
குடி அரசு' வாசகர்களுக்கு ஓர் உண்மையான முன்னறிவிப்பு
அன்புள்ள வாசகர்களே!
இதுசமயம் நமது 'குடி அரசு' வாரா வாரம் 4000 பிரதிகள் வரை போய்க் கொண்டிருந்தாலும், சட்டசபைத் தேர்தல் தீர்ந்த அடுத்த வாரம் முதல் கொண்டே சுமார் 1000 அல்லது 1500 பிரதிகள் திடீரென்று குறைந்து சுமார் 2500 பிரதிகள் போலத்தான் போக நேரிடும். ஏனெனில், சட்டசபைத் தேர்தலின் பொருட்டு நமது பார்ப்பனர் செய்துவரும் பொய்ப் பிரசாரத்தை வெளிப்படுத்த வேண்டி பிகுடி அரசுபீக்கு முன்பணமாக சந்தா வந்தாலும் வராவிட்டாலும் இதுவரை அனுப்பிக் கொண்டே வந்தோம். இதனால் பெருத்த நஷ்டமும் நேரிட்டிருக்கு மென்று சொல்லத் தேவையில்லை. ஆதலால் சில பாக்கிதாரருக்கு மாத்திரம் வி.பி.பி. மூலம் அனுப்பிப் பார்க்கவிருக்கிறோம். தேர்தல் முடிந்த உடன் வி.பி.பி. திருப்பியவர்களுக்கும் சந்தா பாக்கிதாரர் களுக்கும், முன்பணமனுப்பாதவர்களுக்கும் பத்திரிகைகள் அனுப்பப் படமாட்டா. நிற்க, தேர்தல் முடிந்த பின்னர் நமது 'குடி அரசு' அரசியலையே முக்கியமாய்க் கருதாமல் மக்களின் சுயமரியாதையைக் கெடுக்கும் பார்ப்பனீயத்திற்கு ஆதாரமான வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, இதிகாசம், புராணம் என்று சொல்லப்பட்ட ஆரிய சம்மந்தமான நூல்களிலும், செயல்களிலுமுள்ள தந்திரங்களையும், புரட்டுகளையும், பட்சபாதங்களையும், வஞ்சனைகளையும் தெள்ளத்தெளிய விளக்கு வதோடு அந்நூல்களிலுள்ள விஷயங்களை நமது பார்ப்பனர்கள் தங்கள் சுயநலத்திற்காக எப்படி மறைத்தும், திருத்தியும், தப்பு வியாக்யானப் படுத்திக் கூறியும், நம்மை ஏமாற்றி வருகிறார்கள் என்பதையும் முறையே வெளியிடுதலையே பிரதானமாய்க் கருதி தக்க ஏற்பாடு செய்துள்ளோம். ஆதலால் சந்தா பாக்கியுள்ளவர்கள் சந்தாத் தொகையை அனுப்பியும் மற்றவர்கள் புது சந்தாதாரர்களாக சேர்ந்தும் 'குடி அரசை' ஆதரித்து அடுத்த மாத ஆரம்பத்திலிருந்தே வாசித்து வர வேண்டுமென நாம் மனப்பூர்வ விநயமாய்க் கேட்டுக் கொள்ளுகிறோம்.
------------------- தந்தைபெரியார் - "குடிஅரசு" 17.10.26
0 comments:
Post a Comment