Search This Blog

13.7.11

ஈழத் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் போராளிகளாக உருவெடுக்கும் நிலை ஏற்பட்டது ஏன்? எதனால்?

ஈழத்தமிழர் பிரச்சினையில் திராவிடர் கழகம் - நடந்து வந்த பாதை என்ன?

ஈழத்தில் முக்கிய நிகழ்வுகள் என்ன? இப்பொழுது எங்கே குழப்பம்? எங்கே முட்டுக்கட்டைகள்? திராவிடர் கழக பொதுச் செயலாளர் கலி.பூங்குன்றன் உரை

25-6-2011 அன்று திண்டிவனத்திலும், 26-6-2011 அன்று புதுச்சேரியிலும், 2-7-2011 அன்று ஆவடி திருமுல்லைவாயிலிலும் திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரக் கொடூரன் ராஜபக்சேவைக் கைது செய்யக் கோரும் கூட்டங்களில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஆற்றிய உரையின் தொகுப்பு வருமாறு:

இலங்கை என்பது வரலாற்று ரீதியாக தமிழர்களுக்குச் சொந்தமானது. சிங்களவர்கள்தான் குடியேறியவர்கள். அவர்கள் பெரும்பான்மை என்னும் தன்மையில் தமிழர்களை அடக்கி யாளவும், நசுக்கவும் தலைப்பட்டனர்.

வேறு வேறு பகுதிகள்

1600-1700ஆம் ஆண்டு காலகட்டத்தில் போர்த்துக்கீசியர் இலங்கையை ஆண்டபோது தமிழ் பகுதி வேறு, சிங்களவர் பகுதி வேறு என்று பிரித்துத் தனிமைப் படுத்தித்தான் வைத்திருந்தனர்.

அடுத்து வந்த பிரெஞ்சுக்காரர்கள் ஆட்சியிலும் அதே நிலைதான் தொடர்ந்தது. அதற்குப் பிறகு ஆட்சியைப் பிடித்த பிரிட்டிஷ்காரர்கள்தான் இரண்டு பகுதிகளையும் ஒன்றாக்கி ஆட்சி புரிந்தனர். ஈழத் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இன்று நேற்றல்ல. மிக நீண்ட காலமாகவே பகைமை இருந்து வந்ததுண்டு.

1939 ஆம் ஆண்டிலேயே...

இது குறித்து நீதிக்கட்சியின் நிருவாகக் குழுக் கூட்டத்திலேயே தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளனர்.

"இலங்கையில் உள்ள தமிழ் மக்களை இலங்கை அரசு கொடுமையாய் நடத்தியதையும், அவர்களை நாட்டை விட்டு அப்புறப்படுத்த ஏற்பாடு செய்வ தையும் கமிட்டி கண்டிக்கிறது. அதற்கு ஈ.வெ.ராமசாமி, ராவ் பகதூர் சாமியப்ப முதலியார், சர்.ஏ.டி. பன்னீர்செல்வம், ஊ.பு.அ. சவுந்தரபாண்டியன் ஆகியோர் இலங்கைக்குச் சென்று, அவர்களது நிலைமையை ஆராய்ச்சி செய்து அறிக்கை வெளியிட வேண்டுமாய் இக்கமிட்டி கேட்டுக் கொள்கிறது" என்பதுதான் முதல் தீர்மானமாய் நிறை வேற்றப்பட்டது.

----------------------------(விடுதலை 11-8-1939)

ஏதோ சந்தர்ப்பவாதமாக ஈழத் தமிழர் பிர சினையை எடுத்துக் கொண்டதல்ல திராவிடர் இயக்கம். 1983ஆம் ஆண்டில் மிகப் பெரிய இனப் படுகொலை ஈழத்தில் நடத்தப்பட்டது. சிறைகள் உடைக்கப்பட்டு குட்டிமணி, ஜெகன், தங்கதுரை போன்ற தோழர்களைத் தாக்கி, அவர்களின் கண்களைப் பிடுங்கி பூட்சு காலால் சிங்களக் காடையர்கள் இடறினர். அந்தக் கண்களால் தமிழ் ஈழத்தைப் பார்ப்பதாகக் கனவு காணவேண்டாம் என்று எச்சரித்து அந்தக் கொடுமையைச் செய்தனர்.

தமிழன் மாமிசம் கிடைக்கும்!

தமிழன் மாமிசம் இங்கு கிடைக்கும் என்று விளம்பரப் போர்டு வைத்திருந்தனர் என்றால் அந்தக் கொடுமையைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். அந்தக் காலகட்டத்தில் அகதிகளாகத் தமிழ் நாட்டை நோக்கி ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் வந்து சேர்ந்தனர். போராளிகளும் வெளியேறினர். அவர்களில் பலர் முதலில் வந்து சேர்ந்த இடமே பெரியார் திடல்தான்.

உடனடியாக திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை 18-6-1983 அன்று கூட்டி, தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டன. சென்னை அண்ணாநகர் புல்லாரெட்டி அவென்யூவில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்து மாபெரும் பொதுக் கூட்டத்தை நடத்தியது திராவிடர் கழகம் (2-7-1983). திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் மானமிகு கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற அந்தப் பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் கலைஞர், பழ.நெடுமாறன், பெருஞ்சித்திரனார், பன்மொழிப்புலவர் எம்.ஏ.லத்தீப் போன்றவர்கள் எல்லாம் கலந்துகொண்டு சங்கநாதம் செய்தனர்.

ஈழத்தமிழர் பிரச்சினைக்காக அந்தக் கால கட்டத்தில் முதன் முதலாவதாக நடத்தப்பட்ட மிகப் பெரிய நிகழ்ச்சியாக அது கருதப்பட்டது. அவ்வாண்டு ஆகஸ்டு 15 ஆம் நாளைத் துக்க நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், அனைவரும் கருப்புச் சின்னம் அணிய வேண்டும் என்றும், வீடுகளில் கறுப்புக் கொடியைப் பறக்கவிட வேண்டும் என்றும் பொது இடங்களில் கறுப்புக் கொடியை ஏற்றி, நமது துக்கத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்வது என்றும் சென்னை யில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் (8-8-1993) தீர்மானிக்கப்பட்டு அவ்வாறே கடைப் பிடிக்கப்பட்டது. மதுரையில் ஈழ விடுதலை மாநாட்டை நடத்தியதும் திராவிடர் கழகமே! (1983 டிசம்பர் 17,18)

குமரிநாடன் என்ற ஈழத்தமிழர் ஈழ விடுதலைக் கொடியை அந்த மாநாட்டில் ஏற்றி, லட்சோப லட்சம் மக்களின் எரிமலை உணர்ச்சி வெளிப் படுத்தப்பட்டது. தொடர்ச்சியாக திராவிடர் கழகம் இந்தப் பிரச்சினையில் ஈடுபாட்டு உணர்வுடன் செயல்பட்டு வந்திருக்கிறது.

தோழர்களே,

ஈழத் தமிழர் தந்தை செல்வநாயகம் அவர்கள்

1949ஆம் ஆண்டில் தமிழரசுக் கட்சியைத் தொடங்கினார். எடுத்த எடுப்பிலேயே அவர்கள் ஒன்றும் தனிநாடு கேட்கவில்லை.

சிங்களமே ஆட்சி மொழி!

மொத்தம் 2 கோடி மக்களில் 30 சதவிகிதம் பேர் தமிழர்கள். 1956 ஆம் ஆண்டு சிங்களமே இலங்கை யின் ஆட்சி மொழி என்று சட்டம் நிறைவேற்றப் பட்டது.(Only Sinhala Act 1956)


தமிழ் மாணவர்கள் உயர் கல்வி பெறவேண்டுமானால் சிங்களவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டது (1970). 10 லட்சம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப் பட்டது. தமிழர் வாழும் பூர்வீக இடங்களில் சிங்களவர்களின் குடியேற்றம் திட்டமிட்ட வகையில் செய்யப்பட்டது.

இராணுவத்தில் 100 சதவிகிதம் சிங்களவர்கள்தாம். காவல்துறையில் வெறும் 2 சதவிகிதம்தான் தமிழர்கள். அரசுப் பணிகளிலோ தமிழர்கள் வெறும் 8.3 சதவிகிதம்தான். 1981 ஆம் ஆண்டில் உலகப் புகழ் பெற்ற தலை சிறந்த யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. பழைய ஓலைச் சுவடிகள் உள்பட 97 ஆயிரம் நூல்கள் சாம்பலாக்கப்பட்டன. உலகில் பாசிஸ்டுகள் செய்யும் முதல் காரியம் தமக்கு எதிராக இருப்பவர்களின் அறிவுக் கருவூலங்களை அழிப்பதுதான்! அந்த வேலையைத்தான் சிங்கள அரசும், இராணுவமும் செய்தன.

சிங்களம் மட்டுமேதான் ஆட்சி மொழி என்று சட்டம் செய்ததை எதிர்த்து ஈழத் தந்தை செல்வா தலைமையில் 1956 ஜூன் 5 அன்று பட்டினிப் போராட்டம் கொழும்பு காரிமுகத்திலில் நடத்தப் பட்டது. பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்ட இடத்தில் புகுந்து சிங்களக் காலிகள் தாக்கினார்கள். பக்கத்தில் இருந்த ஆற்றில் தூக்கி எறிந்தனர். ரத்தம் சொட்டச் சொட்ட செல்வா தலைமையில் நாடாளுமன்றத்திற்கே சென்றார்கள்; அங்கு இருந்த பிரதமர் பண்டாரநாயகா அவர்களைப் பார்த்து கேலியாகச் சிரித்தார். சிங்களவர்கள் கொஞ்சம் முரடர்கள், பேசாமல் கலைந்து செல்லுங்கள்! இனிமேல் இங்கு சிங்களம் தான் ஆட்சி மொழி என்று கூறினார்.

சிங்களவர்கள் மட்டுமே குடியரசுத் தலைவர்

பண்டாரநாயகாவிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த சந்திரிகா பண்டாரநாயகா புது சட்டம் ஒன்றைக் கொண்டு வந்தார். இனி அதிபர் தேர்தல் மக்கள் வாக்கு மூலம் நேரடித் தேர்தலாக நடைபெறும்.

இனிமேல் சிங்களவர்களாகவும், மதத்தால் பவுத்தர்களாகவும் இருப்பவர்களும்தான் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும் என்பதுதான் அந்தச்சட்டம். இவ்வளவு கொடுமைகளையும் அனுபவித்த நிலையில் வேறு வழியின்றி தனி ஈழம்தான் இதற்கு நிரந்தரப் பரிகாரம் என்ற முடிவுக்கு வந்தனர். வட்டுக்கோட்டை மாநாட்டில் தான் தனிஈழம் கொள்கையைப் பிரகடனப் படுத்தினார் தந்தை செல்வா (1976).

தனி ஈழம்தான் ஒரே தீர்வு என்று இலங்கை நாடாளுமன்றத்திலேயே எடுத்துக் கூறினார் செல்வா. தனி ஒரு மனிதனாக தனி ஈழம் கேட்கிறீர்களே என்று சிங்கள உறுப்பினர்கள் நையாண்டி செய்தனர்.

அதனை சவாலாக ஏற்று, தனி ஈழம் என்ற பிரச்சினையை முன் வைத்து தேர்தலைச் சந்தித்தனர். 74.2 சதவிகித வாக்குகளைப் பெற்று 18 தமிழ்ப் பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்கள், தமிழர்கள் நாடாளுமன்றத்திற்குள் கம்பீரமாக நுழைந்தனர். அதற்குப் பிறகாவது ஜனநாயகக் கோட்பாட்டை மதித்ததா சிங்கள அரசு? 1983 கொடூரமான படுகொலைக்குப் பிறகு ஈழத் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்தும் போராளிகளாக உருவெடுக்கும் ஒரு நிலை பிறந்தது.

இலங்கையில் நடைபெற்ற படுகொலையை இனப் படுகொலை என்று இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி வெளிப்படையாகவே கூறினார். (16-8-1983). 1984 செப்டம்பர் 23 அன்று வெளிநாட்டில் சுற்றுப் பயணம் செய்த பிரதமர் இந்திரா காந்தி பேட்டி ஒன்றில் கூறினார். இலங்கைத் தமிழர் பிரச்சினையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், அங்குள்ள தமிழர்களில் மிதவாதிகள் கூட தீவிரவாதிகளாகும் விபரீதம் ஏற்படும் என்றாரே!

தமிழ்நாட்டில் ஈழப் போராளிகளுக்கு இராணுவப்பயிற்சிகள் தங்கு தடையின்றி நடை பெற்றன-பிரதமராக இந்திரா காந்தி இருந்த அந்த காலகட்டத்தில்! ராஜீவ்காந்தி பிரதமரான நிலையில்தான் தவறான அணுகுமுறைகள் மேற் கொள்ளப்பட்டன. இந்திய இராணுவம் இலங்கைக்குச் சென்றது. ஈழத் தமிழ்ப் பெண்களை வேட்டையாடுவதுதான்-சூறையாடுவதுதான் இந்திய இராணுவத்தினரின் பொழுது போக்காக இருந்தது. உலகில் வெளிநாடுகளுக்குச் செல்லும் இராணுவ வீரர்கள் இப்படி நடந்துகொள்வது ஒன்றும் புதிதல்ல என்று சமாதானம் வேறு இந்தியத் தரப்பில் கூறப்பட்டது.

பிரதமர் ராஜீவ் மீது தாக்குதல்

1987 ஜூலை 20 அன்று இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தில் கையொப்பமிட இந்தியப் பிரதமர் ராஜுவ் காந்தி இலங்கை சென்றார். இலங்கையில் இராணுவ அணிவகுப்பு மரியாதை தரப்பட்டது (30-7-1983). அப்பொழுது இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த சிங்கள வெறியன் விஜிதரோகன விஜயமுனி என்பவன் துப்பாக்கியின் பின் பகுதியால் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கினான். அந்த அடி தோள் பட்டையில் விழுந்தது. 23 ஆண்டுகளுக்குப் பின் அவன் கூறினான். மரணத்தைக் கொடுக்கும் தாக்குதலைத்தான் கொடுத்தேன். ஆனால், அவரோ உயிர் தப்பிவிட்டார் என்றான். இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை அவன் விரும்பவில்லையாம். அதனால் தான் அந்தத் தாக்குதலைத் தொடுத்தானாம்.

இலங்கை இராணுவச் சட்டப்படி அவனுக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் இரண்டாண்டு முடிவதற்குள்ளேயே இந்தியப் பிரதமரைத் தாக்கிக் கொல்ல முயன்ற அந்தக் கொடியவனை விடுதலை செய்தார் இலங்கை அதிபர் ஜெயவர்த்தனே (1980).

சிறையில் தான் நன்றாக நடத்தப்பட்டேன் என்றும் அவன் புளகாங்கிதத்துடன் கூறினான் என்றால் இதுபற்றி இந்திய அரசும், இந்திய மக்களும் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? இந்தியா-இலங்கை ஒப்பந்தப்படி சிங்கள மொழியோடு தமிழும் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும். ஆனால் கடைசிவரை, அதற்கான சட்டத்தை இயற்றவில்லை-இலங்கை சிங்கள வெறி அரசு! தமிழர்களின் பூர்வீகப் பகுதிகளான வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்று இந்திய-இலங்கை ஒப்பந்தம் கூறுகிறது. அதனையும் சிங்கள அரசின் ஏற்பாட்டின்படி இலங்கை நீதிமன்றம் மூலம் அது செல்லாது என்று ஆக்கப்பட்டுவிட்டது.

2009 மே மாதத்தில் இலங்கையின் முப்படை களும் ஈழத் தமிழர்களை முற்றாக அழித்து முடித்தன. கிளிநொச்சி, முல்லைத் தீவுகளில் வாழ்ந்த 4 லட்சத்து 29 ஆயிரத்து 59 பேர்களில் 2 லட்சத்து 82 ஆயிரத்து 380 தமிழர்கள் மட்டுமே இலங்கைப் படையின் கட்டுப்பாட்டுக்குக் கீழே வந்தனர் என்றால், மீதி ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 679 தமிழர்கள் எங்கே போனார்கள்? கடைசிப் போரில் 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர் என்பதெல்லாம்கூட திட்டமிட்டு மறைப்பதற் காகவே சொல்லப்பட்ட புள்ளி விவரம் என்பது தான் உண்மை! 1983 முதல் 2009 ஆம் ஆண்டு இடைவெளியில் 2 லட்சத்து 15 ஆயிரம் ஈழத் தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். 13 லட்சம் தமிழர்கள் இடம் பெயர்ந்துள்ளனர் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

இவ்வளவு நடந்தும் இந்திய அரசு ஒன்றுமே நடக்காதது போல நடந்து கொண்டது. தமிழ் நாட்டிலிருந்து தமிழர்கள் குரல் கொடுக்கும் போதெல்லாம் , ஆட்சி தரப்பில் பிரச்சினையை எழுப்பியபோதெல்லாம் கடனுக்காக ஏதோ இரண்டு வார்த்தைகளைச் சொல்லுவார்கள். இனிமேல் தமிழர்கள் தாக்கப்பட மாட்டார்கள். இலங்கை அரசு உத்தரவாதம் கொடுத்தது என்று கூறி சமாளிப்பார்கள். உண்மை என்னவென்றால், இலங்கை இராணுவத்தால் போராளிகள் முறியடிக் கப்பட்டதற்கும், அப்பாவித் தமிழர்கள் கொல்லப் பட்டதற்கும் பின்புலமாக, பின்பலமாக இருந்தவை இந்தியா, சீனா, பாகிஸ்தான் நாடுகள்தான். இந்தியா இந்த வகையில் உதவி செய்ததற்கு இலங்கை அரசு தரப்பில் நன்றியும் தெரிவிக்கப்பட்டதே!

மனித உரிமைகளுக்காகவும் தேசிய இன உரிமைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டிய பொதுவுடைமை நாடுகளான சீனாவும், ருசியாவும், கியூபாவும் இப்பிரச்சினையில் நடந்து கொண்ட விதம் வெட்கப்படத்தக்கதாகும். இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை அது என்று சீனா சொல்லுகிறது என்றால் எவ்வளவு பெரிய பொறுப்பற்ற தன்மை. மித்திரபேதம். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் அதிகாரப் பூர்வமான தமிழ் நாளேடான ஜனசக்தியில் (26-5-2009 பக்கம் 8) கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது. லண்டன் டெலிகிராப் ஏட்டின் எழுத்தாளர் ரிச்சர்ட் டிக்சன்ஸ் என்பார் எழுதிய கட்டுரையில், (மொழியாக்கம் முனைவர் பா.ஆனந்த்குமார்)

சீனாவின் ஆயுதம், இந்தியாவின் உளவுத் துறையினர், சிங்கள இராணுவ அதிகாரிகள், சிங்கள இன வெறித் தலைவர்கள் ஆகியோர் ஒன்று சேர்ந்து நிகழ்த்திய மிகக் கொடூரமான போர்-பல்லாயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் உயிரிழப்பிற்குக் காரணமாகிவிட்டது என்று ஜனசக்தி கட்டுரை கூறுகிறதே! இதன் பொருள் என்ன? இந்தியவில் உள்ள இடது சாரிகள் இந்தியாமீது குறை கூறுவது ஒரு புறம் இருக்கட்டும். சீனாவும், ருசியாவும் மிகக் கேவலமாக மனித இனப் படுகொலைக்கு (Genocide) துணை போயுள்ளனவே - இதுவரை வெளிப் படையாகக் கண்டித்தது உண்டா?

சர்வதேசியம் பேசும் காம்ரேடுகள் உலக அளவிலான கம்யூனிஸ்டுக் கட்சித் தலைவர்களுடன் இதுவரை தொடர்பு கொண்டார்களா? அழுத்தங் களைக் கொடுத்ததுண்டா? இன்றைக்குக் கூட ராஜபக்சே போர்க்குற்றவாளியாக அறிவிக்கப்பட வேண்டும் என்ற குரல் உலகெங்கும் குமுறி எழுந்துள்ளது - எரிமலையாக வெடித்துள்ளன! ஆனால் கம்யூனிஸ்டு நாடுகள் துரோகம் செய்கின் றனவே! காலந்தாழ்ந்தாவது அய்.நா மன்றம் இதில் கொஞ்சம் அக்கறை காட்ட முனைந்துள்ளது. மூவர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்து அறிக்கை கேட்டது. அவர்களும் அறிக்கையை அய்.நா. செயலாளர் பான் -கீ-மூனிடம் கொடுத்துவிட்டனர்.

-----------------தொடரும் ”விடுதலை” 13-7-2011

0 comments: