Search This Blog

22.7.11

வாயாடி சத்தியமூர்த்தி அய்யரை வாயடைத்து நிற்க வைத்த டாக்டர் முத்துலட்சுமி


இந்தியாவின் முதல் பெண் டாக்டர் - முதன் முதலில் சட்டமன்றத்திற்குள் சென்றவர் - முதன் முதலில் சட்டமன்றத் துணைத் தலைவர் என்கிற பெருமைக்குரிய கிரீடங்களுக்குச் சொந்தக் காரர் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் நினைவு நாள் இன்று (1968).


1926ஆம் ஆண்டு உலகப் பெண்கள் மாநாடு பாரீசில் கூடியபோது இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டவர் இவர்.

இளம் வயது திருமணம் கொடுமை, பர்தா முறை ஆகியவை எங்கள் நாட்டிலும் இல்லாமல் ஆக்கப் பாடுபடு வேன் என்றும், இங்குள்ளது போல் கணவனைப் பெண் களே தேர்ந்தெடுக்கும் முறை, இளம் விதவைகள் மறுமணம் செய்யும் முறை போன்ற வற்றையும், இந்திய நாட்டுப் பெண்களிடமும் பரப்பிடப் பெரு முயற்சியில் ஈடுபடுவேன் என்றும் அம் மாநாட்டில் அவர் பேசியது அவரின் முற் போக்குச் சிந்தனைக்கான எடுத்துக்காட்டாகும்.

அன்றைய ஆண் ஆதிக்க சமூக அமைப்பில் தன்னந்தனியே படிக்க நேர்ந்தாலும் தேர்வுகளில் முதல் மாணவியாக தங்கப் பதக்கங்களைத் தட்டிச் சென்றவராகவே ஒளி வீசினார்.

நீதிக்கட்சியின் பிரதமர் பனகல் அரசரின் உதவியால் லண்டன் சென்று மருத்துவ மேற்படிப்பை மேற்கொண்டார். சென்னை எழும்பூரில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையிலேயே அவுஸ் சர்ஜனாகப் பணியாற் றினார்.

இவரது திறமையும், தொண்டும்தான் சட்டமன்ற உறுப்பினராக ஆளுநரால் நியமிக்கப்படச் செய்தது.

நீதிக்கட்சி ஆட்சியில், பொப்பிலிராஜா பிரதமராக இருந்தபோது 1929 பிப்ரவரி 2ஆம் நாள் பெண்களைக் கோயில்களில் பொட்டுக் கட்டி விடும் தேவதாசி முறை ஒழிப்புக்கான சட்ட முன் வடிவை முன்மொழிந்தார். சத்தியமூர்த்தி போன்ற தேசியப் பார்ப்பனர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

தந்தை பெரியாரோ பேராதரவு காட்டினார் சட்டமுன் வடிவுக்கு. 1930 மார்ச்சு 23ஆம் தேதி குடிஅரசு இதழில் தேவதாசி ஒழிப்புச் சட்டம் என்ற தலைப்பிட்டு தலையங்கம் தீட்டினார் தந்தை பெரியார்.

தொன்று தொட்டு வருவது தேவதாசி முறை; தேவதாசியாக இருப்பதால் அடுத்த ஜன்மத்தில் மோட்சம் கிடைக்கும் என்றார் சத்தியமூர்த்தி அய்யர்.

அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இதுவரை எங்கள் சமூகம் மோட்சம் பெற்றது போதும்; இனி உங்கள் குலப் பெண்கள் தேவதாசிகளாக இருந்து மோட்சத்தை அடை யலாமே! என்றாரே பார்க்கலாம். வாயாடி சத்தியமூர்த்தி அய்யர் வாயடைத்து நின்றார். சட்டம் நிறைவேற்றப்பட்டது. பெண்ணுரிமை வரலாற்றில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நிலைத்து நிற்பவர்.

அவர் அடிக்கல் போட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனை அடையாறு ஆலமரம் போல கருணை நிழலைத் தரக் கூடியதாகும்.

-------------- மயிலாடன் அவர்கள் 22-7-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: