Search This Blog

10.9.11

கடவுள்களைப் பற்றிக் கூறும் கலை, இலக்கியம், இதிகாசம், புராணங்களை ஒழி

கடவுள்களைப்பற்றிக் கூறும் கலை, இலக்கியம், இதிகாசம், புராணங்களை ஒழித்தால்தான் தமிழர்களுக்கு விடிவு தமிழர் தலைவர் விளக்கவுரை

கடவுள்களைப் பற்றிக் கூறும் கலை, இலக்கியம், இதிகாசம், புராணங்களை ஒழித்தால் ஒழிய தமிழனுக்கு விடிவு இல்லை என்று பெரியார் கூறிய கருத்தை எடுத்துக்காட்டி தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் விளக்கமளித்தார்.

தந்தைபெரியாரின் கலை இலக்கியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் இரண்டாம் தொடர் சொற்பொழிவு 11.8.2011 அன்று இரவு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இதில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

மேலும் அய்யா அவர்கள் சொல்லுகின்றார் : உதாரணம் வேண்டுமானால் சொல்லுகிறேன். கேளுங்கள்.

9 அல்லது 10 அவதாரம்


புராண இதிகாசங்களில் விஷ்ணு என்கின்ற கடவுள் 9 அல்லது 10 அவதாரமெடுத்ததாகச் சொல்லப்பட்டு வருகிறது. அவைகளில் மீன், ஆமை, பன்றி, சிங்கம், குட்டைப் பார்ப்பனன் மற்றும் நான்கு அய்ந்து சாதாரண மனிதர்கள் முதலிய அவதாரங்கள் எடுத்ததாகச் சொல்லப் படுகிறது.

தமிழர்களின் கோடிக்கணக்கான பணச்செலவில்


இவற்றில் ராமன், கிருஷ்ணன் ஆகிய இரு அவதார மனிதரைத் தவிர மற்ற அவதாரங்களை நாம் அவ்வளவு பூசிக்கத் தகுந்த கடவுளாக ஏற்று வழிபடுவதில்லை. மக்களுக்கு அக்கதைகளும் இவ்வளவு தெரியாது. இந்த ராமன், கிருஷ்ணன் இருவரும் தமிழர்களில் 100 க்கு 99 பேர்களுக்குள் செல்வாக்குப் பெற்றும் தமிழர்களின் கோடிக் கணக்கான பணச் செலவில் ஏற்பட்ட கோவில் களிலும் மிக்க அறிவாளிகளும், பண்டிதர் களுமானவர்களின் உள்ளங்களிலும், அவர் பெண்டு , பிள்ளை, குழந்தை, குட்டிகளின் பஞ் சேந்திரியங்களிலும் புகுந்து ஆதிக்கம் பெற்றும் இருப்பது போல் மற்ற அவதாரங்கள் பெற்றி ருக்கவில்லை.

கூலிக்குத் தமிழில் பாடினால்


இதற்குக் காரணம் என்ன? சொல்லுங்கள் பார்ப்போம். (இதற்குக் காரணம் என்ன என்று அய்யா அவர்கள் கேட்கின்றார்.) முற்காலத் தமிழ்ப் பண்டிதர்கள் தன்மானமற்று இழி தன்மையுடன் இவ்விருவர்களின் அவதாரத்தைக் கூலிக்குத் தமிழில் பாடினார்கள் என்றால், பின் வந்த தமிழ்ப் பண்டிதர்களும் முன்னவர்களைப் போலவே, மான மற்று, அவைகளைக் கலையாக, இலக்கியமாகக் கொண்டு, உருப்போட்டு இலக்கியப் பண்டிதன், கலைப் பண்டிதன், நாடகப் பண் டிதன், சங்கீதப் பண்டிதன் என்ற வேஷத்தோடு தமிழ் மக்களின் உள்ளத்தில் பதியச் செய்து விட்டார்கள்.

இவ்விரு காவியங்களும் ஒழிந்தால்தான்


இன்று தமிழில் தமிழ் மகன் என்பவனால் பாடப்பட்ட அவ்விரு காவியங்களும் ஒழிந்து, அவற்றால் வயிறு பிழைக்கும் பெருமையும் பெற்ற பண்டித பட்டமும், பெரும் பண்டிதர்களையும் இழித்து வெறுத்துக் கூறி, இனி இப்புராணக் கலைப் பிரச்சாரம் செய்யாமல் அடக்கி விட் டோமானால் ராமனும், கிருஷ்ணனும், மற்றும் திராவிடர்களுக்குக் கேட்டையும், இழிவையும் தரும் ஆரிய மேன்மையும், ஆதிக்கமும் தமிழ்நாட்டில் இப்போது இருப்பது போல் இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

என்று அய்யா அவர்கள் கேட்கிறார். எவ்வளவு பெரிய நாடகத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். பெரியார் இரவு 11 மணிக்குப் போய் நாடகத்தை கவனிக்கிறார்.

இரவு 2 மணி வரை மக்கள் உட்கார்ந்திருக்கிறார்கள்


அதன் பிறகு பெரியார் பேசுகிறார். இரவு 2 மணிவரை மக்கள் உட்கார்ந்திருக்கின்றார்கள். மக்கள் மத்தியில் இந்த கருத்துகளைச் சொல்லி சிந்திக்க வைத்தார். வெடிகுண்டு தூக்கிப் போடுகிற மாதிரி சிந்திக்க வைத்தார். இப்படிப் பேசிப் பேசிதானே, அய்யா அவர்கள் மாறுதலை உரு வாக்கியிருக்கின்றார்கள். ரொம்ப கடுமையான வார்த்தையை அய்யா அவர்கள் பயன்படுத்திச் சொல்லுகின்றார்.

மேலும் அய்யா சொல்லுகிறார். இழிகுலப் பண்டிதர்கள் சிலர் இவற்றில் வரும் ராமனும், கிருஷ்ணனும், சிவனும், சுப்பிரமணியனும் தமிழர் களின் கடவுள்கள் என்கிறார்கள். சரி என்று ஊகத்துக்கு ஒப்புக்கொண்டு அவர்களை ஒரு கேள்வி கேட்போம். (அய்யா அவர்களுக்குக் கோபம் ஏற்பட்டு இப்படிச் சொல்லுகின்றார். அய்யா சொல்லுகிறார் பாருங்கள்) அய்யன்மீர், நீங்கள் தமிழர்களின் கடவுள்கள் என்று குறிப்பிடும் ராமனும், கிருஷ்ணனும், சிவனும், ஷண்முகனும், ராமாயண, பாரதம், கந்த புராணம் ஆகிய இதிகாசங்களிலும், புராணங்கள் தேவாரம், பிரபந்தம் ஆகிய நம் புனிதமான நூல்கள் என்பவைகளிலும் காணப்படும் ராமனும், கிருஷ்ணனும், சிவனும், ஷண்முகனுமா அல்லது உங்களுக்கு என்று வேறு எங்காவது இருக்கிற ராமனும் கிருஷ்ணாதியோருமா? என்று கேளுங்கள். பாரதம், இராமாயணம், புராணம், தேவாரம், பிரபந்தம் இல்லாமல் ராமனும் கிருஷ்ணனும் வேறு எங்கே இருக்கிறார்கள்? அது போலவே கந்த புராணம் முதலிய ஆரிய நூல்கள் அல்லாமல் அதுவும் வடமொழியில், வடநாட் டார்களால் உண்டாக்கச் செய்ததல்லாமல் வேறு எதில் இந்தப் பெயர், இந்த நடத்தையுடன் இருக் கிறார்கள்? என்று கேளுங்கள்.

தமிழர்களுக்குரிய உரிமை வெளுத்துப் போகும்


மற்றும் பாரதம், ராமாயணம், பிரபந்தம், தேவாரம், கந்த புராணம், பெரிய புராணம் முத லியவைகளில் இந்த சடங்குகள் தமிழ் கடவுள் களுக்கு ஏற்றி இருக்கும் குணங்களையும், அவர் கள் தோன்றிய விதங்களையும், அவர்கள் நடந்து கொண்ட நடத்தைகளையும் நீங்கள் ஒப்புக் கொள்ளுகின்றீர்களா? என்று கேளுங்கள். அப்போது இவற்றில் தமிழர்களுக்கு உள்ள எரிமை வெளுத்துப் போகும்.

ஒரு சமயம் இந்த பண்டிதர்களும், மேதாவி களும் இந்தக் கடவுள்களை மாத்திரம் ஒப்புக் கொள்ளுவோமே தவிர இவர்களின் நடத்தை களை நாங்கள் ஒப்புக் கொள்ளுவதில்லை என்று சொல்லுவார்களேயானால், இந்த நடத்தைகள் எல்லாம் எங்கள் கடவுள்களுக்குச் சம்பந்தப்பட் டவை அல்ல என்று எப்போதாவது மக்களுக்குச் சொல்லி ஒதுக்கி வைத்து, அவ்வித நடத்தைகளில் சம்பந்தப்படாமல் நடத்தைகளைப் பிரச்சாரம் செய்யாமல் இருக்கிறீர்களா? என்றும் கேளுங் கள்.

கடவுள்களுக்கு நாமம், விபூதி எதற்கு?


இந்தக் கடவுள்களுக்கு நாமம் எதற்கு? விபூதி எதற்கு? மற்றும் மனைவி, மக்கள், தாசி, வேசி, புரட்டு, பித்தலாட்டம், கொலை, கொடுமை எதற்கு? என்றும் இவற்றிற்கு ஆதாரம் என்ன? எங்கிருந்து வந்தது? என்றும் கேளுங்கள். (இவர்கள் எல்லாம் விதண்டாவாதிகள். குறுக்க நெடுக்க இப்படித்தான் கேள்வி கேட்பார்கள், பதில் சொல்லமுடியாது என்று தவிர்த்துவிட்டுப் போவார்கள். அதைத்தான் பெரியார் ரொம்ப அழகாகச் சொல்லுகின்றார்.)

நீங்கள் செய்ய வேண்டியது


இவைகளுக்கு அவர்கள் என்ன பதில் சொல்லுவார்கள்? நீங்கள் படிக்காத மூடர்கள். உங்களிடம் பேசிப் பயனில்லை என்று சொல் லுவதோடு பதிலை முடித்துக் கொள்ளுவார்கள். அதற்காக நாம் வெட்கப்படவேண்டியதில்லை. இந்த நாட்டில் படிக்காதவர்கள் 100-க்கு 90 பேரும் அதிலும் இந்தப் பண்டிதர்களைப் போல படிக் காதவர்கள் 100-க்கு 99 3/4 பேரும் இருக்கும்போது நாம் வெட்கப்படவேண்டிய தில்லை.

நமது முதன்மையான கடமை!


எப்படியாவது அந்தப் புராண இதிகாச தேவாரம் பிரபந்தம் கூறும் ராமன், கிருஷ்ணன், சிவன், சுப்பிரமணியன், ஷண்முகன், காளி, கவுரி முதலிய கடவுள்களையும் அவர்களைப் பற்றிக் கூறும் கலை, இலக்கியம், இதிகாசம், புராணம், தேவாரம், பிரபந்தம், நாடகம், சினிமா, சங்கீதம், பஜனைப் பாட்டுகள் முதலானவைகளையும் அடியோடு ஒழிக்க வேண்டியதே நமது முக்கியமும், முதன்மையுமான கடமையாகும் என்று உறுதி கொள்ளுங்கள். இந்த ஆபாசங் களை வைத்துக் கொண்டு என்ன சீர்திருத்தம் செய்தாலும், எப்படிப்பட்ட அரசியல் சமுதாய இயல் பொருளாதார இயல் சுதந்திரம் பெற் றாலும், தமிழன் இன்றைய இழிநிலை மாறி மனிதத் தன்மை பெறமாட்டான்.

(நமக்குப் பெரிய விடுதலை வந்துவிட்டது. அது வந்து விட்டது என்று நினைத்தால் போதாது.)

தமிழன் விடுதலை அடையமாட்டான்


இதெல்லாம் மாறாமல் தமிழன் ஒரு போதும் விடுதலை பெறமாட்டான். இதிகாச பண்டிதர் களையும், சமயக் கலைவாணர்களையும் துச்ச மாகக் கருதுங்கள் என்று அய்யா அவர்கள் கோபத்துடன் சொல்லுகின்றார். அவருடைய எளிய எழுத்து தமிழ் நடையைப் பாருங்கள்.

நாம் மடையர்களாம். நமக்குப் படிப்பு இல்லையாம். நாம் ஒழுக்கத்தை வெறுக்கி றோமா? அன்பை வெறுக்கிறோமா? ஒழுக்கமும், அன்பும் கொண்ட கடவுள் என்பதை ஒழிக்க வேண்டும் என்கிறோமா? மக்களின் வாழ்க்கை நலன்களுக்குப் பயன்படும் வேறு எதையாவது வெறுக்கிறோமா? அப்படி நாம் ஏதாவது செய் வதாய் இருந்தால் நாம் பயப்பட வேண்டியது தான். (இதைவிட ஒரு சுயமரியாதைத் தத்துவம் வேறு என்ன இருக்க முடியும்? இதைவிட வேறு என்ன விளக்கம் வேண்டும்?

நாம் எதையும் வெறுப்பதில்லை


நாம் அன்பை வெறுப்பதில்லை. அழகை வெறுப்பதில்லை. ஒழுக்கத்தை வெறுப்பதில்லை. இதெல்லாம் இதற்கு விரோதமாக அல்லவா இருக்கிறது. எவ்வளவு ஆணித்தரமாக அய்யா அவர்கள் சொல்லுகிறார் பாருங்கள்.)

ஒருவன் மனைவியை ஒருவன் கேட்பதும், கணவன் கொடுத்துவிடுவதும் இது எந்த ஒழுக்கத்தில் சேர்ந்தது என்பது எனக்கு விளங்க வில்லை. (இதுதானே பெரிய புராணக் கதை)

கடவுள் வந்து மனைவியைக் கேட்டால்


ஒரு சமயம் கடவுள் வந்து என் மனைவியைக் கேட்டார். நான் கொடுத்துவிட்டேன் என்று சொன்னால் அப்படிக் கொடுத்ததற்கு ஒரு சமாதானமாகலாம். எவனோ சிவனடியானாம்! அதுவும் ஒரு பார்ப்பானாம்!! அதிலும் அவன் அயோக்கியப் பார்ப்பானாம்!!! அவன் வந்து கேட்டதும் ஒரு அடியான் மனைவியைக் கொடுத்துவிட்டானாம்!!! இது எப்படிப் பட்ட ஒழுக்கம் என்பது எனக்குப் புரியவில்லை.

பெண்கள் என்றால் பிராணியா?


அப்படியே கடவுள் வந்தே கேட்டிருந்தாலும் கூட தான் வேண்டுமானால் அந்தச் சிவனடியானுக்கு மனைவியாகப் பயன்பட ஒப்புக் கொள் ளலாமே தவிர, தன் மனைவியைக் கொடுப்ப தென்றால், பெண்கள் ஆண்களுக்கு அவர்களது இஷ்டம் போல் பயன்படுத்திக் கொள்ள, யாருக்கு வேண்டுமானாலும் கூட்டிவி டத் தக்க பிராணி என்றுதானே அர்த்தம். (பெரியார் மானத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை. பெண்ணுரிமை பற்றியே கவலைப்படுகிறார்.)

இதில் ஒழுக்கக் குறைவு, மானக்கேடு, பெண் அடிமைத் தன்மை, காட்டுமிராண்டித்தனம் ஆகிய எவ்வளவு ஆபாசம் இருக்கின்றது பாருங் கள். (இவன் மனைவியை இன்னொருவனுக்கு அனுப்ப இவனுக்கு என்ன அதிகாரம் இருக் கிறது?) மோட்சத்துக்காக எவ்வளவு இழிவு, ஒழுக்கக் கேடான காரியமும் செய்யலாம் என்றுதானே அர்த்தம்.

இதுவா சைவநெறி? இந்தக் காரியங்கள் வேறு ஒரு மதத்தில் மதக் கொள்கையாகவும், இக் காரியங்கள் கொண்ட நூல்கள் மத ஆதாரமாகவும், உயரிய கலையாகவும் இருந்திருந்தால் நாம் எப்படி நினைப்போம் என்பதைக் கருதிப் பாருங் கள் என்று அய்யா அவர்கள் சொல்லுகிறார்.

---------------------தொடரும் -- "விடுதலை”9-9-2011

0 comments: