
இன்றைய உலகானது, பழங்கால உலகம் என்பதிலிருந்து நாளுக்கு நாள் எப்படி மாறுதலடைந்து வந்திருக்கிறது. இனி, சில நூற்றாண்டுகளில் எப்படிப்பட்ட மாறுதலை அடையும் என்பனவாகிய விஷயங்கள், பகுத்தறிவு வாதிகளுக்குத்தான் ஏதாவது தெரியக்கூடுமே தவிர, புராண இதிகாச பண்டிதர்கள் என்பவர்களுக்கு அதுவும் நம் கலைகாவியப் பண்டிதர்களுக்கு தெரிவது சுலபமான காரியமல்ல.
ஏனெனில், நமது பண்டிதர்கள் பகுத்தறிவுக்கு ஒவ்வாத புராணங்களையும், ஆராய்ச்சிக்குப் பொருந்தாத இலக்கியங்களையும், பிரத்தியட்ச அனுபவத்திற்குச் சம்பந்தப்படுத்த முடியாத கலைக் காவியங்களையும் படித்து உருப்போட்டு, அவைகளிலிருப்பவைகளை அப்படியே மனத்தில் பதியவைத்துக் கொண்டிப்பதோடல்லாமல், அவைகளில் சம்மந்தப்பட்ட கதை கற்பனைகளை உண்மையாக நடந்தவைகள் என்றும் நம்பிக் கொண்டிருப்பவர்கள் ஆவார்கள்.
பகுத்தறிவுவாதிகள் அந்தப்படிக்கில்லாமல் அனுபவத்தையும், தங்கள் கண்களில் தென்படும் காட்சிகளையும் இயற்கையின் வழிவழித்தன்மை களையும், அவற்றால் கண்டுபிடிக்கப்பட்டு வரும் புதுமை அதிசயங்களையும் மனிதனுக்கு முன்காலத்தில் இருந்துவந்த அறிவாற்றலையும் சிந்தித்து இன்று உள்ள அறிவையும் , ஆற்றலையும், இனி ஏற்படும் அறிவாற்றலையும், சாதனங்களையும் மற்றும், இவை போன்றவைகளையும் -ளாவார்கள்.
பண்டிதர்கள் பழங்காலத்தையே சரியென்று கருதிக்கொண்டு, அதற்கே புது உலகம் என்று பெயர் கொடுத்து அங்கே செல்ல வேண்டுமென்று அவாவுடையவர்கள். பகுத்தறிவுவாதிகள் எவரும் ஒரு ஒரு விநாடியையும் புதிய காலமாகக் கருதி புதியஉலகத்திற்குப் போவதில் ஆர்வமுள்ளவர்கள். பண்டிதர்கள் என்பவர்கள் எந்த நாட்டி லும் இப்படித்தான் இருப்பார்கள் என்று நாம் சொல்ல வரவில்லை. நம்நாட்டுப் பண்டிதர்கள் என்பவர்களில் பெரும் பாலோர் களைக் கருதித்தான் நாம் இப்படிச் சொல்கின்றோம். ஏனெனில், நம்நாட்டுப் பண்டிதரென்பவர்களுக்குப் பகுத்தறிவு ஏற்படவோ அது வளர்ச்சி யடையவோ முடியாமல் தடைசெய்யத் தகுதியான மாதிரியிலேயே அவர்களது படிப்பும் பரீட்சையும் இருக்கிறது. ஆதலால், நம் பண்டிதர் என்பவர்களுக்குப் பகுத்தறிவு ஏற்படுவதற்குத் தடையாக இருப்பது அவர்களது படிப்பே ஒழிய, அவர்களது அறிவுக்கு குறைவன்று. தவறிக் கீழே விழுந்த பிள்ளைக்கு அரிவாள் எதிரில் இருந்தால், எப்படி அதிகக் காயம் ஏற்படுமோ, அதுபோல புராண இதிகாசக் கலைச்சேற்றில் விழுந்த நமது பண்டிதர்களுக்கு இயற்கை வாசனை அறிவால் ஏற்படக்கூடிய பகுத்தறிவையும் பாழ்படுத்தத் தக்க வண்ணம், மூடநம்பிக்கைச் சமய (மத)ங்கள் என்னும் விஷப்பாம்புகள் அவர்களைக் கரையேற விடாதபடி சுற்றிக் கொண்டிருக்கின்றன.
நம் மதவாதிகள், சிறப்பாக 'இந்து' மதவாதிகள் என்பவர்கள் பண்டித மதவாதிகளைவிட மோசமானவர்கள். பண்டிதர்கள் ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு முன்னால் இருந்த உலகத்துக்குப் போகவேண்டுமென்றால், மதவாதிகள் பதினாயிரக்கணக்கான வருஷங்களுக்கும், பல யுகங்களுக்கும் முன்னால் இருந்த உலகத்துக்குச் செல்ல வேண்டுமென்பவர்கள். இவர்கள் இருவருக்கும் பகுத்தறிவுக்குப் பொருத்தமில்லாததும், மனிதசக்திக்கு மீறினதுமான காரியங்களிலும், அசாத்தியமான கற்பனைகளிலுந்தான் நம்பிக்கையும் பிரியமும் இருக்கும். ஆகவே இப்படிப்பட்ட இவர்களால் கண்டறியப்படும் புது உலகம்,காட்டுமிராண்டிகள் வசிக்கும் உலகமாக இருக்கும் என்பதையும், அவர்களை மதிக்கும் மக்கள் பெரும்பாலும் மூட நம்பிக்கையில் மூழ்கிய காட்டுமிராண்டிகளாய் இருப்பார்கள் என்பதையும் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. ஆதலால்தான், " பழையவைகளுக்கே மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பவர்களால், மாறுதலின் சக்தியும், அம் மாற்றத்தின் தன்மையும், அதனால் ஏற்படும் பயனும், உணர்ந்து கொள்ளவோ எதிர்பார்க்கவோ முடியாது," என்று சொல்லவேண்டியதாயிற்று.
பழையவைகளை ஏற்கும் அளவுக்கும், நற்பயன் தரவேண்டிய அளவுக்கும், உபயோகித்துக் கொள்ள வேண்டியது அவசியம் என்பதை நாம் வலியுறுத்துவதில் பின் வாங்க மாட்டோம். ஆனால், புதியவற்றிலேயே முயற்சியும், ஆராய்வதில் ஆர்வமும் இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில், அவற்றினால் தான் இயற்கையைப் படிப்பது என்பதோடு, புதியவற்றைக் கண்டு பிடிப்பதும், முற்போக்கு அடைவதும் (இன்வென்ஷன், ப்ராக்ரஸ்) சுலபத்தில் சாத்தியமாகலாம்.
---------------- " இனி வரும் உலகம்" நூலுக்கு பெரியார் அவர்கள் எழுதிய முன்னுரையிலிருந்து
0 comments:
Post a Comment