Search This Blog

20.9.11

திராவிடம் என்கிற வார்த்தை ஆரியப் பண்பாட்டை உடைக்கக்கூடியது

பார்ப்பனர்கள் இருக்கும் நாட்டில்தான் ஜாதிபேதம் பார்ப்பனர்கள் இல்லாத நாட்டில் இவை கிடையாது கீரமங்கலம் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் பேச்சு

பார்ப்பனர்கள் இருக்கும் நாட்டில்தான் ஜாதி, பேதம் இருக்கிறது. பார்ப்பனர்கள் இல்லாத நாட்டில் ஜாதி, பேதம் இல்லை என்று கீரமங்கலத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழர் தலைவர் கி.வீரமணி கூறி விளக்கவுரை யாற்றினார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேருந்து நிலையம் அருகில் தந்தைபெரியார் அவர்களின் 133ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் மானமிகு அ.தங்கராசு தலைமை வகித்தார். கழகத்தின் துணைப்பொதுச் செயலாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் மாவட்டத் தலைவர்கள் அறந்தாங்கி பெ.இராவணன் புதுக் கோட்டை மு.அறிவொளி, மாவட்ட செயலாளர்கள் க.மாரிமுத்து, ப.வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞரணித் தலைவர் ப.மகாராசா அனைவரையும் வரவேற்றார்.

தலைமைக் கழக சொற்பொழிவாளர்கள் இரா. பெரியார்செல்வன், மாங்காடு சுப.மணியரசன் பேராவூரணி ஒன்றியத் தலைவர் வை.சிதம்பரம் ஆகியோர் கொள்கை விளக்க உரையாற்றினார்கள்.

திராவிடர் கழகத் தலைவர்


தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார். அப்போது 'நீண்டகாலமாக இதுபோன்ற மேடைகளில் நாங்கள் நின்று கொண்டிருக்கின் றோம் என்றால் நம் தோழர்கள் கொள்கை வீரர்களாக கருஞ்சட்டை வீரர்களாக அயராது உழைத்து முதிர்ந்த வயது என்று சொன்னாலும் இளமைப் பொலிவோடு திகழும் கொள்கைக்கு சொந்தக்காரர்கள் என்று சொல்லக்கூடிய வகையில் மேடையில் அமர்ந்திருக்கின்றார்கள்.

மாணவப் பருவந்தொட்டு


என்னுடைய மாணவப் பருவத்தில் இந்த கீரமங்கலம் பகுதிக்கு ஆண்டு தவறாமல் அழைக்கப்பட்டு அனைவரையும் தவாறமல் சந்தித்துக் கொண்டிருந்தவன். நீண்ட காலத்திற்குப் பின் இந்த அறிவாசான் தந்தை பெரியாரின் 133ஆம் ஆண்டு பிறந்தநாள்விழா முதுபெரும் பெரியார் பெரியார் பெருந்தொண்டர்களுக்குப் பாராட்டு விழாவின் மூலம் சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். இந்தப் பகுதி அரசியல் தெளிவு பெற்ற மக்கள் வசிக்கும் பூமியாக இருப்பதால் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று நடக்கும் மக்கள் அதிகம் வசிக்கும் பூமியாக இருக்கிறது.

பெரியாரின் கொள்கைகள் விளைச்சல் பெற்ற பூமியாக இருக்கிறது. ஒருமுறை வெளி நாட்டைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் என்னிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருக்கும் போது திராவிடர் கழகத்தைப் பற்றி இவ்வளவு சொல்கிறீர்களே இந்த இயக்கத்தில் எவ்வளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டார்.

இருவகை உறுப்பினர்கள்


அப்போது சொன்னேன் எங்கள் இயக்கத்தில் இரண்டு வகை உறுப்பினர்கள் இருக்கிறார்கள. கண்ணுக்குத் தெரிந்தும் இருக்கிறார்கள் தெரியாமலும் இருக்கிறார்கள் என்றேன். உடனே பதறிபோய் பேனாவைக் கீழேபோட்டு விட்டுக் கேட்டார் உங்கள் இயக்கம் என்ன பயங்கரவாத இயக்கமா என்று நான் சொன்னேன் இல்லையில்லை. நாங்கள் மிகவும் அறவழியில் நடப்பவர்கள். எங்கள் தலைவர் வன்முறையில் நம்பிக்கையில்லாத தலைவர். காந்தியாரையும் மிஞ்சக்கூடிய வகையில் அகிம்சாவாதி என்று சொல்லக்கூடிய அளவில் மனிதநேய மிக்கவர் எங்கள் தலைவர். அன்று முதல் இன்று வரை திராவிடர் கழகம் நடத்திய எந்தப் போராட்டத்திலும் பொதுச் சொத்துக்கும் நாசம் ஏற்படுத் தியதில்லை. பொது மக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தியதில்லை. பொது அமைதிக்கும் பங்கம் விளைவித்த தில்லை.

அப்படிப் பட்ட ஒரு அறவழிக் கொள்கைகளைக் கொண்ட நடைமுறையைக கொண்ட ஓர் இயக்கம். நேரடியாக தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று கறுப்புச் சட்டை போட்டுக் கொண்டு இயக்கத்தில் இருப்பவர்களைக் காட்டிலும் அவரது கொள்கைகளை கறுப்புச் சட்டை அணியாமலேயே கலர்ச் சட்டை போட்டுக் கொண்டு இருப்பார்கள் வெள்ளைச் சட்டை போட்டுக் கொண்டு இருப்பார்கள் கதர்ச்சட்டை போட்டுக் கொண்டு இருப்பார்கள் சிவப்புச் சட்டைகூட போட்டுக் கொண்டு இருப்பார்கள். சட்டையே போடாதவர்களும் இருப்பார்கள்.

சட்டையைப் பற்றி சட்டையே செய்யாதவர்களும் இருப்பார்கள். இன்னும் அப்படி கோடிக்கணக்கான பேர்கள் இர்ந்து வருகிறார்கள். அவர்கள் பல்வேறு அர்சியல் கட்சிகளிலும்கூட இருப்பார்கள். அனைவரும் தந்தை பெரியாரின் கொள்கைகளை மதித்து நடைமுறையில் கடைபிடித்து வருகிறவர்கள். அவர்கள் கண்ணுக்குத் தெரியாதவர்கள். அவர்கள் பக்தர்களாகக் கூட இருப்பார்கள் என்று கூறியவுடன் அவர் ஆச்சரியப் பட்டுப் போனார்.

ஒரு பக்திப் பெரியவர் கூறியது


ஆம் தந்தை பெரியார் அறக்கட்டளை சார்பில் நேற்று திறுவெறும்பூரில் ஓர் இடத்தில் படிப்பகமும் கம்பீரமாக தந்தைபெரியார் உருவச்சிலை எல்லாம் அமைத்து பெரியார் அறக்கட்டளையின் சார்பாக நடந்த நிகழ்ச்சியின்போது அந்தப் பகுதியில் சேவை செய்வதற்காக ஒர் மருத்துவமனை கட்டவேண்டும் என்று சொன்னேன். அப்போது எங்களுக்கு ஓர் இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.

பட்டை போட்டுக் கொண்டு அங்கு அமர்ந்திருந்த ஒரு வைதீகப் பெரியவர் தொழிலதிபர் தாமாக முன்வந்து அந்தக் கட்டடத்திற்காக ரூபாய் ஏழு லட்சம் செலவானாலும் முழுச் செலவையும் தான் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் தந்தை பெரியாரின் மீதும் அவரது கொள்கைள் மீதும் தொண்டின் மீதும் திராவிடர் கழகத்தின் மீதும் ஆழ்ந்த பற்றும் நம்பிக்கையும் கொண்டிருப்பதால் இந்தச் செயலை தான் செய்து தருவதாகவும் கூறினார். உருவம் முக்கியமல்ல உள்ளம்தான் முக்கியம். அதுபோலத் தான் பொரியாரின் கொள்கைகளில் ஊறிப்போனவர்கள் லட்சக் கணக்கில் இருக்கிறார்கள்.

பத்து கோடி தமிழர்கள்


தமிழர்களைப் பொறுத்த மட்டிலும் நன்றி உள்ள தமிழர்கள். இன உணர்வுள்ள தமிழர்கள். ஜாதி மதங்களால் பிரிந்திருக்கலாம். கட்சியால் பிரிந்திருக்கலாம். ஆனால் அவர்கள் இனத்தாலும் திராவிடர்கள். அந்த தமிழர்களை ஒன்று சேர்க்க வேண்டும். உலகம் முழுவதும் பத்து கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒற்றுமையாக இருந்திருந்தால் ஈழத்தமிழர்களுக்கு என்றைக்கோ அவர்களின் பிர்ச்சினைகளும் தீர்ந்திருக்கும்

அவர்களது வாழ்வுரிமையும் கிடைத்திருக்கும். ஈழத்தமிழர்கள் கடந்த 30ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்வுரிமைக்கும் போராடி வருகிறார்கள். உலகம் முழுவதும் பத்துக் கோடிக்கும் அதிகமான தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்று கணக்கெடுத்துப் பார்த்தால் ஏழு கோடிக்கும் மேல் இருக்கிறார்கள். உலகில் எந்த இனமும் சந்திக்காத கொடுமைகளை தமிழின மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது அமெரிக்கா செய்த மிகப் பெரிய உதவி அந்த மக்கள் அனுபவித்த கொடுமைகளை வெளி உலகிற்குக் கொண்டு வந்ததாகும்.

சொந்த நாட்டு மக்களை குண்டு போட்டு அழிப்பதற்குப் பெயர் போரா? பார்ப்பனர்களை நீக்கி விட்டால் மறை மலையடிகள் போன்ற தமிழறிஞர்கள் சொன் னார்கள்-பார்ப்பனர்கள் தமிழர்கள் அல்ல என்று. அய்யா பெரியாரும் சொன்னார். அதனால் அவர்களை நீக்கி விடலாம்.

திராவிடம் எங்கும் உண்டு


திராவிடர் என்ற சொல்லுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் உண்டு. திராவிடத்தால் வீழ்ந்தோம் என்று சொல்பவர்களாக இருந்தாலும் சரி. தேசிய கீதத்தில் இருக்கும் திராவிட உத்கல வங்கா என்கிற வரி வருகிறதே அதில் வரும் திராவிடம் என்கிற சொல்லை நீக்கி விடுவீர்களா?பிரதமர் முதல் அரசியல் கட்சிகள் வரை ஏதாவது நிகழ்ச்சிகள் வைத்தால் தேசிய கீதம் பாடும்போது திராவிடன் என்கிற சொல்லை உச்சரித்துத்தானே நிகழ்ச்சி நடத்துகிறான். திராவிடம் இல்லாமல் இந்தியாவே கிடையாது. இதை எதிர்க்கின்றவர்களால் கூட இதை விட முடியாது.

தமிழன் என்று சொல்லும் போது நானும் தமிழ்தான் பேசுகிறேன் என்று சொல்லிக் கொண்டு பார்ப்பானும் உள்ளே நுழைந்து விடுவான் என்பதால்தான் திராவிடர் என்று சொல்ல வேண்டியிருக்கிறது. தனி நாகரீகமும் பாரம்பரியமும் உள்ள ஓர் இனமாகும். அதை யாரும் மறுக்க முடியாது. உலகில் பார்ப்பனர்கள் எந்த நாட்டில் இல்லையோ அந்த நாடுகளில் ஜாதிகள் இல்லை. ஜாதிகளை வளர்த்து வைத்திருப்பவர்கள் பார்ப்பனர்கள்தான். அந்த நாடுகளில் மக்களை அடிமைப்படுத்தியும் வைத்திர்க்கிறார்கள். அவர்கள் இல்லாத நாடுகளில் ஜாதிகளும் இல்லை.

முதலில் மனிதனை அடிமைத் தனத்திலிருந்து விடுவிக்க வேண்டும். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் துணைவேந்தராக வந்தவர் குமரி மாவட்டத்தைச் சார்ந்த டாக்டர் வி.அய்.சுப்பிரமணியம் அவர்கள். அவர் திராவிடப் பல்கலைக் கழகம் என்று தென் மாநிலங்களை இணைத்து மையப் பகுதியில் அற்புதமான ஒரு பல்கலைக் கழகத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். அது கிருஷ்ணகிரிக்குப் பக்கத்தில் அமைத்திருப்பதால் ஆந்திரா கருநாடகா கேரளா ஆகிய மூன்று மாநிலங்களுக்கும் இடையில் தமிழகப் பகுதியில் அமைத்திருக்கிறார்.

அவர் அந்தப் பல்கலைக் கழகத்திற்கு மானிய உதவி நிதி உதவி வேண்டும் என்று பிஜேபி ஆட்சியில் அப்போது கல்வி அமைச்சராக இருந்து ஜனநாயகத்தில் மிகப் பெரிய காவிச்சாயம் பூசிக் கொண்டிருந்த மிகப் பெரிய துரோகத்தைச் செய்து கொண்டிருந்த பச்சைப் பார்ப்பனராகிய முரளி மனோகர்ஜோஷி திராவிடப் பல்கலைக் கழகம் என்பதை பெயர் மாற்றம் செய்வதாக இருந்தால் நிறைய நிதி உதவி செய்வதாகச் சொன்னார்.

தன்மானம் மிக்கவரான பெயர் மாற்றம் செய்ய முடியாது என்று சுப்பிரமணியம் அவர்கள் சொல்லி விட்டார். இவர் எப்போதும் துணைவேந்தராக இருப்பார். அவர் எப்போதும் அமைச்சராக இருக்கமாட்டார். இவர் துணிச்சல்காரர். திராவிடர் ஆரியர் போராட்டம் என்பது எப்படிப் பட்டது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

திராவிடம் என்கிற வார்த்தை ஆரியப் பண்பாட்டை உடைக்கக்கூடியது.

மானமும் அறிவும் நமக்கு ஊட்டியவர் தந்தை பெரியார் அவர்கள். நமக்கு அறிவுரை சொல்ல அவருக்கு தகுதி இருக்கிறதா என்கிறபோது இந்தப் பணியைச் செய்ய யாரும் வராததால் நான் முன்வந்திருக்கிறேன் என்றார். அவர் மாலை நேரப் பேராசிரியர். அவரிடம் பாடம் பெற்றதால்தான் நாடு உயர்ந்திருக்கிறது.

அவர் இல்லை என்றால் நம் தோளில் துண்டு இருக்காது. பெண்கள் மேலாடை அணியத் தடையிருந்தது. மாறாப்பு மட்டுமல்ல சாக்கெட் அணியவும் தடையிருந்தது. தோள்சீலைப் போராட்டம் என்று ஒரு போராட்டமே நடந்தது. அவ்வாறு மேலாடை அணிவதற்குக்கூட தந்தை பெரியாரின் போராட்டம்தான் நடந் திருக்கிறது. எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் ஜாதி என்கிற ஒன்று இருக்கிற வரையிலும் அவனுக்கு சூத்திரப் பட்டம் ஒழியாது.

அது ஒழியவில்லை என்றால் தன்மானம் வராது. இந்து என்று சொல்லிக் கொள்கிறவன் சூத்திரன் என்பதை ஒத்துக் கொள்கிறான். அவன் சாதாரணமானவனாக இருந்தால் சாதாரண சூத்திரன். அமைச்சராக இருந்தால் மாண்புமிகு சூத்திரன் என்பதுதான் உண்மை.

தூக்கில் போட நினைக்கும் காங்கிரஸ் மூன்று தமிழர்களையும் தூக்கில் போட வேண்டும் என்று காங்கிரஸ்காரர்கள் உண்ணா விரதம் இருக்கிறார்களே அவர்கள் யார் எதிர்க்கிறார்கள்? இந்திராகாந்தியையா? சோனியா காந்தியையா? இந்திய அரசியல் சட்டத்தையா? மனிதநேயத்தையா? முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தி அவர்கள் தொலைநோக்குப் பார்வையோடு சீனா பாகிஸ்தான் போன்ற அயல்நாடுகளால் இலங்கை மூலம் இந்தியாவிற்கு ஆபத்து வரும் என்றுதான் விடுதலைப்புலிகளை அழைத்து ஆயுதங்கள் வழங்கி பயிற்சியளித்தார். அதை காங்கிரசார் எதிர்க்கிறார்களா?

ராஜீவ்காந்தி தலையில் அடித்தானே!


ராஜீவ்காந்தி கொழும்புவிற்குச் செல்லும்போது ராணுவச்சிப்பாய் ஒருவன் ராஜீவ்காந்தியின் தலையில் துப்பாக்கிக் கட்டையால் அடித்தானே அதை ஏற்றுக் கொள்கிறார்களா? அப்போது அவர் ஏதேச்சையாகக் குனிந்து விட்டதால் தப்பித்தாரே தவிர அசம்பாவிதம் நடந்திருந்தால் நடக்கக் கூடாதது நடந்திருக்கும். அது குறித்து நானும் நண்பர் நெடுமாறன் போன்றவர்கள் ராஜீவ்காந்திக்கு அதிக பாதுகாப்பு வேண்டும் என்று கடிதம் எழுதினோம். அதற்கு அவர் பொதுவாழ்விற்கு வந்து விட்டால் இது போன்ற சம்பவங்கள் சகஜம் என்று எங்களுக்குக் கடிதம் எழுதினார்.

நளினிக்கு தூக்குத் தண்டனை அளிக்க வேண்டாம் என்று கூறி தூக்குத் தண்டனையை நிறுத்தினார் சோனியாகாந்தி அதை காங்கிரசார் எதிர்க்கிறார்களா? மாறுபட்ட கருத்தாக இருந்தாலும் மனிதநேயம் இருக்கிறதே அதை எதிர்க்கிறார்களா? மறுபடியும் பரிசீலனை செய்யலாம் என்று சட்டத்தில் இடமிருக்கிறதே அந்தச் சட்டத் தை எதிர்க்கிறார்களா? சட்டப்படியான உத்தரவு களை எல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கையில் அதே இந்திய சட்டத்தைப் பயன்படுத்தி அவர்களுடைய தூக்குத் தண்டனையை ரத்து செய்ய லாமே. உலகில் பல தூக்குத் தண்டனைகள் ரத்து செய்யப்பட்டு நிரபராதிகள் என உறுதி செய்யப் பட்டுள்ளன.

- இவ்வாறு தமிழர் தலைவர் உரையாற்றினார்.

------------------- “விடுதலை” 20-9-2011

0 comments: