Search This Blog

25.7.11

வீரமணி இல்லாவிட்டால் மண்டல் குழுப் பரிந்துரைகளின் செயலாக்கம் கிடைத்திருக்காது!

வீரமணி இல்லாவிட்டால் மண்டல் குழுப் பரிந்துரைகளின் செயலாக்கம் கிடைத்திருக்காது என்று புகழாரம்!

அய்தராபாத்தில் நடைபெற்ற நீதியரசர் பி.எஸ்.ஏ. சுவாமி 3ஆம் ஆண்டு நினைவு விழா மாட்சிகள்!


அறக்கட்டளை சார்பாக விருதுடன் ரூ 25 ஆயிரத்திற்கான காசோலையையும், நினைவு பரிசினையும் திருமதி சவிதாகுமார் அவர்கள் ஆசிரியர் வீரமணி அவர்களிடம் வழங்கினார். உடன் திருமதி இராஜலட்சுமி அம்மாள்.


ஜஸ்டீஸ் கே.சி. பானு அவர்கள் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு ஜஸ்டீஸ் பி.எஸ்.ஏ. சுவாமி சமூகநீதி விருது வழங்குகிறார். விருது பெற்ற தமிழர் தலைவர் அவர்களுடன் சுவாமி அவர்கள் குடும்பத்தார், நீதியரசர்கள், முக்கிய விருந்தினர்கள்.


மறைந்த நீதிபதி பி.எஸ்.ஏ. சுவாமி அவர்களின் நினைவு அறக் கட்டளை சார்பில் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு ஜஸ்டீஸ் பி.எஸ்.ஏ சுவாமி சமூகநீதி விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

ஆந்திரத் தலைநகர் அய்தராபாத்தில் ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதியாக பல்லாண்டுகள் சிறப்புடனும் நாணயமாகவும் பணிபுரிந்து, ஓய்வு பெற்ற பின்பு சமூகநீதியை முன்னிறுத்தி ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற விசாலப் பார்வையுடன், எஞ்சிய தனது ஓய்வுக் காலத்தை ஆந்திராவில் ஒரு மாபெரும் சமூகநீதி இயக்கத்தைக் கட்ட வேண்டும்; தந்தை பெரியார் அவர்கள் எப்படி தமிழ்நாட்டில் அரசியலுக்குள் நுழையாமலேயே மாபெரும் சமூக நீதி விழிப்புணர்வு இயக்கத்தைக் கட்டிக் காத்தார்களோ, அதேபோல் ஆந்திர மாநிலம் முழுமையிலும் செய்ய வேண்டும் என்று தொடர் சுற்றுப் பயணங் களை தனி ஒரு வேன் மூலம் மேற்கொண்டார்.

தெலுங்கு வார ஏடு துவக்கம்!


மனப்பத்திரிக்கா (நமது ஏடு) என்ற தலைப்பில் ஒரு தெலுங்கு வார ஏட்டினையும் தொடங்கி, அதனைப் பல்வேறு இடையூறுகள் வரினும் தொடர்ந்து நடத்தி வந்தார். புதுடில்லியில் சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் அமைப்பு ஒன்றையும் ஒரு டிரஸ்ட்டாகப் பதிவு செய்து, அதன் சார்பிலும் மாநாடுகள், கருத்தரங்குகளை நடத்தினார். 24.7.2008 அன்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு இயற்கையெய்தினார்.

ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி நினைவு அறக்கட்டளை சார்பில் விழா


அவரது மூன்றாம் ஆண்டு நினைவு நாளையொட்டி, அவர் செய்த பல சமூக, கல்விப் பணிகளைத் தொடர வேண்டும் என்ற நோக்கத்தோடு, அவரது வாழ்விணையர் திருமதி இராஜலட்சுமி அம்மாள், அவரது ஒரே மகள் திருமதி சவிதாகுமாரி, அவரது மருமகன் சுதாகர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் நீதிஅரசர்மீதும் அவரது சமூக நீதித் தொண்டில் ஈர்ப்பு உள்ளவர்களும் இணைந்து ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி டிரஸ்ட் என்ற ஒன்றை நிறுவியதோடு, அவர் நடத்திய மனப் பத்திரிகா என்ற தெலுங்கு வார ஏட்டில் எழுதிய முக்கிய கட்டுரை களைத் தொகுத்து, A Journey into the thoughts of justice B.S.A.Swamy’’ என்ற தலைப்பில் ஒரு அரு மையான நூலை வெளியிட முடிவு செய்யப்பட்டது. அவரது மூன்றாம் ஆண்டு நினைவு நாளைப் பயன் படுத்திக் கொண்ட ஒரு சிறப்பான குழு மிக அருமையான ஏற்பாடுகளை ARSTC கலாபவனம் என்ற பொது மண்டபத் தில் 24.7.2011 அன்று ஏற்பாடு செய் திருந்தனர்.

ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி சமூகநீதி விருது!


ஆண்டுதோறும் இந்த அறக்கட்டளை யின் சார்பில் சிறப்புச் சொற்பொழிவு ஒன்றை - சமூக நீதிப்பற்றி தக்க பிரமுகர் களை அழைத்து நடத்துவது என்றும், அதுபோலவே இந்த அறக்கட்டளை சார்பில் ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ. சுவாமி சமூகநீதி விருது என்ற ஒன்றை அத்துறையில் குறிப்பிடத்தக்க அளவு தொண்டு செய்த பிரமுகர் ஒருவருக்கு விழாவில் அளித்து, அவர்களைப் பெருமைப்படுத்துவது என்றும் முடிவு செய்து, இந்த ஆண்டு 3ஆம் ஆண்டு நினைவு நாளில் அதைத் துவக்குவது என்றும் அறக்கட்டளை நிருவாகம் முடிவு செய்தது.
ஆந்திர அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஆந்திர மாநில தேர்தல் ஆணையத் தலைவராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற சமூக நீதி உணர்வாளரும் - ஜஸ்டீஸ் சுவாமி அவர்களின் உற்ற நண்பர்களில் ஒருவருமான திரு. காக்கி மாதவராவ் அய்.ஏ.எஸ். (ஓய்வு) அவர்கள் தலைமையில் விழா 24.7.2011 ஞாயிறு காலை 11.30 மணி யளவில் ஆந்திராவில் சாலைப் போக்கு வரத்துக் கலாபவனில் துவங்கியது!

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணிக்கு முதல் விருது!


சிறப்புச் சொற்பொழிவினை, உச்சநீதி மன்றத்தின் முன்னாள் நீதியரசரான ஜஸ்டிஸ் கே. இராமசாமி அவர்களை வைத்து (முதல் பொழிவினை) சமூகநீதி என்ற தலைப்பில் பேச வைத்தனர்.

ஜஸ்டீஸ் பி.எஸ்.ஏ. சுவாமி அவர்கள் பெயரால் அமைந்த விருது (முதல் விருது) திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு அளிப்பது என்று முடிவு செய்து ஆந்திர சமூகநீதி களத்தில் புதியதோர் திருப்பத்தை உருவாக்கினர். மிகச் சிறப்பான வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஆந்திர உயர்நீதிமன்ற முன்னாள், இந்நாள் நீதியரசர்கள், அய்.ஏ.எஸ்., அய்.பி.எஸ். அதிகாரிகள், முன்னாள் அமைச்சர்கள், வழக்குரைஞர்கள், மாநிலத் தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்டு வந்த சமூகநீதி ஆர்வலர்கள் குடும்பத்தினர் கலந்து கொண்டு விழா பகல் 2.15 மணிக்கு முடிவடையும் வரை மிகவும் பொறுமை யாகக் கேட்டு பிறகு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகல் விருந்திலும் கலந்து கொண்டார்கள்.

விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று, இணைப்புரைபோல வழங்கி னார் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்.

ஜஸ்டீஸ் சுவாமி அவர்களது உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செய்யப் பட்டது. வந்திருந்த நீதியரசர்கள், நிரு வாகத் துறையினர், வழக்குரைஞர்கள், கல்வியாளர்கள் பலரும் மரியாதை செலுத் தினர்!

மறந்து விடாதீர்!


நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய காக்கி மாதவராவ் அய்.ஏ.எஸ். அவர்கள், ஜஸ்டீஸ் சுவாமி அவர்களது தொண்டறம், நாணயம், ஈடுபாடு முதலியவற்றைப் பற்றி விளக்கியதோடு, அவர் மறைவுக்கு சில ஆண்டுகளுக்குப் பின்னரும் இவ்வளவு திரளாக சமூகத்தின் முக்கிய பகுதியினர் வந்து குழுமி மரியாதை செலுத்துவது எதைக் காட்டுகிறது? உண்மையான, நேர்மையான சமூகநீதிக்காகப் பாடு பட்டவர் என்பதால் தான்; இன்றும் இவ்வளவு சிறப்பு - மறந்து விடாதீர்! என்று குறிப்பிட்டு,

அடுத்து அறக்கட்டளை துவக்க விழா நூல் வெளியீட்டு விழா இவைகளை நடத்தி வைக்க ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் திரு பவானி பிரசாத் அவர்களை அழைத் தார்கள். ஜஸ்டில் பி.எஸ்.ஏ.சுவாமி பெயரால் அமைந்த அறக்கட்டளைப் பதிவுப் பத்திரத்தை ஒரு பேழையில் வைத்திருந்ததை அவர் வெளியிட்டார். அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் இப்படி ஓர் அரிய முயற்சியை எடுத் தமைக்கு மிகவும் பாராட்டி நிகழ்ச்சியை வாழ்த்திப் பேசினார்.

நூல் வெளியீடு


பிறகு டாக்டர் ஜஸ்டீஸ் எதிராஜுலு அவர்கள் ஆந்திர நிருவாக டிரிபியூனல் தலைவர் அவர்கள் ஜஸ்டிஸ் சுவாமியின் கட்டுரைகளைக் கொண்ட புதிய நூலை வெளியிட்டு உரையாற்றினார்.

ஓய்வு பெற்ற முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ஜஸ்டீஸ் கே.இராமசாமி அவர்கள் சமூக நீதி என்ற தலைப்பில் மிகஅருமை யானதொரு ஆய்வுச் சொற்பொழிவினை ஆங்கிலத்தில் நிகழ்த்தியதோடு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் போன்ற சமூகநீதிப் புரட்சியாளர்களது தொண்டைப் பாராட்டிப் பேசியதோடு, அதே வரிசையில்தான் தனது தொண்டை ஜஸ்டிஸ் சுவாமி அவர்களும் தொடர்ந்தார் என்றும் குறிப்பிட்டார்.

பிறகு ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதி கள் ஜஸ்டிஸ் திரு. ஜி.சந்திரய்யா, ஜஸ்டில் திரு. பி.சந்திரகுமார், ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி திரு. பி.எஸ். நாராயணா முதலியவர்கள் ஜஸ்டிஸ் சுவாமி அவர்களது எளிய வாழ்க்கை, லட்சியத்திற்கான வாழ்க்கை முறை; பண்பாளராகவும், ஒழுக்கவாதியாகவும் அவர் வாழ்ந்து காட்டிய பாங்குகளையும் வரிசையாக எடுத்துக் கூறினர்.

அவரது பெயரால் அமைந்துள்ள முதல் விருதினை, திராவிடர் கழகத் தலைவர் திரு.வீரமணி அவர்களுக்கு அளிக்க , அவரைத் தேர்வு செய்தது மிகவும் பாராட் டத்தக்கது. காரணம் சுவாமி அவர்களும், தலைவர் வீரமணி அவர்களையே பின்பற்றி சமூகநீதிப் பணி செய்வதாகக் குறிப்பிடுவார் என்பதை எடுத்துக் காட்டி தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் பேசினர்.

வீரமணி உழைப்பால் கிடைக்கப்பெற்ற மண்டல் குழு பரிந்துரைகளின் செயல்பாடு


பிறகு கருநாடக பிரபல வழக்கறிஞரும், கருநாடக மாநில பிற்படுத்தப் பட்டோர் நல ஆணையத்தின் முன்னாள் தலைவரும், சட்ட மேதையுமான பேராசிரியர் ரவிவர்ம குமார் அவர்கள் ஜஸ்டிஸ் சுவாமிகாரு அவர்கள் பெயரில் ஏற்படுத்தப்படும் முதல் விருது சமூக நீதித் தலைவர் திரு.வீரமணி அவர்களுக்குத் தருவதுதான் மிகவும் பொருத்தமானது என்று கூறி, இவ்விழா வின் தலைவராக சமூகநீதியில் ஆழ்ந்த நம்பிக்கையாளர்கள் காக்கி மாதவராவ், ஜஸ்டிஸ் இராமசாமி, கி.வீரமணி ஆகிய முப்பெரும் சிந்தனையாளர்களை அழைத்து நடத்துவது மிகவும் பாராட்டத் தக்கது என்று கூறி,

தலைவர் கி.வீரமணி அவர்களது இடைவிடாத பணிகள் பற்றி பெருமையாகக் குறிப்பிட்டார். வீரமணி அவர்களின் தொடர் போராட்டங்கள் இல்லாவிட்டால் மண்டல் குழு பரிந்துரை செயலாகி இருக்காது. அது போலவே இன்றும் ஜாதி அடிப்படையில் சென்சஸ் என்பதற்கு முதலில் குரல் கொடுத்து (டில்லியில்) அதற்காக இன்றுவரை பாடுபட்டு வருகிறார்; கருநாடகாவில் கீதையைப் பாடமாக ஆரம்ப வகுப்புக்கு வைத்துள்ளனர். பா.ஜ.க. அரசிற்கு எதிர்ப்புத் தெரிவித்த நாங்கள் கி.வீரமணி அவர்கள் எழுதிய கீதையின் மறுபக்கம் (ஆங்கில நூலைப்) பயன்படுத்தினோம். அரிய தகவல்களை அதில் அவர் தந்துள்ளார் என்றெல்லாம் பாராட்டி உரையாற்றினார்.

ஆந்திராவின் புரட்சி சிந்தனையாளர், வழக்குரைஞர் பொஜ்ஜ தாரகம் அவர்கள் வந்து, விருது வழங்குவது பொருத்தமா னது என்று கூறி பாராட்டுரை வழங்கினார்.

பிறகு ஜஸ்டிஸ் திரு கே.சி.பானு அவர்களும், விழாத் தலைவர் மாதவராவ் (அய்ஏ.எஸ்.) அவர்களும், சுவாமி அறக்கட்டளை உறுப்பினர்களும் விருது வழங்கப்படும் தலைவர் கி.வீரமணி அவர்களை மேடை முன்புறம் ஒரு தனி நாற்காலியில் அமரவைத்தனர். சால்வை போர்த்தி, மாலை அணிவித்து, விருது பற்றிய விளக்கத்தை ஆங்கிலத்தில் திரு. சுதாகர் படித்து நீதியரசர்கள் பட்டயத்தை வழங்கிய போது எல்லோரும் எழுந்து நின்று கைதட்டி வாழ்த்தினர்.

பிறகு சுதாகர் அவர்கள் நன்றி கூறிட விழா பிற்பகல் 2 மணி அளவில் முடிந்தது.

தமிழர் தலைவருடன் சென்னை வழக்கறிஞர் த.வீரசேகரன் அவர்களும் உடன் சென்றிருந்தார். பிறகு அனைவரிட மும் நன்றி கூறி விடை பெற்று சென்னைக் குத் திரும்பினார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.

வல்லம் - பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் ஜஸ்டிஸ் பி.எஸ்.ஏ.சுவாமி பெயரில் அறக்கட்டளை

அறக்கட்டளை சார்பாக விருதுடன் ரூ 25 ஆயிரத்திற்கான காசோலையையும் திருமதி சவிதாகுமார் அவர்கள் ஆசிரியர் வீரமணி அவர்களிடம் வழங்கினார்கள் பலத்த கைதட்டலுக்கிடையே.

பிறகு ஏற்புரை - நன்றி உரையை ஆங்கிலத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நிகழ்த்தினார். ஜஸ்டீஸ் சுவாமி அவர்கள் சமூக நீதிக்காக துணிச்சலுடன் போராடிய மாவீரர். அவர் மறையவில்லை. மாறாக நம் பணிகளில் நிறைந்துள்ளார்.

அச்சம் அறியாத மாவீரர். தன்னலம் பாராத பெருந்தகையாளர். அவர் உயர் நீதிமன்ற மூத்த நீதிபதியாக இருந்தபோதே, ஜோதிபா பூலே அவர்கள் பெயரில் சமூக நீதி மன்றம் அமைத்து சமூக நீதிக்காக துணிந்து தொண்டறத்தைத் தொடங்கி, அதே பணியை ஓய்வு பெற்ற பின்பும் மிகவும் தொய்வின்றி தொடங்கி, பதவி ஆசை, அரசியல் மோகம் இன்றித் தன்னந் தனியே ஒரு மாபெரும் நிறுவனமாக விளங்கினார் என்றெல்லாம் விளக்கி,

தனக்கு அளிக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபாயுடன் மேலும் 25,000 ரூபாயை இயக்கம் தந்து - தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில் - அப்பல்கலைக்கழகத்திற்கு வந்து, அதில் உள்ள கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ள ஜஸ்டிஸ் சுவாமி அவர்கள் பெயரால் ஒரு நினைவு அறக்கட்டளை அமைத்து, ஆண்டுதோறும் சமூகநீதி பற்றி சொற்பொழிவு, கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்பதையும் மற்றவர்களும் இந்த அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கலாம் என்றும் கூறினார். (திரு. நாகராஜ் அவர்கள் தான் 25 ஆயிரம் செக் அனுப்பி வைப்பதாக பிறகு ஆசிரியரிடம் நேரில் வந்து சொன்னார்.)


1 comments:

நம்பி said...

//Blogger அதிரைக்காரன் said...

அன்புள்ள சகோதர்/சகோதரி,

மாவட்ட அளவில் மூன்றாமிடமும், பள்ளியளவில் முதலிடமும் பெற்று +2 தேர்வில் 1171/1200 மதிப்பெண்கள் பெற்றுள்ள அரியலூரைச் சார்ந்த ஓர் ஏழை கூலித்தொழிலாளியின் மகன் ராஜவேல்,மருத்துவப்...........//



இந்த மாணவர் பயில்வதற்கான கல்வி உதவித்தொகையை வங்கிகளே கொடுக்கும். அதற்கான நம்பகத்தன்மை அத்தாட்சி சான்றிதழை அந்த கல்விநிறுவனத்தில் (போனபைட்-bonafide) பெற்று, வங்கிகளில் சமர்ப்பித்தால் வங்கி சில நாட்களில் அல்லது சில வாரங்களில் கடன் வழங்கும். இதற்காக எந்த சொத்து ஆவணங்களும் தேவையில்லை அப்படித்தான் நிதியமைச்சகத்தில் இருந்து வங்கிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில வங்கிகள் கெடுபிடிகள் விதித்து இருக்கலாம்.


இந்த செய்தியை வெளியிட்ட ராஜ் தொலைக்காட்சி ஜெயலலிதாவின் மக்கள் விராதத்திற்கு ஆதரவாக, ஜெயலலாதிவின் சமச்சீர் கல்வித் தடைச் சட்டத்திற்கு ஆதரவாக செய்தி வெளியிடும் பாசிசத் தொலைக்காட்சி.

சமச்சீர் கல்விக்கு ஆதாரவான மக்கள் எதிர்ப்பைக்கூட காட்டாமல் ஜெயலலிதாவைப் பாதுகாக்கும் பார்ப்பனத் தொலைக்காட்சி.

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை கூட திரித்து, மறைத்து ஜெயலலிதாவின் பார்ப்பனீயத்தை ஆதரிக்கும் ஒரு பார்ப்பனத் தொலைக்காட்சி.

ஏன்? அவர்களே! கூட இது குறித்து ஜெயலலிதாவுக்கு இது பற்றி தெரிவித்து இந்த மாணவரின் வாழ்க்கைக்கு வழிகாட்டியிருக்கலாம்.

(இது வரை ஜெயலலிதாவிற்கு இந்த விஷயம் தெரியாமலா இருக்கும். இல்லை இந்த செய்தி அரசு அதிகாரிகளின் கண்களுக்கு படாமலா இருக்கும். எல்லாம் பட்டிருக்கும். அதுவும் ஜெயலலிதாவுக்கு நெருக்கமான மீடியா அவர்களால் முடியாததா?)


அவர்கள் எதற்கு ஒரு மாணவருக்காக கவலைப்படப்போகிறார்கள்?

இவ்வளவு எண்ணிக்கையுள்ள தமிழக மாணவர்களின் கல்வியை, அந்த மாணவர்களின் பெற்றோர்களின் கவலையைப் பற்றியே கவலைப்படாதவர்கள் இதற்கு மட்டும் எப்படி கவலைப்படப்போகிறார்கள்?

ஒரு கோடியே முப்பத்தி ஆறு லட்ச (1,36,00,000) மாணவர்களின் எதிர்ப்பையே மறைக்கும் தொலைக்காட்சி, இந்த ராஜ் தொலைக்காட்சி.

சும்மானாங்காட்டியும், நாங்களும் "மனிதாபிமானிகள் தான்" என்ற தனது போனியாகாதா தொலைக்காட்சியை விளம்பரப்படுத்தி கொள்ள இந்த செய்தியை இந்த பார்ப்பன ராஜ் டிவி வெளியிட்டிருக்கும்.

செய்தியை வெளியிட்டவர்கள் எல்லாம் ஜெயலலிதா ஆதரவு கோஷ்டியினர் தான் அவர்களே! இதற்கான முயற்சிகளை மிக சுலபமாக எடுக்க முடியும்? இல்லை மாணவரே இதற்கான முயற்சியை அங்கிருக்கும் கட்சிப் பிரதிநிதிகள் மூலமாக எடுக்கலாம். அல்லது சமூக ஆர்வலர்கள் மூலமாக எடுக்கலாம். மருத்துவப்படிப்பிற்கு தாராளமாக வங்கிகள் கடன் வழ்ங்குவார்கள்.

சரியான வழிமுறைகளை பின்பற்றியிருக்க மாட்டார்கள். அதற்கான வழிகாட்டுதல்கள் அவருக்கு அந்த ஊரில் கிடைக்காமல் இருந்திருக்கும். சரியான முறையில் அணுகினால் உதவிக் கிடைக்கும். இதற்கான தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும் வங்கிக்கடன் பெற முயற்சிக்கலாம்.

இவர் மட்டும் தான் என்று இல்லை ஆயிரக்கணக்கான மாணவர்கள் இம்மாதிரி படிப்புக்கும், ஏன்? பொறியல் படிப்புக்கே கட்டணம் கட்ட முடியாமல் படிப்பைத் தொடர முடியாமல், காத்திருக்கின்றனர். இன்னும் கலைக்கல்லூரி மாணவர்களின் நிலை அதைவிட மோசமாகத்தான் இருக்கும்.

கல்லூரி "போனபைட்" தருவதில் காலதாமதம் ஆவதால் இந்த காத்திருப்பு.

இதற்காக ஒரு தொண்டு நிறுவனம், பெண் மனித நேய ஆர்வலர் தலைமையில் இந்த ஜெ அரசிடம் கோரிக்கை வைத்து போராடிக்கொண்டிருக்கிறது.