Search This Blog

13.9.11

பூணூலுக்கு முத்தம் கொடுத்துவிட்டு எழுதிய சுய ஜாதிமித்திரன்


இந்நாள் - ஒடுக்கப் பட்ட மக்களால் என்றும் மறக்கப்படவே முடியாத - மறக்கப்படவே கூடாத பொன்னாள். ஆம். இந்நாளில்தான் (1928) மரியாதைக்கும், மிகுந்த போற்றுதலுக்கும் உரிய எஸ்.முத்தையா முதலியார் அவர்களால் முதன் முதலாக வகுப்புவாரி உரிமை ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள். இதற்காக தந்தை பெரியார் குடிஅரசு இதழில் (11-11-1928) மந்திரி எஸ். முத்தையா முதலியார் வாழ்க, வாழ்கவே! என்று எழுதினார்.

1921 முதல் நீதிக்கட்சி ஆட்சியில் பல்வேறு சட்டங்கள் இந்த வகையில் பிறப்பிக்கப்பட்டாலும், 1928 இல் நீதிக் கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்ற எஸ்.முத்தையா முதலியார் அவர்களால் கொண்டுவரப் பட்ட இந்தச் சட்டம்தான் (ஆணை எண். 744 பொது, நாள் 13-9-1928) முறையான வகுப்புவாரி பிரதி நிதித்துவத்தை நிர்ணயித்து செயல்படுத்தப்பட்ட தாகும்.

அதன்படி மொத்தம் 12 இடங்கள் என்றால் அதில், இந்து பார்ப்பனரல்லாதாருக்கு 5 இடங்கள், பார்ப்பனர்களுக்கு 2 இடங்கள், இசுலாமியர்களுக்கு 2 இடங்கள், கிறித்துவர்களுக்கு 2 இடங்கள், ஆங்கிலோ இந்தியர் உட்பட பிறருக்கு 1 என்று ஆணை பிறப்பித்தார்.

சுதேசமித்திரன், இந்து ஏடுகள் எகிறிக் குதித்தன. அக்னி அபிஷேகம் செய்தன. (அக்னி புத்திரர்கள் அல்லவா?) முத்தையா முதலியாருக்கு வகுப்புப் பித்தம் தலைக்கேறியது என்று தன் பூணூலுக்கு ஒரு தடவை முத்தம் கொடுத்துவிட்டு எழுதியது - அல்ல, அல்ல - சாடியது. சுய ஜாதிமித்திரன்.

இந்து என்ன எழுதியது தெரியுமா? முத்தையா முதலியார் செய்தது தேசத் துரோகம், அநீதி, வகுப்புப் பித்தம் - மக்கள் இதனைக் கண்டிக்கின்றனர் என்று எழுதியது.

மக்கள் என்றால் எந்த மக்களோ! அவாளுக்குத் தெரிந்ததெல்லாம் அக்கிரகாரத்து - பிர்மா முகத்தில் உள்ள பிறப்பு உறுப்பிலிருந்து பிறந்தவர்கள் தானே! சூத்திரர்களுக்குக் கல்வியும், வேலைவாய்ப்பும் கிடைக்கப்பெற்றால் ஏற்றியா போற்றுவார்கள்?

1928 இல் அமைச்சர் எஸ். முத்தையா முதலியார் அவர்களால் கொண்டு வரப்பட்ட அந்த ஆணையைத்தான் 1950 இல் (ஜூலை 27) சென்னை உயர் நீதி மன்றம் செல்லாது என்று கூறி, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் கழுத்தை (சூத்திரன் சம்பூகன் கழுத்தை மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமன் வாளால் வெட்டி வீசி எறிய வில்லையா?) வெட்டி வீழ்த்தியது.

அப்படி வெட்டியது சரி என்று உச்சநீதி மன்றமும் (உச்சிக்குடுமி மன்றம் என்று அப்பொழுதே பேர் சூட்டப்பட்டுவிட்டது) விசிறிவிட்டது.

தந்தை பெரியார் என்ற தன்னிகரற்ற முழு முதல் புரட்சியாளராலும், தமிழ் நாட்டில் கிளர்ந்தெழுந்த உணர்ச்சிப் பூகம்பத்தாலும் இந்திய அரசமைப்புச் சட்டம் முதன் முதலாகத் திருத்தப்பட்டு - அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட் டில் இன்றைய தினம் கல்வி, வேலை வாய்ப்புகளில் ஒடுக்கப்பட்ட மக்கள் 69 விழுக்காடு இடங்களை அனுபவித்து வருகின்றனர்.

இதற்கெல்லாம் அதிகாரபூர்வமாக அஸ்திவாரம் போட்ட அய்யா முத்தையா முதலியாரை மீண்டும் ஒரு முறை வாழ்க, வாழ்க என இந்நாளில் வாழ்த்து வோமாக!

---------------- மயிலாடன் அவர்கள் 13-9-2011”விடுதலை” யில் எழுதிய கட்டுரை

0 comments: