Search This Blog

22.8.08

பழனிமலையில் பெரியார்



அறுத்துச் சமைத்த கோழி உயிர் பெறுமா?

பழனிக்குக் காவடி கொண்டு போனால், கொன்ற பாம்பு, அறுத்துச் சமைத்த கோழி, மீன் ஆகியவை உயிர்பெற்று விடுகின்றன என்று இன்றும் அநேகர் நம்புகிறார்கள். அநேகர் காவடி கொண்டும் போகிறார்கள்.

ஒரு சமயத்தில் நானும், முன் ஒரு தடவை முதன் மந்திரியாய் இருந்த முனுசாமி நாயுடு அவர்களும், எனது நண்பர் சி.எஸ்.இரத்தின சபாபதி முதலியார் அவர்களும் பழனிக்குப் போனோம். அப்போது நான் அடிவாரத்தில் இருந்து கொண்டேன். அவர்கள் மலை ஏறிவிட்டு இறங்கி வந்தார்கள்.

இந்தச் சமயத்தில் அடி வாரத்தில் ஒரு விபூதிக் கடைக்காரன் இரண்டு சேவல்களை தன் கடைமுன் கட்டி, அதன் மீது மஞ்சள், குங்குமம் தெளித்து, வெற்றிலை பாக்கை முன்னால் வைத்து, ஒரு உண்டியல் பெட்டியும் வைத்து இருந்தான். இங்கு ஜனங்கள் கூட்டமாக நின்று, சேவல்களைக் கும்பிட்டு, உண்டியல் கலயத்தில் காசு போட்டுக் கொண்டிருந்தார்கள்.
நான், இதை என்ன என்று கேட்டேன். அதற்கு அந்தக் கடைக்காரன், என்னையும் ஒரு பக்தன் என்றும், மந்திரி என்றும் நினைத்துக்கொண்டு, பயபக்தியுடன் எழுந்து நின்று இந்தச் சேவல்கள் நேற்று வந்த சோதனைக் காவடியின் அருள் என்று சொன்னான். அதாவது அறுத்துச் சமைத்து காவடி கட்டிக் கொண்டு வந்த சேவல்கள், கடவுள் சன்னதியில் உயிர்பெற்றுவிட்டன என்று விளக்கினான்.

இதை நான் இரு நண்பர்களுக்கும் காட்டி விளக்கினேன். அவர்கள் சிரித்து விட்டு இப்படிப்பட்ட ஆட்கள்தான் உங்கள் பிரச்சாரத்திற்கு அனுகூலம் செய்து விடுகிறார்கள் என்றும், நாங்கள் இதையெல்லாம் நம்பமாட்டோம் என் றும் சொல்லிச் சிரித்தார்கள்.

-------------------தந்தை பெரியார் 'குடிஅரசு'- 19.1.1936

0 comments: