Search This Blog

14.7.11

கிரீமிலேயர் பிரச்சினையில் சரியான முடிவு!


கிரீமிலேயர் பிரச்சினையில் சரியான முடிவு!

தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்து வரும் 69 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான பிரச்சினையில் - இப்பொழுது ஒரு முக்கிய கட்டமாகும்.

50 சதவிகிதத்துக்கு மேல் இடஒதுக்கீடு செல்லக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியதேகூட சர்ச்சைக்கு உரியதுதான். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இத்தனை சதவிகிதம் தான் ஒதுக்கப்பட வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறப்படாத நிலையில், உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டின் அளவுக்கு வரையறை செய்தது எப்படி என்று தெரியவில்லை.

அதே நேரத்தில் 50 சதவிகிதத்துக்கு மேல் இடஒதுக்கீடு செல்லலாம் என்ற விதிவிலக்கையும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தி இருக்கிறது. வடகிழக்கு மாகாணங்களில் இடஒதுக்கீடு 80 சதவிகிதத்துக்கு மேல் மலைவாழ் மக்களுக்கு இருந்து வருகிறது.

இந்திய மக்கள் தொகையில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் என்று எடுத்துக் கொண்டால் 80 விழுக்காட்டையும் விஞ்சக் கூடியதாகும். இவர்கள் காலம் காலமாகக் கல்வி உரிமை மறுக்கப் பட்டவர்கள். அப்படி இருக்கும்போது 50 சதவிகிதத்துக்கு மேல் இடஒதுக்கீடு போகக்கூடாது என்பது எப்படி சரியாக இருக்க முடியும்? அதனால்தான் இதனை இடஒதுக்கீடு என்று சொல்லாமல் மிகவும் பொருத்தமாக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்று தந்தை பெரியார் தொலைநோக்கோடு பெயர் கொடுத்தார் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.


இதில் இன்னொரு குறிப்பிடத்தக்க அழுத்தமான ஒன்றைக் கவனிக்கத் தவறக் கூடாது. மத்திய அரசுத் துறைகளில் முதன் முதலாகப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இப்பொழுதுதான் 27 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்படும் நிலையில், தொடக்க நிலையிலேயே அவர்களில் பொருளாதார வசதி உள்ளவர்களை (கிரிமீலேயரை) நீக்க வேண்டும் என்று கூறியது எந்த வகையிலும் சமூகநீதியாகாது.

இந்திய அரசமைப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்ட 1950ஆம் ஆண்டிலிருந்தே - தாழ்த்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்டது போலவே பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருக்க வேண்டியது சட்டப்படியான நிலையே!

அதனைச் செய்யத் தவறிய நிலையில், மண்டல் குழுப் பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முதன் முதலாக இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ள நேரத்தில், உச்சநீதிமன்றம் இந்தப் பின்னணிகளை யெல்லாம் சீர்தூக்கிப் பார்த்திருக்க வேண்டாமா?

9 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதியரசர் எஸ். இரத்தினவேல் பாண்டியன் அவர்கள் சமூகநீதிப் பிறந்த தமிழ் மண்ணைச் சார்ந்தவர் ஆதலால், பெரும்பான்மை நீதிபதிகளிட மிருந்து மாறுபட்ட தீர்ப்பை எழுதினார்.

மண்டல் குழுப் பரிந்துரை அறிக்கையில் இந்தியாவில் பிற்படுத்தப்பட்டவர்கள் 52 விழுக்காடு என்று குறிப்பிடப்பட்டிருந்தும், வெறும் 27 விழுக்காடு இடங்களே அளிக்கப்பட்டதற்குக் காரணம் 1992 தீர்ப்பில் உச்சநீதிமன்றம் இடஒதுக்கீடு 50 விழுக்காட்டைத் தாண்டக் கூடாது என்ற எல்லையைக் கட்டியதுதான். ஏற்கெனவே தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கு 22.5 விழுக்காடு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளதால் 50-க்கும் கீழ் என்று வரும்பொழுது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மீதி 27 விழுக்காடு இடங்களை மண்டல் குழு பரிந்துரை செய்யும்படி நேர்ந்து விட்டது.

மக்கள் பிரதிநிதித்துவ அமைப்புகளான சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றங்களிலும் நிறைவேற்றப்பட்ட சமூகநீதி, இடஒதுக்கீடு தொடர்பான சட்டங்களை தொடக்க முதலே எந்திரக் கதியில் நீதிமன்றங்களே குறுக்கீடு செய்து முட்டுக்கட்டை போட்டு வந்திருக்கின்றன.

சமூகநீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு என்றுதான் அரசமைப்பு சட்டம் கூறுகிறதே தவிர, பொருளாதார அளவுகோல் குறிப்பிடப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்பொழுதும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலைக் காட்டி - குறிப்பிட்ட அளவு வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது. ஜாதி என்பது இந்து சமூக அமைப்பில் பிறப்பின் அடிப்படையிலே வரக் கூடியதாகும். இதில் சூத்திர பஞ்சமப் பிரிவைச் சார்ந்தவர்களுக்குக் கல்வி வாய்ப்பு அரசர்கள் காலத்தில் இருந்தே மறுக்கப்பட்டு தான் வந்துள்ளது. இந்த நிலையில், பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் பொருளாதார கோடு போட்டு தடை செய்வது சரியான பார்வையாகாது.

நீதிமன்ற தீர்ப்புக்குக் கட்டுப்பட வேண்டிய நிலையில் பொருளாதார அளவுகோல் தொடர்பான பிரச்சினையில், உச்சநீதிமன்றம் வழிகாட்டியிருந்தபடியே தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முடிவுக்கு இந்தப் பிரச்சினை விடப்பட்டது.

நீதியரசர் எம்.எஸ். ஜனார்த்தனம் அவர்களின் தலைமையிலான ஆணையம் தக்க வகையில் பரிசீலனை செய்து, புள்ளி விவரங்களின் அடிப்படையில், 1980ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்துவரும் 68 (+1) சதவிகித இடஒதுக்கீட்டுப் பிரச்சினையில் கிரீமிலேயர் என்பதற்கான அவசியம் தேவைப்படவில்லை என்று அறிக்கையாகக் கொடுத்திருப்பதும், அதனை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டிருப்பதும் வரவேற்கத் தக்கதும், பாராட்டத்தக்கது மாகும்.

------------------- "விடுதலை” தலையங்கம் - 13-7-2011

0 comments: