இந்தியா ஒரு நேஷனா?
இந்தியாவுக்குப் பொதுபாஷை இருந்ததா?
ஹிந்தி புகுத்தல் அரசியல் சூழ்ச்சியே
இந்தியா பல மதம் பல வகுப்புடைய நாடு
இந்தியாவுக்குப் பொதுபாஷை இருந்ததா?
ஹிந்தி புகுத்தல் அரசியல் சூழ்ச்சியே
இந்தியா பல மதம் பல வகுப்புடைய நாடு
தலைவரவர்களே! தோழர்களே!
ஹிந்தியை நம் நாட்டில் பொது பாஷை ஆக்கப்பட வேண்டுமென்பவர்கள் அதற்கு ஆதாரமாக சொல்லி வரும் காரணங்கள் என்ன என்பதை நான் முதலில் குறிப்பிட்டு விட்டு அவற்றிற்கு சமாதானம் சொல்லி பிறகு அதன் கர்த்தாக்களின் உள் எண்ணத்தையும் அதனால் நமக்கு நேரக்கூடிய கெடுதியையும் எனக்குப் பட்டவரை எடுத்துச் சொல்லுகிறேன்.
ஹிந்தி பொது பாஷையாகவும் பள்ளிக் குழந்தைகளுக்கு கட்டாய பாடமாகவும் வைக்கப்பட வேண்டியது அவசியம் என்று இப்போது எனக்கு முன் பேசிய இருவர்களுக்கு உள்ள சுதந்தரம் எனக்கும் உண்டு என்கின்ற முறையிலேயே நான் பேசுகிறேன். முதலில் பேசிய தோழர் கே.பி. பிள்ளை அவர்கள் "ஹிந்தி அரசியலில் பட்டதல்ல வென்றும் அரசியல் பேச்சு இந்த விவாதத்தில் கலக்க வேண்டியதில்லை" என்றும் பேசிவிட்டு உடனேயே,
"நமக்கு சுயராஜ்யம் வேண்டும், அதற்கு ஒரு பொது பாஷை அவசியம். நம் தாய்நாடு இந்தியா, இந்தியாவுக்கு தாய்மொழி ஹிந்தி, இந்தியா ஒரு நேஷன், நேஷனல் பாஷை ஹிந்தி, நேஷனல் என்பதே அதன் மதம் பாஷை ஆகியவற்றைப் பொறுத்தது. வகுப்பு மத உணர்ச்சி கூடாது. அது மிக அற்ப விஷயம். இங்கிலீஷோ தமிழோ பொதுப் பாஷையாக ஆக முடியாது. மதராஸ் மாத்திரம் தனித்திருக்க முடியாது. மதராஸ் ஒரு நேஷன் அல்ல. இங்கிலீஷை புறக்கணிக்கவும் இப்பொழுது முடியாது. இந்தியாவை ரஷ்யாவாக்க முடியாது" என்றெல்லாம் சொன்னார். மற்றும் சில விஷயங்களும் சொல்லி கடைசியாக ஹிந்தியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று கூறினார்கள்.
நான் அவற்றிற்கு தனி தனியாக சமாதானம் கூறிவிட்டு கடைசியாக என் அபிப்பிராயம் கூறுகிறேன்.
இந்த விஷயத்தில் தோழர் கே.பி. பிள்ளை அரசியல் இல்லை என்றும் அரசியலை இதில் கலக்கக் கூடாது என்றும் சொல்லி விட்டு உடனே நாம் சுயராஜ்யத்துக்கு பாடு படுகிறோம் ஆகையால் அதற்கு ஒரு பொது பாஷை வேண்டாமா என்றார். ஆகவே அவருடைய முதல் காரணமே அரசியலுக்கு ஆகவே ஹிந்தி வேண்டும் என்பதாகிறது.
சுயராஜ்யம் என்றால் என்ன?
சுயராஜ்யத்துக்கு ஹிந்தி வேண்டுமா வேண்டாமா என்பதைப் பற்றிப் பின்னால் பேசிக் கொள்ளலாம். தோழர் கே.பி. பிள்ளை தயவு செய்து சுயராஜ்யம் என்றால் என்ன என்று விளக்குவாரா? புரோகிதன் வயிற்றுப் பிழைப்புக்கு மோக்ஷம் என்று அவனுக்கும் புரியாமல் நமக்கும் புரியாமல் வேண்டுமென்றே அர்த்தமும் கருத்தும் அற்ற சொல்லைக் கற்பித்து நம்மை ஏய்த்து வருவது போலவே புரோகிதத்தால் பிழைக்க வகை இழந்த மற்றொரு கூட்டத்தார் சுயராஜ்யம் என்கின்ற சொல்லைக் கற்பித்து மக்களை ஏய்க்கிறார்கள். மதத்தால் மடையர்களாக்கப்பட்ட ஒரு கூட்ட நம் பாமர மக்கள் அதை நம்பி ஏமாறுவதும் மற்றொரு வயிற்றுப் பிழைப்புக்கு வேறு நல்ல வகையற்ற ஒரு கூட்ட நம் மக்கள் அதைப் பிரசாரம் செய்து வயிறு வளர்ப்பதுமல்லாமல் சுயராஜ்யத்துக்கு அருத்தமென்னவென்று இப்போது கேட்கிறேன். பெரியதொரு அரசியல் ஞானியென்று இந்தியா முழுவதும் பெயரெடுத்த தோழர் விஜயராகவாச்சாரியார் சமீபத்தில்தான் இதே கேள்வி கேட்டிருக்கிறார். அதுவும் "காந்தியோ நேருவோ அவங்கப்பனோ யாருமே இக்கேள்விக்கு இதுவரை பதில் சொல்ல வில்லை" என்று சொல்லியிருக்கிறார்.
ஜவஹர் தகிடுதத்தம்
காங்கிரஸ் பிரசிடெண்டு தோழர் ஜவஹர்லால் கூட சுயராஜ்யத்துக்கு ஒரு குறிப்பிட்ட அருத்தம் சொல்லவே இல்லை. ஆனால் அவர் சுயராஜ்யம் என்றால் ஒரு சமயத்தில் ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பார். மற்றொரு சமயம் பிரிட்டிஷ் ஆட்சியை ஒழிப்பது என்பார். மற்றொரு சமயம் இந்தியாவை அந்நியர் ஆளப்படாது என்பார். மற்றொரு சமயம் ஜனநாயகம் என்பார். மற்றொரு சமயம் தொழிலாளர் ஆட்சி என்பார். மற்றொரு சமயம் குடியானவர் ஆட்சி என்பார். மற்றொரு சமயம் சமதர்மம் என்பார். மற்றொரு சமயம் பூரண சுயேச்சை என்பார். மற்றொரு சமயம் பட்டினியும் வேலையில்லாத் திண்டாட்டமும் ஒழிவதே என்பார். மற்றொரு சமயம் உலகப் பொது உடமை என்பார். இப்படி இன்னமும் எவ்வளவோ விதமாக வாயில் வந்தபடி சமயத்துக்குத் தக்கபடி பேசுவார்.
காந்தி பாஷ்யம்
தோழர் காந்தியாரோ சுயராஜ்யத்துக்கு அருத்தம் ஒரு சமயத்தில் ராமராஜ்யம் என்பார். மற்றொரு சமயம் வருணாச்சிரம முறையை சரிவர அமைப்பதே என்பார். மற்றொரு சமயம் என் சுயராஜ்யத்தில் ராஜாக்களுக்கும் ஜமீன்தார்களுக்கும் இடம் உண்டு என்பார். மற்றொரு சமயம் அவரவர் சுதர்மத் தொழிலைச் செய்யச் செய்வதே என்பார். மற்றொரு சமயம் ராட்டினமே சுயராஜ்யம் என்பார். மற்றொரு சமயம் எல்லோரும் கதர் கட்டுவதே சுயராஜ்யம் என்பார். கடைசியாக சென்ற மாதத்தில் "பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் கடுகளவு மனக்கசப்பு ஏற்பட்டாலும் என் உயிரைக் கொடுத்தாவது அம்மனக்கசப்பை ஒழிப்பேன்" என்றார்.
இன்னமும் என்ன என்னமோ இந்த 20 வருஷ காலமாக பேசி வந்திருக்கிறார். மற்றபடியான "நமதருமை பாரதமாதாவின் புதல்வர்கள்" ஆன தேசபக்தர்களும் தேசிய வீரர்களும் "சுயராஜ்யத்துக்கு ஆக உடல் பொருள் ஆவியை தத்தம் செய்த"வர்களுமான குட்டித் தலைவர்களும் தொண்டர்களும் போன மாதத்தில் தான் இந்திய சக்கரவர்த்தியான பிரிட்டிஷ் அரசர்க்கும் அவரது சந்ததிக்கும் அவரது ஆக்கினைக்கும் ஆட்சிக்கும் சட்டதிட்டங்களுக்கும் பக்தியாயும் விசுவாசமாயும் இருந்து கீழ்ப்படிந்து நடப்பதாக சத்தியம் செய்துகொடுத்து சர்க்கஸ் வளையத்துக்குள் ஆட்டம் போடும் சிங்கங்கள் போல் இருந்து கொண்டு அந்நிய ஆட்சி ஏஜன்டுக்கு அடங்கி நடந்து வருகிறார்கள்.
ஆகவே சுயராஜ்யம் என்றால் என்ன என்று தோழர் கே.பி.பிள்ளை இப்பொழுதாவது சொல்லட்டும் என்று கேட்கின்றேன். அன்றியும் அடுத்த படியாக பிரிட்டிஷ் ஆட்சியையே ஒழித்துவிடுவதாலேயே சுயராஜ்யம் ஏற்பட்டுவிடும் என்று சொல்லிவிட முடியுமா? பிரஞ்சுக்காரர்கள் இந்தியாவில் ஒரு பாகம் ஆளுகிறார்கள். போர்த்துகேசியர்கள் ஒரு பாகம் ஆளுகிறார்கள். இவர்களுக்கு ஒவ்வொரு தனி தேசங்களும் இருக்கின்றன. இத்தனை பேரும் ஒன்று சேர்ந்து ஒரு கை பார்க்காமல் ராட்டின ஆயுதத்தைக் கண்டு பயந்து கொண்டு இந்தியாவை விட்டுவிட்டு ஓடிவிடுவார்களா?
உலகப் போக்கைப் பாருங்கள்
இப்போது புகைந்து கொண்டு இருக்கும் யுத்தம் கிளம்பி முன் நடந்த உலக யுத்தமாக நடக்குமேயானால் நாம் (இந்தியா) யார் கைக்கு போவோம் என்றோ நம்மை (இந்தியாவை) எத்தனை பங்காகப்போட்டு யார் யார் எந்த எந்த மாகாணத்தை பங்குபோட்டு எடுத்து கொள்வார்கள் என்றோ சொல்லிவிடமுடியுமா? இன்று ஸ்பெயின், சைனா படும் பாட்டையும், அபிசீனியா பட்ட பாட்டையும் துருக்கி, ஈஜிபட்டு முதலியவை மகா யுத்தத்திற்குப் பிறகு பட்ட பாட்டையும் பார்க்கும்போது இந்தியா ஒரு தேசமாகுமா அதற்கு சுயராஜ்யம் வருமா? என்பது விளங்கும்.
பொது பாஷை அவசியமா?
தவிர சுயராஜ்யத்துக்கு பொது பாஷை ஒன்று வேண்டும் என்கின்ற அவசியம் என்ன?
ரஷ்யா பொதுவுடமைத் தேசம். அங்கு இன்னும் பொது பாஷை இல்லை. நம் நாடு என்பது அதாவது இந்தியாவானது அந்நிய ஆட்சிக்கு முன் ராமர் ஆட்சி என்று சொன்ன காலத்திலும் 56 தேசத்துக்கும் ஒரே சக்கரவர்த்தி இருந்ததாக சொல்லப்பட்ட காலத்திலும் பொது பாஷை என்று ஒன்று இருந்ததாக ஆதாரமோ சரித்திரமோ ஒன்றும் காணவில்லை.
தாய் நாடு எது?
அதற்கடுத்தாப்போல் இந்தியா நம் தாய் நாடு என்று சொல்வதற்குத்தான் ஆதாரம் என்ன இருக்கிறது? இந்தியா என்கின்ற பெயர் இந்த நாட்டுக்கு எப்போது ஏற்பட்டது? இதற்கு எல்லை என்ன? பர்மா போன வருஷம் பிரிந்துவிட்டது. அதற்கு முன் லங்கை பிரிந்து விட்டது. அதற்கு முன் மலேயா பிரிந்துவிட்டது. அதற்கு முன் நேப்பாளம் புத்தான் பிரிந்து விட்டது. அதற்குமுன் காந்தாரம் காபூல் (ஆப்கானிஸ்தானம்) பிரிந்து விட்டது. அதற்கு முன் பர்ஷியா ரஷ்யா பிரிந்துவிட்டது. இப்படியே எவ்வளவோ பிரிந்து எவ்வளவோ சேர்ந்து இருக்கிறது. இந்த நிலையில் தாய்நாடு எது? தகப்பன் நாடு எது? புராணகாலத்தில் 56 நாடுகள் இருந்ததே, அப்போது ஒரு நாட்டுக்காரன் ஒரு நாட்டை தாய் நாடு என்று கருதினானா?
இப்போதும் நேற்று சட்டசபையில் ஆந்திரர்கள் தங்களை தமிழ் நாட்டிலிருந்து பிரித்து தனி மாகாணமாக்க வேண்டுமென்கிறார்கள். மாகாண சுதந்தரம் கொடுத்து மாகாணத்திற்கு மாகாணம் சர்வ சுதந்திரமாய் தன் தன் காலிலேயே நிற்கும்படியான நிலைமை ஏற்பட்டு ஐரோப்பா தேசத்தைப் போல் பாஷை வாரியாக தனித்தனி நாடாகப் பிரிந்து கொண்டால் இந்தியா எப்படி எல்லோருக்கும் தாய் நாடாகும்? நேபால் நம் ஒரு ஜில்லா போல் உள்ள விஸ்தீரணம். அவர்கள் இந்தியாவை தாய் நாடென்பார்களா? சையாமில் பெரிதும் இந்த மதம் தான். அவர்கள் இந்தியாவைத் தாய் நாடென்பார்களா?
ஐரோப்பா நிலைமை என்ன?
ஐரோப்பாவில் நார்வே, ஸ்வீடன், டென்மார்க்கு, ஹாலண்ட், பெல்ஜியம், போர்த்துக்கல், கிரீஸ் ஆகிய நாடுகள் நமது நான்கு ஜில்லா, மூன்று ஜில்லா, இரண்டு ஜில்லா போன்ற விஸ்தீரணமுள்ளவை. இவர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் நாட்டைத் தாய் நாடு என்பார்களே ஒழிய ஐரோப்பாவை தாய் நாடென்பார்களா? ஆகவே தமிழ் நாட்டவர்கள் திராவிட மக்கள் எந்தக் காரணம் கொண்டு இந்தியாவை தாய் நாடென்று கூற வேண்டுமென்பதும் எதற்காக இந்தியா பூராவும் எப்போதும் ஒரு குடையின் கீழ் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட வேண்டும் என்பதும் எனக்கு விளங்கவில்லை. முதலாவது பாரத நாடு என்பதையும், நாம் எல்லாம் பாரதர்கள் என்பதையும் கூட நான் ஒப்புக்கொள்ளமுடியாது.
அடுத்தாற்போல் தோழர் பிள்ளை இந்தியாவுக்கு தாய் மொழி ஹிந்திதான் வெகுகாலமாக இருந்து வந்தது என்கிறார்.
இந்தியாவுக்கு பொது பாஷை இருந்ததா?
ஹிந்தி பாஷை தமிழ் நாட்டில் எப்போது இருந்தது? பம்பாயில் எப்போது இருந்தது? வங்காளத்தில் எப்போது இருந்தது? இந்தியா 56 தேசமாய் இருந்தபோது 56 பாஷையின் பேரால்தானே தேசமாய் இருந்தது? அப்போதும் மொத்தத்தில் 56 பாஷைகள் இருந்திருக்கும். நாளாக நாளாக ஒரு தேசத்தார் மற்றொரு தேசத்தின் மீது ஆதிக்கம் செலுத்தும் போதும் ஒரு வகுப்பார் மற்றொரு வகுப்பார் மீது ஆதிக்கம் செலுத்தும்போதும் தான் அந்நிய பாஷை புகுத்தப்பட்டு விடுகிறது. அந்த முறையிலேயே இன்று ஹிந்தியை தமிழ்நாட்டில் புகுத்தப்பார்ப்பது தமிழனல்லாத அந்நிய வகுப்பான் இன்று தமிழ் நாட்டில் ஆதிக்கம் பெற்றுவிட்டதினாலேயே ஒழிய வேறில்லை.
தோழர் பிள்ளை இந்தியா ஒரு நேஷன் என்கிறார். நேஷன் என்று ஒரு தேசத்தையோ தேச மக்களையோ சேர்த்துச் சொல்வது அதன் மதம் பாஷை ஆகியவற்றைப் பொறுத்தது என்றும் சொல்லுகிறார்.
இந்தியா நேஷனா?
அப்படியானால் இந்தியா ஒரு நேஷனா? அதற்கு பாஷை எது? மதம் எது? இந்தியாவில் எத்தனை மதம்? எத்தனை எத்தனை ஆச்சார அனுஷ்டானம்? முதலாவது இந்து மதம் என்பதை தமிழர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? தோழர் கே.பி.பிள்ளை தன்னை இந்து என்று சொல்லுவாரானால் இந்து மத ஆதாரமாகிய வேதத்தையும் மனு தர்ம சாஸ்திரத்தையும் கீதையையும் ஒப்புக்கொள்ளுகிறாரா? அதன்படி நடக்க இன்று சம்மதிக்கிறாரா? மற்றவன் நடக்கவாவது இவர் அனுமதிக்கிறாரா? இந்து மதத்தில் கே.பி. பிள்ளையின் இடம் எது? இந்து மதத்தால்தான் இந்தியா நேஷன் ஆயிற்று என்றால் அதாவது நேஷனுக்கு மதமே பிரதானம் என்றால் இஸ்லாமியருக்கும் கிறிஸ்தவருக்கும் பெளத்தருக்கும் பார்சிகளுக்கும் இந்தியா நேஷனாகுமா? எதைக்கொண்டு அவர்கள் இந்தியாவை நேஷன் என்பது? பாஷையைக் கொண்டு நேஷன் பிரிப்பது என்றால் மாகாணம் ஒன்றுக்கு நான்கைந்து நேஷன் ஆகிவிடாதா?
தோழர் கே.பி. பிள்ளை அவர்கள் பொது விஷயங்களில் வகுப்பு மத விஷயங்கள் புகுத்தக்கூடாது என்கிறார். அன்றியும் அது மிகவும் அற்பமான விஷயம் என்கிறார். யாருக்கு அற்பம் என்று கேட்கிறேன். நாஸ்திகனுக்கு அல்லவா மதம் வகுப்பு அற்பமாகும், அது கூடாததுமாகும்.
தலைவர்கள் கூற்று
இந்திய தலைவர் தோழர் காந்தியார் "இந்துமதத்துக்கு ஆக உயிர் வாழ்கிறேன், எனது மூச்சுகளே இந்து மதம், நானே இந்து மதமாய் இருக்கிறேன்" என்றார். முஸ்லீம் தலைவர்கள் தோழர்கள் மகமதலி ஷவ்கத்தலி ஜின்னா ஆகியவர்கள் "நாங்கள் முதலில் முஸ்லீம் இரண்டாவது முஸ்லீம் மூன்றாவது முஸ்லீம் அப்புறம் தான் இந்தியன்" என்கிறார்கள். தோழர் ஜவஹர்லால் மதத்தையும் மத ஆதாரங்களையும் மத பழக்க வழக்கங் களையும் காப்பாற்றிக்கொடுப்பதாக உத்தரவாதம் செய்து தலைவர் பதவி பெற்று இருக்கிறார். தோழர் சத்தியமூர்த்தியார் "நான் ஜெயிலுக்குப் போனாலும் போவேனே ஒழிய நரகத்துக்கு (இந்து மதத்துக்கு விரோதமாக) போக மாட்டேன்" என்று சொல்லி இருக்கிறார்.
மிகவும் அநித்தியமான இந்த அற்ப இக (உலக) வாழ்வு என்பதற்கு ஆக நித்தியமான பர (மேல்லோக) வாழ்க்கையைக் கெடுத்துக்கொண்டு வகுப்பும் மதமும் அற்பமானது என்று எந்த யோக்கியமான ஆஸ்திகன் தான் சொல்ல முடியும். மதம் வகுப்பு அற்பம் என்று கருதி இருந்தால் ஜின்னாவுக்கும் ஜவஹர்லாலுக்கும் காந்திக்கும் ஷவ்கதலிக்கும் ராஜ கோபாலாச்சாரிக்கும் நமக்கும் தகராறு ஏன்? இவர்கள் அயோக்கியர்களா? சுயநலக்காரர்களா? பொது வாழ்க்கையில் வயிறு வளர்ப்பவர்களா? வேறு வகையில் யோக்கியதை அற்றவர்களா? என்று யோசித்துப் பாருங்கள்.
ராமாநந்த சட்டர்ஜி சாட்சியம்
தவிர தோழர் பிள்ளை பொது பாஷை ஹிந்திதான் இருக்க வேண்டும் என்கிறார். அதுதான் அதிகம் மக்களால் பேசப்படுகிறது என்கிறார். மாடர்ன் ரிவியூ எடிட்டர் ராமானந்த சட்டர்ஜீ அவர்கள் காட்டி இருக்கும் கணக்குப்படி ஹிந்தி பாஷை மெஜாரட்டி ஜனங்களாலோ அல்லது மற்ற பாஷை பேசுகிற தனித்தனி மக்களை விட அதிகமான மக்களாலோ பேசுகிறதில்லை என்று நன்றாய் விளங்குகிறது. அந்த பாஷையைப் பற்றியும் நல்ல அபிப்பிராயம் வட நாட்டாரே பலர் சொல்லுவதில்லை. அவை எப்படியோ இருக்கட்டும்.
ஒரு பொது பாஷை தெரிந்தெடுக்க மெஜாரிட்டி பலமே போது மானதாகுமா? பாஷை எதற்கு ஆக வேண்டும்? பேசுவதற்கு மாத்திரம்தானா? புதிதாக ஒரு பாஷையை தெரிந்தெடுப்பதினால் அந்த பாஷை பழையது என்றோ வெகுபேர் பேசுகிறார்கள் என்றோ காரணம் சொல்லி தெரிந்தெடுப்பது அறிவுடைமையாகாது. அந்த பாஷையால் தேச மக்களுக்கு ஏற்படும் பயன் என்ன என்று பார்க்க வேண்டும். புது அறிவு உண்டாகுமா? ஆராய்ச்சிக்கு பயன்படுமா? முற்போக்குக்கும் நாகரிகத்துக்கும் பயன்படுமா? சீர்திருத்தத்திற்கு ஏற்றதா? என்றெல்லாம் பார்க்க வேண்டாமா? இவர்கள் சொல்லும் ஹிந்தி எதற்காக பயன்படும் தோழர் ராஜகோபாலாச்சாரியாரும் அதாவது ஹிந்தியை பொது பாஷை ஆக்க வேண்டும் என்று சொல்லுகிறவரும் அவரது சகாக்களும் "ஹிந்தி துளசிதாஸ் ராமாயணம் படிக்கலாம், சமஸ்கிருதம் சுலபத்தில் தெரிந்துகொள்ளலாம். இந்து மத சாஸ்திரம் உணரலாம்" என்றெல்லாம் சொல்லுகிறார். ஆகவே ஹிந்தி மூலம் மோட்சத்துக்கு போவதற்கு அனுகூலமாக ஆத்மார்த்த விஷயங்கள் என்பதற்கு அனுகூலமாக காரணம் சொல்லு கிறார்களே ஒழிய இந்த உலக வழிக்கு ஆன காரியம் எதுவும் ஹிந்தியில் இருப்பதாக சொல்லவே இல்லை. ராமாயணத்திலும் பாரதத்திலும் ஆகாய விமானம் இருக்கிறது. ஆனால் அது மந்திர சக்தியில் ஓடி இருக்கிறது. இங்கிலீஷில் ஆகாய விமானம் இருக்கிறது. அது யந்திர சக்தியில் ஓடுகிறது. நமக்கு எது வேண்டும்? மந்திர சக்தியா யந்திர சக்தியா?
இங்கிலீஷ் செய்த நன்மைகள்
இங்கிலீஷ் நம்மில் சராசரி 100க்கு ஒருவர் இருவரே படித்திருக்கலாம் என்றாலும் அது 35 கோடி மக்களையும் நடத்துகிறது. இந்நாட்டு மனிதன் இன்று அடைந்துள்ள மேல் நிலைக்கு இங்கிலீஷே காரணம். தோழர் கே.பி.பிள்ளை பேசிய நேஷன், தாய்நாடு, சுயராஜ்யம், பொது பாஷை என்கின்ற உணர்ச்சியை - எண்ணத்தை இங்கிலீஷ் பாஷையே கொடுத்தது. அரசனுக்கு குடிகள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்றும் அரசனே கடவுள் என்றும் கருதி இருந்த ஹிந்தி இந்தியனை அரசன் குடிகளுக்கு கட்டுப் பட்டு நடக்க வேண்டும் என்றும் அரசன் குடிகளின் சேவகன் என்றும் இங்கிலீஷ் இந்தியாதான் கற்றுக் கொடுத்தது இன்று உலகப் பொது பாஷையாக இங்கிலீஷ் தான் கருதப்படுகிறது. அது பகுஜனங்களால் பேசப்படுகின்றது.
இந்தியா சுதந்திரம் பெற்று விட்டாலும் உலக சம்மந்தம் இல்லாமல் இந்தியா வாழ்ந்து விட முடியாது. வருங்கால உலகம் தேசத்துக்கு தேசம் நாட்டுக்கு நாடு இப்போது உள்ள தூரத்தில் இருக்காது, கூப்பிடு தூரத்தில் இருக்கப் போகிறது. ஹிந்திக்கு ஆகட்டும் வேறு இந்திய பாஷைக்கு ஆகட்டும் இனி அடுப்பங்கரையிலும் படுக்கை அறையிலும் கூட வேலை இருக்காது.
தொழிலாளிக்கும் தொழில் கருவியும் யந்திரமும் இங்கிலீஷ் பாஷையில்தான் இருக்கப் போகிறது. விவசாயிக்கும் அதுபோலவே. வியாபாரிகளுக்கும் அதுபோலவே. அரசியல் காரனுக்கும் அதுபோலவே தான். மோக்ஷம் போகத்துக்கு மாத்திரம் தான் ஹிந்தி உதவக்கூடும். ஆனால் மோக்ஷமும் வெகு சீக்கிரத்தில் மறைந்து விடப் போகிறது.
மற்றும் தோழர் கே.பி. பிள்ளை என்னை பொது உடைமைக்காரன் என்கின்ற முறையில் பேசுவதாக நினைத்துக்கொண்டு இந்தியாவை ரஷ்யா என்று எண்ணிக் கொண்டு பேசக்கூடாது என்று குத்தலாகப் பேசினார். இந்தியா ஏன் ரஷ்யாவாகக் கூடாது? இந்தியா ராம ராஜ்யமாக ஆகும் என்று தோழர் கே.பி. பிள்ளை கருதுகிறபோது இந்தியா ரஷ்யா ஆகும் என்று ஏன் நான் கருதக் கூடாது? ரஷ்யாவுக்கும் இந்தியாவுக்கும் அதிகத் தூரமில்லை. 250 மைல்தான். வகுப்பும் மதமும் வெகு அற்பமானவை என்று உண்மை யிலேயே இந்தியர்கள் கருதக்கூடிய நாள் வந்தால் அன்றே இந்தியா ரஷ்யா ஆகிவிடும். அது கூடாது என்பதற்கு ஆக செய்யப்படும் சூழச்சிகளில் ஒன்று தான் ஹிந்தி முயற்சி என்று உறுதியாய்ச் சொல்லுவேன்.
மதராஸ் ஒரு நேஷனா?
மதராஸ் ஒரு நேஷன் அல்லவென்றும் அது தனித்து இருக்க முடியாது என்றும் தோழர் கே.பி.பிள்ளை சொன்னார். மதராஸ் ஒரு தனி நேஷனாய் இருந்தது. இன்றும் இருக்கிறது. அதுதான் திராவிடம். அதனுடைய நாகரிகம் ஆச்சார அனுஷ்டானம் வேறு. வங்காளம் பம்பாய் வேறு. இங்கிலீஷ் ஆட்சியால் இங்கிலீஷ் பாஷையால் தான் ஒன்றுக்கொன்று நேச பாவமான அறிமுகமாவது ஆகி இருக்கிறது. இங்கிலீஷ் ஆட்சியும் பாஷையும் ஒழிந்து ஹிந்தி ஆட்சியும் பாஷையும் வந்தால் அன்றே மதராசானது ஜர்மனி, இட்டாலி, பிரஞ்சு முதலிய ஏதோ ஒரு நேஷனுடன் கலந்துவிடும்.
தோழர்களே! இதுவரை நான் கே.பி. பிள்ளை பேசியதற்குச் சமாதானம் சொன்னேன். இவற்றிற்கு தோழர் கே.பி. பிள்ளை தமது மறுமொழியில் சமாதானம் கூறுவார் என்று எதிர்பார்க்கிறேன்.
இனி பொதுவாக சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன்.
இந்தியா பல மதம், பல வகுப்பு, பல தனிப்பட்ட லட்சியம் கொண்ட கோரிக்கைகள் உள்ள நாடு. இது உலகில் உள்ள மற்ற நாடுகளைப் போல் மதம், அரசியல், சமூக வாழ்க்கை முதலியவைகளில் ஒரே மாதிரி லட்சியமுடையதல்ல. கண்டிப்பாய் இந்து முஸ்லீம் லட்சியமும் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் லட்சியமும் கீழ் ஜாதி மேல் ஜாதியார் லட்சியமும் வேறு வேறாகவே இருந்து வருகிறது. செல்வாக்கில்லாத லட்சியமுடையவர்களை செல்வாக்குள்ள லட்சிய முடையவர்கள் இழித்தும் பழித்தும் கூறி கேவலப்படுத்துவதாலோ கட்டுப்பாடாக உண்மையை மறைத்து பிரசாரம் செய்வதாலோ கூலிகளை ஏவிவிட்டு காலித்தனமாக நடக்கச் செய்வதாலோ எல்லோருடைய லட்சியமும் ஒன்று என்று சொல்லிவிட முடியாது.
உதாரணமாக இன்று பார்ப்பனர்கள் தங்கள் சமூகத்துக்கு என்று அனுபவித்து வரும் எந்த உரிமை - லட்சியத்தை விட்டுக்கொடுக்கத் தயாராயிருக்கிறார்கள்?
அதுபோலவே முஸ்லீம்களும் தங்கள் சமூகத்துக்கு அல்லது மார்க்கத்துக்கு என்று அனுபவித்துவரும் எந்த உரிமை உணர்ச்சியை விட்டுக் கொடுக்க தயாராய் இருக்கிறார்கள்? அதுபோலவே பார்ப்பனரல்லாதாரோ அல்லது கீழ் ஜாதியார் என்பவர்களோ அனுபவித்து வரும் இழிவுகளையும் கொடுமைகளையும் நீக்க எந்த அளவுக்கு பார்ப்பனர்களும் மேல் ஜாதியாரும் சம்மதிக்கிறார்கள்?
மேல்நாட்டு நிலைமை
மேல் நாட்டில் இம்மாதிரியான சமூக, வகுப்பு, மார்க்கத் தொல்லை கிடையாது. குறிப்பாக நம் தென்னாட்டில் பார்ப்பனர் - பார்ப்பனர் அல்லாதார் என்கின்ற தொல்லை பல 1000க்கணக்கான வருஷங்களாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் சுமார் 20 வருஷகாலமாய் பச்சையாய் வெளிப்படையாய் அரசியலிலும் உத்தியோக இயலிலும் சமுதாய இயலிலும் தலைவிரித்து ஆடி வருகிறது. ஏன் இதைச் சொல்லுகிறேன் என்றால் இன்றைய தினம் நாம் இங்கு வாதம் செய்யும் ஹிந்தி அதில் பட்டதினாலேயாகும். ஹிந்தி பாஷையும் அதன் கலைகளும் தமிழ் நாட்டு மக்களுக்குக் குறிப்பாகப் பார்ப்பனரல்லாத ஏனைய மக்களுக்கு நேர் மாறானதாக இருக்கின்றன. இதை நான் இன்று சொல்லவில்லை.
சுயமரியாதையுடையவன் ஹிந்தியை ஆதரியான்
1921ம் வருஷம் நான் பெரிய தேசபத்தனாய், தேசீய வீரனாய் இருந்து சிறை சென்று வந்த உடனே திருப்பூரில் கூட்டப்பட்ட தமிழ் மாகாண மகாநாட்டில் நான் சொல்லி இருக்கிறேன். அதாவது இன்று ஹிந்தியை தமிழ் மக்களுக்குள் புகுத்தி ஆக வேண்டும் என்றும் பலாத்காரம் செய்யும் தோழர் ராஜகோபாலாச்சாரியார் என்ன காரணத்துக்காக ஆக தமிழ் மக்கள் ஹிந்தி படிக்க வேண்டுமென்று சொன்னாரோ அந்தக் காரணமாகிய ராமாயணத்தைப் படிப்பதையும் மனுதர்மத்தை உணர்வதையும் குற்றம் என்று சொன்னதோடு அவைகளை நெருப்பில் போட்டு பொசுக்க வேண்டும் என்றும் சொல்லி இருக்கிறேன். அன்று சொன்னதைப் பற்றி கவலை இல்லை. இன்று சொல்லுகிறேன். துளிசிதாஸ் ராமாயணமானாலும் சரி, வால்மீகி ராமாயணமானாலும் சரி, கம்பராமாயணமானாலும் சரி ஏதாவது ஒரு ராமாயணத்தை தோழர் கே.பி. பிள்ளை ஒப்புக்கொள்ளுகிறாரா? அதில் உள்ள தனது நிலையை ஏற்றுக்கொள்ளத் தயாராய் இருக்கிறாரா? அல்லது இங்குள்ள யாராவது ராமாயணத்திலும் மனுதர்மத்திலும் மற்றும் ஹிந்தி புராண சாஸ்திரங்களிலும் உங்களுக்கு உள்ள நிலையை ஏற்றுக் கொள்ளுகிறீர்களா? என்று கேட்கின்றேன். நான் அந்த தனிப்பட்ட புஸ்தகங்களில் உள்ள விஷயங்களைப் பற்றிக் கூட இப்பொழுது கேட்க வில்லை. இந்து மதம் என்பதில் இங்கு கூடியுள்ள உங்களுக்கு உள்ள நிலையை நீங்கள் ஒப்புக்கொள்ளுகிறீர்களா? அப்படி இருக்க ராமாயணமும் புராணங்களும் இந்து மத சாஸ்திரங்களும் படிக்க ஹிந்தி உதவும் என்றால் சுயமரியாதை உள்ள எவனாவது ஹிந்தி படிப்பதை ஒப்புக்கொள்ள முடியுமா?
வடநாட்டுத் தென்னாட்டு விஷயம் ஒன்றா?
மற்றும் வடநாடும் தென்னாடும் ஒரே லட்சியமுடையதாகுமா என்று உங்களைக் கேட்கின்றேன்.
வடநாட்டாரால் இதுவரை தென்னாட்டாருக்கு ஏற்பட்ட நன்மை என்ன என்று யாராவது விரல்விட்டுச் சொல்லட்டும். நம் மக்கள் ஏமாற்றப்பட நமக்கு யோக்கியதை தெரியாத வடநாட்டாரைப் பிடித்து வந்து காட்டி வஞ்சித்த தல்லாமல் தென்னாட்டுச் சமூக சமய பொருளாதார அரசியல் முதலிய விஷயங்களுக்கு வடநாடு எதில் பயன்பட்டது? நம் நாட்டுக்கு அழைத்து வரும்போது வட நாட்டவர்களை இந்திரன், சந்திரன், வீரன், சூரன், தியாகி, சத்தியவான், மகான் என்று விளம்பரம் செய்கிறார்கள். அவர்களைப் பற்றி அந்த உள்ளூர்காரர்களைக் கேட்டால் அவர்களுக்கு மிஞ்சிய மோசமான வர்கள் எந்நாட்டிலுமில்லை என்கிறார்கள்.
வடநாட்டுச் சம்பந்தம் வேண்டாம்
ஆகவே நாம் ஏமாறுவதற்குத் தான் வட நாடு உபயோகப்படுகிறது. இன்றைய அரசியலைப் பார்க்கின்ற போது எக்காரணம் கொண்டாவது எப்பாடு பட்டாவது நம் நாட்டை வடநாட்டுச் சம்பந்தத்திலிருந்து தனியாய் பிரித்துக் கொண்டால் ஒழிய நமக்கு விடுதலையோ மானமோ ஏற்படப் போவதில்லை. இன்று சிறிதாவது நமக்கு சுயமரியாதை உணர்ச்சியும் சுதந்தர உணர்ச்சியும் இருக்கிறதென்றால் அது நமது தனிப்பட்ட தமிழ் நிலை உணர்ச்சியாலேயும் ஹிந்தி படிக்காததாலேயும் தான் என்று வலிமையாய்க் கூறுவேன். நமது ரத்தத்தில் அடிமை உணர்ச்சியைப் பாய்ச்சவே இன்று பார்ப்பன ஆதிக்கம் நம்முள் பலாத்காரமாய் ஹிந்தியைப் புகுத்துவதாகும். ஹிந்தியில் அரசியல் சுதந்தர ஞானம் கிடையாது. ஹிந்தியில் பொருளாதார ஞானம் கிடையாது. ஹிந்தியில் சமுதாய சமத்துவம் இருப்பதாய்ச் சொல்லப்படுமானால் அவை இவையேயாகும். அதாவது:-
"ஒரு நாட்டு மக்களை ஆள வேண்டுமானால் அவர்களுக்கு கல்வி வாசனையும் அறிவுச் சுதந்தரமும் இல்லாமல் மடையர்களாக வைத்திரு"
"ஒரு நாட்டு மக்களை என்றும் அடக்கி ஆளவேண்டுமானால் அவர்களுக்குப் பொருளாதார உரிமை இல்லாமல் சாமி, பூதம், பிசாசு என்கின்றதான மூட நம்பிக்கையைப் புகுத்தி பயப்படுத்தி அவர்களது பொருள்களை கொள்ளையடி"
"ஒரு நாட்டு மக்களை அடக்கி மிருகங்களிலும் கேவலமாய் என்றென்றும் அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்த வேண்டுமானால் அந்நாட்டு மக்களை ஆயிரம் சமூகமாக ஆக்கி ஒன்றுக்கொன்று உயர்வு தாழ்வு கற்பித்துச் சின்னா பின்னப்படுத்தி வை"
என்பதல்லாமல் வேறு என்ன இருக்கிறது? நான் சாணக்கிய அரசியல் தந்திரம் முதல் ஹிந்தியில் உள்ள பல அரசியல் நீதி சாஸ்திரங்களைப் பற்றியே தான் தெரிந்த வரை பேசுகிறேன். ஊரார் உழைப்பில் ஒரு சிறு சமூகம் உண்டு வாழ்வதற்கு உரியதே ஹிந்தி கலைகளாகும்.
ஹிந்தி தமிழருக்கு விஷம்
மற்றும் பாருங்கள். நம் நாட்டில் மொத்தத்தில் இன்று 100க்கு 9 பேர்களே படித்தவர்கள். இவர்களில் பார்ப்பனர்கள் 100க்கு 3 பேராய் இருந்தாலும் அவர்கள் சமூகம் பூராவும் 100க்கு 100 பேர் படித்திருக் கிறார்கள். ஆங்கிலம் கற்றவர்கள் அவர்களில் 100க்கு 50 பேர் இருக்கலாம். நம்மில் தமிழ் படித்தவர்களே 100க்கு 5, 6 பேர்தான் இருப்பார்கள். அதிலும் கிராம வாசிகளில் 100க்கு 2, 3 பேர்கள் தான் இருப்பார்கள். சில சமூகங்களில் ஒருவர் இருவரே இருப்பார்கள். பார்ப்பனர்களுக்கோ ஹிந்தி வெகு சுலபமான பாஷை. ஏனெனில் பாரம்பரிய பாஷை. நமக்கு அது சுலபத்தில் நுழையாத பாஷை. பார்ப்பனர் 100க்கு 77 பேர் ஹிந்தியில் பாஸ் செய்தால் நம்மில் 100க்கு 15 பேர்கள் கூட பாஸ் செய்ய முடியாது. உத்தியோகத்துக்கு ஹிந்தி ஒரு யோக்கியதையாய் வைத்து விட்டால் நம்மவர்களுக்குப் பழையபடி பங்கா இழுப்பதும் பில்லை போட்டுக் கொள்ளுவதுமான சேவக வேலைதான் கிடைக்கும். உதாரணமாக அரசியலில் பார்ப்பனரல்லாதார் இயக்கம் ஏற்படும் முன்பு சில படிப்புகளுக்கு டாக்டர் முதலிய பரீஒைக்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டுமென்று பார்ப்பனர்களால் சூழ்ச்சி செய்யப்பட்டு இருந்தது. அதனாலேயே பார்ப்பனரும் மலையாளிகளுமே பெரும்பான்மையாய் டாக்டர்களானார்கள். ஜஸ்டிஸ் கட்சி வந்த பிறகு பனகாலரசர் காலத்தில் சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்கின்ற நிபந்தனை எடுக்கப்பட்டு விட்டது. அதற்கப்புறமே பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் பலர் டாக்டர்களாக முடிந்தது. அதுபோல் தான் ஹிந்தி உத்தியோக யோக்கிதையாகவும் வைத்துவிட்டால் பழையபடி நாம் கல்வியில் இன்னும் அதிகமான பிற்பட்ட வகுப்புக்காரர்களாக ஆகிவிடுவோம். கல்வி இலாகாவில் தமிழ் எவ்வளவு கேவலமாய் மதிக்கப்படுகிறது. என்று பாருங்கள் சமஸ்கிருதம் எவ்வளவு உயர்வாய் மதிக்கப்படுகிறது என்று பாருங்கள்.
தற்கால தமிழ் நிலை
மாகாண கல்லூரியில் சமஸ்கிருத போதகருக்கு ரூ 350 முதல் 500 . தமிழ் போதகருக்கு அதில் பகுதி கூட இல்லை.
தமிழைத் தமிழ் நாட்டில் இதுவரை கட்டாய பாடமாக்க வில்லை. ஹிந்தி பிறக்கும் போதே கட்டாய பாடமாக்க பலாத்காரம் செய்யப்படுகிறது. "அதிகாரி வீட்டுக் கோழி முட்டை அம்மிக் கல்லை உடைக்கும்" என்று ஒருவர் சொன்னார். அதுபோல் ஆதிக்கத்தில் உள்ளவர்கள் பாஷை ஆனதால் ஹிந்தி தமிழை ஒழிக்க கட்டாய பாடமாக்கப் போகிறார்கள். ஒரு சமயம் "10 ரூபாய் கேட்டால் 5 ரூபாயாவது வராதா?" என்கின்றது போல் எண்ணிக்கொண்டு தோழர் ஆச்சாரியார் கட்டாய பாடமென்றால் "இஷ்ட பாடமாகவாவது வைத்துத் தொலையுங்கள்" என்று தமிழ் மண்டுகள் சொல்லாதா என்றே இந்த யுக்தி செய்திருந்தாலும் செய்திருக்கலாம். எந்த பாடமாகவும் ஹிந்தி நமக்கு எதற்கு? அதற்கு ஆக செலவிடும் நேரம் பணம், ஊக்கம் எல்லாம் தேசிய நஷ்டமல்லவா என்று கேட்கின்றேன். இந்த நாட்டில் ஹிந்தி பாடமாக வைக்கப்பட்டால் தமிழர்கள் ஒழிந்தார்கள்- சுயமரியாதைக்கு குழி தோண்டப்பட்டது என்று தான் அர்த்தம். ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களுக்கு இதைப்பற்றி அதிக கவலை இல்லை. அவர்களில் பலர் ராமாயணத்தை பூஜிப்பவர்கள். அதைப்பற்றி நாம் இப்போது கவலைப் பட வேண்டாம். நம் தமிழ் மக்கள் இதை நன்றாய் உணரவேண்டும். அதாவது இது ஒரு நெருக்கடியான சமயம். இதில் ஏமாந்து விட்டோமேயானால் தமிழன் தாசி மகனாக தானே ஆகிவிடுவான். இப்பொழுதாவது அதற்கு என்று ஒரு ஜாதியும் ஒரு நாடும் மாத்திரமிருக்கிறது. ஹிந்தி புகுந்து விட்டால் தமிழர்கள் பூராவும் பெண்கள் தாசிகளாகவும் ஆண்கள் தாசி மக்களாகவும் தாசர்களாகவும் ஆகிவிட வேண்டியதுதான். அந்த நிலை ஏற்பட்ட பிறகு நாம் இருப்பதை விட இறப்பதே மேல்.
கட்சி உணர்ச்சி வேண்டாம்
கட்சி உணர்ச்சியை இதில் விட்டு விடுங்கள். மனித சமூக சுதந்தரத்தையும் சுயமரியாதையையும் கவனியுங்கள். பார்ப்பனரல்லாத பத்திராதிபர்கள் பலர் இந்தச் சமயத்தில் தான் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகளாகவும் ஹிந்தி பிரசாரம் செய்யவும் சமூக சீர்திருத்தம் என்னும் பேரால் பணம் சம்பாதிக்கவும் அலைகிறார்கள். இந்த மானங்கெட்ட மக்களை உடைய நாடு எப்படி சுதந்திரமோ சுயமரியாதையோ அடைய முடியும். இவர்களை பார்ப்பனர்கள் தேவடியாள் மக்கள் என்று ஏன் சொல்ல மாட்டார்கள்?
தோழர்களே!
இன்று என் அபிப்பிராயத்தை நான் தெரிவித்தேன். அடுத்தாப் போல் பேசப் போகும் தோழர் கே.பி. பிள்ளை அவர்கள் இவற்றிற்கு சமாதானம் சொல்லுவார். பொறுமையாய் இருந்து கேட்போமாக.
கே.பி. பிள்ளை சமாதானம்
இவற்றிற்கு சமாதானம் சொல்ல வந்த தோழர் கே.பி. பிள்ளை அவர்கள் எழுந்து தனிப்பட்ட எந்த விஷயத்திற்கும் பதில் சொல்லாமல் தோழர் ஈ.வெ.ரா. எதற்கும் எதிர் பேசும் சுபாவமுடையவராக இருக்கிறார் என்றும் அதுகூடாது என்றும் மதத்திலும் கடவுளிடத்திலும் நம்பிக்கை இருப்பவர்களுக்கு இம்மாதிரி தொட்டதையெல்லாம் எதிர்த்து பேசும் புத்தியும் சுபாவமும் இருக்காது என்றும் நாம் சுயராஜ்யம் அடைய வேண்டியதுதான் முக்கிய காரியமே ஒழிய மற்றவைகளை கவனிக்கக் கூடாது என்றும் ஆதலால் ஹிந்தி அத்தியாவசியமென்றும் பேசி உட்கார்ந்துவிட்டார்.
தலைவர் முடிவுரை
கடைசியாக தலைவர் தோழர் எ. ரத்தின சபாபதி அவர்கள் முடிவுரையாகப் பேசும் போது தோழர் ஈ.வெ.ரா பேசியவற்றிற்கு பதில் சொல்லுவதைக் கேட்க தான் வெகு ஆவலாய் இருந்ததாகவும் பதிலளிக்க எழுந்தவர் ஒன்றுக்கு கூட பதில் சொல்லாமல் ஆஸ்திக நாஸ்திகம் பேசி மழுப்பி விட்டதாகவும் இந்த இடத்தில் ஆஸ்திக நாஸ்திக பேச்சே கிளம்ப இடமில்லையென்றும் ஹிந்தியை ஆஸ்திகத் தோடு பொருத்திப் பேசுவது அதன் பலவீனத்தைத்தான் காட்டிற்றே ஒழிய வேறில்லை என்றும் தமிழர்கள் ஹிந்திக்கு பயப்படும் காரணம் சரி என்பதை இந்த ஆஸ்திக வாதம் நிரூபித்து விட்டது என்றும் ஹிந்தியில் ஆரியர் தமிழர் என்கின்ற போரும் ஆரிய மதம் தமிழ் மதம் என்கின்ற போரும் தான் புகுந்திருக்கின்றதே தவிர பொது நோக்கு ஒன்றும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டதென்றும் பேசினார்.
------------------- 19.09.1937 இல் கொல்லம்பாளையம் சாலை "ஆச்சி விலாஸ்" கட்டடத்தில் தோழர் ஏ. இரத்தினசபாபதி அவர்கள் தலைமையில் இந்தியை தமிழ்நாட்டில் கட்டாய பாடமாக புகுத்துவது குறித்து நடைபெற்ற தர்க்க கூட்டத்தில் பெரியார் அவர்கள் ஆற்றிய உரை - ”குடி அரசு” - சொற்பொழிவு - 26.09.1937
0 comments:
Post a Comment