Search This Blog

22.9.11

ஜோசியனை ஜெயிலில் போட வேண்டும்!





பேரன்புள்ள தாய்மார்களே! தோழர்களே! இன்றைய தினம் நாம் எல்லோரும் டாக்டர் மனோகரன் - கஸ்தூரி இவர்களின் வாழ்க்கைத் துணை ஒப்பந்த நிகழ்ச்சி குறித்து இங்குக் கூடி இருக்கின்றோம். இந்நிகழ்ச்சி இதுவரை நம்மிடையே நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளுக்கு மாறாகவும், அறிவிற்குப் பொருத்தமானதும், மூடநம்பிக்கை அற்றதுமானதுமாகும். இதுவரை நடைபெற்ற முறைகளின் உட்பொருளைப் பற்றி சிறிதும் கருதாமல், அதனால் ஏற்படும் பலனைப் பற்றியும் கவனிக்காமல் தொடர்ந்து பழைய முறையையே பெரும்பாலோர் பின்பற்றி வருகின்றனர்.

பழைய புரோகித முறை என்பது மூன்று தன்மைகளை அடிப்படையாகக் கொண்டது; சிறுபான்மையினர் பலன் அனுபவிக்கவும், பெரும்பான்மையினரை அடிமைகளாக்கி தாங்கள் பாடுபடாமல், உழைக்காமல் வாழ்ந்து கொண்டு வருவதுமாக இருக்கின்றனர்.

முதலாவது காரியமாக ஜாதிப் பிரிவுகளை ஏற்படுத்தி, அதன் காரணமாகத் தங்களை உயர்ந்தவர்களாக்கிக் கொண்டு, அந்த ஜாதிப் பிரிவுகள் கலைந்து விடாமல் இருக்க, இதுபோன்ற சடங்குகளையும் முறைகளையும் ஏற்படுத்திப் பலன் அனுபவித்துக் கொண்டு வருகின்றனர்.

சுயமரியாதைக்காரர்களாகிய நாங்கள் ஜாதியை ஒழிக்க வேண்டுமென்று பாடுபட்டு வருவதில், சமுதாயத் துறைகளில் பலவற்றில் சீர்திருத்தம் செய்வது போல ஜாதியைக் காப்பாற்றுகின்ற திருமணத் துறையிலும் மாற்றம் வேண்டுமென்று கருதி, இம்முறையினை மாற்றி அமைத்து, புது முறையைக் காண வேண்டியதாயிற்று. இதுவரை நடைபெற்று வந்த முறைகள் யாவும்,

1. மக்களை அறிவற்ற மடையராக்குவது;

2. பெண்களை நிரந்தர அடிமைகளாக்குவது;

3. ஜாதி இழிவைக் காப்பது -

ஆகிய மூன்று காரியங்களை அடிப்படையாகக் கொண்டவையே யாகும். நான் பொதுத் தொண்டிற்கு வந்ததற்குக் காரணமே அடிப்படையே,

1. மனிதன் பகுத்தறிவுவாதியாக வேண்டும். 2. நம் நாட்டில் இருக்கும் பெண்ணடிமை ஓழிக்கப்பட வேண்டும். 3. மனிதனுக்குள் உள்ள ஏற்றத் தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டும் என்பதாகும்.

ஆகவே தான், இம்முறையிலும் மாற்றம் செய்ய வேண்டியதாயிற்றே தவிர, இதில் வேறு எந்தக் காரியமோ, உட்கருத்தோ இல்லை.

வாழ்த்துரை என்பது மூட நம்பிக்கையில் சார்ந்ததே ஆகும். வாழ்த்துவதாலே நன்மை வரும் என்று நம்புவதானால் தூற்றுதலால் கெடுதல் வரும் என்பதையும் நம்பித்தானே ஆக வேண்டும்? வாழ்த்துதலுக்கு என்ன பலனோ, அதுதான் தூற்றுதலுக்கும் உண்டு. மனிதன் நல்ல மனிதனாக, பெருமையோடு வாழ வேண்டுமென்று சொன்னால், அவன் உலகத்தோடு ஒட்டி வாழ வேண்டும். இதைத் தான் வள்ளுவரும், "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்" என்ற குறளில் கூறி இருக்கின்றார்.

இன்னும் அவர் "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் - வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்"

என்று குறிப்பிட்டிருக்கிறார். வள்ளுவர் ஒரு பகுத்தறிவுவாதியாக இருந்தும், மனதறிந்து இரண்டு பொய்களைத் தெரிந்தே கூறி இருக்கிறார். அந்த இரண்டு பொய்கள் வானுரையும் - தெய்வம் என்பதாகும். அவருக்கு வானுலகம் என்பதாக ஒன்றில்லை. தெய்வம் என்பதாக ஒரு பொருள் இல்லை என்பது நன்கு தெரியும். பின் ஏன் அவ்வாறு கூறினார் என்றால், அவர் வாழ்ந்த காலத்தில் உள்ள மக்கள் இவற்றைக் கூறினால் தான் பயந்து நடப்பார்கள் என்று கருதி அவ்வாறு கூறியுள்ளாரே தவிர, அதை நம்பி அவர்கள் அவ்வாறு கூறவில்லை. மனிதன் உலகத்துக்கு ஏற்றபடி வாழ வேண்டுமென்பதே அவரது கருத்தாகும்.

மேல்நாட்டு விஞ்ஞானிகள் பூமியிலிருந்து சூரியன் இருக்கிற வரை வான்மண்டலத்தில் ஆராய்ச்சி நடத்தி வருகின்றார்கள். அவர்கள் எவரும் மத்தியில் ஓர் உலகம் இருக்கிறது என்பதாகவோ, தெய்வங்கள் இருக்கின்றன என்பதாகவோ கூறவில்லை. இவ்வளவு தூரத்தில் சூரியன் இருக்கும் போதே உஷ்ணம் அதிகமாகி மனிதன் மயங்கி விழுகிறான். வீடுகள் தானாகவே தீப்பற்றி எரிந்து போகின்றன. அப்படி இருக்க பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் எப்படி ஓர் உலகம் இருக்க முடியும்? இருந்தால் எரிந்து சாம்பலாகி இருக்காதா? இதை எல்லாம் சிந்திக்க வேண்டும்.

இன்றைய அரசாங்கம் (தி.மு.க அரசு) சுயமரியாதைத் திருமணங்களை செல்லுபடியாக்கச் சட்டம் கொண்டு வருவதாக இருக்கிறது. "கலப்பு மணம்" (ஜாதி மறுப்பு) செய்து கொள்பவர்களுக்குப் பரிசளிக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. இவையெல்லாம் வரவேற்க வேண்டியவையே ஆகும். இன்னும் இந்த அரசாங்கம் ராகு காலத்தில் கல்யாணம் செய்து கொள்பவர்களுக்கு அரசாங்க உத்தியோகங்களில் முதலில் சலுகைக் கொடுக்க வேண்டும். ராகு காலம் என்பதெல்லாம் பிறருக்குத் தான் சொல்கிறானே தவிர, எவன் தன் வாழ்க்கையில் கடைப்பிடிக்கிறான்? இராகு காலத்தில் நம்பிக்கை உள்ள ஒருவன் ரயில் ராகு காலத்தில் கிளம்புகிறது என்று அதில் பிரயாணம் செய்யாமலிருக்கின்றானா? கோர்ட்டில் அமீனா ராகு காலத்தில் கூப்பிட்டால், 'இப்போது ராகு காலம் வர முடியாது' என்று சொல்கின்றானா? இதற்கெல்லாம் ராகு காலம் பார்க்காதவன் மற்றவற்றிற்கு ஏன் பார்க்க வேண்டுமென்று கேட்கிறேன்? மூட நம்பிக்கை என்பதே பிடிவாதத்தாலே தான் ஆகும். இதெல்லாம் அரசாங்கம் கவலையெடுத்துக் கொள்ளாததால் தானாகும். மூட நம்பிக்கையைக் கொள்கையாகக் கொண்ட அரசாங்கமே இதுவரை ஆட்சியிலிருந்து வந்தாலும், மக்களை அறிவுடையவர்களாக்க வேண்டுமென்ற எண்ணமில்லாமல் மக்களை மடையர்களாக, பகுத்தறிவற்றவர்களாக வைத்திருந்தால் தான் நாங்கள் வாழ முடியும் என்று ஆட்சியினர் கருதி இருந்ததாலும், இதைப் பற்றிய கவலையே இல்லாமலிருந்ததோடு, மூட நம்பிக்கையை மக்களின் இரத்தத்தில் ஊறச் செய்து விட்டனர். அதை உறிஞ்சி எடுத்துப் போக்க வேண்டியிருப்பதால் மக்களுக்குச் சங்கடமாக இருக்கிறது. நம்மைப் பின்பற்றுபவர்கள் இந்த மூட நம்பிக்கையை ஒழிக்க வேண்டுமென்று பாடுபட்டு வருபவர்களே ஆவார்கள்.

மனிதனுக்குச் சொத்துரிமை இருக்கும் வரையும் பெண்கள் அறிவு பெறுகிற வரை, பகுத்தறிவு பெறுகிற வரை தான் இந்தத் திருமணம் இருந்து வரும். அதன் பின் திருமணம் என்ற முறையே இருக்காது. மேல்நாடுகளைப் போல் பெண்களும் ஆண்களும் தாங்கள் விரும்பியவர்களோடு நண்பர்களாகவே வாழ்க்கை நடத்தும் படியான நிலை ஏற்பட்டு விடும். இப்போது நான் இப்படி சொல்வது சிலருக்குச் சங்கடமாக, வியப்பாக இருந்தாலும், இன்னும் சில ஆண்டுகளில் அந்த நிலை வரத்தான் போகிறது. அதைத் தடுக்க யாராலும் முடியாது.

நம் நாடு கடைசி நாடானதால் இப்போது தான் கொஞ்சம் வெளிச்சம் வருகிறது. நாடு இன்னும் நிறைய வளர்ச்சி அடைய வேண்டும். மக்கள் அறிவு பெற வேண்டும். நம் நாட்டில் அறிவாளிகளுக்கு நிறைய பஞ்சம். ஒரு புத்தர், ஒரு வள்ளுவர் இவர்களைத் தவிர, வேறு அறிவாளிகளே தோன்றவில்லையே! தோன்றியவனெல்லாம் முதுகைப் பார்த்துக் கொண்டே, பின்னாலே பார்த்துக் கொண்டே போய் விட்டானே தவிர, தங்களுக்கு முன்னாலுள்ள வருங்காலத்தைப் பற்றிச் சிறிது கூடக் கவலைப்படவில்லை.

நல்ல அரசாங்கமாக இருந்தால் இந்த ஜோசியனை எல்லாம் பிடித்து ஜெயிலில் போட வேண்டும். இது ஒன்றும் அதிசயமில்லை. இப்போது எல்லாம் பிடித்து ஜெயிலில் போடவில்லையா? அதுபோல இவர்களை நேற்று வந்தவன் கமால் பாட்சா, முல்லாக்களை எல்லாம் பிடித்து ஜெயிலில் போட வேண்டும். அப்போது தான் திருந்தும். அதுபோலவே நம் எழுத்துக்களையும் சீர்திருத்தம் செய்ய வேண்டும். இந்த அண்ணாத்துரை ஆட்சி இருந்தால் நிச்சயம் இவை நடக்கும் என்று நம்புகிறேன்.

பழைய பாசி பிடித்த அறிவை விட்டு விட்டுச் சிந்தியுங்கள். பெண்களை எல்லாம் நன்றாகப் படிக்க வையுங்கள். அவர்களை எல்லாம் பகுத்தறிவுவாதிகளாக்குங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.

--------------09.07.1967 அன்று நாகரசம்பட்டியில் நடைபெற்ற திருமண விழாவில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய அறிவுரை.”விடுதலை”, 20.07.1967

0 comments: