Search This Blog

13.9.11

பரமக்குடி துப்பாக்கிச் சூடும்-நமது கவலையும் --கி. வீரமணி


தமிழர் தலைவரின் வேண்டுகோள்


பரமக்குடியில் துப்பாக்கிச் சூடு நடந்தது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

ஆதி திராவிடர் சமுதாயத்தவரில் பள்ளர் என்ற பிரிவினைச் சேர்ந்த தியாகி இமானுவேல் அவர்களுடைய நினைவு நாளை நடத்தி அவரது நினைவைப் போற்றுவது அண்மையில் சில ஆண்டுகளாக பரமக்குடி - இராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளிலும், தென் மாவட்டங்களில் சில பகுதிகளிலும் நடக்கும் ஆண்டு வழமை என்பது தமிழக அரசின் காவல்துறை அறியாததல்ல.

அதில் ஏதும் அசம்பாவிதங்களோ, கலவரங்களோ நிகழக் கூடாது என்பதில் மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய மகத்தான பொறுப்பு தமிழக அரசின் உள்துறைக்கு - காவல்துறைக்கு (உளவுத்துறையும் இதில் முக்கிய பங்காற்றி வருமுன் காக்க எச்சரிக்கும் கடமை) மகத்தானது.

தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் பலி!


அப்படியிருக்கையில் கடந்த 11-ஆம் தேதி அன்று பரமக்குடியில் துப்பாக்கிக் சூடு நடைபெற்று அதில் தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞர்கள் - ஒரு பாலிடெக்னிக் மாணவர் உள்பட பலர் பலியானார்கள் என்ற செய்தி நம் நெஞ்சை நிலை குலையச் செய்யும் கொடுமை யான செய்தியாகும்.

இது எதனால் ஏற்பட்டது என்று செய்திகள் கூறும்போது, தமிழக முன்னேற்றக் கட்சியின் தலைவரான சகோதரர் ஜான் பாண்டியன் அவர்கள் மரியாதை செலுத்தச் செல்லும்போது, தூத்துக்குடி அருகில் வல்லநாட்டில் கைது செய்யப்பட்டார் என்பதை அறிந்த ஆத்திரமுற்ற இளைஞர்கள் ஆவேசங் கொண்டு வன்முறைகளில் ஈடுபட்டனர் என்று வருகிறது.

எதிர் விளைவுகள்பற்றி காவல்துறை சிந்தித்து இருக்க வேண்டாமா?

அவரை கைது செய்தால் அந்த மரியாதை செலுத்துவதைத் தடுப்பதால் ஏற்படும் என்னென்ன மாதிரி எதிர் உணர்வுகள் என்பதை காவல்துறை குறிப்பாக உளவுத் துறையினர் உள்பட முன்கூட்டி ஆய்வு செய்து முதல் அமைச்சருக்கு விளக்கியிருக்க வேண் டாமா? (கைதுக்கு என்ன அவசியம் என்பதும் விளக்கப்படவில்லை)

துப்பாக்கிச் சூடு நடத்துவதற்குமுன் முறையான நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை?

அதோடு ஆத்திர மூட்டப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூக இளைஞர்களின் செயல்களை தடுக்க கண்ணீர்ப் புகை, தடியடி போன்ற குறைந்தபட்ச தடுப்புமுறைகள் கையாளப் பட்டிருக்க வேண்டாமா?

அப்படியே நிலைமைக் கட்டுக் கடங்காது எல்லை மீறிவிட்டது; காவல் துறையினரும் தாக்கப்பட்டு, பேருந்துகள் எரிக்கப்படுகின்ற விபரீதத்தினால் துப்பாக்கிச் சூடு செய்தவர்கள், முதலில் கூட்டத்தை - கலவரக் கும்பலைக் கலைந்து செல்ல வானத்தை நோக்கி சுட்டு, பயமுறுத்தி கலைந்து ஓடும்படிச் செய்திருக்க வேண்டாமா?

அப்படிச் செய்திருந்தால் 7 உயிர்கள் பலியாகி இருக்காதே - வாழ வேண்டிய இளைஞர்கள் அதில் தாழ்த்தப்பட்ட சமுதாய இளைஞர்கள் வாழ்வு இப்படி முடிந்திருக்காது. 75 பேர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலை உருவாகுமா?

முதல் அமைச்சரின் அறிக்கை


நேற்று சட்டமன்றத்தில் இந்த விவாதத்தின் போது, முதல் அமைச்சர் அவர்கள் அளித்த விளக்கத்தில் பேருந்துகள் கொளுத்தப்பட்டு, பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ள நிலையில் தான் துப்பாக்கிச் சூடு நடைபெற வேண்டிய தாயிற்று என்று கூறி முதலில் மாவட்ட வருவாய்த் துறை அதிகாரி விசாரணை நடைபெறும் என்று கூறி, பிறகு கம்யூனிஸ்ட் உறுப்பினர்களும் மற்ற எதிர் கட்சியினரும் கூறியதை ஏற்று ஓய்வு பெற்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.

நமது கவலை


நமக்கு இதில் உள்ள கவலை எல்லாம் உயிர்ப் பலிகள் என்ற வேதனையோடு, எங்கே இது பல விஷமிகளால் - ஜாதி வெறியர்களால் - ஜாதிக் கலவரமாக தென் மாவட்டங்களில் வெடித்து விடுமோ என்ற கவலைதான்.

எந்த ஜாதியினரானலும் மனித உயிர்கள் பலி என்பதை பகுத்தறிவுவாதிகள் உணர்ந்தே கவலை கொள்கின்றனர்.

தமிழ்நாடு அமைதிப் பூங்கா - அதுவும் பெரியார் மண்ணில் ஜாதிக் கலவரம் என்று நடந்து அமைதிப் பூங்கா அமளிக் காடாக ஆகி விடக் கூடாது என்பதே நமது கவலை! எனவே முழு அமைதி திரும்ப வேண்டும்.

இதில் முதல் அமைச்சர் அவர்கள் அறிவித்துள்ள இழப்பீடு ஆறுதல் தொகையை மேலும் கூடுதலாக அந்த குடும்பங்களுக்குத் தர வேண்டும் என்பது அவசர அவசியம். ரூ.10 லட்சம் ஆக உயர்த்தினால் நல்லது.

முதல் அமைச்சர் அண்ணா என்ன சொன்னார்?


ரயில் பெட்டிகள் எரிக்கப்பட்டபோது (1967-இல் அண்ணா ஆட்சியில்), முதல்வர் அண்ணா சொன்னார்: எரிந்த பெட்டிகளை மீண்டும் கட்டிக் கொள்ள முடியும்; உயிர்களை இழந்தால் திரும்பவும் பெற முடியுமா? என்ற கருணை பொங்கும் மனிதநேயத்துடன் கூறினார் அன்றைய முதல் அமைச்சர் அண்ணா. அதை இப்போது நினைவூட்டுவதற்குக் காரணம், ஆட்சியாளர்மீது குற்றம் சுமத்த அல்ல; மனிதாபி மானத்தை அலட்சியப்படுத்தும் காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கைபோல் முதல்வர் அண்ணாவின் இதய மொழிகளை நினைவூட்டி கடமையாற்றிட வற்புறுத்த வேண்டும்.

காஷ்மீரைப் பாருங்கள்


மிகப் பெரும் அளவில் வன்முறைக் களமாகக் காட்சியளிக்கும் ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் கலகக் கும்பலைக் கலைக்க, பச்சை நிறத் தண்ணீரைப் பீச்சி அடிக்கும் முறையை இன்றைய அதன் இளம் முதல் அமைச்சர் உமர் அப்துல்லா அவர்கள் நடைமுறைப்படுத்துவதைப் பாராட்டி இரண்டு நாள்களுக்கு முன் செய்திகள் வந்துள்ளன.

டில்லியில் எப்போதும் தண்ணீர்க் குழாய் பீச்சி அடித்து கூட்டத்தைக் கலைத்து உயிர்ச்சேதம், பொருட்சேதத்தைத் தவிர்க்கும் முறைபற்றி இங்குள்ள காவல்துறை யோசிக்க, நடை முறைப்படுத்த நமது முதல் அமைச்சர்கள் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

நமது ஆழ்ந்த இரங்கல்


அடக்குமுறை, சிறைவாசங்கள் அதிகமான எதிர் விளைவுகளை உருவாக்குவது உலகெங்கும் நடைமுறையாகி வரும் நிலையில், எந்த முடிவு எடுப்பதற்கு முன்பும் ஆட்சியாளர்கள் நிதானமாக யோசித்து அதன் பாரதூர விளைவுகளை ஆராய வேண்டும் என்பதே நமது வேண்டுகோள். பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

------------------கி. வீரமணி தலைவர் திராவிடர் கழகம் --"விடுதலை” 13-9-2011

0 comments: