இன்று தெற்கு சூடான் நாளை தமிழ் ஈழம்!
அய்.நா. மாமன்றத்தில் 194ஆவது நாடாக அங்கம் பெற்று, அதன் தனி உரிமைக் கொடி பட்டொளி வீசிப் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்தநாடுதான் தெற்கு சூடான், இனப் பண்பாட்டு ரீதியாக நாடு பிரிவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்கிற நம்பிக்கை இதன் மூலம் வரலாற்றில் மேலும் உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.
1990ஆம் ஆண்டுக்குப் பிறகு 23 தேசிய இனங்கள் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க ஆரம்பித்து விட்டன.
இந்தியா என்பது ஒரு நாடல்ல - துணைக் கண்டமாக இருந்தாலும் சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் அரசு இந்தியாவை தனது ஆட்சிப் பலத்தால் ஒரு நாடாகக் காட்டவில்லையா? அந்த விட்ட குறை தொட்டக் குறை இன்னும் தொடரவில்லையா?
அதுபோலவே உலகில் பல தேசிய இன நாட்டு மக்களைத் தங்கள் சாம்ராஜ்ஜிய எல்லையை ஒரு கட்டுக்குள் வைத்து வண்டி ஓட்டுவதற்காக ஒரே நாடு என்ற மாயையை உருவாக்கியது ஏகாதிபத்தியங்கள். ஆனாலும் அவை நிலைக்க முடியவில்லை என்பதற்கு அடையாளம்தான் தெற்கு சூடான்!
19ஆம் நூற்றாண்டில் கிழக்கு ஆப்பிரிக்காவில் பல மொழி பேசும் பல இனங்களைச் சார்ந்த மக்கள் வாழ்ந்த பல்வேறு பகுதிகளை ஒரு நிருவாகத்தின்கீழ் கொண்டு வந்து சூடான் என்ற நாமகரணத்தைச் சூட்டியது ஆங்கில ஏகாதிபத்தியம்.
வடக்குப் பகுதியில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் இஸ்லாமியர்கள்; தென் பகுதியில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் கிறித்தவர்களே!
1956ஆம் ஆண்டில் பிரிட்டன் பிடியிலிருந்து விடுதலை பெற்றது அந்நாடு. மற்ற மற்ற நாடுகளில் பின்பற்றிய அதே வழிமுறையை அங்கும் பின்பற்றியது பிரிட்டன்!
பல இனம், பல மொழிகளைக் கொண்ட இந்தி யாவை தன் வசதிக்காக ஒரு நாடாக்கி, விடுதலைக் குப் பிறகும் அந்த நிலையே தொடரும்படி செய்து விட்டுப் போகவில்லையா பிரிட்டன்? அதேபோல்தான் கிழக்கு ஆப்பிரிக்காவிலும் செய்துவிட்டுச் சென்றது - தமக்குப் பின்னால் எப்படியோ அடித்துக் கொண்டு சாகட்டும் என்ற பரந்த எண்ணத்தால்.
தெற்குச் சூடான் போர்க்கொடி தூக்கியது ஓராண்டல்ல, ஈராண்டல்ல; 22 ஆண்டுகள் ஓயாப் போராட்டம்! 15 லட்சம் மக்கள் கொல்லப்பட்டனர். 40 லட்சம் மக்கள் அகதிகளாக வெளியேறிய கொடுமை! 2005ஆம் ஆண்டின் ஒப்பந்தப்படி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. 99 விழுக்காடு மக்கள் தனி நாட்டுப் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தனர். அதன் திரண்ட விளைவே இம்மாதம் 9ஆம் தேதி தெற்கு சூடான் எனும் நாட்டின் பிறப்பு.
இந்தியா உட்பட உலக நாடுகள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளன. அதே நேரத்தில் தெற்குச் சூடானுக்கு ஒரு நீதி, ஈழத்துக்கு இன்னொரு நீதி என்னும் இரட்டை அளவுகோலை ஏன் இந்தியா உட்பட பல நாடுகள் கடைபிடிக்கின்றன என்பது நியாயமான கேள்வி தானே?
இலங்கைத் தீவிலும் இரு வேறு தனித்தனி இனங்களை நிருவாகத்திற்காக ஒன்றாக்கியவன் வெள்ளைக்காரன்தான். போர்த்துக்கீசியர் அதன்பின் பிரஞ்சுக்காரர் ஆண்டபோதும் சரி, சிங்களப் பகுதிகளும் தமிழர் பகுதிகளும் தனித் தனியாகத் தான் ஆளப்பட்டன. அதனைக் கெடுத்த குற்றவாளி பிரிட்டானியம்தான்.
வாக்கு எடுப்பின் அடிப்படையில் பிரிந்த நாடுகள்தான் கிழக்கு தைமூர், சுலோவேகியா போன்ற நாடுகள். அந்த வாய்ப்பு ஈழத்திற்கும் அளிக்கப்பட வேண்டாமா?
அரச பயங்கரவாதம் என்பதற்கு முழு இலக்கணம் இலங்கைத் தீவில் ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு அல்லவா!
சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி, சிங்களவன் மட்டும்தான், புத்த மதத்தைச் சேர்ந்தவன் மட்டும் தான் அதிபராக முடியும் என்ற சட்டமே இயற்றி வைக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில், மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியுடைய தமிழர்கள் உரிமையுடன், இனப் பண்பாட்டு அடையாளங்களுடன் எப்படி வாழ முடியும்?
எங்களோடு வாழ்ந்து தான் தீர வேண்டும் என்று துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தும் விலங்குகளோடு தமிழர்கள் எப்படி வாழ்க்கைப் பயணத்தைத் தொடர முடியும்?
தெற்கு சூடான் சுதந்திரக் கொடியின் ஒவ்வொரு அசைவும் ஈழத் தமிழர்களின் பூர்ண விடுதலையை அவசரப்படுத்திக் காட்டுவதான அடையாளப் பொருளாகும்.
---------------"விடுதலை” தலையங்கம் 19-7-2011
0 comments:
Post a Comment