
கடவுளை அடிப்பதும் உதைப்பதும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நடந்தது தான்!
நமது கடவுள்களை அடிப்பதும், உதைப்பதும், அவற்றுடன் யுத்தம் செய்வதும்; அவற்றை ஒழிக்கப் பாடுபடுவதும்; கடவுள் மனைவியைப் புணர்வதும்; அதனால் கடவுள் மனைவி பிள்ளைகளைப் பெறுவதும்; கடவுள் மனைவிகளைக் கண்டவன் புணர ஆசைப்படுவதும் கடவுள் மனைவிகள் மிருகங்களோடு புணர்வதும் கடவுள்கள் கண்டவன் மனைவிகளைப் புணர்வதும் முதலாகிய காரியங்கள் நீண்ட காலமாகவே ஏராளமாக நடந்திருக்கின்றன. மற்றும் நம் கடவுள்கள் மக்களைக் கொன்றதாகவும்; திருடினதாகவும்; பலப்பல ஆயிரம் பெண்களைப் புணர்ந்ததாகவும், பெண்களை நிர்வாணமாக்கி வேடிக்கைப் பார்த்ததாகவும்; மக்களை வஞ்சித்துக் கொன்றதாகவும்; ஏமாற்றிக் கொன்றதாகவும்; இந்தப்படியான கீழ்த்தரமான அயோக்கியத்தனமான மோசமான காரியங்கள் செய்ததாகவும்; ஏராளமான செய்திகள் கடவுள் நடவடிக்கைகள் கடவுள் சம்பந்தமான ஆதாரங்களில் காணப்படுகின்றன.
இவற்றின் பயனாகத்தான் நமது மக்களுக்கு இப்போது பெரும் அளவுக்குக் கடவுள் மீது வெறுப்பு ஏற்பட்டு மற்ற மக்களுக்கும் தெளிவு ஏற்படும் வண்ணம் (கடவுளை செருப்பாலடிப்பது முதலிய) பல காரியங்களைச் செய்துவருகிறார்கள். இது இன்னும் நாளாக நாளாக – மக்களுக்கு அறிவும், தெளிவும் ஏற்பட ஏற்பட இப்படிப்பட்ட கடவுள்கள் பற்றி மற்ற பாமர மக்களுக்கும் விளங்கும் வண்ணம் மேலும் பல காரியங்கள் செய்துதான் வருவார்கள்.இனி இதை யாராலும் நிறுத்தவோ, தடுக்கவோ முடியாது என்பதோடு வளர்ந்து கொண்டு தான் வரும்.கடவுள்களை பலவிதமாய் அடித்துக் காட்டுவது என்பது தவிர, கோயில்கள் என்பவைகளில், மேடைகள் என்பவைகளில், உள்ள கடவுள்கள் என்பவைகளையும் பின்னப்படுத்தும் அளவுக்கு மக்களுக்கு ஆத்திரமும், உணர்ச்சியும் வந்துதான் தீரும்.
இவற்றால் மக்கள் (முட்டாள்கள், மடையர்கள் வருத்தப்படுவார்கள் என்று பார்ப்பதும் நிறுத்துவதும் மடமையும், மானமற்ற தன்மையும் பயங்காளித்தனமுமேயாகும். இப்படிப்பட்ட வருத்தம் ஏற்படுமே என்பதற்கு பயந்து அவற்றை (அப்படிப்பட்ட கடவுள்களை) நிலைக்க, இருக்க அனுமதித்தோமானால் இதனால், இப்படிப்பட்ட மடையர்கள், முட்டாள்கள், மானமற்றவர்கள் என்பவர்கள் இனிமேலும் எத்தனை எத்தனை ஆயிரம் பேர்கள் ஆகிவிடுவார்கள் என்பதோடு,இப்படிப்பட்ட மக்களின் பின் சந்ததிகள் எத்தனை எத்தனை ஆயிரம் இலட்சம் பேர் மூடர்களாக, மானமற்றவர்களாக ஆகிவிடுவார்கள் என்பதை சிறிது அளவு சிந்தித்தாலும் உணர்ச்சி உள்ளவர்கள் மனித சமூதாயத்தை நல்ல வழிபடுத்த வேண்டும் என்று கருதுகிறவர்கர்கள், எவ்வித தியாகத்திற்கும் துணிந்து "கடவுள்களை" ஒழிப்பது மாத்திரமில்லாமல் கோயில்களை இடித்துத் தரைமட்டமாக்கத்தான் துணிவார்கள். உண்மையிலேயே இப்படிப்பட்ட கடவுள்களை ஏற்படுத்தியவன் "மக்களை மடையர்களாக ஆக்க வேண்டும்; அதன் பயனாகத் தாங்கள் உயர் வகுப்பாய் இருந்து வாழ வேண்டும்" என்பதல்லாமல் வேறு எந்தக் கருத்தைக் கொண்டும் உண்டாக்கி இருக்கமாட்டான் என்பதை அறிவுள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.
மேலும் இந்தப்படியான கடவுள்களை இருக்க அனுமதித்தால் மக்கள் நிலை என்ன ஆகும். இதுவரை என்ன ஆகி வந்திருக்கிறது என்பது பற்றியும் சிந்திக்க வேண்டும். சிந்திப்பது மாத்திரமில்லாமல் மனிதாபிமானமும், அறிவும் உள்ள ஒவ்வாருவரும் தன்னை மனிதன் என்று கருதுவாரானால் தன் கடமை என்ன என்பதையும் சிந்திக்க வேண்டும். மூட மக்களிடையில் - மானமற்ற மடஜன்மங்களிடையில் இருந்து மனிதத் தொண்டு செய்ய ஒருவன் கருதுவானானால் அதற்குத் தகுந்த விலை கொடுக்கத் தயாராக இருந்தால் தான் அவன் உண்மைத் தொண்டனாக இருக்க முடியும்.
இந்த முகவுரையுடன் தலைப்பு விஷயத்தைப்பற்றிச் சிறிது சிந்திப்போம். அதாவது, சேலம் மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டின் போது இராமனை செருப்பாலடித்த செய்திபற்றிச் சிறிது சிந்திப்போம். இராமனை செருப்பால் அடித்தது சென்ற 20-30 ஆண்டுகளாகத்தான். ஆனால் இராமாவதாரத்திற்கு ஆதிமூலமான விஷ்ணு என்பவனை பலப்பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காலால் எட்டி உதைத்தான் ஓர் அரசன் என்பதாக "கடவுள்" நடப்புக்கதை இருக்கின்றதே. அதற்கு யார் என்ன பதில் சொல்ல முடியும்? இரணியன் என்னும் ஒர் அருசன் பார்ப்பனரை அழிப்பதற்கு ஆகவே (விஷ்ணு என்னும்) கடவுளை ஒழிக்க வேண்டுமென்று கருதி, கடவுள் என்கின்ற எண்ண ஒழிப்புத் தொண்டு செய்து வந்தான். அவனை அழிப்பதற்கு ஆக பார்ப்பனர் ("தேவர்கள்" என்பவர்கள்) செய்த முயற்சியால் அந்த இரணியன் என்னும் அரசனின் மகனையே தங்கள் சுவாதீனம் செய்து கொண்டு, தகப்பன் முயற்ச்சிக்கு விரோதமாய் - எதிர்ப்பாய் நடவடிக்கைகள் செய்தார்கள்."கடவுள் உண்டு - இல்லை" என்பது பற்றி, இரணியனுக்கும், மகனுக்கும் வாக்கு ஏற்பட்டு; இரணியன்" கடவுள் இருப்பிடங்களைச் சொல்லக் கேட்க, அதற்கு மகன் பல இடங்களில் ஒரு இடமாகிய ஒரு தூணைக்காட்ட (அங்கும் கடவுள் இருப்பதாக மகன் சொல்லி) தகப்பன் தன் காலால் அதை எட்டி உதைத்தான் - என்பதாகக் காணப்படுகிறது. அந்த உதையை வாங்கிக் கொண்டு அந்தக் "கடவுள்" நேரே வந்து ஒரு காரியமும் செய்யாமல் ஒரு அரைமிருக, அரை மனித உருவத்தில் வந்து இரணியனைக் கொன்றான் என்றும் காணப்படுகிறது என்றாலும், "கடவுள்" நேராக வரவில்லை. எது எப்படியிருந்தாலும் நம் போன்ற ஒரு மனிதன் "கடவுளை"த் தன் காலால் எட்டி உதைத்திருக்கிறான் என்பது உறுதியாகக் காணப்படுகிறது.
அது மாத்திரமா? இராவணன், இராமன் என்னும் "கடவுளை" எதிர்த்துப் போர் நடத்தி, கடவுளையே கஷ்டப்படுத்தி; மற்றொரு கடவுளான இலட்சுமணனை சாகடிக்கும் நிலைமைக்கு அடித்துச் சாய்த்து விட்டான் என்றும், அனுமான் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்து வந்து அதிலிருந்து மருந்தை (மூலிகை) கண்டு பிடித்து பிழைக்கச் செய்தான் என்றும் காணப்படுகின்றது. மற்றும் பல கடவுள்கள் மனிதர்களால் வெகு தொல்லைகளும், அவமானமும் படுத்தப்பட்டிருக்கின்றன. இதையெல்லாம் விடப் பெரிய காரியம்; சேலத்தில் செருப்படிப்பட்ட கடவுள் பெண்டாட்டி என்னும் கடவுளையே கூட்டிக் கொண்டு போய் சினை (கர்ப்பம்) ஆக்கி அனுப்பினான் என்றும் அதை புருஷன் என்னும் கடவுளே நேரில் பார்த்துத் தண்டித்தான் என்றும் பல ஆதாரங்கள் காணப்படுகின்றன.இதற்கு மேல் கடவுளையே அவமானப்படுத்தவும், இழிவுப்படுத்தவும் செய்ய வேண்டிய வேலை எது மீதி யிருக்கிறது? மற்றும் கடவுளுடைய அயோக்கியத்தனமான இழிவான நடத்தைகளுக்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன. ஆனால் அப்போதிருந்த மக்கள் "கடவுளால்" கொல்லப்பட்டனர் என்று காணப்படுகின்றது. இப்போதுள்ள மக்கள் கடவுளை இழிவுப்படுத்தி ஒழிக்கப்பாடுபடுகின்றனர். கடவுளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை. மனிதன் - பார்ப்பான்தான் கடவுளைக் காப்பாற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டவிட்டது. காரணம் என்னவென்றால் பார்ப்பான் "பிராமண"னாக வாழ வேண்டுமானால் அவன் (பார்ப்பான்) கடவுளைக் காப்பாற்ற வேண்டியதாகி விட்டது. அதாவது பார்ப்பான் இல்லாவிட்டால் கடவுளுக்கு இடமில்லை; கடவுள் இல்லாவிட்டால் பார்ப்பானுக்கு இடமில்லை. இவற்றில் எது ஒழிக்கப்பட்டாலும் இருவரும் ஒழிந்தே போவார்கள். இந்த உண்மையை இரணியனே சொல்லி இருக்கிறான்.அதாவது:"ஓ! தானவர்களே!" இந்த விஷ்ணுவின் சகாயத்தால் நமது எதிரிகளும், அற்பர்களுமான தேவர்கள் என் சகோதரனைக் கொன்றார்கள். அந்த மகாவிஷ்ணு ஒரு பட்சபாதகன், தந்திரக்காரன் சிறுவன் போல், தம்மைப் போற்றுகிறவன் இஷ்டம் போல் நடப்பவன் இப்படிப்பட்டவனான அந்த விஷ்ணுவை வெட்டி வீழ்த்தப்போகிறேன். விஷ்ணுவைக் கொன்றால் தேவர்களும் தேவர்களின் கூட்டமும் வேரற்ற மரம் போல் வீழ்ந்து விடுவார்கள். ஆதலால் நீங்கள் முதலில் "பிராமணர்"கள் இருக்கும் இடம் சென்று அவர்களது தபசு, யாகம், வேத அத்யாயனம், விரதம், தானம் முதலிய இவைகளைச் செய்பவர்களைக் கொல்லுங்கள். "பிராமணர்"களால் செய்யப்படும் அனுஷ்டானமும் யாகமும் மகாவிஷ்ணு இருப்பதற்குக் காரணமாயிருக்கிறது…. ஆகையால் எந்த எந்த தேசத்தில் "பிராமணர்"கள் இருக்கிறார்களோ – எங்கெங்கு "வேதத்தியானம்" செய்யப்படுகிறதோ எந்த தேசத்தில் "வருணாச்சிரமத்துக்கு "உரிய கர்மங்கள் அனுஷ்டிக்கப்படுகிறதோ, அந்த தேசத்துக்குச் சென்று அவர்களை அக்கினியை வைத்துக் கொளுத்துங்கள் நாசம் செய்யுங்கள் - என்றான்.(பாகதம் 7-வது ஸ்காந்தம் 2-வது அத்தியாயம் பக்கம்:715-716)
----------------14-10-1971 உண்மை இதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம். பெரியார் களஞ்சியம் - தொகுதி:2 … பக்கம்:62 -66
1 comments:
பெரியார் - கன்னடம் பேசும் 'தமிழர்'
கருணாநிதி - தெலுங்கு 'தமிழர்'
வைகோ - தெலுங்கு பேசும் 'தமிழர்'
OBC பட்டியல்ல 10 இந்தி பேசும் 'தமிழர்' இருக்காங்க...
இப்ப சாலைப்பணிக்கு வந்திட்டாங்க இந்தி பேசும் பீஹாரிக...Madras airportல எல்லாமே இந்திக்காரங்க... நாளைக்கு OBC பட்டியல்ல சேருவாங்க இந்தி பேசும் தமிழ் தெரியாத 'தமிழர்'களா...
பார்ப்பான் தமிழ் பேசும் 'அன்னியன்'.
ஏன் இந்த வலைப்பதிவு ல இடுகை இடும் 'தமிழர்கள்'ல எத்தனை பேர் தெலுங்கு...
பாப்பான் பாப்பான் பார்ப்பான் ன்னு சொல்லுது எல்லா உண்மைய மூடி மறைக்க ...வேறன்ன?
இப்ப குஜராத்துல குஜ்ஜார்...தமிழ் நாட்டுல 3% பேர் தான் பார்ப்பனர்க...நாளைக்கு தமிழ் நாட்டுல பெரிசு இருக்க...பார்ப்பான் இல்ல....OBCக்குள்ளையே பெரிசு காத்திருக்கு...உத்தப்புரம் வெறும் உதயம்...
அப்ப உத்தப்புரத்துல நடந்துதே எப்படி...யார்யா அங்க பார்ப்பான்?
இந்திக்கார அர்ஜுன் ஸிங்குக்கு இந்தி தெலுங்கு பேசும் 'தமிழ்' அடியாட்கள் நிறைய போல....ஹீ ஹீ!!!
Post a Comment