Search This Blog

19.7.11

சமச்சீர் கல்வி - முதல் அமைச்சருக்கு வேண்டுகோள்! --கி.வீரமணி

  • சமச்சீர் கல்வி - நெஞ்சில் பால் வார்த்த நீதிமன்ற தீர்ப்பு!

  • மேல் முறையீடு என்றுகூறி மேலும் காலத்தை வீணடிக்க வேண்டாம்!

  • சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாக செயல்படுத்துக!


முதல் அமைச்சருக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை ஏற்று, உடனடியாக சமச்சீர் கல்விப் பாடத் திட்டத்தை செயல்படுத்துமாறு தமிழ்நாடு முதல் அமைச்சருக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். அறிக்கை வருமாறு:

தி.மு.க. அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்தாமலிருக்கும் வண்ணம், புதிதாக பொறுப்பேற்றுள்ள அ.தி.மு.க. அரசு அவசர அவசரமாக அது செல்லாது என்றுகூறி, ஒரு சட்டத் திருத்தத்தை அறிவித்து, இந்தக் கல்வியாண்டில் மாணவர்கள் கல்விக் கண்ணை பெறாது தடுக்கும் வகையில் செயல்பட்டுள்ளது.

பொருத்தமற்ற காரணங்கள்

இல்லாததையும் பொல்லாததையும் பொருத்தமில்லாதவைகளையும் கூறி, 200 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட திட்டத்தை (நல்ல பாடத் திட்ட வல்லுநர் குழுவால்தான் அவை தயாரிக்கப்பட்டது) ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியதோடு, நீதிக்கட்சி வரலாறு சமூக நீதியின் அடித்தளம் என்பதைப் பற்றிக்கூட கவலைப் படாமல் அ.தி.மு.க. அரசு அதனை நீக்கியது எவ்வளவு பெரிய வரலாற்றுப் பிழை என்பதெல்லாம் அரசுக்கு மாணவர்களாலும், கல்வி அறிஞர்களாலும், பெற்றோர்களாலும், முற்போக்குச் சிந்தனையாளர்களாலும், இடதுசாரிகளாலும் சுட்டிக் காட்டப்பட்டன.

தேவையற்ற பிடிவாதம்!

இதில் தேவையில்லாத பிடிவாதத்தை புதிய அரசு காட்டி, வழக்கு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு என்றெல்லாம் சென்ற புதிய அரசின் நியாயமற்ற, நிலைப்பாட்டினை நீதிமன்றங்கள் ஏற்க இயலாது என்று தெளிவாகத் தெரிவித்து விட்டன.

1. இதுவரை மக்கள் வரிப் பணம் ஏற்கெனவே ரூ.500 கோடி, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்றத்தின் சிறப்பு மூத்த வழக்குரைஞர்கள் ஏற்பாடு செய்துள்ள வகையில் பல லட்சம் ரூபாய் செலவுகள் - இவை மக்களின் வரிப்பணம் தான்!

2. பல லட்சக்கணக்கான மாணவர்களும், பெற்றோர் களும் இந்தக் கல்வியாண்டில் படிப்புப் பாழாகி, காலதாமதம் ஆகி, ஏதோ யோகா, நடனம் என்று பொன்னான நேரத்தை வீணடித்து, பள்ளிகளில் இவற்றில் ஈடுபட வைத்தனர். பாட புத்தகங்கள் இன்றி பள்ளிக்குச் செல்லுவதோடு, முதல் பருவம் (Term) முடிந்து தேர்வு எழுத வேண்டிய காலத்தில் வகுப்புகளே முறையான பாட புத்தகங்களோடு, துவக்கப்படவில்லை என்ற வேதனைக்கு ஆளாகி வெந்து, நொந்து, நூலாகியுள்ளனர்!

நெஞ்சில் பால் வார்த்த தீர்ப்பு!

இந்தச் சூழலில், அவர்கள் நெஞ்சில் பால் வார்த்தது போல சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் அமர்வு தலைமை நீதிபதி எம்.ஓய் இக்பால் அவர்களும் மற்றொரு நீதிபதியும் (திரு . டி.எஸ். சிவஞானம்) நல்ல தீர்ப்பு வழங்கி, அவசர கோலத்தில் அள்ளித் தெளித்த இந்த புதிய அரசின் சட்டத் திருத்தம் செல்லாது என்று கூறியுள்ளனர்.


இது இரண்டாவது முறை ஓங்கி அடிக்கப்பட்ட தீர்ப்பு ஆகும்!

தேவையற்ற மேல் முறையீடு

என்றாலும் மேல் முறையீட்டை உச்சநீதிமன்றத்திற்குப் போய் செய்ய அரசு நினைப்பது தேவையற்றது - மக்கள் விரோத நடவடிக்கையாகும். உச்சநீதிமன்றம் முந்தைய அரசின் இப்பாடத் திட்டத்தை ஏற்கவே செய்தது!

இப்புதிய அரசு இம்முறை உச்சநீதிமன்றம் சென்ற போதும் - இப்பிரச்சினையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை முடிக்கவே தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

பிள்ளை பிழைக்காது!

இந்நிலையில் மீண்டும் உச்சநீதிமன்றம் செல்வது வெறும் எண்ணெய்ச் செலவே தவிர, பிள்ளை பிழைக்காது! என்பதையே மறுமுறை உறுதி செய்து கொள்ளவே உதவிடும். இதனை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும் தமிழக அரசும், முதல் அமைச்சரும்.


ஆச்சாரியார் குலக் கல்வித் திட்டம் கொண்டு வந்து சந்தித்த எதிர்ப்புப் போலவே, ஒரு மாபெரும் எதிர்ப்பைச் சந்திப்பதிலும் சமாளிப்பதிலும் புதிய அரசு தனது நேரம், நினைப்பு, உழைப்பைச் செலவிடாது, நீதிமன்றத் தீர்ப்புகளை மதித்து நடந்து கொள்ள வேண்டியது அவசர அவசியமாகும்.

வேண்டாம் கல்வியில் விளையாட்டு!

பிள்ளைகளுடைய கல்வியில் விபரீத விளையாட்டு வேண்டாம்; தன்முனைப்புக்கு இடம் தர வேண்டாம். தீர்ப்பை ஏற்று உடனடியாக பள்ளிகளில் பாடப் புத்தகங் களை வழங்குவதே நியாயமானது - இப்போதைய தேவையும்கூட!

கொள்கையளவில் சமச்சீர்க் கல்வித் திட்டத்தை நாங்கள் ஏற்கிறோம் என்று திடீரென்று சில நாள்களுக்கு முன்பு - தீர்ப்பு வருவதற்குமுன் - கூறிய நிலையில், உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செய்யப் போகின்றோம் என்று கூறினால் அது முரண்பாடான நிலை அல்லவா என்று முதலமைச்சர் அவர்கள் யோசிப்பது அவசியம்.

இதை தனது அரசின் தோல்வி என்று கருதாமல், மக்களின் நியாயம் என்று உணர்ந்து உடனடியாக சமச்சீர் பாடப் புத்தகங்களை விநியோகம் செய்ய வேண்டும்.

ஜனநாயகத்தில் தேர்தல்கள் மூலம் வரும் அரசுகள் - ஒரு தொடர்ச்சியே தவிர, ஒன்று செய்ததை மற்றொன்று ஏற்கவே கூடாது என்று பிடிவாதம் காட்டுவதாகாது. திருத்தங்கள் மாற்றங்கள் செய்வதில் தவறல்ல, ஆனால் மாற்றத்திற்காகவே மாற்றம் என்ற பிடிவாதப் போக்கு ஏற்கத்தக்கதல்ல!

முதல் அமைச்சருக்கு வேண்டுகோள்!

69 சதவிகித இடஒதுக்கீடு ஆணையில் எப்படி அரசுகள் ஒத்துப் போகின்றனவோ, அதுபோலவே இந்தக் கல்வித் திட்டத்திலும் ஒத்துப் போகும் நிலைப்பாடு மிகவும் இன்றியமையாதது.

எனவே இந்தக் கல்விக் குழப்பத்திற்கு உடனே முற்றுப் புள்ளி வைத்து, பழைய பாட நூல்களைப் பரப்பிட ஆவன செய்ய வேண்டாமெனவும், சமச்சீர் கல்விப் புத்தகங்களை மாணவர்களுக்கு வழங்கி, உடனடியாக வகுப்புகள் நடைபெற (தேவைப்பட்டால் பள்ளி விடுமுறை நாட்களைக் குறைத்து) ஆவன செய்ய வேண்டுமென தமிழக அரசினை, முதல் அமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறோம்.

--------------கி.வீரமணி, தலைவர் , திராவிடர் கழகம் - “விடுதலை” 19-7-2011

4 comments:

தமிழ் ஓவியா said...

சமச்சீர் கல்வி ஆட்சியாளர்களுக்குக் கலைஞர் அரிய அறிவுரை


சென்னை, ஜூலை 19 - சமச்சீர் கல்வியை அனைத்து வகுப்புகளுக்கும் நடப்பு ஆண்டே தொடர வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆட்சியினர் தங்களுக்குக் கிடைத்த தோல்வி என்று கணக்கிடாமல் எதிர்கால புதிய சமுதா யத்திற்கு வழங்கப்பட்ட வழிகாட் டுதல் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கலைஞர் அவர்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

செய்தியாளர்:- சமச்சீர் கல்வி குறித்து உயர்நீதிமன்றம் அளித்துள்ள இன்றைய தீர்ப்பு பற்றி உங்கள் கருத்து என்ன?

கலைஞர்:- இந்தத் தீர்ப்பை இன் றுள்ள தமிழக அரசு தங்களுக்குக் கிடைத்த தோல்வியாகக் கருதாமல் - ஏழையெளிய நடுத்தர மக்களுக்கும், மாணவர்களுக்கும் கிடைத்த வரப் பிரசாதமாகக் கருத வேண்டும். வழக் காடியதில் கிடைத்த தோல்வி என்று ஆட்சியினர் கணக்கிடாமல் எதிர்கால புதிய சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட ``வழிகாட்டுதல் என்று எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்தியாளர்:- சமச்சீர் கல்வித் திட்டம் என்பது மூன்றாண்டு காலம் நீங்கள் பரிசீலித்து உருவாக்கிய திட் டம். அந்த அடிப்படையில் இத் தகைய தீர்ப்பினை நீங்கள் எதிர் பார்த்தீர்களா?

கலைஞர்:- நான் முதலிலேயே இது யாருக்கும் கிடைத்த வெற்றி தோல்வி அல்ல, எல்லோருக்கும் வழிகாட்டக் கூடியது என்று சொல்லியிருக்கிறேன். இன்றைய அரசு அப்படி எடுத்துக் கொண்டால் அது அவர்களுக்கும் நல்லது, எதிர்கால சமுதாயத்திற்கும் நல்லது.

செய்தியாளர்:- உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகச் சொல்லி யிருக்கிறார்களே?

கலைஞர்:- திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இந்தத் திட்டம் தயாரிக்கப்பட்டபோதே சிலர் இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று அங்கே எல்லாம் இத்திட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை நான் நினைவூட்ட விரும்புகிறேன்.

செய்தியாளர்:- பாடப் புத்தகங்கள் ஏற்கனவே அச்சடிக்கப்பட்டவை விநி யோகிக்கப்படுமா? அல்லது மாற்றங் கள் செய்யப் படுமா?

கலைஞர்:- இந்தக் கேள்விக்கும் சேர்த்துத்தான் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தீர்ப்பிலேயே இந்தக் கேள்விக்கு வழி காட்டப்பட்டுள்ளது.

செய்தியாளர்:- தி.மு.கழகத்தின் செயற்குழு, பொதுக்குழு கூடவிருக்கிறதே, அதற்கான ஏற்பாடுகள் நடை பெற்று வருகிறதா?

கலைஞர்:- ஏற்பாடுகள் நடை பெற்று வருகின்றன. இடையில் இருப்பது இரண்டொரு நாட்கள்தானே? எனவே அதற்கான பணிகள் நடை பெற்று வருகின்றன.

செய்தியாளர்:- நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்பு வந்த பிறகு புதிய வரி விதிப்புகளையெல் லாம் இந்த அரசின் சார்பில் செய்திருக் கிறார்களே, அதிலே சட்டமன்ற உரிமை மீறல் உள்ளது என்பதை சட்டப் பேரவையில் எழுப்புவீர்களா?

கலைஞர்:- ஜனநாயகத்தில் நம் பிக்கை உள்ள எல்லோரும் - சட்ட மன்ற மரபுகளைப் புரிந்து கொண் டிருப்போரும் - இதனைச் சுட்டிக்காட் டாமல் இருக்க முடியாது.

- இவ்வாறு கலைஞர் அவர்கள் பேட்டியில் கூறியுள்ளார். -"விடுதலை” 19-7-2011

தமிழ் ஓவியா said...

சமச்சீர் கல்வி-உயர்நீதிமன்றம் தீர்ப்பு தலைவர்கள் வரவேற்பு


சென்னை, ஜூலை 19-சமச்சீர் கல்வி தொடர் பாக உயர்நீதிமன்ற தீர்ப்புக் குறித்து தலை வர்வர்கள் தெரிவித் துள்ள கருத்துகள் வருமாறு:-

சி.பி.எம்.கட்சி

மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகி ருஷ்ணன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை உயர்நீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தமிழ் நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது. அதே சமயம் தீர்ப்பு குறித்து தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் கருத்து தெரிவிக்கை யில், `உச்சநீதின்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்யும்' என்று தெரிவித்துள்ள தாக தெரிகிறது.

எனவே, மேல்முறை யீட்டு மனு தாக்கல் செய்வதை கைவிட்டு உயர்நீதிமன்ற தீர்ப் பினை ஏற்று சமச்சீர் கல்வித்திட்டத்தின் முக்கிய அம்சமான பொதுப்பாட திட் டத்தை இந்த கல்வி யாண்டிலேயே அமல் படுத்திட வேண்டு மென்று தமிழ்நாடு அரசை மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. -இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சி.பி.அய். கட்சி

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செய லாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்ப தாவது:-

இந்திய கம்னிஸ்டு கட்சி சமச்சீர் கல்வி திட்டம் தேவை என்ப தனையும், காலதாமத மின்றி நடைமுறை படுத்த வேண்டும் என் பதனையும் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள் ளது. தற்போது வெளி யாகி உள்ள உயர் நீதிமன்ற தீர்ப்பு சமச்சீர் கல்வியை நடைமுறை படுத்த வேண்டிய அவ சியத்தை குறிப் பிட்டதோடு, இந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கிய பள்ளிகளில் 60 நாள்கள் ஆனபிற கும் படிக்க வேண்டிய புத்தகங்கள் வழங்கப் படாது இருப்பதால், குழந்தைகளின் கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு தயாரிக்கப் பட்ட பாடபுத்தகங் களை 22ஆம் தேதிக் குள் வழங்கிவிடுமாறு ஆணையிட்டுள்ளது.

அதே தீர்ப்பில் தமிழ்நாடு அரசு பாட திட்டங்கள் செழு மைப்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய மனுவை ஏற்று செம்மைபடுத்தலாம்; அதை வருகிற ஆண் டில் பயன்படுத்தி கொள்ளலாம் என தீர்ப்பளித்திருப்பது, மாணவர்-பெற்றோர் கள், கல்வியாளர்க ளால் வரவேற்கப் படு கிறது. இந்த தீர்ப்பில் தமிழ்நாடு அரசின் நட வடிக்கைகளை தடுப்ப தாகவோ, குறை காண் பதாகவோ எந்த வாச கமும் இல்லாத நிலை யில் மேல் முறையீடு தவிர்க்கப்படவேண்டும் என்ற மக்களின் உணர்வை நாங்கள் வற்புறுத்துகிறோம்.
இவ்வாறு அறிக் கையில் தா.பாண்டி யன் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

காங்கிரஸ்

தமிழ்நாடு காங்கி ரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர் நீதிமன்றம் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இந்த விசயத்தில் அரசு கவுரவம் பார்க்காமல் சமச்சீர் கல்வியை உட னடியாக அமலுக்கு கொண்டு வர வேண் டும் என்று கூறியுள்ளார்.
பா.ம.க.

பா.ம.க. நிறுவனர் மருத் துவர் ராமதாஸ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நடப் பாண்டிலிருந்தே அனைத்து வகுப்புகளுக் கும் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற் கிறேன்.

பள்ளிகளில் பாடங் கள் நடத்தப்படாததால் முதல் பருவத்தேர்வு நடை பெறவில்லை. செப்டம்பர் மாதத்தில் காலாண்டு தேர்வு நடத்த வேண்டு மானால் அதற்கு இப் போதிருந்தாவது பாடங் களை தொடங்க வேண் டும்.

இதை உணர்ந்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யும் திட் டத்தை கைவிட்டு, உயர் நீதிமன்ற அறிவுரைப்படி தமிழ்நாட்டில் உடன டியாக சமச்சீர் கல்வி திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்த வேண் டும்.

இவ்வாறு அறிக்கை யில் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

தமிழ் ஓவியா said...

விடுதலை சிறுத்தைகள் கட்சி

விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு சமச்சீர்க்கல்வி திட் டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் தீர்ப்பளித் திருப்பது பெரும் மகிழ்ச் சியையும், நீதித்துறையின் மீது நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பள்ளி மாணவர் களின் எதிர்காலத்தை கருத்தில்கொண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பை மதித்து, தமிழ்நாடு அரசு பெருந்தன்மையோடு இந்த பிரச்சினையை அணுக வேண்டுமென வும், மேல்முறையீடு செய்யும் நிலைப் பாட்டை தவிர்க்க வேண் டுமெனவும், விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக் கொள்கிறது.

-இவ்வாறு அறிக் கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.