Search This Blog

8.7.11

தி.க.வீரமணி அறிவு ஜீவி என்று ஒப்புக்கொண்ட தினமலர்

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் அறைகளில், கேரள மாநில பட்ஜெட் டையும் தாண்டும் அளவுக்கு சொத்து முடக்கப்பட்டு கிடக்கிறது. பத்மநாப, கல் முதலாளியோ ஆடாமல், அசையாமல், வருமான வரி ஏதும் தராமல் உள்ளார்!

- அறிவு ஜீவி தி.க.வீரமணி அறிக்கை இப்படி ஒரு பெட்டிச் செய்தியை பார்ப்பன தினமலர் (7-7-2011) எட்டாம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

காலந்தாழ்ந்தாவது நல்ல புத்தி வந்து தினமலர் தி.க. தலைவரை அறிவு ஜீவி என்று ஒப்புக்கொண்டதே - அது வரை பாராட்டலாம்தான்.

முடங்கிக் கிடக்கும் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் மதிப்புக்கு மேலான சொத்தை அரசு கையகப்படுத்தி, மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தி.க.தலைவர் சொன்னதையும் சேர்த்து வெளியிட்டு இருந்தால் தினமலருக்குக் கூட கொஞ்சம் அறிவு நாண யம் இருப்பதாக ஒப்புக் கொள்ளலாம்.

அறிவு நாணயத்துக்கும் பார்ப்பனர்களுக்கும் என்ன சம்பந்தம்?


கோயில்களில் பாதாள அறைகளில் ஒன்றுக்கும் பயன் படாமல் இருக்கும் தங்கக் கட்டிகளால், விலை உயர்ந்த பொருள்களால் யாருக்கு என்ன பயன்?

சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி காலத்தில் பனகல் அரசர் பிரதமராக இருந்தபோது, இந்து அறநிலையத் துறை என்ற புதிய இலாகா கொண்டு வரப்பட்டதால் காப்பாற்றப்பட்ட பார்ப்பனர்களால் சுரண்டப்பட்டது போக எஞ்சிய சொத்துகள் தான் இப்பொழுது கிடைத்திருப்பவை.

திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோயிலில் பாதாள அறையில் பதுக்கப்பட்டது போல தமிழ்நாட்டி லும் பிரபலமான கோயில்களைத் தோண்டினால் வியப்பூட்டக்கூடிய வகையில் விலை உயர்ந்த நகைகளும், தங்கமும், வைரங்களும் கிடைக்கலாம்.

அவசர அவசரமாக பத்மநாப சாமி கோயில் சொத்துகள் அரசர் குடும் பத்திற்கே சொந்தம் - அதில் அரசு கை வைக்கக் கூடாது என்று (மாஜி) சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி அறிக்கை விடுகிறார்.

இப்பொழுது அரசர்கள் எங்கே இருக்கிறார்கள்? அவர்கள்தான் பென்ஷன் (மான்யம்) வாங்கிக் கொண் டிருக்கும் மாஜிகளாயிற்றே!

கோயிலுக்கு நகை களைக் கொட்டிக் கொடுத்த அரச பரம்பரையை அந்தக் கோயிலுக்குள் அடித்து வைக்கப்பட்டுள்ள கடவுள்களால் காப்பாற்ற முடியவில்லை. அய்ம்பொன்னாலும், கற்களாலும் சிற்பிகளால் வடிக்கப்பட்டவை அந்த பொம்மைகள். அவைகளால் யாரைக் காப்பாற்ற முடியும்? முதலில் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளட்டும் இந்தக் கடவுள்கள்.

ஜெயேந்திரருக்கு என்ன பயம் என்றால், காஞ்சி காமாட்சியம்மன் கோயிலுக்குள் புகுந்து தோண்ட ஆரம்பித்தால் என்ன செய்வது என்கிற பயமாக இருக்கக் கூடும்.

சங்கரமட நகைகள், தங்கம், வைரங்கள் அங்கு பதுக்கப்பட்டு இருக்கின்றதோ என்னவோ, யார் கண்டது!

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் அறிவு ஜீவி என்று எந்த மனநிலையில் சொல்லி இருந்தாலும் சரியே; கருத்துக்கனல் என்றும், ஆயிரமாண்டின் செயலாற்றல் மிக்க தலைவர் என்ற பட்டங்களும் அவரைத் தேடி வந்துகொண்டுதான் இருக்கின்றன! பெருச்சாளிகள் யானையின் உயரத்தை அறிந்து பார்க்க ஆசைப்படக் கூடாது!

------------------"விடுதலை” 8-7-2011

1 comments:

தமிழ் ஓவியா said...

தலைவர் பெரியார் அவர்கள்தான் துணிந்து நாட்டில் நல்ல கருத்துகளைத் தோற்றுவித்து விடுதலையைத் தொடங்கினார். விடுதலையின் புரட்சிக் கருத்துகளை வரவேற்க மேல் மட்டத்தில் உள்ளவர்களாவது வரவேற்கிறார்களா என்றால், அச்சத்தின் காரணமாக மறுக்கிறார்கள். மேல் மட்டத்திற்கும் அடித்தளத்திற்கும் இடையே உள்ள நடுத்தர மக்களாவது வரவேற்கிறார்களா என்றால், இப்போதுதான் அவர்களுக்குப் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கிறது. தமிழர்களின் நலன் கருதி, நடக்கக் கூடிய விடுதலையினைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் வாங்கிப் படிக்க வேண்டும். விடுதலை வாங்கிப் படிப்பது தமிழர்கள் ஒவ்வொருவரின் கடமையாகக் கருதவேண்டும்.

தமிழர்களின் இல்லங்கள் என்பதற்கு அறிவிப்புப் பலகை போல் விடுதலை தமிழரது ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டும்.

- சென்னை பெரியார் திடலில் விடுதலை பணிமனை திறப்பு விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் (2-11-1965) உதிர்த்த முத்துகள் இவை!

மகாசந்நிதானம் என்று தந்தை பெரியார் அவர்களால் மிகுந்த மரியாதையுடன் அழைக்கப்பட்ட தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் பிறந்த நாள் இந்நாள் (1925)

அவர் இன்று மறைந்திருக்கலாம். ஆனால் விடுதலை குறித்து அவர் உதிர்த்த முத்துகள் மறையக் கூடியவையல்ல; தமிழர்களின் ஒவ்வொரு இதயத்திலும் அவை பட்டை தீட்டப்பட்ட உணர்வாக இருக்க வேண்டுமே.

விடுதலை யை அதிகார பலத்தால் முடக்கிவிடலாம் என்று கருதுகிற மனப்பான்மையை முறியடிக்க அடிகளார் உணர்த்திய அந்த உணர்வுத் தீப்பந்தத்தை ஒவ்வொரு தமிழனும் ஏந்திப் பிடிக்க வேண்டாமா?

1962 ஆம் ஆண்டில் விடுதலையின் ஆசிரியராகப் பொறுப்பேற்ற தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் 2012 ஆம் ஆண்டில் 50 ஆண்டுப் பயணத்தில் சங்கமிக்கிறார்.

ஒரு நாளேட்டில் 50 ஆண்டு ஆசிரியர் என்ற வரலாறு இவருக்கு மட்டுமே உண்டு. இது ஒரு கின்னஸ் சாதனை!

சமுதாயப் புரட்சியை மய்யமாகக் கொண்டு இனவுணர்வையும் கடந்து, உலகப் பகுத்தறிவுக்கும் தேவைப்படும் ஒப்புயர்வற்ற ஒரே பகுத்தறிவு நாளேடன்றோ விடுதலை!

அது கண்ட களங்கள் பல. ஏற்ற தியாகத் தழும்புகள் எத்தனை எத்தனையோ!

தமிழர் பெற்றிருக்கும் உரிமைகளுக்கெல்லாம் உரிமை கொண்டாடும் ஒப்புயர்வற்ற ஆசான் அது.

ஆசிரியர் என்ற ஒரு சொல் உச்சரிக்கப்படுமானால் அது விடுதலை ஆசிரியரைத்தான் குறிக்கும் - தமிழ் நாட்டிலும் சரி, உலகத் தமிழர்கள் மத்தியிலும் சரி!

ஆசிரியர் பீடத்தில் அமர்ந்து உலகுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசானை ஆசிரியர் என்று சொல்லாமல் வேறு எந்தச் சொல்லால் அழைப்பது!

இன்றொரு சபதம் ஏற்போம் ! விடுதலை ஆசிரியராக 50 ஆம் ஆண்டில் நமது தலைவர் அவர்கள் அடி எடுத்து வைக்கும்போது, தமிழர் வீடெல்லாம் விடுதலை ஒளி வீசின அடையாளத்தைக் காட்டச் செய்வோம்!

தவத்திரு குன்றக்குடி அடிகளாரின் பிறந்த இப் பொன்னாளில் அந்தப் பெருமகனாரின் உள்ளத்தில் ஊற்றெடுத்த அந்த இனமானக் கருத்துக்கு, ஆப்த சொற்களுக்கு செயல்வடிவத்தைத் தருவோமாக!

மாவட்டங்களில் நடைபெறும் கலந்துரையாடல் கூட்டங்களில் கலந்துகொள்ளும் தோழர்கள் உள்ளத்தில் கனன்று கொண்டிருக்கும் உணர்வினைக் காண முடிகிறது. அந்த உணர்வினை ஒருமுகப்படுத்தி வெற்றி முனையத்தை நோக்கி விரைவோமாக!
---”விடுதலை” 11-7-2011