Search This Blog

31.7.11

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! -4

துக்ளக்கின் புரட்டுக்குப் பதிலடி! (4)

ஆரம்ப அணுகுண்டு அதுதான்!

எல்லாவற்றிலும் பார்ப்பனமயம் என்ற கொடி ஆணவத்தோடு பறந்து கொண்டிருந்தது. நூற்றுக்குத் தொண்ணூற்றேழு சதவிகிதமான பார்ப்பனர் அல்லாத மக்கள் - மண்ணுக்குரிய மக்கள் கை பிசைந்து நின்றனர். எடுத்துக்காட்டாக ஒரு புள்ளி விவரம் (1912) நூற்றுக்கு மூன்று பேர்களாக இருந்த பார்ப் பனர்கள் டிப்டி கலெக்டர்களில் 55% சப் ஜட்ஜ்களில் 83%

மாவட்ட முன்சீப்புகளில் 72% என்ற நிலை.

அதே ஆண்டில் சென்னை மாநில சட்ட மன்றத்தில் இடம் பெற்றிருந்தவர்கள் யார் யார் தெரியுமா?

உள்ளாட்சித் துறைகளிலிருந்து வந்தவர்கள்

(1) தென் ஆர்க்காடு - செங்கற் பட்டுத் தொகுதி - வழக்கறிஞர் ஆர். சீனிவாச அய்யங்கார்.

(2) தஞ்சாவூர் _ திருச்சிராப்பள்ளி தொகுதி _ வி.கே. இராமானுஜ ஆச்சாரியார்

(3) மதுரை இராமநாதபுரம் தொகுதி _ கே. இராமையங்கார்.

(4) கோவை _ நீலகிரி தொகுதி _ சி. வெங்கட்ரமண அய்யங்கார்.

(5) சேலம் _ வடாற்காடு தொகுதி _ பி.வி. நரசிம்மய்யர்

(6) சென்னை நகரம் _ சி.பி. இராமசாமி அய்யர்

டில்லி மத்திய சட்டசபையில் இடம் பெற்றவர்கள் செங்கற்பட்டு மாவட்டம் எம்.கே.ஆச்சாரியார்! சென்னை: திவான் பகதூர் டி. ரங்காச்சாரி.

உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். சுப்பிரமணிய அய்யர்! வி. கிருஷ்ண சாமி அய்யர், டி.வி. சேஷகிரி அய்யர், பி.ஆர். சுந்தரம் அய்யர்.

இத்தகு இறுக்கமான பார்ப்பன ஆதிபத்திய சூழலில்தான் நீதிக்கட்சி உதயமாயிற்று என்பதை மறக்கக் கூடாது.

துக்ளக் பார்ப்பன வகையறாக்களுக்கு மூக்கின்மேல் புடைத்துக் கொண்டு வருகிற ஆத்திரம் - இவ்வளவுப் பெரிய அக்கிரகார ஆதிக்கக் கோட்டையை உடைத்து விட்டார்களே இந்தப் ஜஸ்டீஸ் கட்சிப் பாவிகள் என்பதுதான்!

அந்தக் காலத்தில் கல்லூரிகள் சென்னை போன்ற இடங்களில்தான். வெளியூர்களிலிருந்து சென்னைக்குப் படிக்கவரும் பார்ப்பனர் அல்லாத மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதிகள் கிடையாது. இருந்த விடுதிகள் எல்லாம் பார்ப்பனர்களுடையது. பார்ப்பனர் அல்லாதாருக்கு அங்கு இடம் கிடையாது. வேண்டுமானால் எடுப்புச் சாப்பாடு எடுத்துக் கொண்டு வரலாம். அங்கு தங்கி உணவருந்த முடியாது என்ற கொடுமை.

அந்தக் கால கட்டத்தில் பார்ப் பனர் அல்லாதார் தங்கிப் படிக்க சென்னையில் விடுதி ஒன்றை ஒருவர் (டாக்டர் சி. நடேசனார்) ஏற்படுத்தினார் என்றால் அது என்ன சாதாரணமானதுதானா? பாலைவனத்தில் கிடைக்கப் பெற்ற சோலையல்லவா!

பார்ப்பனர் அல்லாதார் அரசியல் உள்பட எல்லா நிலைகளிலும் உரிய இடம் பெற்றாக வேண்டும் என்று கருதியது காலத்தின் கட்டாயம் தானே!

நீதிக்கட்சி தோன்றியதும், செயல் பட்டதும் இந்த அடிப்படையில்தான்!

நீதிக்கட்சி தோன்றி 95 ஆண்டுகளுக்குப் பிறகும்கூட வரலாற்றின் நேர்மையான மய்ய ஓட்டத்தைப் புறந்தள்ள, கொச்சைப்படுத்த ஒரு கூட்டம் புறப்பட்டுள்ளது என்றால் அதனைப் புறமுதுகு காட்டி ஓடச் செய்யும்வரை நாம் ஓய்ந்து விட முடியுமா?

வெள்ளுடைவேந்தர் பிட்டி தியாகராயர் அவர்களால் 1916 டிசம்பர் 16ஆம் நாள் வெளியிடப்பட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையில் அங்கொன் றும் இங்கொன்றுமாக வார்த்தை களைப் பிடுங்கி தம் வசதிக்கு ஏற்ப சேற்றைவாரி இறைக்கிறார் திருவாளர் லட்சுமி நாராயண அய்யர்.

பார்ப்பனர்களின் உத்தியோக ஆதிக்க நிலை, கல்விநிலை, சமுதாய நிலை, பார்ப்பனர் அல்லாதார் பெற வேண்டிய சுயமரியாதை உணர்வை எல்லாம் விவரித்துள்ளார் அவ்வறிக் கையில். பார்ப்பனர் அல்லாதாருக்கு ஓரியக்கம் தேவைப்படுவதன் அவசியத்தையும் தெரிவித்துள்ளார்.

சமுதாயத்தில் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என்ற வேற்றுமைகள் மறையத் தொடங்கினால் மட்டுமே சுயாட்சி பெறுவதற்கான தகுதியை நாம் பெற்றவர் ஆவோம் என்ப தையும் பதிவு செய்துள்ளார்.

இறுதியாக அந்த அறிக்கையில் பின்வருமாறு முடித்துள்ளார்.

எங்களுடைய உறுதியான நம்பிக்கை என்னவென்றால், இன்னும் சிறிது காலத்திற்காவது ஒவ்வொரு வகுப்பாரும் தங்களுடைய வளர்ச்சியை முதன்மையாகக் கருத வேண் டும். பிற வகுப்பினர்களுடன் சேர்ந்து பணியாற்றும் பொழுது தான் தாழ்ந்தவன் என்று கருதாது சுயமரியாதையுடன் சம உரிமை பெற்றவன் என்று எண்ண வேண்டும். சுயமரியாதையுடன் சம நிலையிலிருந்து மற்றவர்களுடன் பணியாற்றுவதையே ஒவ்வொருவரும் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும்? என்று கூறி அறிக்கையினை நிறைவு செய்துள்ளார்.
இத்தகைய சமத்துவமும், சகோ தரத்துவமும், சமூகநீதியும் பொங்கி மணம் வீசும் ஓர் அறிக்கையைப் பார்ப்பனீயத்துக்கே உரித்தான குறுக்குப் புத்தியுடன் - குதறுவது - அவர்களுக்கே உரித்தான கோணல் புத்தியைத்தான். நிர்வாணமாக வெளிப்படுத்தும் பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக் கையைப் படித்து அந்தக் கால கட்டத்திலேயே இந்து ஏட்டுக்கு உதறல் எடுத்ததுண்டு. It is With Much Pain and Surprise that we persued the document என்று எழுதியதே! மிகுந்த வலியுடனும், திகைப்புடனும் அந்த அறிக்கையைக் கவனித்ததாம்! இருக்காதா? அதுதானே அவாள் ஆதிக்கத்துக்கான ஆரம்ப அணுகுண்டு. இன்றுவரை அந்த உதறலைக் காண முடிகிறதே!

முதல் உலகப் போருக்குப் பிறகு இந்தியர்களுக்கும் ஆட்சி அமைப்பு முறையில் போதிய இடம் அளிப்பது என்ற முடிவினை பிரிட்டிஷ் அரசு சிறப்புக் கெசட்டில் வெளியிட்டது.

இதன்மீது மக்கள் கருத்து அறிய மாண்டேகு - செம்ஸ்போர்டு ஆகிய இருவர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அந்தக் குழுவிடம் நீதிக்கட்சித் தலைவர் பிட்டி தியாகராயர், டாக்டர் நாயர் உள்ளிட்டோர் அறிக்கை ஒன்றினை அளித்தனர். வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் அளிக்கப்பட்டாலொழிய பார்ப்பனர் அல்லாதார் கடைத்தேறு வது கடினம் என்பதை உறுதியாகத் தெரிவித்திருந்தனர்.

இந்திய மக்களின் கருத்துகளைத் தொகுத்துக் கொண்டு குழுவினர் லண்டன் சென்றனர்.

இதுகுறித்து நேரில் சாட்சியம் அளிக்க இந்தியத் தலைவர்கள் அழைக்கப்பட்டனர். பார்ப்பனர் அல்லாதார் அமைப்பின் சார்பில் டாக்டர் டி.எம். நாயர் லண்டன் சென்றார்.

மாண்டேகு - செம்ஸ்போர்டு அறிக்கை 1918 ஜூலை 2இல் லண்டனில் வெளியிடப்பட்டது. அதில் முசுலிம்களுக்கும், சீக்கியருக் கும் மட்டுமே பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் அமைந்திருந்தது. பார்ப்பனர் அல்லாதாருக்கும் தாழ்த் தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக் கும் பிரதிநிதித்துவம் அளிக்கப் படவில்லை.

டாக்டர் நாயர் அப்பொழுது லண்டனில்தான் இருந்தார். இதுகுறித்து கருத்துத் தெரிவிக்க அவருக்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் அவர் முயற்சியைக் கைவிடவில்லை. நண்பர்கள் மூல மாகவும், ஏற்கெனவே இந்தியாவில் பணியாற்றியிருந்த ஆங்கிலேய அதிகாரிகள் மூலமும் கடுமையாக முயற்சித்தார். அதன் விளைவு - பிரபுக்கள் சபையில் நாயருக்கு ஆதரவாக வாதிட்டனர். முயற்சிக்கு வெற்றி கிட்டியது. பிரபுக்கள் சபை, காமன் சபை உறுப்பினர்கள் அடங் கிய கூட்டத்தில் டாக்டர் டி.எம். நாயர் ஆங்கிலேயர்களே சொக்கக் கூடிய ஆங்கிலத்தில் புள்ளி விவரங்களை எடுத்து வைத்துப் பிளந்து தள்ளினார். பார்ப்பனர் அல்லாதா ருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் சட்டமன்றத்தில் தனித் தொகுதியின் தேவையை வெகுவாக வலியுறுத் தினார்.

இதுகுறித்துக் கருத்துகளைக் கூற இருவரைக் கொண்ட குழு ஒன்றை வெள்ளை அரசு நியமித்தது. அதற்கு சவுத்பரோ கமிட்டி (South Borough Franchise Committee என்று பெயர்.

என்ன அநியாயம் என்றால். அந்தக் குழு உறுப்பினர்கள் இருவருமே பார்ப்பனர்கள்! வி.எஸ். சீனிவாச சாஸ்திரி, எஸ்.என். பானர்ஜி என்ற இரு நபர்கள்தான் அவர்கள். நண்டை சுட்டு நரியைக் காவல் வைத்த கதையாகி விட்டது. எதிர் பார்த்தபடியே அந்த இரு பார்ப்பனர்களும் வகுப்புரிமைக்கு எதி ராகக் கருத்துகளைத் தெரிவித்து விட்டனர்.

இந்தக் கமிட்டியை புறக்கணிக்கு மாறு மதுரையில் நடைபெற்ற பார்ப்பனர் அல்லாதார் மாநாடு (1918 அக்டோபர் 13) வேண்டுகோள் விடுத்தது.

நல்ல வாய்ப்பாக ஆங்கிலேயர் அரசு அந்த இரு நபர் குழுவின் அறிக்கையை ஏற்றுக் கொள்ளாமல் இரண்டாவது முறையாக ஒரு வாய்ப்பினை அளித்தது. அதற்கென நியமிக்கப் பட்ட நாடாளுமன்ற பொறுக்குக் குழு முன் தங்கள் வாக்கு மூலங்களை அளிக்க இங்கிலாந்துக்கு வர அழைப்புக் கொடுக்கப்பட்டது.

நீரிழிவு நோயாளியான டாக்டர் டி.எம். நாயர் லண்டன் சென்றார். அங்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டார். கே.வி. ரெட்டி நாயுடு, ஆற்காடு இராமசாமி முதலியார் ஆகியோரும் லண்டன் சென்றிருந்தனர்.

மருத்துவமனையிலேயே அறிக்கை தயாரிக்கப்பட்டது. மருத்துவ மனையிலிருந்து குழுவைச் சந்திக்க நாயரால் முடியாத உடல் நிலையில், அந்தக் கமிஷன் உறுப்பினர்களே மருத்துவமனைக்குச் சென்று நாயரின் சாட்சியத்தைப் பெறுவதாக முடிவு செய்தனர். ஆனாலும் அந்தச் சாட்சி யத்தை அளிப்பதற்கு முன்பாகவே டாக்டர் நாயர் - தந்தை பெரியார் அவர்களால் தென்னாட்டு லெனின் என்று அழைக்கப்பட்ட அந்த வீரத் திருமகன் இறுதி மூச்சைத் துறந்தார். நாயர் மறைவு செய்தியைக் கேட்டு அக்ரகாரம் ஆனந்தக் கூத்தாடியது. சென்னை திருவல்லிக்கேணி பெரிய தெரு பிள்ளையார் கோயிலில் ஆயிரக் கணக்கான தேங்காய்களை உடைத்தனராம் அக்ரகாரத் திருமேனிகள்.

அதைவிட கொடுமை என்ன தெரியுமா? பண்பாட்டுக்கே பிறந்தவர்கள் போல ஆனந்தப் பல்லவி பாடும் இந்தப் பார்ப்பனர்களின் யோக்கியதை என்ன? காங்கிரஸ் சார்பில் சாட்சியம் அளிக்க அப்பொழுது அங்குச் சென்றிருந்த சர். சி.பி. ராமசாமி அய்யர், சுரேந்திர நாத் பானர்ஜி, திலகர், கோகலே, சத்ய மூர்த்தி அய்யர், ஆகிய பார்ப்பனர்கள் ஒரு மனிதாபிமான அடிப்படை யில்கூட, பண்பாட்டின் அடிப் படையில்கூட மரணமடைந்த நாயர் உடலுக்கு மரியாதை தெரிவிக்கச் செல்லவில்லை.

இந்த யோக்கியதையில் உள்ள பார்ப்பனர்கள்தான் மல்லுக்கட்டி பேனா பிடிக்க முன் வந்துள்ளனர். பார்ப்பனர்கள் தம் தலைவர்களின் யோக்கியதையே இந்தத் தரத்தில் இருக்கிறது என்றால் சோ போன்ற வர்களின் தரம் தகரடப்பாவாகத் தானே இருக்கும்!

வீரமகன் டாக்டர் டி.எம். நாயர் மறைந்து விட்டாலும், அங்கு சென்றி ருந்த கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் டாக்டர் நாயர் நாள்குறிப்பிலிருந்து தகவல்களை தொகுத்து, பத்து நாட்கள் இரவு பகலாக உழைத்து 18 பக்கங்கள் கொண்ட அரிய அறிக் கையினைத் தயாரித்து நாடாளு மன்றக் குழுவின்முன் மெச்சத் தகுந்த முறையில் சாட்சியம் அளித்தார்.

இந்தியா என்பதை ஒரு நாடாகக் கருத இயலாது. குறிப்பாக தென்னிந்தியாவில் பார்ப்பனருக்கும், பார்ப்பனர் அல்லாதாருக்கும் அடிப்படையிலே இன வேறுபாடு உண்டு. முன்னவர் ஆரியர் இனத்தைச் சேர்ந்தவர்; பின்னவர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.

மதத்தின் பெயராலும், வர்ணா சிரம தர்மத்தின் பெயராலும் சிதறுண்டு திணறும் பார்ப்பனர் அல்லாத மாபெரும் சமுதாயமானது யானைப் பாகனிடம் அடங்கிப் போகப் பழக்கப்பட்ட யானைக்குச் சமமானது; சின்னஞ்சிறு குட்டிச் சமுதாயமான பார்ப்பனர் யானைப் பாகனைப் போல் பார்ப்பனர் அல்லாத பெரிய சமுதாயத்தைப் பன்னெடுங்காலமாக அடக்கி வைத்திருப்பதில் வல்லவர்கள், வஞ்சகர்கள். ஆனால், என்றெனும் ஒரு நாள் எதிர்த்து பாகனை விரட் டும் யானைபோல, பார்ப்பனர் அல்லாதார் எழுச்சிக்குப் பார்ப்பனர் கூடிப் பேசி முடிவு எடுக்க வேண்டும் என்றும், முடிவு ஏற்படா விட்டால் நடுவர் குழுவின் தீர்ப்புக்கு விட வேண்டும் என்றும் அந்த அறிக் கையிலே குறிப்பிட்டிருந்தார் கே.வி. ரெட்டி நாயுடு என்னதான் பிரிட் டீஷார் நல்லாட்சி நடத்தினாலும், அது எவ்வாறு இந்தியர்கள் தங் களைத் தாங்களே ஆண்டு கொள் ளும் சுயாட்சிக்குத் தகுந்த மாற்று ஆகாதோ, அதுபோலவே பிராம ணர்கள் என்னதான் நல்லாட்சி கொடுத்தாலும் அது பிராமண ரல்லாதாரின் சுயாட்சிக்குத் தகுந்த மாற்றாகாது என்னும் வைர வரிகளை அதில் பதித்திருந்தார்.

அதற்குப் பலனும் கிடைத்தது. சென்னை மாநில சட்டமன்றத்தில் ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதி கள் 132; அதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய தொகுதிகள் 98; இதில் 65 பொதுத் தொகுதிகள், 33 தொகுதிகள் சிறப்புத் தொகுதிகள்; இதில் 28 தொகுதிகள் பார்ப்பனர் அல்லாதாருக்கு என்று ஒதுக்கப் பட்டன. ஒதுக்கப்பட்ட தொகுதிகள் தவிர மீதித் தொகுதிகளிலும் பார்ப் பனர் அல்லாதார் போட்டியிடலாம் என்று நிருணயிக்கப்பட்டது.

1920 நவம்பர் 20இல் தேர்தல் நடைபெற்றது. நீதிக்கட்சிக்கும் ஹோம் ரூல் கட்சிக்கும்தான் போட்டி காங்கிரஸ் போட்டியிடவில்லையென் றாலும் காலித்தனத்தைக் கட்ட விழ்த்து விடும் பணியை மட்டும் தவறாமல் செய்தது.

கழுதைகளின் கழுத்தில் எனக்கு ஓட்டுப் போடு என்று எழுதிய அட் டைகளைக் கட்டி, அதன் வாலில் காலி டின்களைக் கட்டிக், கலாட்டா செய்வதிலும், காலித்தனத்தில் ஈடுபடுவதிலும் அலாதியான ஆனந்தம் அதற்கு.

சென்னை மாகாண சட்ட சபைக்கான 127 இடங்களில் நீதிக்கட்சி 63 இடங்களில் மகத்தான வெற்றியை ஈட்டியது. நியமன உறுப்பினர்கள் 18 பேர்களும் நீதிக்கட்சியின் ஆதரவாளர்களாகவே இருந்தனர்.

1920 முதல் கிட்டத்தட்ட 17 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்த நீதிக்கட்சியின் சாதனைகள் சாதாரணமானவைகளா?

வாய்ப் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்று அக்கிரகார வாசிகள் பேனா பிடிக்கிறார்களே அவர்களுக்குப் பதில் சொல்லுவ தற்காக அல்ல _ பார்ப்பனர் அல்லாத மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நீதிக்கட்சி ஆட்சியின் சாதனைகள் பட்டியலைத் தெரிவிப் பது அவசியம்தானே!

பல்வேறு போதைகளில் சிக்கிச் சீரழிந்து வரும் பார்ப்பனர் அல்லாத இளைஞர் சமூகம் - தெரிந்து கொள்ள வேண்டியவை மிகப்பல.

பெயருக்குப் பின்னால் ஜாதிவால் ஒழிந்து, அதற்குப் பதிலாக படிப்புப் பட்டங்கள் பவனி வருகின்றனவே - இதற்கெல்லாம் அஸ்திவாரம் போட்டவர்கள் யார்? ஆணி வேராக இருந்து உழைத்தவர்கள் யார்?

எந்தச் சமூகநீதி நம்மை உயர்த்தியது? இவற்றைத் தெரிந்து கொண்டால் பல போதைகள் நம்மை விட்டு ஒழிந்துத் தொலையும், அவற்றையும் அடுத்துப் பார்ப்போம்.

-------------------தி.க. பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் அவர்கள் 30-7-2011”விடுதலை” ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

0 comments: