Search This Blog

20.7.11

தினமலருக்கு வெட்கமாவது, மானமாவது...

திராவிடர் கழகத் தலைவர் வீரமணி: கர்நாடக போலீசார் தயாரித்துள்ள குற்றப் பத்திரிகையில், நான் கிருஷ்ணனாம்; நீ கோபிகையாம் என்ற வசனத்தை அடிக்கடி பக்தைகளிடம் சொல்லக் கூடியவர் நித்யானந்தா எனக் குறிப்பிட்டுள்ளது என்றால், இந்த வார்த்தைகளுக்குள் வழிந்தோடும் ஆபாசம் என்ன என்பது வெளிப்படை.

டவுட் தனபாலு: இது ஆபாசமா...? அப்போ, கர்ப்பப்பை இருக்கறதால தான், குழந்தை பெத்துக்கிறதுல சிக்கல் வருது; அதனால, பெண்கள் எல்லாம் கர்ப்பப்பையை எடுத்துடணும்னு உங்க பகுத்தறிவுப் பகலவன் சொன்னாரே.. அதுக்குப் பேர் என்னவாம்...?

--------------- தினமலர் 19.7.2011

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு என்பார்களே அது தினமலர் வாளுக்குத்தான் பொருந்தும். கேட்ட கேள்விக்கு என்ன பதில்? நித்யானந்தா சொன்னது ஆபாசமே இல்லையா?! வக்கிர துர்க்குணமா இல்லையா? பந்தை அடிக்க முடியாவிட்டால் காலை அடிக்கும் கோழைத்தனம் தானே தினமலரின் பதில்?

பிள்ளைப் பெறும் எந்திரம்தான் பெண்கள் என்று கருதப்படும் சமூக அமைப்பில் பெரியார் சொன்ன புரட்சி மொழிதான் கர்ப்பப்பையை எடுங்கள் என்பது. பெண்கள் உரிமை - முன்னேற்றம் - கிளர்ச்சி என்பதை அடிப்படையாகக் கொண்ட முற்போக்குக் கருத்து. அது - பெண்ணியல்வாதிகளால் வரவேற்கப்படும் கருத்து.

ஆனால் நித்யானந்தா பக்தைகளைப் பார்த்து நான் கிருஷ்ணன் - நீ கோபிகை! என்று சொன்னது ஆபாசமானது - இரண்டும் ஒன்றல்ல.
கிருஷ்ணன் கோபிகைகளுடன் நடத்திய காம வெறியாட்டம் தினமலர் கூட்டத்திற்கு லீலைகளாக இருக்கலாம்.

குளத்தில் கோபிகைகள் நீராட, அவர்களின் உடைகளைத் திருடிச் சென்று மரக்கிளையில் உட்கார்ந்து கொண்டு பெண்களின் நிர்வாணத்தை ரசித்த ஒழுக்கக் கேடன் அவாளின் பார்வையில் உத்தமப் புத்திரக் கடவுளாக இருந்து தொலையட்டும்!

குழந்தையைப் பெற்றுக் கொள்வதற்காக உடல் முழுவதும் நெய்யைப் பூசிக் கொண்டுயாருடனும் புணரலாம் என்கிற சாத்திரத்தைக் கடைபிடிக்கும் பார்ப்பனர்களிடத்தில் ஒழுக்கத்தை எதிர்பார்க்க முடியுமா?

ஆடைகளைத் தருமாறு கோபிகைகள் கெஞ்சிக் கூத்தாட, கரைக்கு வந்து இரு கைகளையும் தலைக்குமேல் தூக்கிக் கும்பிட்டுக் கேட்டால் தான் கொடுப்பேன் என்ற நிபந்தனையை விதித்து, பெண்களின் முழு நிர்வாணத்தை ரசித்த காலிப் பயல் அவாளின் கண்ணிறைந்த கடவுளாகவே போய்த் தொலையட்டும்!

அதைப் போய் பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுத்த தலைவர் பெரியார் அவர்கள் சிந்தனையோடு முடிச்சுப் போடுவது தினமலரின் சீரழிந்த, சீக்குப் பிடித்த வக்கிரப்புத்தியைத்தான் வெளிப்படுத்தும்.

இதே தினமலர் வாரமலரில் (23.12.2007) சிதம்பரம் தீட்சதர்கள் வீட்டில் நடக்கும் குழந்தைகள் திருமணத்தைப்பற்றி எழுதியதே - நினைவு இருக்கிறதா?

பல ஆண்டுகளாகவே சிதம்பரம் தீட்சதர்கள் தங்கள் பெண்களுக்கு ஏழு வயது ஆகும் முன்னரே திருமணம் செய்து விடுகின்றனர். மாப்பிள்ளைப் பையனுக்கு 12 வயதுக்குள்தான் இருக்கும். பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புவது கிடையாது. வீட்டிலேயே வேத பாடங்கள் சொல்லித் தருகின்றனர்.

பால்ய விவாகத்தை 5 நாள் திருமணச் சடங்காக நடத்துகின்றனர்.

திருமணம் முடிந்த கையோடு பெண்ணும் மாப்பிள்ளையும் புகுந்த வீடு போய் விடுவார்கள். துள்ளித் திரிந்து விளையாடிய பெண், மாட்டுப் பெண்ணாகி வீட்டு வேலைகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள்.

பெண்ணுக்கு அய்ந்து வயதில் திருமணமானாலும், மூன்று வயதில் திருமணமானாலும் அன்று முதல் அந்தப் பச்சைக் குழந்தைக்கு மடிசார் புடவை கட்டிவிடுகின்றனர். மாமன் மாமி கால்களில் விழுந்து கும்பிடவும் பழக்குகிறார்கள். 14 வயது ஆகும் திருமணமான ஒரு தீட்சதர் பெண்ணுக்கு மூன்று, நான்கு குழந்தைகள் கூடப் பிறந்து விடுகின்றன.

கம்ப்யூட்டர் உலகம் என்று பெருமை பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை நிலையோ...

-----------(தினமலர், வாரமலர் டிசம்பர் 23, 2007)

தீட்சதர் வீட்டு 14 வயது பெண் 4 குழந்தைகள் பெறும் நிலைக்கு என்ன பெயர்?

பிள்ளை பெறும் எந்திரமாகப் பெண் இருக்கிறாளே என்று தந்தை பெரியார் சொன்னது உண்மைதானே!

உங்காத்துப் பெண்ணுக்கும் சேர்த்துதானே பெரியார் குரல் கொடுத்தார், அதைக் கொச்சைப் படுத்துகிறாயே!

1928ஆம் ஆண்டில் ஒரு நிகழ்வு தினமலர் போல அப்பொழுது இந்து ஏடு முந்திரிக்கெட்டையாகத் துள்ளும். அதுபற்றிய ஒரு குறிப்பு இதோ: (திராவிடன் இதழில் (13.3.1928 பக்கம் 7)

இந்து பத்திரிகையில் 10 வயது பெண்ணோ அல்லது 12 வயது பெண்ணோ ஒருவனுக்குக் கல்யாணத்துக்காக வேண்டும் என்று விளம்பரம் செய்திருந்தது. இதைப் பார்த்து ஒரு சீர்திருத்தக்காரர் இந்துவை ஒரு கேள்வி கேட்டார். அதாவது ஓ. இந்துவே! நீர் சீர்திருத்தக்காரன் என்று முழக்கம் செய்கின்றனையே இந்தக் காலத்தில்கூட, 10 வயது அல்லது 12 வயது பெண் ஒரு மாப்பிள்ளைக்குக் கல்யாணத்திற்காக வேண்டும் என்று விளம்பரம் செய்யலாமா? என்று கேட்டார். அதற்கு இந்துப் பத்திரிகை சொன்ன பதில் என்ன என்று பாருங்கள்.

10 அல்லது 12 வயது பெண்களை இப்போது விவாகம் செய்வது என்பதாகக் காணப்படுவதாவது விவாகச் சடங்கல்ல, அது நிச்சயதார்த்தத்திற்கு ஒப்பானது. பெண்ணையும், மாப்பிள்ளையையும் வீட்டிற்குள் விட்டுக் கதவு சாத்துகின்றோமே அதுதான் விவாகம் என்று அயோக்கியத்தனமாகப் பதில் எழுதிற்று.

இதற்கு அந்தச் சீர்திருத்தக்காரர் என்ன பதில் எழுதினார் என்றால், ஓ, இந்துவா! 10 வயதிலும் 12 வயதிலும் கல்யாணம் செய்வதுபோல் கண்ணுக்குத் தெரிவதெல்லாம் கல்யாணம் அல்ல. அது நிச்சயதார்த்தம் என்று சொல்ல வருவாயானால், அந்த 10 அல்லது 12 வயது பெண்களின் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட புருஷன் செத்தால் தாலி அறுபட்டதாகப் பெயர் செய்து மொட்டையடித்து, முக்காடு போட்டு, மூலையில் உட்கார வைப்பதேன்? அதுகூட உங்கள் நிச்சயதார்த்த சடங்கில் சேர்ந்த நிபந்தனையா? என்று கேட்டார். உப்புக் கண்டம் பறி கொடுத்த பார்ப்பனத்தி போல் இந்து இதற்கு ஒரு மறுமொழியும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டது.

(திராவிடன் 13.3.1928 பக்கம் 7).

அந்த இந்துவின் மறு அவதாரமாக தினமலர் திரிநூல் வேலையைச் செய்து கொண்டு இருக்கிறது.

அன்று இந்து மறுமொழிகூட கூற முடியாமல் திணறியதுபோல், அனேகமாக ஒவ்வொரு நாளும் தினமலர் சவுக்கடி மட்டும் புத்தி கொள்முதல் பெற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை!

பார்ப்பனர்களுக்கு மானமாவது! வெட்கமாவது!!

-------------------- “விடுதலை” 20-7-2011

0 comments: