Search This Blog

28.7.11

இந்தி எதிர்ப்பும் - நாவலர் பாரதியாரும்


நாவலர் சோமசுந்தர பாரதியார் பன்மொழிப் புலவர் - 1938 இல் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் கிளர்ந்தெழுந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தளபதிகளாகத் திகழ்ந்தவர்களுள் இப்புலவரும் முக்கியமானவர்.

இந்தி வேண்டாம் வேண் டாம் என்று நான் அறைகூவிச் சொல்கிறேன். வேண்டாம் என்பதற்கு ஆயிரம் காரண முண்டு - வேண்டும் என்பதற்கு ஒரு காரணமாவது உண்டா? எந்த அமைச்சருடனும் நான் வாதாடத் தயார்! யாரேனும் வருவார்களா? என்று சூளுரைத்த தீரர் அவர்.

கட்டாய இந்தி வேண்டும் என்பதற்கு அமைச்சர்கள் கூறிய போலிக் காரணங்கள் எல்லாவற்றையும் மறுத்து, இந்தி ஏன் வேண்டாம்? என்பதற்குரிய பல்வேறு காரணங்களையும் தொகுத்து 24 பக்கங்களைக் கொண்ட ஆங்கிலத்தில் எழுதப் பட்ட திறந்த மடல் ஒன்றை பிரதம அமைச்சர் ஆச்சாரியாருக்கு (ராஜாஜிக்கு) அவர் எழுதியது - அந்தக் கால கட்டத்தில் மிகப் பிரபலமாகப் பேசப்பட்ட ஒன்றாகும்.

ஒரு வார காலம் தொடர்ந்து சென்னையில் சொற்பொழிவாற்றி (13.8.1939 - 20.8.1939) இந்தி எதிர்ப்பின் சூட்டைக் கிளப்பினார்.

திருச்சியில் இந்திப் போர் மந்திராலோசனைக் கூட்டத்தில் (28.5.1938) சத்தியாக்கிரகம். அதில் வெற்றியில்லையேல், சட்ட மறுப்புதான் என்று சங்க நாதம் செய்த வீரத் திருமகன் அவர்.

அன்றுமுதல் 1939 முடிய சென்னை மாநில இந்தி எதிர்ப்பு வாரியத்தின் (ழபை ஊடிஅஅயனே) தலைவராக விருந்தார்.

கம்ப இராமாயணத்தையும், பெரிய புராணத்தையும் எரிக்க வேண்டும் என்ற விவாதப் போரில் அறிஞர் அண்ணாவை எதிர்கொண்டவர் (சேலம் 14.3.1948).

அந்த விவாதத்தில்கூட தன்னைப் பார்ப்பனீயத்தின் வைரியாகக் காட்டிக் கொண் டவர்.

இதோ நாவலர் பாரதியார் பேசுகிறார்:

என்னுடைய 14 வயதிலே எனக்குக் கல்யாணம் நடந்த போது நேரிட்டதைச் சொல்கிறேன். எட்டையபுர சமஸ்தானத்தின் ஓர் கிராமத்திலே நாகரிக உணர்ச்சிப் பரவ முடியாத ஊரிலே எனக்குக் கல்யாணம் - நான் வைதீக உணர்ச்சி உள்ளவன்;

நல்ல சைவன் - இப்பொழுது இருக்கும் சைவம் போன்றதல்ல - என்னுடைய சிவநெறி வேறு. இன்று சைவப் பண்டிதர்கள் கூறும் சைவம் நான் கொள்வதல்ல. உண்மையே எனக்குச் சிவம். எனக்குக் கல்யாணம் பார்ப்பனரை வைத்துச் செய்வதாகக் கூறினார்கள் - அப்படிப்பட்ட கல்யாணம் எனக்கு வேண்டாம் என்றேன். சைவ ஆகமங்களின்படி பார்ப்பனர்களைச் சண்டாளர்கள் என்று கூறப் பட்டிருக்கிறது - கோயில்களிலே அவர்கள் துவஜஸ்தம்பத்துக்கு அப்புறம் நுழையக் கூடாது. வந்தால் தீட்டாகிவிடும் என்று ஆகமம் கூறுவதால், அப்படிப் பட்ட சண்டாளர்களைக் கொண்டு நான் கல்யாணம் செய்து கொள்ளமாட்டேன் என்றேன். என் குடும்பத்தார் திருநெல்வேலிக்கும், மதுரைக்கும் போய் பண்டிதர்களைக் கேட்டார்கள்.

திருநெல்வேலி பண்டிதர்கள்கூட சரியாகச் சொல்லவில்லை. மதுரையிலிருந்த பண்டிதர்கள் பையன் சொல்லுவது உண்மைதான். ஆகமம் அப்படித்தான் கூறு கிறது என்று சொன்னார்கள் என்று சேலம் சொற்போரிலே பேசினார் நாவலர் பாரதியார்.

பக்தர்களும் புரிந்துகொள்ள வேண்டிய பகுதி இது. அந்த நாவலரின் பிறந்த நாள் இந்நாள் (1879).

குறிப்பு: நாவலர் சோமசுந்தர பாரதியாரின் மகள்தான் மறைந்த டாக்டர் லலிதா காமேசுவரன் - பிரபல காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர் மோகன் காமேஸ்வரன் அவர்களின் தாத்தாவும் ஆவார்.

------------ மயிலாடன் அவர்கள் 27-7-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை


0 comments: