Search This Blog

4.4.09

101 வயதில் வாழ்ந்து வரும் பெரியார் பெருந்தொண்டரைச் சந்தியுங்கள்


இவர்தம் இளமையின் இரகசியம் என்ன?

101 வயதை எய்திய ஒரு பெரியார் பெருந்தொண்டரைச் சந்திக்கப் போகிறோம். இந்த வயதில் எப்படியிருப்பார்? நிதானம் இருக்குமா? மறதி நோய் தாக்கி படுக்கையில் வீழ்த்தியிருக்குமா? என்ற கேள்விகளுடன் சென்னை தாம்பரத்தையடுத்த பொத்தேரியில் உள்ள அவர் இல்லத்துக்கு திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்களும் பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் ஏ. இராசசேகரன் (தலைவர், தேசிய மருத்துவத் தேர்வாணையம்) ஆகியோர்களுடன் கடந்த வியாழன் மாலை (2.4.2009) சென்றோம்.

அந்தப் பெரியார் பெருந்தொண்டர் என்.வி. இராமசாமி அவர்களோ கருப்புச் சட்டையுடன், கழகக் கொடி அடையாளத்துடன் கம்பீரமாக அமர்ந்திருந்து வரவேற்றார். தமிழர் தலைவரைக் கண்டவுடன் அளவற்ற மகிழ்ச்சி - ஆனந்தக் கண்ணீர்தான் - 101 வயதிலும் கொள்கை உரத்துடன் காட்சியளிக்கும் அந்தப் பெரியார் பெருந் தொண்டருக்கு சால்வை போர்த்தி, பழங்கள் அளித்து தம்முடைய வணக்கத்தையும், அன்பையும் வெளிப் படுத்தினார் தமிழர் தலைவர்.

அந்தத் தன்மான வீரரோ திருப்பி எங்கள் மூவருக்கும் சால்வை அணிவித்து அன்பைப் பரிமாறிக் கொண்டார்.

அவர் பிறந்த ஊர் சிதம்பரத்திற்குத் தென் மேற்கே 8 கிலோ மீட்டர் தூரத்தில் கொள்ளிடக்கரை ஓரத்தில் ஏழைகளின் ஊட்டி என்று பெருமையாகப் பேசப் படும் பச்சைப் பசேலெனக் கண்ணுக்கு குளுமையூட்டும் நளன்புத்தூர் என்னும் கிராமமாகும். பெற்றோர்கள் சி. வைத்தியலிங்கம் புலிக்குத்தியார் - செல்லக்கண்ணு ஆயாள்.

அண்ணன் ஒருவர், தம்பி ஒருவர், தமக்கை ஒருவர். பிறந்த நாள் 21.9.1909.

உள்ளூரில் படிப்பதற்குப் பள்ளியில்லை. சிதம்பரத்தை யடுத்த அம்மாபேட்டையில் தங்கிப் படித்தார். சிதம்பரத்தில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பு எஸ்.எஸ்.எல்.சி., வரை படித்தார். அதன்பின் ஆசிரியர் பயிற்சி பெற்றார். தாம் படித்த சிதம்பரம் பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலேயே முப்பது ஆண்டுகளுக்குமேல் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். சாரணர் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு, அப்பள்ளியின் சாரணர் ஆசிரியராகவும் பணியாற்றினார்.

துணைவியார் பாக்கியம் என்ற வாலாம்பாள் செல்வக் குடும்பத்தில் பிறந்தவர் - திருமணம் ஆனபின் துணைவரின் வருவாய்க்கு ஏற்ப குடும்பத்தினை நடத்திய பெருமைக்குரியவர். விருந் தோம்பல் அந்தக் குடும்பத்தின் தனிப் பண்பு! பாக்கியத்தைக் கைப்பிடித்த நான் பாக் கியசாலியாக வாழ்ந்தேன் என்று பெருமை பொங்க இந்த வயதிலும் கூறுகிறார் எட்டுப் பிள்ளைகள் - மகன் ஒருவர் - பி.ஆர். இளங்கோ, ஆயுள் காப்பீட்டுக் கழகத்தில் (எல்அய்.சி) அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் இணையர் அல்லியங்கோதை.

நாங்கள் அந்த இல்லத்துக்குச் சென்ற போது உபசரித்த பாங்கு உயர்தரமானது அப்படியொரு அன்பும் உபசரிப்பும்.

101 வயது பெரியார் பெருந்தொண்டரை கண்ணின் இமையாகக் கவனித்து வருவது ஒரு எடுத்துக்காட்டாகும்.

வசதி வாய்ப்புகள் உள்ளவர்கள்கூட முதுமையடைந்த தம் பெற்றோர்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கும் மகன்களைப் பார்க்கிறோம். அந்த வகையில்கூட இது ஒரு எடுத் துக்காட்டான குடும்பம் என்பதில் அய்யமில்லை.

சாரணர் இயக்கத்தில் சாதனை படைத்தவர். அதற்காக சில்வர் எலிபெண்ட் என்ற தேசிய விருதினை குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் அவர்களிடமிருந்தும், சில்வர் ஸ்டார் விருதினை குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவி ரெட்டி அவர்களிடமிருந்தும் பெற்றவர். நல்லா சிரியர் விருது பெற்ற சிறப்புக்குரியவர்.

அருவி அய்வது குடி என்ற இடத்தில் 25 ஏக்கர் நிலப்பரப்பில் தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் ஒரு சாரணர் பயிற்சி நிலையம் அமைத்து அதற்கு என்.வி.ஆர். பூங்கா எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது என்றால் பெரியார் பெருந்தொண்டர் என்.வி. இராமசாமி அவர்களின் புகழை - தொண்டை - அர்ப்பணித்து உழைக்கும் தன்மையை உணர்ந்து கொள்ளலாம்.

101 வயதில் தட்டுத்தடு மாற்றம் இல்லாமல், பழைய நினைவுகளை இன்று காலை நடந்தது போல அவர் நினைவு கூர்ந்து பேசியது ஆச்சரிய மானதாகவேயிருந்தது.

தந்தை பெரியார் போலவே லென்சை வைத்து விடு தலையைப்படிக்கிறார்.

சிதம்பரம் வரும் போதெல்லாம் தம் இல்லத்தில் தந்தை பெரியார் அன்னை மணியம்மையார் ஆகியோர் தங்கி விருந்துண்டு சென்ற அந்தக் காட்சியை நெகிழ்ச்சியுடன் கூறினார். எங்களுக்கு கிடைத்த பெரும் பேறு அவை என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

எனது துணைவியாரின் சமையல் அய்யாவுக்கு மிகவும் பிடிக்கும் மிகவும் சுவைத்துச் சாப்பிடுவார். ருசியாக மட்டுமல்ல - மணமாகவும் சமைக்கிறீர்களே! - அது எப்படி என்று அய்யா கேட்டார். அது எங்கள் குடும்பபாரம்பரியச் சொத்து என்பார் என் துணைவியார். ஒரே கலகலப்பாக இருக்கும். பெரியார் கொள்கையில் ஈடுபாடு கொண்டது எப்படி என்ற கேள்விக்குப் பதில் சொன்னார்.

ரிஜிஸ்ட்ரார் பூவராகன் என்றால் இயக்கத்தில் எல்லோருக்கும் தெரியும். பதிவுத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர். எந்தவூருக்குப் பணிக்குச் சென்றாலும் திராவிடர் கழகத்தை வளர்ப்பதும், கழக ஏடுகளைப் பரப்புவதும் தான் அவரின் முக்கிய வேலை தந்தை பெரியார் அவர்களின் அன்புக்கு மிகவும் பாத்திரமானவர். (அவரின் மகன்தான் பிரபல மருத்துவ நிபுணர் டாக்டர் பூ. பழனியப்பன்) அவர் யார் என்றால் என் சகோதரியின் மகன். பெரியாரைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார். அந்த ஈடுபாட்டில் நாங்களும் பெரியார் பெரியார் என்று தொடக்க முதலே இக்கொள்கையில் அய்க்கியமாகி விட் டோம் என்றார்.

எந்த மாவட்டத்தில் எங்கு திராவிடர் கழக மாநாடுகள் நடந்தாலும் கண்டிப்பாகச் சென்று விடுவேன். சிதம்பரம் நகர திராவிடர் கழகத் தலைவராகவும், மாவட்ட திராவிடர் கழகத் தலைவராகவும் இருந்திருக்கிறேன். மத்திய கமிட்டி உறுப்பினராகவும் இருந்திருக்கிறேன். இப்பொழுது என்னால் நடமாட முடியவில்லை என்றாலும் அந்த உணர்வோடு கொள்கை யோடு தெளிவாக இருக்கி றேன் என்றார்.

கழகத்தில் இடை இடையே பிரச்சினைகள் வந்த போதெல்லாம் மாற்றுக் கருத்துடன் என்னிடம் பேச யாரும் வர மாட்டார்கள். அவர்களுக்குத் தெரியும். அவர் உறுதியானவர் - அவரிடம் பேசினால் வீண் வம்புதான் என்று கூறி ஒதுங்கிப் போய் விடுவார்கள் என்றும் கூறினார்.

பெரியார் கொள்கையில் தீவிரமாக இருந்ததால் எதிர்ப்பு ஏதாவது இருந்ததா? தாங்கள் அதனைச் சந்திக்க வேண்டியிருந்ததா? என்று கேட்டபோது அதெல்லாம் ஒன்றும் கிடையாது! நான் ஒரு முரடன் - என்னிடம் யாரும் வாலை ஆட்ட மாட்டார்கள்! என்று பளிச் சென்று கூறினார்.

சுயமரியாதை இயக்கப் பொன் விழாவின்போது, எனக்குப் பெரியார் பெருந் தொண்டர் விருதினைக் கொடுத்தார்கள். அப்பொழுது அம்மா (மணியம்மையார்) இருந்தார்கள்.

நான் ஒரு முறை அய்யாவிடம் சொன்னேன். நான் பெரியார் பெருந்தொண்டராக இருக்க விரும்புகிறேன் என்றேன். நீங்கள் பெருந்தொண்டராகவிருந்தால் யாருக்கு என்ன நஷ்டம்? என்று பதில் சொன்னார் பெரியார்.

நீங்கள் பெரியார் பெருந் தொண்டர் இல்லையென்றால் வேறு யார்தான் இருக்க முடியும்? என்று அம்மா அவர்கள் சொன்னார்கள் என்பதையும் ஞாபகமாகச் சொன்னார்.

ஒவ்வொரு முறையும் அய்யா எங்கள் வீட்டுக்கு வந்து போகும் போதெல்லாம் மிக்க நன்றி அய்யா, எங்களுக்கு மிகப் பெருமை உங்கள் பொன்னான நேரத்தை நாங்கள் எடுத்துக் கொண் டோம் என்பேன்.

அப்பொழுது பெரியார் அய்யா சொல்லுவார்கள் நோ நோ உங்கள் வீட்டுக்கு வந்தது எனக்கு மகிழ்ச்சி! உங்களுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். விடு முறைக்கு வந்து விட்டுப் போவதுபோல் வந்து விட்டுப் போகிறேன் என்பார். (அதைச் சொல்லும்போது என்.வி.ஆர். அவர்கள் மிகுந்த நெகிழ்ச்சி யுடன் காணப்பட்டார்)

இந்தத் தலைவரை அவரின் தொண்டர்கள் மட்டுமல்ல; மக்கள் நேசித்தது போல வேறு எவரையும் நேசித்திருக்க முடியாது. அப்படி ஒரு பாச மழை நெகிழ்ச்சி நீரூற்று!

புரட்சிகரமான கொள்கைகளைச் சொன்ன தலைவரை இந்த அளவு மக்கள் நேசித்தனர் என்பது ஒரு அதிசயம்தான்.

சுவையான தகவல் ஒன்றை என்.வி.ஆர். சொன்னார்.

சிதம்பரத்தில் புதுவீடு கட்டினேன். அய்யாவை அழைக்க வேண்டும்; மின் விளக்கை அவர் வந்து அவர் தான் ஏற்ற வேண்டும் என்பது என் ஆசை. பொருத்தமாக சிதம்பரத்துக்கு மாநாடு ஒன்றுக்குத் தந்தை பெரியார் வந்தார். நான் அழைத்தேன். அன்புடன் ஒப்புக் கொண் டார். அய்யா வரும் வரைக்கும் மின்சார விளக்கினை எரியவிடவில்லை. அரிக்கேன் விளக்குடன் தான் காத்துக் கொண்டிருந்தோம் என்று சொன்னார்.

இதனைப் பக்தி என்று சொல்ல முடியாது. அந்தக் கொள்கையின்மீது வைத்த அசைக்க முடியாத பற்றும், உறுதியும்தான் அந்தத் தலைவர் மீதான மதிப்பாக உயர்ந்து விடுகிறது என்பதுதான் அதற்குள்ளிருக்கும் வீரிய விதையாகும்.

விடுதலையைப் பற்றிச் சொல்லும்போது, தொடக்க கால முதலே நான் படித்து வருகிறேன். விடுதலை இல்லையென்றால் கழகம் ஏது? தமிழர்கள் தான் ஏது? அதுவும் நமது ஆசிரியர் அவர்கள் (மானமிகு வீரமணி அவர்களைக் குறிப்பிடுகிறார்.) விடுதலையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அதன் வளர்ச்சிக்கு அதிகமாக உழைத்து வருகிறார்.

இதை நான் சொல்லவில்லை - அய்யா அவர்களே பல முறை கூறியிருக்கிறார். வக்கீல் தொழிலில் நல்ல சம்பாத்தியத்தை விட்டுவிட்டு வீரமணி வந்து கழகத்துக்காக உழைக்கிறார் என்று அய்யா பலமுறை சொல்லியிருக்கிறார் என்றுகூறினார்.

உங்கள் இளமையின் இரகசியம் என்ன? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில்.

நான் மாணவனாக இருந்தபோது விளையாட்டுப் போட்டிகளில் முதன்மை யானவன். ஓட்டம், தாண்டு தல் எல்லாவற்றிலுமே முதல் பரிசு எனக்குத்தான். உடற் பயிற்சி செய்வேன். அதுவும் சாரணர் இயக்க ஆசிரியராக நான் இருந்ததால் பயிற்சிகளை நானே செய்து காட்டி மாண வர்களை செய்யச் சொல்வேன். அதனால் உடல் நல்ல முறை யில் அமைந்தது. உணவு விஷயத்திலும் ஒரு கட்டுப் பாடு உண்டு. எந்தக் குளிராக விருந்தாலும் இன்றைக்கு வரைகூட குளிர்ந்த நீரில்தான் குளிப்பேன். குடிப்பது மட்டும் வெந்நீர்தான். இவற்றோடு நல்ல பழக்கங்களும் பண்பு களும் சேர்ந்தால் என்றும் இளமையாகயிருக்கலாம் என்கிறார். (இளைஞர்கள் எண்ணிப் பார்ப்பார்களாக!)

பெரியார் கொள்கையை ஏற்றுக் கொண்டதால் எப்படி இருக்கிறீர்கள்? என்ற கேள்விக்கு மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறேன். பெரியார் பெருந்தொண்டராகவேயிருக்கிறேன். வேறு என்ன வேண்டும்? என்று நம் மையே திருப்பிக் கேட்கிறார்.

-------------------நேர்காணல்: - கலி. பூங்குன்றன் (2.4.2009)

3 comments:

Unknown said...

101வயதில் வாழும் நாத்திகரின் வாழ்க்கை மற்ரவர்களுக்கு எடுத்துக்காட்டு. கடவுள் இல்லையென்று சொல்லி வாழ்ந்து வரும் அவர் ஆத்திக மோசடிகளுக்கு ஆதாரம்
. அவர் இன்னும் பல ஆண்டு வாழ்க

Thamizhan said...

கொள்கையில் முரடர்கள்
குணத்திலோ குன்றுகள்!
பெரியாரின் தொண்டர்கள்
மகிழ்ச்சியில் வாழ்பவர்!
பணமும் பதவியும்
தூசியாய் எண்ணியே
பெரியார் தொண்டே
புகழென வாழ்பவர்!

தமிழ் ஓவியா said...

தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி இன்பா