Search This Blog

14.7.11

நித்தியானந்தா -ரஞ்சிதா வீடியோ உண்மையானதுதான் -கருநாடக உளவுத் துறை



சாமியாருக்கு வந்த தைரியம்!

சென்னை - எழும்பூரில் உள்ள ஓட்டல் ஒன்றில் நித்யானந்தா சாமியார் பேட்டி ஒன்று அளித்துள்ளார். ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் பேட்டி கொடுக்கும் அளவுக்கு அவருக்குத் துணிவு வந்ததற்குக் காரணம் மாறியுள்ள அரசியல் சூழ்நிலையோ என்று யூகிக்க இடம் இருக்கிறது.

ஆசிரமத்தில் அவர் நடிகை ஒருவரோடு தவறாக நடந்து கொண்டதாக வீடியோ காட்சி வெளி வந்து பக்தர்களைக் கூடப் பதற அடித்தது என்பது உண்மை!

அவரது சீடர்களேகூட சாமியாருக்குச் சொந்தமான ஆசிரமங்களை, அதன் சொத்துகளை சூறை யாடினார்கள்.

தன்மீது எந்தவிதக் குற்றமும் கிடையாது, போலியாகத் தயாரிக்கப்பட்ட வீடியோதான் தொலைக்காட்சியில் காட்டப்பட்டது என்று இன்று குதிக்கும் இந்த நித்யானந்தா, அவர்மீது வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்க முற்பட்ட போது வடக்கே சென்று ஒளிந்து கொண்டது ஏன்?

தன் பக்கம் நேர்மை இருப்பது உண்மை என்றால் அவர் ஏன் ஓடி ஒளிந்திருக்க வேண்டும்?
தி.மு.க. ஆட்சி பகுத்தறிவு ஆட்சி, மதத்தின்மீது நல்லெண்ணம் கொண்ட ஆட்சியல்ல என்று கருதுவதாகவே வைத்துக் கொண்டாலும்கூட, அப்பொழுது வழக்குத் தொடுக்கப்பட்டது பக்தி கொப்பளிக்கும் பா.ஜ.க. ஆளும் கருநாடக மாநிலத்தில்தானே!

அவர்மீதான வழக்கு கருநாடகத்தில் தான் நடந்து கொண்டு இருக்கிறது. வழக்கு நிலுவையில் இருக்கும் இந்தக் கால கட்டத்தில் இன்னொரு மாநிலத்திற்கு வந்து மிகவும் வெளிப்படையாக பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுப்பது சரியானதுதானா?

ஏற்கெனவே வழக்கு இருப்பது போதாது என்று புதியதொரு வழக்கில் சிக்கும் நிலைக்கு அல்லவா ஆளாகியிருக்கின்றார்?

தொலைக்காட்சியில் காட்டப்பட்டது போலியானது என்கிறார். கருநாடக உளவுத் துறையோ, அந்த வீடியோ போலியானதல்ல, உண்மையானதுதான் என்று திரும்பவும் கூறியுள்ளது. அதற்குரிய சோதனைக் கூடத்தில் அதுபற்றி முறையாக ஆய்வு நடத்தப்பட்டு அதில் போலித் தன்மை ஏதும் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அது போலியானது என்று சாமியார் ஒருவரால்தான் இப்படி துணிந்து கூற முடியும்.

நித்யானந்தா சென்னை காவல்துறை ஆணையரிடமும் புகார் மனு கொடுத்துள்ளார். அதேபோல அவரோடு சம்பந்தப்படுத்திக் கூறப்பட்ட நடிகையும் சென்னை காவல் துறை ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார். விசாரணை நடக்கட்டும் - அது ஒரு பக்கம்.

இவரிடம் தான் ஆன்மீக பலம் இருக்கிறதே - அந்த அடிப்படையில் பிரச்சினையை அணுக வேண்டியது தானே? அவர் நம்பும் அந்த ஈசன் வழியாக தான் குற்றமற்றவன் என்று நிரூபித்து வெளிச்சத்துக்கு வர வேண்டியதுதானே - எதற்காகக் காவல்துறை ஆணையரை அணுகுகிறார்?

இவருடைய ஆன்மீக மானசீக சக்தியால் கருநாடக மாநிலத்தில் நடைபெறும் வழக்கில் வெற்றி பெற்று வெளியில் வந்தால், அவர்மீது சுமத்தப்பட்டவை யெல்லாம் அபாண்டமானவை என்று மக்கள் தெரிந்து கொள்ள முடியுமே!

அவருடைய ஆன்மீக சக்தியில் அவருக்கு நம்பிக்கையில்லையா? இதில் இன்னொன்றும் மிக முக்கியமானது. இவரிடம் நூறு கோடி ரூபாய் கேட்டு மிரட்டினார்களாம். பேரம் நடந்ததாக ஒப்புக் கொள்கிறார். பலநாள் திருடன் ஒரு நாள் அகப்பட நேரிடும் என்ற பழிமொழி நாட்டில் உண்டு. சாமியார்களும் நாளும் அகப்பட்டுக் கொண்டுதான் வருகிறார்கள்.

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியும், அவரின் சீடரும் கொலைக் குற்ற வழக்கில் சிக்கிக் கொண்டுள்ளனர். சாட்சிகள் பல்டி அடித்துள்ளனர் என்னும் தைரியத்தில் ராஜநடை போட்டுத் திரிகின்றனர்.

நீதிமன்றங்கள் கொடுக்கும் நல்ல தீர்ப்புகள் நாட்டில் ஒழுக்கத்தை நிலை நிறுத்தப் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

------------------"விடுதலை” தலையங்கம் 14-7-2011

0 comments: