Search This Blog

31.7.11

அகில இந்திய ரீதியில் மருத்துவ நுழைவுத் தேர்வு என்பது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது! - கி.வீரமணி



முதல் அமைச்சர் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்காதது ஏன்?
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அறிக்கை

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்வி உட்பட அனைத்துக் கல்வித் துறைகளிலும் நுழைவுத் தேர்வு சட்டரீதியாக ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் அகில இந்திய ரீதியில் மருத்துவக் கல்விக்கு நுழைவுத் தேர்வு என்கிற மருத்துவக் கவுன்சிலின் முடிவைத் தமிழ்நாடு ஏற்றுக் கொள்ளாது. இதுகுறித்துத் தமிழ்நாடு முதல் அமைச்சர் கருத்துத் தெரிவிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு அகில இந்திய அளவில் நுழைவுத் தேர்வு ஒன்றை நடத்தியே தீர்வது என்பதில் இந்திய மருத்துவக் கவுன்சில் ஒற்றைக் காலில் நிற்கிறது. கடந்த ஆண்டே அறிவிப்பையும் வெளியிட்டது (21.12.2010). இதனை எதிர்த்து தி.மு.க. அரசு தொடர்ந்த வழங்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதிமணி இடைக்காலத் தடையும் விதித்தார்.

உச்சநீதிமன்றம் வரை தீர்ப்பு!


தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் நுழைவுத் தேர்வு கிடையாது என்று திமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது (2007). அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற நிலையிலும், தமிழ்நாடு சட்டம் செல்லும் என்ற தீர்ப்புப் பெற்றாகி விட்டது.

கடந்த ஆண்டு மருத்துவக் கவுன்சில் நுழைவுத் தேர்வு அறிவிப்புத் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில் தி.மு.க. அரசு தன்னையும் (Implead) இணைத்துக் கொண்டு வாதாடியது. மத்திய அரசும் மாநிலங்களின் கருத்தறிந்து இது குறித்து முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தது.

திராவிடர் கழகம் போராட்டம்


மருத்துவக் கவுன்சிலின் நுழைவுத் தேர்வு முடிவை எதிர்த்துத் திராவிடர் கழகம் மாநிலம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டத்தையும் நடத்தியது (29.12.2010). இந்த ஆண்டு அகில இந்திய அளவில் மருத்துவக் கல்லூரி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு உண்டு என்று மருத்துவக் கவுன்சில் அறிவித்துள்ளது, உச்சநீதிமன்றமும் ஒப்புதல் தந்து விட்டது.

மாநில அரசின் உரிமையில் தலையிடுவதா?


இது கண்டிப்பாக மாநில அரசின் உரிமையில் தலையிடும் அத்துமீறிய செயல்தான் என்பதில் அய்யமில்லை. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு 15 சதவிகிதமும் முதுகலைப் படிப்புக்கு 50 சதவிகிதமும் மத்தியத் தொகுப்புக்கு எடுத்துச் செல்வதோடு அல்லாமல், அகில இந்திய அளவில் ஒட்டு மொத்தமான இடங்களுக்கும் நுழைவுத் தேர்வு என்றால் - இது குரங்கு அப்பம் பிரித்த கதைதானே! அவ்வளவு ஏமாளியாக மாநிலங்கள் இருக்கின்றன என்கிற நினைப்பா? இதில் இன்னொரு கொடுமை - சமூக அநீதி என்னவென்றால் இதில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது; எஸ்.சி., எஸ்.டி.க்கு மட்டும் உண்டு - என்னே பிரித்தாளும் தந்திரம்!

மாநிலத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு மேலானதா மருத்துவக் கவுன்சில்?

மற்ற மற்ற மாநிலங்களில் கருத்தறிந்து முடிவு செய்யப்படும் என்று கடந்த ஆண்டு கருத்துத் தெரிவித்த மத்திய அரசு - இவ்வாண்டு நுழைவுத் தேர்வுக்குப் பச்சைக் கொடி காட்டியது எந்த அடிப்படையில்? மற்ற மற்ற மாநிலங்களில் கருத்துக்களைக் கேட்டு அறிந்துதான் இந்த முடிவுக்கு வந்ததா என்பது விளக்கப்படவில்லை.

மருத்துவக் கல்லூரிகள் மாநில அரசின் நிதியால்தான் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் மாநில அளவில் மாணவர் சேர்க்கைக்கு எந்த மாதிரியான அணுகுமுறை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தானே முடிவு செய்ய முடியும்?

அகில இந்திய அளவில் அய்.ஏ.எஸ். போல அகில இந்தியக் கல்வித்துறை (அய்.இ.எஸ்.,) ஒன்றைக் கொண்டுவருவது குறித்துக்கூட யோசனை இருப்பதாக மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கடந்த ஆண்டு கூறினார். பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்குத் தகுதி மதிப்பெண்ணை மாநில அரசு நிர்ணயித்தால் அகில இந்திய தொழில் நுட்பக் கவுன்சில் (ஏ.அய்.சி.டி.) வேறொரு மதிப்பெண்ணைக் கூடுதலாக நிர்ணயிக்கிறது.

போகிற போக்கைப் பார்த்தால் மாநில அரசு என்ற ஒன்றே தேவையில்லை என்ற பழைய ஜன சங்கம் (ஆர்.எஸ்.எஸ். கொள்கை) கூறி வந்தபடியான முடிவு எடுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. கல்வியைப் பொதுப் பட்டியலிருந்து மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற கருத்தை திராவிடர் கழகம் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறது.

அதனை வலியுறுத்தக் கடும் போராட்டத்தை நடத்த வேண்டிய அவசியத்தை மத்திய அரசு நிர்ப்பந்தித்துக் கொண்டு இருக்கிறது. இது தொடர்பாக வரும் செப்டம்பரில் சென்னையில் ஒரு மாநாடு கூட்டப்படும். +2 தேர்வு என்பது அரசு நடத்தும் தேர்வு தானே! அதில் வாங்கிய மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கு மாணவர்களைத் தேர்வு செய்வது குற்றமான காரியமா? தேர்வுக்கு மேல் தேர்வு என்பதன் அவசியம் என்ன?

இந்தியா முழுமையும் ஒரே மாதிரியான பாடத் திட்டமா இருக்கிறது? பல மொழி, பல இனம், பல்வேறு புவியியல் நிலை, ஏற்றத் தாழ்வான கல்வி வளர்ச்சி உள்ள ஒரு துணைக் கண்டத்தில் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு என்பது எப்படி சரியாகும்? போட்டித் தேர்வும் தகுதித் தேர்வும் ஒன்றல்ல; இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.

இந்தி, இங்கிலீஷில் மட்டுமே நுழைவுத் தேர்வு எழுத முடியும் - இது இந்தி வாலாக்களுக்குத்தானே சாதகம்?


நீதிபதிகள் கூறியதென்ன?


நுழைவுத் தேர்வுதான் தகுதியை நிர்ணயிக்கும் அளவுகோலா? இதுகுறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் பி.கே. மிஸ்ரா, சம்பத்குமார் ஆகியோர் அளித்த தீர்ப்பில் குறிப்பிட்டதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். (27.4.2007)

நுழைவுத் தேர்வை நடத்தினாலும் முழு சமநிலை என்பதும் கட்டுக்கதைதான். ஏனென்றால், சரியான விடையைத் தேர்ந்தேடுப்பதைவிட கோன்பனேகா குரோர்பதி தொலைக்காட்சி நிகழ்ச்சிபோல, அனுமானத்தின் அடிப்படையில் விடைகளை டிக் செய்யும் வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளார்களே - அதுதானே உண்மை?

என்ன கெட்டு விட்டது?


நுழைவுத் தேர்வு இலலாமல் தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்று, வெளியில் வந்து தொழில் செய்து கொண்டு இருக்கிறார்களே, அதனால் ஏற்பட்ட பாதிப்பு என்ன? அகில இந்திய அளவில் மருத்துவத்துறையில் முன்னணி மாநிலமாகத்தானே தமிழ்நாடு விளங்கிக் கொண்டிருக்கிறது.

இவர்கள் சொல்லுகிற மதிப்பெண் அளவுகோல்தான் தகுதியை நிர்ணயிக்கிறது என்பதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டாலும் இவ்வாண்டு தமிழ்நாட்டில் +2 தேர்வில் கட்ஆஃப் மதிப்பெண் விவரம்: 200-க்கு 200 - 69 பேர்கள்; 199.75 - 198 மதிப்பெண் பெற்றோர் 1099; 197.97-195 - 2007 பேர்; 194.75-190 - 3180 பேர்; இந்த மதிப்பெண்கள் போதுமானவை இல்லையா? இதைவிடத் தாண்டியதா நுழைவுத் தேர்வு?

சமூகநீதிக்கு எதிரானது!


சமூகநீதியை ஒழிப்பதும் - கிராமப்புற மாணவர்களுக்கு முட்டுக்கட்டைப் போடுவதும்தான் நுழைவுத் தேர்வின் பின்னணி என்பதில் அய்யமில்லை. மாநிலங்களிலிருந்து அகில இந்திய தொகுப்புக்கு மருத்துவக் கல்லூரி இடங்களை மேலும் அள்ளிச் செல்லுவதற்கான சூழ்ச்சிதான் இதன் பின்னணியில் இருக்கிறது. இந்தியா - முழுமையும் நுழைவுத் தேர்வைத் திணித்தால்கூட அம்மாநிலங்கள் ஏற்றுக் கொண்டால்கூட, தந்தை பெரியார் அவர்களின் சமூகநீதி மண்ணாகிய தமிழ்நாடு அதனை ஏற்றுக் கொள்ளாது - இது உறுதி!

தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன?


இந்த மிக முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன? முதல் அமைச்சர் அவர்கள் இதுபற்றிய கருத்தினை இதுவரை தெரிவிக்காதது ஏன்?

69 சதவிகித இடஒதுக்கீட்டை பாதுகாக்க முன்வந்த முதல் அமைச்சர் அவர்கள், இந்த முக்கியமான பிரச்சினையில் தமிழ்நாட்டின் கருத்தினை உறுதியாக முன்வைக்க முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

2011-2012ஆம் ஆண்டுக்கான மருத்துவ மாணவர் சேர்க்கை தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு இல்லாமல் நிறைவு பெற்றது என்றாலும் அடுத்தடுத்து வரவிருக்கும் ஆபத்தினை முன்கூட்டியே தடுக்க முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

--------------கி. வீரமணி தலைவர் திராவிடர் கழகம் "விடுதலை” 31-7-2011

1 comments:

தமிழ் ஓவியா said...

வரவேற்கத்தக்க முடிவு எம்.பி.பி.எஸ்., நுழைவுத் தேர்வுக்கு முதலமைச்சர் எதிர்ப்பு


மருத்துவப் படிப்பில் சேர நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று இந்திய மருத்துவக் கவுன்சில் அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், மருத்துவப் படிப்பில் சேர, நுழைவுத் தேர்வு எழுதுவதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்கவேண்டும் என்றும், தமிழகத்தில் ஏற்கெனவே நுழைவுத் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும்,

நுழைவுத் தேர்வு இல்லாததால் கிராமப்புற மாண வர்கள் பயனடைந்து வருகின்றனர் என்றும், நுழை வுத் தேர்வு நடத்தினால், இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றுவதும் கடினம் என்றும், அக்கடிதத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு: நுழைவுத் தேர்வு பற்றிய மருத்துவக் கவுன்சில் முடிவுக்கு முதல் அமைச்சர் கருத்துத் தெரிவிக்காதது ஏன் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் 30.7.2011 அன்று விடுதலை வாயிலாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
----"விடுதலை” 2-8-2011