Search This Blog
4.4.09
நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது? ஒரு அரசியல் அலசல்..
15-ஆவது மக்களவைத் தேர்தல் சில சிந்தனைகள்....!
15-ஆவது மக்களவைத் தேர்தல் மே 13 தொடங்கி 5 கட்டங்களாக இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் நடக்கிறது.
மூன்று அணிகளாகப் போட்டி நடக்கிறது என்பதையும் கடந்து நான்கு அணிகளாகப் போட்டி நடக்கிறது என்றே சொல்லத் தோன்றுகிறது?
1. அய்க்கிய முற்போக்குக் கூட்டணி.
2. பா.ஜ.க., தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி.
3. இடதுசாரிகள் முன்னிலைப்படுத்தும் மற்றொரு கூட்டணி.
4) அய்க்கிய முற்போக்குக் கூட்டணியில் இருந்தாலும், தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (லாலுபிரசாத்) லோக் ஜனசக்தி (ராம்விலாஸ் பஸ்வான்) என்கிற இன்னொரு அணி.
மத்தியில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி அமையும்போது இந்த நான்காவது அணி காங்கிரசுடன் கைகோர்க்கும் சாத்தியம் மிக அதிகம்; இதனை ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலுபிரசாத்தும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். இத்தேர்தலில் இந்தப் பிரிவினைகள் ஏற்படாமல் தடுக்கப்பட்டிருக்க வேண்டும்.. எந்தப் பக்கத்தில் தவறு என்கிற ஆய்வைவிட, யார் விட்டுக் கொடுத்துப் போயிருந்தாலும் அவர்கள் நாட்டின்மீது அக்கறையுள்ளவர்கள் என்கிற மரியாதைக்குரியவர்களாகவிருந்திருப்பார்கள். அய்க்கிய முற்போக்குக் கூட்டணியைப் பொறுத்தவரை கடந்த 5 ஆண்டுகளில் ஒரு நிலையான ஆட் சியைத் தந்துள்ளது; இடையில் அதற்கு முட்டுக்கட்டை போட்டு கவிழ்க்க முனைந்தாலும் தள்ளாட்டமின்றி உறுதியாகவே நின்றிருக்கிறது.
உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார சுனாமியில் இந்தியா தப்பிப் பிழைத்து விட்டது என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். பொருளாதாரக் கண்ணோட்டத்தில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணியை எதிர்க்கும் இடதுசாரிகளே ஒன்றை ஒப்புக் கொண்டிருக்கின்றனர். இந்தப் பாதுகாப்பான நிலை இந்தியாவுக்கு ஏற்பட்டதற்கே காரணம் இடது சாரிகள் இடைஇடையே இந்திய அரசுக்குப் போட்டு வந்த தடைகள்தான் என்று மார்தட்டுகின்றனர். அது உண்மையாகக்கூட இருக்கட்டும். இடதுசாரிகளின் கருத்துரைகளை ஏற்று ஒரு அரசு நடந்து கொண்டு இருக்கிறது என்பது அரசு மீதான கெட்ட பெயராக எப்படி மாற முடியும்? இன்னும் சொல்லப் போனால் இடதுசாரிகள் மனந்திறந்து பாராட்ட வேண்டுமே தவிர - குற்றப் பத்திரிகை படிப்பது எப்படி சரியாகும்?
கிராமப்புற வேலை வாய்ப்புத் திட்டம் மக்கள் மத்தியிலே அரசின் மீது மரியாதை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. இந்தியாவில் குறிப்பிட்ட மாவட்டங்களில் நூறு நாள்களுக்கு வேலை உத்தரவாதம் என்பதே மேலும் வளர்த்தெடுக்கவும் அரசு முனைந்துள்ளது.
வேலை வாய்ப்பு என்பது உலக பிரச்சினையாகவேயிருக்கிறது. குபேர பூமி என்று கூத்தாடிய அமெரிக்கா இந்த நெருக்கடியில் குற்றுயிராய்த் துடித்துக் கொண்டு இருக்கிறது.
இந்த நிலையிலும் இந்தியா மூழ்கி விடாமல் தள்ளாடி விழுந்து விடாமல் நடைபோட்டுக் கொண்டுதானிருக்கிறது. இந்தியாவில் உள்ள வங்கிகளின் ஸ்திரத் தன்மைக்கு ஆபத்து இல்லை என்ற பெரு மூச்சு விடப்படுகிறது.
இரண்டாவதாக, மதச் சார்பின்மை! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முகப்பே - இந்தியா என்பது மதச்சார்பற்ற சமதர்மக் குடியரசு என்ற பீடிகையோடுதான் தொடங்கப்படுகிறது.
அண்மைக்காலத்தில் அதற்குக் கேவலமான அச்சுறுத்தல்! ஆர்.எஸ். எஸ். தலைமை தாங்கும் இந்து மதவாத ஆரிய சனாதன அமைப்புகள், அவற்றின் அரசியல் போர்வையான பாரதிய ஜனதா ஆகியவை இந்தி யாவின் மதச்சார்பின்மைக்கான கடைக்காலை ஆட்டியிருக்கின்றன என்பதை மறுக்க முடியாது. அதற்கான உச்சகட்ட சாட்சியம்தான் 1992 (டிசம்பர் 6)இல் அயோத்தியில் - சிறு பான்மை மக்களுக்கான வழிபாட்டுத் தலத்தை பாபர் மசூதியை சுக்கல் ஆயிரமாக உடைத்துச் சிதறடித்த கொடூரமாகும்.
அந்தக் காயம் இன்னும் ஆற வில்லை; அதனையும் தொடர்ந்து பாரதிய ஜனதா ஆண்ட குஜராத் மாநிலத்தை சங்பரிவார்க்கும்பலின் பரிசோதனைக்கூடமாக்கி, மதவாரியாக வாக்கு வங்கியை உருவாக்கி, சிறுபான்மை மக்களான முசுலிம்கள், பெரும்பாலான மக்களாகிய இந்துக் களுக்குப் பரம விரோதிகள் என்ற வகையில் கொடூரத் தீயை மூட்டி, உத்திப்பிரித்து சிறுபான்மையினர்மீது வேட்டை நாயாக பெரும்பான்மை மக்களை ஏவி விடப்பட்டுக் கொன்று குவித்த கோரக் காட்சி சரித்திரம் நெடுக மனிதக் குருதியின் வாடையை வீசிக் கொண்டே தான் இருக்கும்.
அந்த ஆட்சி நாயகனை (மோடியை) பார்த்து உச்சநீதிமன்றம் நீரோ மன்னன் என்று இகழ்ந்து வீசிய வார்த்தைகள் சாதாரணமானவையா?
வெறிகொண்ட ஒரு மிருகத்தைக் கல்லால் அடித்து குப்பைத் தொட்டியில் வீசியது போன்ற நிலைப்பாடல்லவா அது!
குழந்தைத் திருமணத்தை தடுத்த குற்றத்துக்காக சமூக சேவகி ஒருவரை (பான்வாரி) அது இந்து மதத்துக்காக எதிரான நடவடிக்கை என்று கூறி, உயர் ஜாதி ஆண் காம வெறியர்கள் பாலியல் வன் கொடுமைக்கு ஆளாக்கித் அந்தப் பெண்ணைத் தூக்கி எறிந்தனரே - அதனை எந்தக் காலத்திலும் சீரணிக்க முடியுமா?
அந்தக் கொடுமைக்கு இன்னொரு சிகரம் ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பாகும்.
தாழ்ந்த ஜாதிப் பெண்ணான பான்வாரிமீது - குற்றம் சாற்றப் பெற்ற உயர்ஜாதிக் காரர்களான பிராமணர்கள் பாலியல் கொடுமையை நிகழ்த்தி இருக்க மாட்டார்கள் என்று கூறி வழக்கினைத் தள்ளுபடி செய்தனர் உயர்ஜாதி பார்ப்பன நீதிபதிகள் என்றால் நீதிமன்றம்கூட பாரதிய ஜனதா ஆட்சியில் காவி வண்ணம் தீட்டிக் கொண்டு திரிசூலம் ஏந்திக் கொண்டது என்பதை வெளியில் சொன்னால் வெட்கக் கேடே!
பாடத் திட்டங்கள், வரலாறுகள் எல்லாம் இந்து மயமாக்க போர்க்கால நட வடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. நல்ல வாய்ப்பாக அந்தத் தீய சக்திகள் கடந்த மக்களவைத் தேர்தலில் (2004) வாக்காளர்களால் வீழ்த்தப் பட்டன.
அந்தக் கும்பல் இரண்டாம் அணியாகக் கிளம்பி யிருக்கிறது. பாபர் மசூதியை இடித்துத் தள்ளிய தளகர்த்தரான அத்வானியைப் பிரதமருக்கான வேட்பாளராக அறிவித்துக் கிளம்பியிருக்கிறது என்பது எவ்வளவு பெரிய ஆபத்தான போக்கு!
நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தல் இந்தக் கூட்டத்திற்கான முடிவுரை முற்றுரை எழுதக் கூடிய பொறுப்பு வாய்ந்த ஒன்றாகும். இதில் தப்பி விடுமானால் நாட்டு மக்கள் தப்பிப்பது முயற்கொம்புதான்! தென்னகத்தில் தன் வாலை நுழைக்காதிருந்த இந்தப் பாசிச பாரதிய ஜனதா கூட்டம் வஞ்சகமாக கருநாடக எல்லைக்குள் புகுந்து தன் சேட்டைகளைத் தொடங்கி விட்டது. இந்திய துணைக் கண்டத்திலேயே அது நுழைய முடியாமல் மூச்சுத் திணறும் ஒரே மாநிலம் தந்தை பெரியார் அவர்களால் திராவிடர் கழகத்தின் மூலம் பக்குவப்படுத்தப்பட்ட தமிழ் நாடு மண்தான்! இந்தப் பெருமையும் அரணும் இத்தேர்தலில் காப்பாற்றப்பட வேண் டும் என்பதிலே திராவிடர் கழகம் முக்கியக் கவனமாக இருக்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்பிலே அடுத்து முக்கியத்துவம் கொடுத்துக் கொடுக்கப்பட்டிருப்பது சமூகநீதி என்பதாகும்.
இந்து மதத்தின் வருணத்தால் ஜாதி நோயால் பிளவு என்னும் பிளவை நோய்க்குப் பலியான கோடானு கோடி ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப் பட்ட மக்களுக்கான மகத்தான மருத்துவம்தான் சமூகநீதி என்பதாகும். இடஒதுக்கீடு என்று எளிய முறையில் அனைவருக்கும் விளங்கிட கூறப்படுகிறது.
கல்வியில்லாத பூமி களர்நிலம் என்றார் புரட்சிக் கவிஞர். அந்தக் கல்வியையும், வேலை வாய்ப்பையும் வழங்கக் கூடியதுதான் சமூகநீதியாகும் - இடஒதுக்கீடாகும்.
அதற்கு உத்தரவாதம் கொடுக்கக்கூடியது திமுக முக்கியமாக இடம் பெற்றுள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசாகும். அந்த வகையிலும் ஆட்சிப் பீடத்துக்கு மீண்டும் அழைக்கப்பட வேண்டியது அய்க்கிய முற் போக்குக் கூட்டணி கட்சிகளையே! (U.P.A. United Prograssive Alliance) மூன்றாவது அணி என்ற ஒன்று இடதுசாரிகளின் முயற்சியால் கொம்பு கூர் தீட்டி கிளப்பி விடப்பட்டுள்ளது. மதச்சார்பின்மை, சமூக நீதி இவற்றில் நம்பிக்கையுடைய கட்சிகள் சில அதில் உண்டு என்றாலும் அதனோடு இணைந்துள்ள பலபட்டறைக் கட்சிகள் இதில் பல்வேறு முரண்பட்ட நோக்குகளைக் கொண்டவை யாகும்.
குறிப்பாக சமூகரீதியாகவும் கல்வி ரீதியாகவும் அணுகப்பட வேண்டிய இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோல் என்கிற வெடி மருந்தை வைக்கக்கூடிய இடதுசாரி இதில் உண்டு.
இக்கட்சிகள் வெற்றி பெற்றாலும் யார் பிரதமர் என்கிற குடுமிபிடிச் சண்டையில் மண்டைகளை உடைத்துக் கொள்ளக்கூடியவை. செல்வி ஜெயலலிதாவை உள்ளே அழைத்து விட்டு பிரதமர் பதவியைப் பற்றி இன்னொருவர் பேசுவதற்கான ஜனநாயகக் காற்றுக்கு இடம் உண்டா? எப்படியும் அடுத்த பிரதமர் நானே நானே! என்று இறுமாந்திருக்கும் சகோதரி மாயாவதி எந்த ரூபம் எடுப்பார் என்பதைக் கற்பனை செய்து தான் பார்க்க முடியுமா?
மகாராட்டியத்தைச் சேர்ந்த சரத்பவார் என்கிற பெரிய மனிதர் தம் வாழ் நாளில் என்றைக்காவது ஒரு நாள் அந்தப் பிரதமர் நாற் காலியில் உட்கார்ந்து பார்த்து விட வேண்டும் என்பதிலே குறியாக இருக்கிறார். அந்த ஆசையின் போதையிலே அவர் பாதங்கள் ஒன்றை யொன்று பின்னிப் பின்னி தடம் புரியாமல் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் நாடு வளம் பெற, மக்கள் நலம் பெற, சமூக நீதி வெற்றி பெற, மதச் சார்பின்மை உறுதிப்பட, கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் கிடைக்க, மக்கள் தொகையில் சமபகுதியினரான பெண்களின் உரிமைகள் ஈட்டப்பட, விவசாயம் இலாபம் உள்ள தொழிலாக உருவாக்கப்பட (காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது) தொழிலாளர்கள் ஏற்றம்பெற, மதவாதம் தோற்கடிக்கப்பட, ஈழத் தமிழர்களின் இருள் வெருண் டோடும் ஒரு நிலையை உருவாக்க திமுக முக்கியமாக இடம் பெற்றுள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கு பெரு வெற்றியை உறுதியுடன் தேடித் தர வேண்டியது தற்கொலையை விரும்பாத ஒவ் வொரு குடிமக்களின் கடமையாகும்
-------------------- கலி. பூங்குன்றன் அவர்கள் 4-4-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை
Labels:
திராவிடர் இயக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
6 comments:
இந்திய அரசியல் களத்தை ஆய்வு ரீதியாக அலசப்பட்டுள்ள கட்டுரை. கட்டுரையில் அரிய தகவல்கள் ஆங்காங்கே விரவிக்கிடக்கிறது. பயனுள்ள கட்டுரை.
//இந்த நிலையில் நாடு வளம் பெற, மக்கள் நலம் பெற, சமூக நீதி வெற்றி பெற, மதச் சார்பின்மை உறுதிப்பட, கல்வி, வேலை வாய்ப்புகளுக்கு உத்தரவாதம் கிடைக்க, மக்கள் தொகையில் சமபகுதியினரான பெண்களின் உரிமைகள் ஈட்டப்பட, விவசாயம் இலாபம் உள்ள தொழிலாக உருவாக்கப்பட (காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது) தொழிலாளர்கள் ஏற்றம்பெற, மதவாதம் தோற்கடிக்கப்பட, ஈழத் தமிழர்களின் இருள் வெருண் டோடும் ஒரு நிலையை உருவாக்க திமுக முக்கியமாக இடம் பெற்றுள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கு பெரு வெற்றியை உறுதியுடன் தேடித் தர வேண்டியது தற்கொலையை விரும்பாத ஒவ் வொரு குடிமக்களின் கடமையாகும்//
சூப்பர்! இது தான் டாப்பு!!! இதுக்கு அலசல்ன்னு சொல்லாம பேசாம எல்லாரும் கை சின்னத்தில் வாக்களியுங்கள்ன்னு சொல்லிட்டு போலாமே!! கிட்டத்தட்ட ஐம்பது வருடம் ஆட்சி செய்தும் மகளீர்க்கான இட ஒதுக்கீடடை மசோதாவை நிறைவேற்றாத இந்த காங்கிரஸ் தான் மகளீர்க்கு பெண்களின் உரிமைகள் ஈட்டப்போறாங்க!!! ஈழத்தமிழர்களை கொல்ல இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பிய இந்த காங்கிரஸ் தான் ஈழத் தமிழர்களின் இருள் வெருண் டோடும் ஒரு நிலையை உருவாக்கப்போறாங்க?? இருள் வெறுண்டோட என்றால் என்ன அர்த்தம் தமிழ் ஓவியா?? குண்டு மழை பொழியும் போது வெளிச்சம் வருதே அதுவா?? உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா??
என்ன செய்தாவது – எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றியாவது பதவி பெற வேண்டியதே இன்று காங்கிரசின் ஜீவாதாரமான கொள்கையாக இருக்கிறது. காங்கிரஸ்காரர்கள் பதவி மோகத்தில் தங்களுடைய கொள்கை, நாணயம் எல்லாவற்றையும் காற்றில் பறக்க விட்டு விட்டுப் "பிசாசு"கள் போல் பதவி ஆசை பிடித்து அலைகிறார்கள்.உத்தியோகத்துக்கும், பதவிக்கும், சம்பளத்துக்கும் ஆசைப்பட யாருக்கும் உரிமை உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால், நாணயத்துடன் ஆசைப்பட வேண்டாமா என்று தான் கேட்கின்றேன். மத விகிதாச்சாரம், வகுப்பு விகிதாச்சாரம் பிரித்து அனுபவிப்பது என்று காங்கிரசுக்காரர்கள் ஒரு வார்த்தையில் ஒப்புக் கொள்ளுவதானால், காங்கிரசே இந்த நாட்டு அரசியல் கிளர்ச்சிக்குத் தலைமை வகித்து நடத்துவதில் எனக்கு ஆட்சேபணை கிடையாது.அல்லது மதப் பிரிவும், வகுப்புப் பிரிவும், இந்தியாவில் இல்லாமல் போகும்படிச் சட்டம் செய்வோம் என்று காங்கிரஸ் ஒப்புக் கொள்வதாயிருந்தாலும், காங்கிரசே இந்திய மக்களுக்குப் பிரதிநிதித்துவ சபையாய் இருப்பதில் எனக்கு ஆட்சேபனை இல்லை. அந்தப்படி இரண்டும் இல்லாமல் பல மதங்களையும், பல வகுப்புகளையும் காப்பாற்றுவதாய் வாக்கு அளித்து விட்டு அவற்றில் மதம் காரணமாகவும், வகுப்பு காரணமாகவும் இருந்து வரும் உயர்வு – தாழ்வுகளைப் போக்கச் சட்டம் செய்வதில்லை என்றும் உறுதிமொழி கூறிவிட்டு, மத உரிமை கூடாது, வகுப்பு உரிமை கூடாது என்றால் அது எப்படி யோக்கியமான காரியம் ஆகும்? என்று கேட்கிறேன். "இது தேசத்துக்கு விரோதம்", "அது சுயராஜ்யத்துக்கு விரோதம்" என்று சொல்லுவதாலேயே ஒவ்வொரு மதக்காரனும், வகுப்புக்காரனும், அரசியல் ஆதிக்கத்தையும் அதனால் வரும் பயனையும் அய்க்கிய மதக்காரனுக்கும் விட்டுக் கொடுத்து விட்டு ஏமாளியாய் இருப்பானா? என்று கேட்கின்றேன். ஒரு நாட்டின் தேசியத்துக்குப் பல மதங்களும், பல வகுப்புகளும், பிரிவுகளும் இருப்பது விரோதமில்லை என்றால், பல மதங்களுக்கும், பல வகுப்புகளுக்கும் உரிமை இருப்பது மாத்திரம் எப்படிக் கெடுதியாய் விடும்? என்று கேட்கின்றேன்.தேசியம் என்றால் உத்தியோகமும், பதவியும் தானா என்று சிலர் கேட்கிறார்கள். இவர்கள் தெரிந்து கேட்கிறார்களோ, தெரியாமல் கேட்கிறார்களோ என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இதுவரை கடந்து வந்த தேசியக் கிளர்ச்சியில் உத்தியோகம், பதவி, சம்பளம் என்பவை அல்லாமல் வேறு என்ன இருந்தது? அல்லது வேறு என்ன கிடைத்தது? அல்லது வேறு எதற்கு ஆக தேசியக் கிளர்ச்சி பாடுபட்டது? பாடுபடப்பட்டது? என்று கேட்கின்றேன். காங்கிரசுக்கு வயது 50- ஆனாலும் எனக்குக் காங்கிரசின் யோக்கியதை 30, 40- வருஷங்களாகவே தெரியும்.காங்கிரசின் கோரிக்கையே உத்தியோகப் பிச்சையாகவும், சம்பளத்துக்குக் கெஞ்சுவதாகவும் தான் இருந்து வந்தது. அதற்காக ராஜபக்தியும், ராஜவிஸ்வாசமும் இருப்பதாகவும் காட்டுவதாகவும் தீர்மானம் செய்வது தான் காங்கிரசின் முக்கிய வேலையாய் இருந்து வந்தது. இன்றும் ஒவ்வொரு உத்தியோகத்திலும் ஒவ்வொரு பிரதிநிதித்துவத்திலும் ராஜவிசுவாசப் பிரமாணம் செய்தே தீர வேண்டி இருக்கிறது. இதே யோக்கியதையில் இருந்து வந்த காங்கிரசுக்காரர்கள் இன்று மகா தியாகிகள் போல் நடிப்பதைக் கண்டு யார் ஏமாறக் கூடும்? இது தகப்பன் வீட்டுப் பெருமையைத் தம் தமயனிடம் சொல்லும் முட்டாள் தனம் போன்றதேயாகும்.* தந்தை பெரியார் {30.08.1936 அன்று கோவை பொள்ளாச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவில் இருந்து சில.....}
இனி நான் என்ன சொல்ல.....
பாஜக என்பது மதச்சார்புள்ள கட்சி. ஆனால் காங்கிரஸ் என்பது போலி மதச்சார்பின்மைக் கட்சி. ரெண்டு கட்சிகளையும் சரியான அளவில் எதிர்க்க வேண்டியுள்ளது. அதற்காக மூன்றாவது அணியை ஆதரிக்க வேண்டும் என்பது தேவையில்லை. அந்தந்தத் தொகுதியில இருக்குறவங்கள்ள தூக்கிக் பாத்து வாக்களிக்கலாம். முடிஞ்ச வரைக்கும் பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளைத் தவிர்க்க வேண்டும்.
//மதவாதம் தோற்கடிக்கப்பட, ஈழத் தமிழர்களின் இருள் வெருண் டோடும் ஒரு நிலையை உருவாக்க திமுக முக்கியமாக இடம் பெற்றுள்ள அய்க்கிய முற்போக்குக் கூட்டணிக்கு பெரு வெற்றியை உறுதியுடன் தேடித் தர வேண்டியது தற்கொலையை விரும்பாத ஒவ் வொரு குடிமக்களின் கடமையாகும்//
அது சரிதான்!
பாபர் மசூதி இடிக்கப்படும் போது இந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரதமர் பி.வி.நரசிமராவும், உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவானும் வேடிக்கை பார்த்தது ஏன்?
நிர்வாகத் திறமையின்மையா?
அந்த அரசில் மன்மோகன் சிங் இருந்தாரா? இல்லையா?
அவர்தான் இப்போது பிரதமர் வேட்பாளர்!
உலகத்தின் ஏழாவது ராணுவ வல்லரசிடம் போதுமான ராணுவம் இல்லையா?
(இலங்கைக்கு உதவுவதற்கு தற்போது அனுப்பப் படும் தளவாடங்களை அங்கு பயன்படுத்தாதது ஏன்?)
நீங்கள் சொல்லும் மத சார்புள்ள கட்சியான பா.ச.க அதன் ஆட்சியின் போது அதை இடிக்கவும் இல்லை. ராமர் கோவில் கட்டவும் இல்லை. உண்மையில் எது மதசார்புள்ள கட்சி? எது மத சார்பற்ற கட்சி? கொஞ்சம் விளக்க முடியுமா?
ஈழப்பிரச்சினையில் கலைஞர் அவர்கள் முதல்வராக இருக்கும் போதுதான் இவ்வளவு ஆதரவுச் சக்திகளை உருவாக்க முடிந்திருக்கிறது.
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஈழப்பிரச்சினை பற்றி பொதுக் கூட்டத்தில் கூட பேச முடியாதநிலை எல்லாம் இருந்ததே. ஏன் இப்போது கூட சு.ப. தமிழ்செல்வனுக்காக கலைஞர் இரங்கல் கவிதை எழுதியபோது நிகழ்ந்த நிகழ்வுகளை ஒரு கணம் சிந்தியுங்கள்
காங்கிரசை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கில் மாற்றுக் கட்சியை குறிப்பாக ஜெயலலிதா அங்கம் வகிக்கும் கட்சிகளை ஆதரிப்பது கொள்ளிக்கட்டையை எடுத்து தலையைச் சொறிந்து கொள்வதற்கு ஒப்பாகும்.
------------------------------
இந்திய அரசியல் சட்டத்தில் மதச்சார்பற்ற நாடு என்று குரிப்பிடப்பட்டுள்லது. ஆனால் நடைமுரையில் அப்படி எதுவும் நடை பெறுவதாக தெரியவில்லை. இதர்கு பெரியார் சொன்ன உதாரானம் தான் சரியானது. இந்த வலைப்பதில் அது பற்றிய விவரங்கள் உள்ளன. படித்து தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி என்ற நிலையில்தான் அனைத்துக் கட்சிகளும் உள்ளன.
அ.தி.மு.க.வுக்கு தி.மு.க. பரவாயில்லை.
பி.ஜே.பி. க்கு காங்கிரசு பரவாயில்லை.
இதுதான் யதார்த்தமான உண்மை நிலை. ஜோதி பாரதி
Post a Comment