Search This Blog

24.7.11

சிலப்பதிகாரம் மூட நம்பிக்கைக் களஞ்சியம்!






சிலப்பதிகாரம் மூட நம்பிக்கைக் களஞ்சியம்!

இப்போது நமது இந்த வகை பிரசாரத்தால் பாரத, ராமாயண, மனு தர்ம சாஸ்திரங்களுக்கும் மதிப்பு குறைந்து விட்டதால் மனுதர்மத்தையும், ஆரிய தர்மத்தையும் பெரிதும் கொண்ட சிலப்பதிகாரத்தைத் தலையில் தூக்கிக் கொண்டு ஊரூராய் திரிந்து பிரச்சாரம் செய்ய ஒரு கூட்டம் கிளம்பியிருக்கிறது. இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால் ஆபாச மூட நம்பிக்கை, ஆரியக் கருத்துகளை உட்கருத்தாகக் கொண்டு நல்ல தமிழ் அமைப்பை உடையாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாக இருப்பாளோ, ஆனால் உள்ளே போய்ப் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும் உடலெல்லாம் நோய் கொண்டும் உடையால், அணியால் மக்களை ஏய்த்துப் பிழைத்துக் காணபப்டுவாளோ அது போலதான் இந்த சிலப்பதிகாரமுமாகும். பாரத ராமாயணம் போல் அது நாவல் சித்திரக்கதை. அதுவும் குறிப்பிட்ட கொள்கை இல்லாமல் எழுதின கதை.

ஆரியம் தலை தூக்கி நம் அரசர்கள் ஆரியத்திற்கு அடிமைகளாய்த் தாசர்களாய் இருந்த காலத்தில் பகுத்தறிவும் இன உணர்ச்சியும் இல்லாமல் சித்தரித்த கதையாகும். மூட நம்பிக்கைக் களஞ்சியம்; ஆரியக் கோட்டைக்கு அரண். இப்படிப்பட்டதை, 'தமிழர் பண்புக்கு' என்று பிரசாரம் செய்தால் இது மானமுடைமை ஆகுமா? ஆதிமுதல், அந்தம் வரை பார்ப்பானை பார்ப்பனியத்தைப் புகுத்தி அமல்படுத்த வேண்டும்; எப்படி எப்படி நாம் நடக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

நான் ஒன்றும் பயந்து கொண்டு பேசுகிறேன் என்றோ, பொய் பேசுகிறேன் என்றோ நினைக்க வேண்டாம். அந்தக் கதைகளில் உள்ள கருத்தை அப்படியே எடுத்துக் காட்டுகிறேன் ஆகையால் கவனமாகக் கேளுங்கள்.
போன ஜன்மம், வருகிற ஜன்மம் என்று தலைவிதியைக் காட்டி மனிதனை எப்படிப்பட்ட இழிவுக்கும் ஆளாகச் செய்கிறது. பார்ப்பான் சொல்லுகிறபடி, அவன் எது கேட்டாலும் எடைக்கு எடை தங்கம் கொடுக்க வேண்டுமென்று சொல்லுகிறது. ஆரூடம், ஜோதிடம், பில்லி சூனியம் ஆகியவற்றைப் பற்றிச் சொல்லுகிறது. முட்டாள்தனமாக கற்பையும் பெண் அடிமையையும் பெருமைப்படுத்துகிறது. கோவலனை அரசன் தண்டித்த மாதிரி நம் நாட்டு ராஜாக்களுக்கே ரொம்பவும் அவமானம் தருவதாகும். ராஜா வீட்டு சிலம்பு எங்கோ போய்விட்டது. கோவலன் சிலம்பு வைத்திருப்பது ராஜாவினுடையது என்று பொய்க்குற்றம் சாட்டப்பட்டதன் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாத அரசன் கோவலனை வெட்டிக் கொல்லச் சொல்லுகிறான். கோவலன் இறந்து போகிறான். இதையறிந்த அம்பாள் கண்ணகிக்குப் பெரும்கோபம் வந்து நிரபராதிகளாக மதுரை மக்களைச் சுட்டுச் சாம்பலாக்கினாள். இந்த அம்பாளின் கற்பைப் பற்றிச் சொல்லுவதாய் இருந்தால், தேவடியாள் வீட்டிற்குக் கணவன் போனதை அறிந்த கண்ணகி அந்தத் தேவடியாளை ஏதாவது செய்திருக்க வேண்டும். தாசி மாதவி, கோவலன் கண்ணகியின் கணவன் என்று தெரிந்து அவனை அனுபவிக்கிறாள். தேவடியாளுக்கு இதுவா தர்மம்? அப்படிப் பட்டவளுக்குக் கண்ணகி பொருள் கொடுத்து வசதி செய்யலாமா? கோவலன் ஒழுக்கமற்றவன்; கண்ணகி புத்தியற்ற மடப்பெண். அகலிகை, சீதை, துரோபதை, தாரை எல்லாம் கற்புக்கரசிகளாய் இருக்கும்போது, கண்ணகி கற்புக்கு மாத்திரம் முட்டாள்தனம் வேண்டுமா? மற்றும் இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும், தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ன புத்தி? மார்பைக் கையில் திருகினால் வந்துவிடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும், அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர வேறு எதிலும் எங்கும் காணக் கிடைக்கவில்லை.

அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பு (முலை) வீசி எறிந்தால் அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் பாஸ்பரம் இருக்குமா? இந்த மூட நம்பிக்கைக் கற்பனையானது என்ன பயனைக் கொடுக்கிறது? இதனால் கண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் காட்ட முடியுமா?

அக்கினி பகவானுக்குக் கண்ணகி "பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்களைச் சுடு" என்று கட்டளையிட்டாளாம், மதுரை நகரம் சாம்பலாயிற்றாம்; இதுதான் கண்ணகி கற்பின் பெருமையா? அக்கினி பகவானுக்கென்ன புத்தி வேண்டாமா? ஒரு பெண் பிள்ளை முட்டாள்தனமாக உளறினால் நிரபராதிகளைச் சுடலாமா? ஒரு பட்டணத்தைக் கொளுத்தலாமா என்கின்ற அறிவு வேண்டாமா? பார்ப்பனர்களை எதற்காக மீதி விடவேண்டும்.

ஆகவே வர்ணாச்சிரம தர்ம மனுநூல், இராமாயண - பாரதத்திற்கும் இதற்கும் என்ன பேதம்? இராமன் பார்ப்பனன். ஆக சூத்திரனைக் கொன்றான் என்பது இராமாயணம். பார்ப்பானை மட்டும் காப்பாற்ற வேண்டு மென்பது சிலப்பதிகாரம். எவ்வளவு முட்டாள்தனமாக கொடுமை செய்தாலும் பார்ப்பனர்களைக் காப்பாற்றினால் அவள் பதிவிரதை ஆகிவிடுவாள் என்பது சிலப்பதிகாரம். பாண்டியன் விசாரணை செய்து அவனுக்குக் கிடைத்த உண்மை மீது கோவலனுக்குத் தண்டனை விதித்தான். ஆனால் கண்ணகி ஒரு விசாரணையும் செய்யாமல் ஒரு குற்றமும் காணாமல் நிரபராதிகளாக மக்களை, பெண்களைச் சுட்டு எரித்துக் கொன்றாள். இவள் கற்புக்கரசி, வணங்கத்தக்கவள், தெய்வமானவள். பாண்டியன் 'குற்றவாளி' இதுதானே சிலப்பதிகாரக் கதை. இதுதான் தமிழர் பண்பாம். இதற்கு மாநாடாம்!

எவ்வளவு முட்டாள்தனம், இந்த மாதிரியான ஆபாசமும், அநீதியும் நிறைந்து இருக்கும் கதைகளை நாம் வைத்துக் கொண்டு நமக்குச் சொந்தம் என்று சொல்லுவது?

இவற்றைத்தான் நாம் ஒழிக்க வேண்டுமென்று சொல்லுகிறோம்; சமுதாயத்திற்கு உதவாக்கரை என்று ஒதுக்கி வைக்கிறோம்.

ஆனால் மாநாடு கூட்டும் அன்பர்களோ பார்ப்பானிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு, அவன் பிச்சை என்று இடும் பச்சை நோட்டுகளுக்காகப் பிரச்சாரம் செய்கிறார்கள், இந்தப் பச்சோந்திகள்.

மற்றும் இவர்கள், கண்ணகிதான் கற்புடையவள் என்று கூறுகிறார்கள்; அப்பொழுது மற்றவர்கள் எல்லாம் கற்பில்லாதவர்களா? இது மனிதத் தன்மைக்கே பொருத்தம் இல்லை. ஆனால் அந்த மாதிரி நடந்ததை நாம் பார்த்து இருக்கவும் முடியாது.

இந்தக் கதையைச் சொல்லி நம் பெண்களெல்லாம் கண்ணகிகளாகத் திகழவேண்டும், அவள்போல் கற்புக்கரசியாக வேண்டும் என்று பிரச்சாரம் செய்கின்றவர்களின் பிள்ளைக் குட்டிகள் முதலாவது இந்த மாதிரி நடந்தால் பொறுப்பாளர்களா? என்று கேட்கிறோம். இந்தப் பிரசார பிரம்மாக்களின் மாப்பிள்ளைமார்கள் தேவடியாள் வீட்டில்போய் இருந்தால், இவர்கள் பெண்கள் தாசி வீட்டிற்குப் பணம் நகை எல்லாம் அனுப்ப சம்மதிப்பார்களா? இப்படி நடந்தால் ஆண்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக ஆவார்களா? இது ஒழுக்கத்தைக் கற்பிக்கும் நூல் ஆகுமா?

ஆகவே, இது போன்ற கதைகள் பெண்களுடைய அடிமைத்தனத்திற்கு அடிகோலுதலாகவும், முட்டாள்தனத்திற்கு மூலாதாரமாகவும், பிற்போக்கிற்கு வழி அமைப்பதாயும், பார்ப்பானுடைய உயர்வைக் காப்பாற்றுவதற்காகவும் செய்யப்பட்ட இலக்கியங்களே தவிர, மனித சமுதாயத்திற்கு எந்த நன்மைக்காகவும் செய்யப்பட்ட இலக்கியங்களாகாது.

ஆகவே, நமக்கு இருக்கிற இலக்கியங்களின் நிலைமை பெரிதும் மோசமானது. உண்மையிலேயே நமக்கு ஏதாவது கடவுள் உண்டா? மதம் உண்டா? சாஸ்திரங்கள் உண்டா? அவர்கள் சொல்வதைத்தானே ஒத்துக் கொண்டு வந்து இருக்கிறோம். ஆகையால்தான் நாம் கீழ்ஜாதியாகவும், பார்ப்பான் மேல் ஜாதியாகவும் இருப்பதற்கு நிலைமை ஏற்பட்டுவிட்டது.

ஆகவேதான் தோழர்களே இதை இப்படியே வளர விட்டு விட்டு இருந்தால் எத்தனை ஆயிரம் வருடங்கள் ஆனாலும் நம் மக்கள் பார்ப்பானுக்கு அடிமையாகவும், மனிதத் தன்மை இழந்தவர்களாகவும் இருக்க முடியுமே தவிர முன்னேற்றம் அடையவே முடியாது என்பதை உறுதியாகச் சொல்லுகிறேன்.

தோழர்களே! நான் கடவுள் இல்லை என்று பிரசாரம் செய்ய இங்கு வரவில்லை. ஆனால் பொருத்தம் இல்லாததைச் சொல்வதையும் எழுதி வைத்திருப்பதையும் நான் கண்டிக்கிறேன். சொல்லட்டுமே, உலகத்தில் 250 கோடி மக்களில் 20 கோடி கூட நாம் இருக்கமாட்டோம். அப்படி இருக்க நமக்கு மாத்திரம் இப்படிப்பட்ட கடவுள் உண்டு என்றால் என்ன அர்த்தம்? இருக்கிற குழவிக் கல்லுகள் எல்லாம் நமக்குக் கடவுள்களா? கம்பி இல்லா தந்தியும் அநேக ஆயிர மைல்கள் ஒரு மணி நேரத்தில் பறந்து செல்லும் விமானங்களும் கண்டுபிடிக்கும் நேரத்திலா யாகமும், ஓம குண்டமும் வளர்ப்பதும், குழவிக் கல்லுகளை வைத்துக் கொண்டு கடவுள்கள் என்று சொல்லிக் கும்மாளம் போடுவது? எவ்வளவு மானக்கேடு என்று நினைத்துப் பாருங்கள்.

ஒரு விமானம் 20 மணி நேரத்தில் லண்டன், 40 மணி நேரத்தில் அமெரிக்கா போய்ச் சேருகிறது. ஆனால் நமது கடவுள்கள் விமானத்தின் (தேரின்) மேல் உட்கார்ந்து கொண்டு 2,000 பேர் இழுத்தாலும் அந்த விமானம் ஒரு மணிக்கு ஒரு ஃபர்லாங் பிரயாணம் செய்கிறது. இதைப் பார்ப்பதற்கு வெட்கமாக இருக்கவில்லையா? இதற்காகவா பத்து ஆயிரம், இருபது ஆயிரம் பேர் போய் பெண்டு பிள்ளைகளைக் கூட்டத்தில் நசுங்க விட்டு வேடிக்கை பார்ப்பது? சமுதாயம் முன்னேற்றம் அடைந்ததாக சரித்திரம் கூறும் மக்கள், இன்றைய தினம் இவ்வளவு காட்டுமிராண்டிகளாக இருப்பதைப் பார்த்துக் கொண்டு யாரால் தான் இருக்க முடியும்? ஒரு யோக்கியனும் சும்மா இருக்கமாட்டான். ஆகவே, இந்த மாதிரியான கேவலமான நடவடிக்கைகளை வைத்துக் கொண்டு நாம் எப்படி முன்னேற முடியும்?

நம் நாட்டு மக்கள் என்ன முட்டாள்களா? இன்றைய தினம் நம் நாட்டில் காட்சியளிக்கும் சிற்பங்களும், சித்திரக் கலைகளும் நாம் தானே செய்தோம், நம்மால் கட்டப் பட்டவைதானே, இந்தப் பாழாய்ப் போன கோவில் கட்டடங்கள் சிற்பங்கள்? இன்னும் நாட்டிலே அரிய பெரிய வேலைகளை எல்லாம் செய்து வைத்திருக்கும் நம்மை யார்தான் முட்டாள்கள் என்று சொல்ல முடியும்? இன்றைய தினம் நம்மவர்களில் அறிஞர்கள் இல்லையா? இவை எல்லாம் இருந்தும் சில சமயங்களில் நாம் அறிவை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளாமல் போகிறோம்.

ஆகையால்தான் காட்டுமிராண்டித்தனம் என்று சொல்வதற்குக் காரணமாக சில காரியங்களில் நாம் கண்மூடித்தனமாக நடந்து கொள்கிறோமே தவிர மற்ற எந்தத் தொழில் முறையிலேயும் நம்மை மோசமாகச் சொல்ல முடியாது.

மதம் என்று சொல்லி, புராணம் என்று சொல்லி, கடைசியில் சாமியில் கொண்டு புகுத்திவிட்டால், நம் சொந்த புத்தியை இழந்து அவற்றில் அறிவைச் செலுத்தி விடுகிறோம். அவை எல்லாம் மாற வேண்டும் என்று தான் சொல்லுகிறேன்.

நான் இப்பொழுது சொன்னதெல்லாம் இன்றைய தினம் நமக்கு இருக்கிற அக்கிரமங்களுக்கு முடிவு கட்ட நம் அறிவைக் கொண்டு எந்தக் காரியத்தையும் சிந்திக்க வேண்டுமென்றுதான் உங்களிடம் கேட்கிறேன். மனிதனுக்குப் பகுத்தறிவு இருக்கிறது. அதை ஒவ்வொன்றும் பயன்படுத்த வேண்டுமென்று தான் சொல்லுகிறேன். இவ்வளவு பரந்த உலகத்தில் எத்தனையோ கோடி மக்கள் இருக்கிறார்கள். நம்மைத் தவிர அவர்களுக்கெல்லாம் கடவுள், மதம், சாஸ்திரம், வேதம் எல்லாம்தான் இருக்கிறது. ஆனால் இப்படி எங்கும் இல்லை. எனவேதான் தோழர்களே எல்லோரும் பகுத்தறிவைக் கொண்டு எதையும் சிந்திக்க வேண்டும் என்று திரும்பச் திரும்பச் சொல்லுகிறேன்.

 --------------------- 22.07.1951-இல் சேலம் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு. "விடுதலை", 27.07.1951

0 comments: