Search This Blog

7.9.11

பெரியாரின் கலை இலக்கியச் சிந்தனைகள்

நாடகங்களை திருத்தி மக்களுக்குப் பயன்படும்படி செய்ய நாடகாசிரியர்கள் முன்வரவேண்டும்

பெரியார் கருத்தை விளக்கி தமிழர் தலைவர் பேச்சு

நாடகங்களை திருத்தி மக்களுக்குப் பயன்படும்படியாகச் செய்ய நாடக ஆசிரியர்கள் முன்வரவேண்டும் என்று பெரியார் கூறிய கருத்தை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கமளித்தார்.

தந்தைபெரியாரின் கலை இலக்கியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் இரண்டாம் தொடர் சொற்பொழிவு 11.8.2011 அன்று இரவு சென்னை பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:


பகுத்தறிவு இதழில் (16.9.1934) தந்தை பெரியார் ஆற்றிய உரையை மேலும் படிக்கின்றேன்.

ஆரியப் புராணங்களில்...

அப்படியில்லாமல் இருந்தால் தகுந்த மாறுதல் ஏற்பட இடமிருக்காது. ஆரியப் புராணங்களில் ஆரியர்களல்லாதவர்களை குரங்கு, அசுரன், ராட்சசன், சண்டாளன், பறையன் என்பன போன்ற வார்த்தைகளையும் அது உபயோகிக்கும் முறையையும் பழக்கத்தில் இருந்து வரும் மாதிரியையும் பார்த்தால் இந்த சரித்திரம் படிப்பதில் அவசியமான மாறுதல் ஏற்பட உதவி செய்யுமா என்பது சந்தேகந்தான்.

நிற்க இச்சரித்திரம் உண்டாக்கிய தோழர் புதுவை பாரதிதாசனை நாம் போற்றிப் பாராட்ட வேண்டும். அவர் உணர்ச்சியுடன் உண்டாக்கி இருக்கிறார்.

பல நாடகங்கள் தொடர வேண்டும்

இன்னமும் இது போல் பல நாடகங்கள் உற்பத்தி செய்ய வேண்டும். பாத்திரர்களுக்கு கற்பித்த தஞ்சை தோழர் டி.என்.நடராஜன் அவர்களின் ஆசிரியத் தன்மை மிகவும் போற்றத்தக்கது.

அவர் 20 வருஷமாய் பொது நல சேவையில் இருந்து வருகிறார். ஜெயிலுக்கும் சென்றவர். அவர் கள் இருவருக்கும் இந்த இரண்டு பதக்கங்களை சீர்திருத்த நாடக சங்கத்தார் சார்பாய் சூட்டுகிறேன்.

என்று கூறி பதக்கங்களை அய்யா அவர்கள் வழங்கியிருக்கின்றார். இந்த புதிய நாடகத்துக்கு இவ்வளவு தோழர்கள் விஜயம் செய்து கௌரவித்ததற்கும், நாடக பாத்திரர்களுக்கும் சபையாருக்கும் ஊக்கமளித்ததற்கும் நான் நன்றி செலுத்துகிறேன் என்று அய்யா அவர்கள் பேசியிருக்கிறார்

அம்பலூரில் நாடகம்

நாடகத்தைப் பற்றி சென்னையில் அய்யா அவர்கள் பேசியிருக்கின்றார். இதனையடுத்து கிராமங்களிலும் பேசியிருக்கின்றார். இதை ஒரு பிரச்சார இயக்கமாகவே அய்யா அவர்கள் நடத்தியிருக்கின்றார். அதே போல இன்னொரு நாடகத்திற்கு பெரியார் தலைமை தாங்கி பேசுகிறார். 19.7.1936 குடிஅரசு இதழில் வெளிவந்த செய்தி. அதைப் படிக்கின்றேன்.

தோழர் ஈ.வெ.ரா. தலைமையில் சீர்திருத்த நாடகம்.

இரணியன் அல்லது இணையற்ற வீரன் சென்ற 4.7.1936ஆம் தேதி இரவு 10 மணிக்கு வாணியம் பாடிக்கு அடுத்த அம்பலூரில் அமைந்திருந்த கொட்டகையில் இரணியன் அல்லது இணையற்ற வீரன் என்ற சீர்திருத்த நாடகம் விமரிசையாய் தோழர் அர்ஜுனன் உபாத்திமையின் கீழ் நடத்திக் காண்பிக்கப்பட்டது.

(இது வேறு ஒரு ஆசிரியர். இது ஒவ்வொரு நாடகத்திற்கும் ஒவ்வொரு ஆசிரியர் சொல்லிக் கொடுப்பார்கள்.)

தோழர் அர்ஜுனனின் இரணியன் வேடம்

இவ்வையத்திற்கு (இதை எப்படி எழுதுகிறார்கள் பாருங்கள். அந்த காலத்தில்) தோழர்கள் ஈ.வெ.ராமசாமியும், சவுந்திரபாண்டியனும், சேலம் ஜில்லா போர்டு, மெம்பர் கிருஷ்ணமூர்த்தியும், விஜயம் செய்திருந்தார்கள். தோழர் எஸ்.அர்ஜுனன் இரணியன் வேடம் தரித்து நாடகத்தை நடத்திக்காண்பித்தது மிகவும் பாராட்டத்தக்கதாய் இருந்தது. மேற்படி நாட கத்தை நடத்திய பாரதி சபையாரால் உபசாரப் பத்திரம் தோழர் ஈ.வெ.ராமசாமிக்கு வாசித்துக் கொடுக்கப்பட்டது. தலைவர் நாடக முடிவில் ஓர் அரிய பிரசங்கம் செய்தார். அவர் பேசியதாவது:

எனக்கு அர்ஜீனன் போலவே நடக்க ஆசை

இன்று நாடகம் நடத்திய தோழர் அர்ஜுனன் வெகுவீரமுடன் நடந்து கொண்டதைக்காண எனக்கும் இரணியனாக வேஷம் போடலாமா என்ற ஆசை என்னை அறியாமல் ஏற்படுகிறது. (சிரிப்பு-கைதட்டல்).
(அய்யா அவர்கள் நாடகத்தைப் பார்த்துவிட்டு சொல்லுகிறார். இரணியன் என்பவர் அவ்வளவு வீரத்தோடு நடித்திருக்கின்றார். இது தான் சிறப்பு. நடிப்பு பார்வையாளர்களை எப்படி ஆக்கியிருக்கிறது பாருங்கள்.
பெரியாரே, இரணியன் வேஷம் போட்டு நடிக்க ஆசைப்படுகின்றார். அய்யா அவர்கள் பார்ப்பனர்களைப் பொறுத்த வரையிலே ஆரியர்களைப் பொறுத்தவரையிலே தத்துவரீதியாகவே இரணியன் தான். அப்படிப்பட்ட நிலையில் இருக்கும்பொழுது அய்யா அவர்கள் சொல்லுகிறார் பாருங்கள்.)
ஆனால் தாடி இருக்கிறதே என்ற யோசனையால் கை விட்டேன் என்று சொல்லுகின்றார். (பலத்த கைதட்டல்-சிரிப்பு)
இதிலே கூட அய்யா அவர்களுக்கு இருக்கின்ற நகைச்சுவையைப் பாருங்கள்)

நாடகங்கள் எல்லாம் குறைந்தது இரண்டு மணிநேரத்தில் முடிவு பெறவேண்டும். (அய்யா அவர்கள் எப்படி இலக்கணம் வகுத்திருக்கிறார் பாருங்கள். இரண்டு மணி நேரத்தில் நாடகம் முடிய வேண்டும். பொதுக்கூட்டமே இன்னும் குறைவான நேரத்தில் முடிக்கப்படவேண்டும். எல்லாவற்றையும் ஆழமாக அய்யா அவர்கள் சிந்தித்திருக்கின்றார். எல்லாவற்றிலும் அறிவியல் பூர்வமான அணுகு முறையை வைத்திருக்கின்றார்கள்.)

கதையின் சுவாரசியம் குறையக் காரணம்

மத்தியில் பாட்டுக்களைக் கொண்டு வந்து நுழைப்பதால் கதையின் ஸ்வாரஸ்யம் குறைந்து போகிறது. உணர்ச்சி மத்தியில் தடைப்படுகிறது. நாடகங்களில் இரண்டு விதமுண்டு என்று பாட்டாக நடத்திக்காண்பிப்பது மற்றொன்று வசன ரூபமாய் நடத்திக்காண்பிப்பது. வசன ரூபமாய் காண்பிப் பதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள். பல உபந்நா சங்கள் செய்வதை விட இத்தகைய நாடகம் ஒன்று நடத்தினாலும் மக்களுக்கு உணர்ச்சியையும், வீரத்தையும், மனமாற்றத்தையும் ஏற்படுத்தி ஓர் கவர்ச்சியை உண்டாக்குகிறது.

நம் எதிரில் நடந்த மாதிரிதான் ஆதியில் இரணிய நாடகம் இருந்திருக்க வேண்டும். ஆனால் அதை பார்ப்பனர்கள் தமக்குச் சாதகமாக திருத்தி உபயோ கப்படுத்திக்கொண்டார்கள்.

அய்யா அடிக்கடி சொல்லுவார்

(பாகவதத்திலே இரணியன் சொல்லுகிறான். ஓ தானவர்களே! என்ற பகுதியை அய்யா அவர்கள் அடிக்கடி எடுத்துச்சொல்லுவார். எங்கே யாகம் நடத்தினாலும் வெட்டிக்கொல்லுங்கள். கோடரி, வாள் எடுத்துக்கொண்டு போங்கள் என்கிற வசனம் எல்லாம் வருகிறது. இன்னொரு பண்பாட்டுப் படை எடுப்பு வரக்கூடாது. புராணத்தில் பாகவதத் தில் வருகின்ற வசனங்களை அய்யா அவர்கள் பலமுறை எடுத்து கையாண்டிருக்கின்றார்.

தந்தை பெரியார் அவர்களை நீதிமன்றம் தண்டித்தது. 1957இல் திருச்சி செசன்ஸ் நீதிமன்றத் தில் அய்யா அவர்கள் ஒரு அறிக்கை கொடுத்த நேரத்தில் இதையே எடுத்துச்சொல்லியிருக்கின்றார். ஆறு, ஆறு மாதமாக? மூன்று ஆறுமாதம் தண்டனை தந்த நேரத்தில் கூட அய்யா அவர்கள் அந்தக் கருத்தைப் பயன்படுத்தியிருக்கின்றார்.)

பழைய நாடகங்களை சீர்திருத்தி...

பழைய நாடகங்களை நாம் சீர்திருத்தி புதிய முறையில் நடத்திக்காண்பிக்க வேண்டும். நாடகங் களில் பல சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும்

(இப்படி நாடகங்களை மாற்றி செய்ய வேண்டும் என்று அய்யா அவர்கள் சொன்னார்கள். பாருங்கள் அதன் விளைவுதான் அண்ணா அவர்களின் நீதிதேவன்கள் மயக்கம் நாடகம். அதுதான் சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம். அதுதான் சந்திரோதயம் நாடகம். அண்ணா அவர்கள் இராமாயணத்தையே மாற்றிக்காட்டினார். நடிகவேள் ராதா அவர்கள். தந்தை பெரியார் அவர்களின் கருத்தை மய்யப் படுத்தி பல நாடகங்களை நடித்தார். தோழர் திருவாரூர் தங்கராசு எழுதினார். அய்யா அவர்கள் எழுதிய இராமாயணப் பாத்திரங்களை மய்யமாக வைத்து எழுதினார். அப்படி எழுதப்பட்ட இராமாயண நாடகத்திற்குத்தான் தடை எல்லாம் போட்டார்கள்.

அய்யா அவர்கள் மாற்றிச் செய்ய வேண்டும் என்று சொன்னார்கள். சென்னை ஒற்றைவாடை தியேட்டரில் கூட பார்த்திருக்கலாம். மணி அடித்து நாடகம் துவங்குவதற்கு முன்னாலே ஒரு அறிவிப்பு வரும். நாடகம் பார்க்க வந்தவர்களுக்கு முக்கியமான ஒரு அறிவிப்பு என்னவென்றால் இதில் வருகிற அத்துணையும் உண்மை இராமாயணத்தில் வால்மீகி இராமாயணத்தில் என்னென்ன இருக்கிறதோ, அதை ஆதாரமாகக் கொண்டு-பெரியார் அவர்களுடைய கருத்துக்களை வைத்துத்தான் இங்கே இந்த நாடகத்தில் எடுத்துச்சொல்லுகிறோம். எந்த இடத்திலும் எங்களுடைய சொந்த கருத்துக்கள் கிடையாது. இந்த கருத்துக்களைக் கேட்டு யாராவது மனம் புண்படுகிறது என்று சொல்லுகிறவர்களாக இருந்தால் அவர்கள் இப்பொழுதே எழுந்து போய் விடலாம் அவர்கள் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. மனம் புண்படுகிற மாதிரி நினைப்பவர்களுக்கு இங்கு வேலையே கிடையாது. உண்மையைத்தான் எடுத்துச்சொல்லுகிறோம். இந்த உண்மைகளை வைத்து நீங்கள் ஆராய்ச்சி செய்ய வேண்டும். இராமன் வேடம் போட்டு வருவார். குடிகார ராமன் வருவான். சீதை எப்படியிருப்பார் என்பதை காட்டுவார்கள். கம்ப ராமாயணப் பாடல்கள், வால்மீகி இராமாயணப் பாடல்கள் இவைகளை எல்லாம் எடுத்துக்காட்டுவார்கள்.

சும்மாவாவது ஒரு பத்திரிகையில் கீமாயணம் என்று எழுதினார்கள் அது அல்ல. அதற்காகத்தான் நாடகத் தடைச் சட்டத்தைப் போட்டார்கள். அதையும் தாண்டி நாடகத்தை நடத்திக்காட்டினார்கள். அதைத்தான் அய்யா அவர்கள் சொல்லுகிறார்கள்.)

நல்லதங்காள் கதை உலகம் அறிந்தது

பழைய நாடகங்கள் மக்களை மூடர்களாயும், அர்த்தமற்ற கொள்கையுடையவர்களாயும் செய்து இருக் கின்றன. நாடகத்தின் மூலம் அறிவு வளர இடமிருக்கிறது. நல்ல தங்காள் கதை உலகம் அறிந்தது. (அய்யா அவர்கள் எவ்வளவு அழகாக சொல்லு கிறார் பாருங்கள். அவை எல்லாம் எப்படி பயனில்லாதவையாக இருந்தன என்று சொல்லுகின்றார்.

நல்லதங்காள் மிகவும் கற்புடையவள் என்று கூறப்படுகிறது (இன்றைய இளைஞர்களுக்கு நல்லதங்காள் கதையே தெரியாது. வயதானவர்களுக்குத்தான் தெரியும். ஒரு பெண்ணை வயதானவருக்குத்திருமணம் செய்து கொடுத்து பிள்ளைகள் பெற்று, பஞ்சம் வந்த பிறகு குழந்தைகளை எல்லாம் கிணற்றில் தூக்கிப் போடுவது. இந்த காட்சிகள் எல்லாம் உருக்கமான காட்சிகள் பார்க்க வாருங்கள். கிணற்று சீன் இவைகளை எல்லாம் விளம்பரப் படுத்தி அந்த காலத்தில் நாடகம் நடத்துவார்கள்)

பதிவிரதத் தன்மை எப்படி

வாழைப்பட்டையை விறகாய் வைத்து எரித்ததாகவும், மணலை அரிசியாகச் சமைத்ததாகவும், உயரத்தில் இருந்த மாங்கனியை கைக்கு கீழே தருவித்துக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

அவ்வளவு பதிவிரதைத்தன்மை வாய்ந்த ஒருவர் வாழ்ந்த நாட்டில் 12 வருட காலம் தொடர்ச்சியாய் மழை பெய்யாமல் பஞ்சம் ஏற்பட்டதென்றால் அவருடைய பதிவிரதத் தன்மை எவ்வளவு ஒழுக்கத்தில் இருந்து இருக்க வேண்டும் என்று நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். (கூட்டத்தில் ஒரே சிரிப்பு; ஆரவாரம்) (ஆக இது எவ்வளவு பெரிய முரண்பாடானது என்று அய்யா அவர்கள் சொல்லு கின்றார். )

குசேலர் சரித்திரம்

அதே போன்று குசேலர் சரித்திரம் பிரமாதமாய் நடத்திக்காண்பிக்கப்படுகிறது. பார்ப்பனர்கள் தாங்கள் பிச்சை ஏற்பதற்குச் சாதகமாய் அதை தெய்வீக கதையாய் சிருஷ்டித்துவிட்டு பாமர மக்களை ஏமாற்றுகிறார்கள். (குசேலர் கதை எப்படிப் பிறந்திருக்கிறது பாருங்கள். பிச்சை எடுப்பது பார்ப்பன தர்மம். அது கவுரவப்படுத்த வேண்டும். அதை பெரிதுபடுத்த வேண்டும் என்பதற்காகத்தான் வந்திருக்கிறது.

ஒருவனுக்கு 27 குழந்தைகள் இருந்துங்கூட, அவன் தரித்திரனாய் இருந்தான் என்றால், பகுத்தறிவு உள்ளவன் எவனாவது நம்ப முடியுமா?

வருடத்திற்கு ஒரு குழந்தை பெற்றால் கூட முதல் குழந்தைக்கு 27 வருடமாகிறது. 20 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் 6-7 இருக்கலாம்.

(கூட்டத்தில் ஒருவர் ஒரு முறைக்கு 4 குழந்தை பெற்று இருக்கலாம்.) அப்படி இருந்தாலும் வயது வந்த பிள்ளைகள் கூலி ஜீவனம் செய்தாவது மேற்படி குடும்பத்தை ரட்சித்து இருக்காதா? இதை எல்லாம் யோசித்துப் பார்த்தால் ஏதாவது பொருள் இருக்கிறதா?


அறிவை மழுங்கச் செய்கிறது

இப்படியாக ஒவ்வொரு கதையும் பாமர மக்களின் அறிவை மழுங்கச் செய்வதாய் இருக் கின்றது என்று அய்யா அவர்கள் சொல்லுகின்றார்)

(குடிஅரசு இதழைப் படித்த காரணத்தினால் அவருடைய படத்தைப் பார்த்திருப்பீர்களே யானால் இந்த நகைச்சுவை காட்சிகளை அவர் கையாண்டிருப்பார். கலைவாணர் சொல்லுவார்.

குசேலுருக்கு 27 பிள்ளைகள் என்றால் முதல் பிள்ளை தடிப்பையனாக இருந்திருப்பான் போல இருக்கிறது. சோம்பேறிப் பயலாக இருப்பான் போலிருக்கிறது )

அவன் வந்து உழைத்திருக்க வேண்டாமா? அவன் வேலைக்குப் போயிருக்க வேண்டாமா? கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவருடைய நடிப்பைத் திரைப்படத்திலே வைத்திருப்பார்.)

ஆகையால் நாடகங்களை புதிய முறையிலே திருத்தி மக்களுக்குப் பயன்படும்படி செய்ய நாடகாசிரியர்கள் முன் வரவேண்டும்.

வெறும் சங்கீதமும், பாட்டும் வேண்டியதில்லை. கருத்து இருந்தால் போதும். இந்த நாடகம் சென்னையில் இரண்டு முறை காண்பிக்கப்பட்டது. இந்த மாகாணத்தில் இதுவே மூன்றாம் முறை. இனி இம்மாதிரி நாடகங்களை நாடெங்கும் நடத்தினால் மக்கள் உணர்ச்சி பெற்று மூடநம்பிக்கைகளையும், அர்த்தமற்ற கொள்கைகளையும் உடைத் தெறி வார்கள். தோழர் அர்ஜுனன் தலைமையில் நடந்த இந்த நாடகத்தை நான் பாராட்டுகிறேன் என்று அய்யா அவர்கள் உரையாற்றினார்.


------------தொடரும்................"விடுதலை” 7-9-2011

0 comments: