Search This Blog

18.7.11

பாலியல் குற்றவாளி நித்யானந்தா ஜாமீனை ரத்து செய்து சிறையில் தள்ளுக!

  • பாலியல் குற்றவாளி நித்யானந்தா ஜாமீனில் வெளிவந்து ஊடகங்களை, சாட்சிகளை மிரட்டுவதா?

  • ஜாமீனை ரத்து செய்து சிறையில் தள்ளுக!

  • வழக்கை விரைந்து நடத்தி உரிய தண்டனையைத் தருக!

வரும் 23ஆம் தேதி கழகத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம்!

தமிழர் தலைவர் விடுத்துள்ள அறிக்கை

பாலியல் குற்றவாளி நித்யானந்தாவின் ஜாமீனை ரத்து செய்து சிறையில் தள்ளவேண்டும் என்றும், அவர் மீதான வழக்கு விசாரணையை விரைவாக நடத்தித் தண்டனை அளிக்க வேண்டும் என்றும், இவற்றை வலியுறுத்தும் வகையில் திராவிடர் கழக மகளிரணி, இளைஞரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத் தும் என்றும் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மனித சக்திக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும், அவன் எவ்வளவுதான் உயர் நிலையில் இருந்தாலும் சரி, அது பித்தலாட்டம், மோச வார்த்தை என்பதை மனதில் உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள் (விடுதலை 20.5.1948) என்றார் பகுத்தறிவுப் பகலவனாம் தந்தை பெரியார்.

திட்டமிட்ட வகைகளிலான மோசடிகள்!

குறிப்பாக சாமியார்களை இந்த அளவுகோல் பார்வையில் பார்த்தால், அவர்களின் பேச்சுகள், நடவடிக்கைகள் செப்படி வித்தைகள் என்பவை யெல்லாம் போலியானவை. திட்டமிட்ட வகையில் மோசடியாக அரங்கேற்றப்பட்டவை என்பதை எளிதிற் விளங்கிக் கொள்ளலாம்.

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரும் என்பதையும் அன்றாட தகவல்கள் நிரூபித்துக் கொண்டு தானிருக்கின்றன.

மக்கள் மத்தியில் பரம்பரைப் பரம்பரையாக ஊறிக் கிடக்கும் பக்தி என்னும் திரை அவர்களின் கண்களை மறைக்கின்ற காரணத்தால், உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்த பிறகும்கூட, அந்தச் சாமியார்களைப் புறக்கணிக்கும் துணிவு முழுமையாக வரவில்லை.


பக்தர்களின் கோழைத்தனம்!

இந்தப் பாமரத்தனமான பக்தர்களின் கோழைத்தனம்தான் நித்யானந்தா போன்றவர்களுக்கு மறுபடியும் தலையை வெளியுலகுக்குக் காட்டக் கூடிய துணிச்சலைத் தருகிறது.

கருநாடக மாநிலக் காவல் துறை தயாரித்துள்ள குற்றப் பத்திரிகையில் நான் கிருஷ்ணனாம், நீ என்னோட கோபிகையாம்! என்ற வசனத்தை தம் பக்தைகளிடம் அடிக்கடி சொல்லக் கூடியவர் இந்த நித்யானந்தா! என்று குறிப்பிடப் பட்டுள்ளது என்றால், இந்த வார்த்தைகளுக்குள் வழிந்தோடும் ஆபாசம் என்ன என்பது வெளிப் படை!.

நித்யானந்தா தான் செய்யும் காம வெறியாட்ட ஆபாசங்களை சட்ட ரீதியாக ஆக்கிட செய்திருக்கும் ஏற்பாடு இந்த ஆசாமி எவ்வளவுப் பெரிய ஆபத்தானவர், ஆபாசக்காரர் என்பதற்கான ஆதாரமாகும்.

ஒப்பந்தம் போட்டு ஒழுக்கக் கேட்டில் ஈடுபாடு!

தன் பக்தைகளிடம் இந்த வகையில் ஒப்பந்தம் போட்டுக் கையொப்பம் வாங்கி வைத்து விடுவார். பாலுறவு மூலம் மோட்சத்தை அடைய முடியும் என்று அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது போன்ற ஆபாசமான தகவல்கள் 430 பக்கங்களைக் கொண்ட அந்தக் குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றிருக்கின்றன.

குறிப்பிட்ட நடிகையுடன் சாமியார் நடத்திய சல்லாபங்கள் ஊடகங்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த நிலையில்தான், அவரது நீண்ட கால ஆபாச லீலைகள் மக்கள் மத்தியில் அம்பலமானது. பக்தர்களே அவரது ஆசிரமங்களையும், உடைமைகளையும் அடித்து நொறுக்கினர்.

தன்மீது திட்டமிட்ட வகையில் பழி சுமத்தப் பட்டு இருக்கிறது என்று இப்பொழுது சென்னைக்கு வந்து செய்தியாளர்களிடம் பேட்டி கொடுக்கும் இந்த சாமியார், ஏன் வட மாநிலங் களில் அப்பொழுது ஓடி ஒளிந்தார்?

ஜாமீனில் வெளிவந்து வழக்கு பாதிக்கும் வகையில் பேட்டி கொடுக்கலாமா?

இப்பொழுதுகூட ஜாமீனில்தான் வெளியில் வந்துள்ளார். வழக்கு பெங்களூரில் நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் வழக்கைப் பாதிக்கும் வகையிலும், சாட்சிகள்மீது தனது செல்வாக்கைத் திணிக்கும் தன்மையிலும் பேட்டி கொடுத்திருப்பது - சட்டப் பார்வையில் சரியானதுதானா?

ஜாமீனை ரத்து செய்க!

ஜாமீனை ரத்துசெய்து மீண்டும் அவரை சிறையில் தள்ளுவதற்கு சட்டரீதியாகவே வாய்ப்பு இருக்கிறது. நீதிமன்றம் இரண்டொரு நாளில் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கும் என்று தெரிகிறது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள வீடியோ போலியானதல்ல என்று அறிவியல் ரீதியாக சோதிக்கப்பட்டு, அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை கருநாடக மாநிலக் காவல்துறையும், அட்வகேட் ஜெனரலும்கூட கூறியுள்ள நிலையில் அது போலியானது என்று சாதிக்கப் பார்க்கிறார் நித்யானந்தா. பெங்களூரில் நீதிமன்றத்தில் அதனை நிரூபித்து வெளியில் வர வேண்டியது தானே - சம்பந்தம் இல்லாமல் சென்னைக்கு வந்து ஆர்ப்பரிப்பானேன்?

ஆண்டவனுடன் அவர் பேசும் (?) ஆன்மீக சக்தி எங்கே போயிற்று? எதற்காகக் காவல்துறை யிடம் புகார் கொடுக்கிறார்?

18 மாதங்களுக்குப் பிறகு நித்யானந்தா சென்னைக்கு வந்து செய்தியாளர்களைச் சந்தித்து இருப்பதும், குறிப்பிட்ட ஊடகங்கள்மீது காவல் துறையிடம் புகார் கொடுத்திருப்பதும் ஊடகங் களை அச்சுறுத்தும் வகையில் பேசி இருப்பதும் எதன் அடிப்படையில்?

ஆட்சி மாற்றம் என்ற தைரியமா?

தமிழ்நாட்டில் ஏற்பட்டு இருக்கும் ஆட்சி மாற்றம் தங்களுக்கு சாதகமாக இருக்கும் - கை கொடுக்கும் என்ற தைரியத்தில்தான் இது நடந்திருக்கிறது என்ற கருத்து நிலவுகிறது. இந்த நிலை தமிழக அரசுக்குப் பெருமை சேர்ப்பதாகாது - மாறாகக் கெட்ட பெயரை ஏற்படுத்தக் கூடியதுமாகும். அரசியல் கண் கொண்டு பார்க்கப்படக் கூடிய பிரச்சினையும் இது அல்ல என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

பெண்ணாகிய முதல் அமைச்சரின் பார்வைக்கு...

ஜெகத் குரு என்று சொல்லப்படுகிற சங்கராச்சாரியாரையே கைது செய்து சிறையில் அடைத்த துணிச்சலுக்குச் சொந்தக்காரராகக் கருதப் படுபவர் முதல் அமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள்.

அதே நிலைப்பாட்டில் நித்யானந்தா விவகாரத்திலும் நடந்து கொள்ளக் கடமைப்பட்டுள்ளார். பெண்களை மய்யமாக வைத்து குற்றம் சுமத்தப் பட்டுள்ள ஒருவரின் விஷயத்தில் பெண்ணாக இருக்கக் கூடிய முதல் அமைச்சர் கூடுதல் கவனத்துடன் கடமை ஆற்ற வேண்டும் என்பது பெரும்பாலான நாட்டு மக்களின் எதிர்பார்ப்பாகும். ஒழுக்கக்கேட்டுக்குத் துணைப் போக கூடாது. எல்லாவற்றிலும் அரசியல் பார்வை என்பது எதிர் விளைவைத்தான் ஏற்படுத்தும்.

23ஆம் தேதி ஆர்ப்பாட்டம்!

இந்த வகையில் நித்யானந்தாமீதான வழக்கு விசாரணையைத் துரிதப்படுத்தித் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வழக்கு நிலுவையில் இருக்கும் பொழுது விசாரணையைப் பாதிக்கும் வகையிலும், சாட்சிகளை அச்சுறுத்தும் தலைமையிலும் சென்னைக்கு வந்து பகிரங்கமாக பேட்டியளித்தது கண்டிப்பாக நீதிமன்ற அவமதிப்பு செயல் என்பதால் ஜாமீனை ரத்து செய்து மீண்டும் அவரை சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியும் திராவிடர் கழக மகளிரணி மற்றும் இளைஞரணி சார்பில் வரும் 23ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தும் என்று அறிவிக்கப்படுகிறது.

கழகத் தோழர்கள் மக்கள் மத்தியில் இந்தப் பிரச்சினையைக் கொண்டு சேர்க்கும் வகையிலும், கருநாடக அரசு மற்றும் தமிழ்நாடு அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் இந்த ஆர்ப்பாட்டத்தை எழுச்சியுடன் நடத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


---------------கி.வீரமணி, தலைவர், திராவிடர் கழகம் --"விடுதலை” 18-7-2011

1 comments:

தமிழ் ஓவியா said...

ஏமாறாதீர்கள்!
சாமியார்கள் சித்து விளையாடி, அதிசயங்களை நிகழ்த்திக் காட்டி, தாங்கள் கடவுள் அருள் பெற்றவர்கள், கடவுளிடம் நேரிடையாகப் பேசக் கூடியவர்கள் என்ற மாயையை ஏற்படுத்தி, மக்களைச் சுரண்டுவதை ஒரு கலையாக நடத்தி வருகின்றனர்.

மிகப் பெரிய தந்திரவாதியான சாயிபாபா பல அதிசய செயல்களை செய்து காட்டி மக்கள் மத்தியில் ஒரு பிரேமையை ஏற்படுத்தி வந்தார். லிங்கம் கக்குவார், கை அசைப்பில் திருநீறு கொடுப்பார் - தங்கச் சங்கிலியை வரவழைத்துக் கொடுப்பார். பக்திப் போதையில் மூழ்கிய மக்கள் இந்தத் தந்திரக் காட்சிகளை கடவுள் சக்தியால் செய்து காட்டுவதாக நம்பி, அவரிடம் சரணடைந்தனர், பொருள்களைக் கொட்டிக் கொடுத்தனர். வீட்டுக்கு வீடு அவர் படத்தை மாட்டிப் பூஜை செய்யவும் ஆரம்பித்தனர்.

அவரை எதிர்த்துப் பகுத்தறிவாளர்கள் சவால் விட்டனர். பெங்களூர் நரசிம்மையா (துணைவேந்தர்) சாயிபாபாவை சந்திக்க விரும்பினார். குறிப்பிட்ட சிலரின் முன் அதிசயங்களைச் செய்து காட்ட முடியுமா என்று சவால் விட்டார்.

உரிய பதில் இல்லை; மாறாக நாய்கள் குரைப்பதற் கெல்லாம் நான் பதில் சொல்ல மாட்டேன் என்று கூறி, தனது தகுதியை வெளிப்படுத்தினார் சாயிபாபா.

பிரபல தந்திரக் கலை நிபுணர் பி.சி. சர்க்கார் சாயிபாபாவை சந்திக்க நேரம் ஒதுக்கித் தருமாறு கடிதம் எழுதினார். பதில் இல்லை. உடனே அஸ்ஸாம் வியாபாரி என்று சொல்லிக் கொண்டு, புட்டபர்த்தி சென்று சாயிபாபாவைச் சந்தித்து, நேருக்கு நேர் சாயிபாபா செய்து காட்டிய அதே வித்தையைச் செய்துகாட்டி பாபாவைப் பதற வைத்தார்.

அதற்குப் பின்னால் படிப்படியாக இந்த மேஜிக்கு களைச் செய்வதைக் குறைத்துக் கொண்டார்.

பிரபல மனநல மருத்துவர் ஆப்ரகாம் டி. கோவூர் அவர்களும், கோவை பிரேமானந்தா அவர்களும் சாயிபாபாவுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்தனர்.

இப்பொழுது நித்யானந்தா என்னும் இளம் சாமியார் கிளம்பி இருக்கிறார். பாலியல் புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார்.

பெங்களூர் நீதிமன்றத்தில் மன்றாடி பிணை வாங்கி வெளியே வந்த இந்த ஆசாமி தமிழ்நாட்டுக்குள் வந்து நடிகை ரஞ்சிதாவுடன் பேட்டி கொடுக்கிறார், சவால் விடுகிறார்.

பிணையில் வெளியில் வந்த ஓர் ஆசாமி வழக்கு நீதிமன்றத்தின் நிலுவையில் இருக்கும் பொழுது எப்படி பேட்டி கொடுக்கலாம் என்ற சர்ச்சை வெடித்துக் கிளம்பி விட்டது. பிணை ரத்து செய்யப்பட்டு, மீண்டும் சிறைக்கு அவர் அனுப்பப்பட்டால் ஆச்சரியப்படுவ தற்கில்லை.

இரண்டு நாள்களுக்கு முன்பு மலிவான விளம்பரம் பெறும் ஒரு ஏற்பாடு செய்தார்.

தன் பக்தர்கள், வெளிநாட்டுக்காரர்கள், பத்திரி கையாளர்களை அழைத்து ஒரு ஜால வித்தையைச் செய்வதாக அறிவித்தார். குண்டலி சக்தி மூலம் புவிஈர்ப்பு விசைக்கு எதிராக உங்களை எல்லாம் அந்தரங்கத்தில் மிதக்க வைக்கப் போகிறேன் என்றார். மிகுந்த ஆர்வத்துடன் பொது மக்களும் அந்தக் காட்சியைக் கண்டு களிக்கக் கூடியிருந்தனர்.
அபிமான நடிகை ரஞ்சிதா உட்பட பக்தர்களை குதித்துக் குதித்து எழச் சொன்னார் அவ்வாறே தவளைகள் மாதிரி தத்தித் தத்திக் குதித்தனர்.

குறிப்பிட்ட ஆக்ஞையை செய்து பக்தர்களை அந்தரங்கத்தில் மிதக்கச் செய்ய சைகையைக் காட்டினார். அந்தோ பரிதாபம், தன் அபிமான நடிகை உட்பட யாரும் அந்தரங்கத்தில் மிதக்கவில்லை; கீழே விழுந்ததுதான் மிச்சம்!

வெளிநாட்டுக்காரர்கள், பக்தர்கள், பொது மக்கள் ஏமாற்றம் அடைந்ததுதான் மிச்சம்! நித்யானந்தா மிகுந்த அவமானகரமான முறையில் மூக்கறுந்தது தான் மிச்சம்.

மக்களைக் கூட்டி இப்படி ஏமாற்றியதற்காகக்கூட அவர்மீது சட்டப்படியாக நடவடிக்கை எடுக்கலாம் - எடுக்கவும் வேண்டும்.

சாமியார்களின் சக்தி என்பது வெறும் பூஜ்ஜியம் தான் என்பதை இதன் பிறகாவது பொது மக்கள் உணர வேண்டும். பாமரத்தனமான பக்திப் போதையி லிருந்து விடுபட வேண்டும். ஏமாற்றுக்காரர்களான, சுரண்டல் பேர் வழிகளான சாமியார்களிடம் ஏமாறக் கூடாது என்பதே நமது கனிவான வேண்டுகோளாகும்.

பக்தி வந்தால் புத்தி போய் விடும் என்று சொன்ன தந்தை பெரியார் அவர்களின் உண்மை மொழி களையும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.
---”விடுதலை” தலையங்கம் 18-7-2011