.8.08

பக்திப் போதையை வளர்த்து மதவெறியைத் தூண்டுவதே விநாயகர் ஊர்வலத்தின் நோக்கம்






விநாயகர் பெயரால் ஊர்வலம் நடத்துவதன் பின்னணி, விளைவு குறித்து - திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:


கடந்த 80 ஆண்டுகளுக்குமுன், மகாராஷ்டிர மாநிலத்தில் பாலகங்காதர திலகர் என்ற சித்பவன் பிரிவைச் சார்ந்த மராத்தியப் பார்ப்பனர் (காந்தியாரைச் சுட்டுக் கொன்ற நாதுராம் விநாயக் கோட்சே என்பவரும், இதே சித்பவன் பார்ப்பனர்தான் - ஆர்.எஸ்.எஸ். அமைப்பினை உருவாக்கிய டாக்டர் எட்கேவார், அடுத்தடுத்து வந்த கோல்வால்கர், தேவரஸ் ஆகிய மூவரும் கூட இதே பிரிவினைச் சார்ந்த மராத்தியப் பார்ப்பனர்கள்தான்!) இந்துத்துவா கலாச்சாரத்தை உருவாக்க மக்களின் மத நம்பிக் கையை மூலதனமாகக் கொண்டு, பிள்ளையாரை முதன்மைப் படுத்தி கணேசர் திருவிழா என்பதை - பாமர மக்களில் தொடங்கி படித்தவர்கள்வரை பக்திப் போதையை ஊட்டி, பார்ப்பனிய - இந்துராஷ்டிர சித்தாந்தத்தை - பண்டிகை வாயிலாகவே புகுத்த வழி செய்தார்!

மதவெறிப் பின்னணி!

ஏதுமறியாத பிற மக்களும் இந்த கணேசர் திருவிழாவைக் கொண்டாடினர்; பிரிட்டிஷ் அரசின் வெள்ளைக்காரக் கலெக்டர் ஒருவர் மகராஷ்டிரத்தில் பிளேக் என்ற கொள்ளை நோய் (எலி களால் பரப்பப்படும் கொடிய நோய்) தடுப்பாக எலிகளைக் கொன்றபோது, விநாயகக் கடவுளின் வாகனமான எலி - மூஞ் சூறு இவைகளைக் கொல்லும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியக்காரன் நம் இந்து - புராதனக் கலாச்சாரத்தை அழிக்க இந்துக் கடவுள் மத நம்பிக்கைக்கு எதிராக இப்படி ஒரு முயற்சி செய்கிறான் என்று ஆவேசமாக எழுதி, அப்பாவிகளைத் தூண்டி, தீவிர வாதத்தினை அன்றே விளைவித்ததின் விளைவு - பிளேக்கை ஒழித்த வெள்ளைக்கார கலெக்டரை - ஒரு மராத்தியன் சுட்டுக் கொன்றான்! மணியாச்சியில் வாஞ்சிநாதன் என்ற பார்ப்பனர் இந்துத்துவ - மதவெறி உணர்வால் ஆஷ் என்ற தூத்துக்குடி கலெக்டரைக் கொன்றதும் தேச பக்திக்காக அல்ல; மதவெறியை, சனாதனத்தைக் காப்பாற்றவே என்பது மறைக்கப்பட்ட வரலாறு.

பிள்ளையார் வந்தவிதம்!

அந்தப் பிள்ளையார் வழிபாட்டை, வாதாபியிலிருந்து இறக்குமதி செய்து தமிழர்கள் மத்தியில் புகுத்தியது (கி.பி. ஏழாம் நூற்றாண்டில்) பரஞ்சோதி என்ற பார்ப்பன தளகர்த்தன் ஆவார். (பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனாரின் பிறந்தது எப்படியோ? என்ற பல்கலைக் கழகப் பாட நூலில் இது தெளிவாக்கப்பட்டுள்ளது).

இங்கே பரவிய - பண்பாட்டுப் படையெடுப்பின் விளைவாக பிள்ளையார் வழிபாடு, விநாயகர் சதுர்த்தி - ஏதோ ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் முதல் 5 ரூபாய் பிள்ளையார்வரை களி மண்ணால் செய்யப்படுவதை வாங்கி வீட்டில் வழிபட்டு, ஆற்றிலோ, குளத்திலோ, கிணற்றிலோ போடுவது வழமை.

பிள்ளையார் ஊர்வலம் எதற்காக?


அண்மைக்காலங்களில் - வடக்கே இருந்து ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி அமைப்புகள் தாங்கள் பெறும் பெரும் பணத் திற்காக, வட முதலாளிகள் உதவியால் தமிழ்நாட்டில், மும்பை யைப் போலவே, 10 அடி, 15 அடி ராட்சசப் பிள்ளையார் என்று வேடிக்கை - விநோத உருவங்களைச் செய்து, ரசாயனக் கலவை கள் - வண்ணங்களைப் பூசி, அப்பாவி ஏழை எளிய அடித்தட்டு வறுமையாளர்களான மக்களுக்கு கைநிறையப் பணம் கொடுத்து, அவர்களும் பக்தி - போதை - இரண்டுக்கும் ஆளாகி, பெரும் பிரச்சினைகளை உருவாக்கி, கடலில் - ஆற்றில் கரைக்கும் வகையில், இந்து மதப் பண்டிகைகளால் தங்கள் கட்சிகளை வளர்த்து, மதவெறியைக் கிளப்பிடும் அருமையான, எளிமையான வழியாக ஆக்கி குளிர்காய்கின்றனர்!

இஸ்லாமியர்களைச் சீண்டுவதா?

வேண்டுமென்றே இஸ்லாமியர்களின் பள்ளி வாசல் வழியே செல்வது, சமூக நல்லிணக்கத்தைக் குலைப்பது போன்ற அடா வடித்தனத்தில் ஈடுபட்டு, அரசுகளுக்கு மிகப்பெரும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகளை ஏற்படுத்திடுவதை ஆண்டு தவறாத வாடிக்கையாக்கி வேடிக்கை காட்டுகின்றனர்!

மயிலே மயிலே என்றால் இறகு போடுமா?

வாக்கு வங்கிகளுக்கு அஞ்சி - பல அரசுகள் இது ஏற்படுத் தும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையையோ, மாசு கட்டுப்பாட்டினைப் பற்றியோ கவலைப்படாது, சுற்றுச் சூழலைக் கெடுக்க பிள்ளை யாரைக் கரைக்கும் விசர்ஜன வேடிக்கைக் கூத்தினைத் தடுக்காமல், மயிலே, மயிலே இறகு போடு! என்கின்றனர்!

தீர்ப்புகள் இருக்கின்றன


உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் பல தெளிவாகவே, கடலில் - ஆற்றில் இரசாயனக் கலவைப் பிள்ளையார்களைக் கரைத்து மாசுபடுத்தக் கூடாது என்று தீர்ப்புகள் - சட்டப்படி தடுக்க வாய்ப் பினை அள்ளித்தரும் வகையில் இருந்தும் கைபிசைந்து வேடிக்கை பார்க்கின்ற பரிதாப நிலையே நீடிக்கிறது!

மாசு கட்டுப்பாட்டு வாரியச் செயலாளர் ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரி - வேண்டுகோள்தான் விடுக்கிறார். அவர் சட்டப்படி தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளலாமே!

முன்பு தமிழ்நாட்டில் இருந்ததுபோல, சிறுசிறு பிள்ளையார் பொம்மைகளை வாங்கி வைத்து உங்கள் பிள்ளை விளையாட்டை, பக்தித் திருவிழாவான சதுர்த்தியைக் கொண்டாடலாமே தவிர, பொதுமக்களுக்கு இடையூறு, பொதுச்சொத்து நாசம், பொது அமைதிக்குக் கேடு - மத நல்லிணக்கத்திற்கு மாசு - இவைகள் கூடாது என அரசு கூறி அதைத் தடுக்க முன்வரவேண்டும்.

செயல்படுத்தவேண்டியது அரசே!


நீதிமன்றங்கள் ஆணையிட முடியும். அதனைச் செயல்படுத் தித் தடுப்பது அரசு அதிகாரிகள் - காவல்துறை அதிகாரிகள் - மாசு கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் கையில்தான் உள்ளது. எனவே, பெரிய பெரிய கிரேன்கள், பல்லாயிரக்கணக்கில் காவல்துறைக் குவிப்பு இதனை மிச்சப்படுத்தலாமே!

எனவே, வருமுன்னர்க் காப்பது இத்துறையிலும் அவசியம்.

தேவை நடவடிக்கையே!

மத உணர்வு புண்படுகிறது என்பதைவிட, மதவெறியை மக்களிடையே பரப்புவது எவ்வளவு ஆபத்து என்பதை உணர வேண்டாமா? நடவடிக்கை தேவை! தேவை!!

------------------- நன்றி: "விடுதலை" 21-8-2008

0 comments: