Search This Blog

2.9.11

செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் 133ஆம் ஆண்டு பிறந்தநாள்


பெரியார் பெரு விழா நடக்கட்டும்! நடக்கட்டும்!!

வரும் செப்டம்பர் 17ஆம் தேதி தந்தை பெரியார் அவர்களின் 133ஆம் ஆண்டு பிறந்தநாள். தந்தை பெரியார் மறைவுற்று 38 ஆண்டுகள் ஓடிய நிலையிலும் தந்தை பெரியார் அவர்களை நினைக்காத நிமிடம் இல்லை. அவர்களின் கொள்கைகள் மனித குலத்துக்கே தேவையானவை என்று உணரப்படுகின்றன.

கடவுள், மதத்தின் பெயரால் சுரண்டல்கள் நடந்த வண்ணமாகவே உள்ளன.

கோயில்கள் புரோகிதக் கூட்டத்தின் சொர்க்க புரிகளாக இருந்து வருகின்றன. இந்த வசதியை விட்டுக் கொடுக்க விரும்பாததற்கு இதுவும் ஒரு காரணம் தான் உயர் ஜாதி ஆதிக்கத்தைக் காப்பாற்றிக் கொள்வது ஒருபுறம்; சுரண்டலுக்கு வசதியாக இருக்கிறது என்பது இன்னொருபுறம்.

தந்தை பெரியார் அவர்கள் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டு தானிருக்கிறோம்.

உச்சநீதிமன்றம் தேவையில்லாமல் முட்டுக்கட்டையைப் போட்டுக் கொண்டு வருகிறது. அங்கு நிலுவையில் இருக்கும் வழக்கு விசாரணையை விரைவுபடுத்திட அழுத்தங்களைக் கொடுப்போம்.

இந்த 2011ஆம் ஆண்டில் ஜாதியைப் பார்த்து அர்ச்சகர்கள் நியமனம் என்பது எவ்வளவுக்கேடு கெட்டதனம்?

சமூக நீதிக்காக ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு என்கிற அளவுகோலைப் பயன்படுத்தினால் அய்யயோ - ஜாதியை வளர்க்கிறார்களே என்று காட்டுக் கூச்சல் போடும் பார்ப்பன - புரோகிதக் கூட்டம் கோயிலுக்குள் அர்ச்சகராக மட்டும் ஜாதியின் அடிப்படையில் இருந்தே தீர வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகிறார்கள். இந்த இரட்டை வேடத்தைக் கவனிக்க வேண்டும்.

மதச் சம்பிரதாயங்களில்கூட எத்தனை எத்தனையோ மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டு தானிருக்கின்றன. தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்ற சம்பிரதாயம் இருக்கவில்லையா? அது இப்பொழுது மாற்றம் பெற்றிருக்கிறதே - எப்படி?

கோயில் உள்ளே சென்றிட உரிமை பெற்றபின் கர்ப்பக்கிரகத்துக்குள் செல்ல தேவையானவற்றைக் கற்ற நிலையில்கூட நுழையக் கூடாது என்றால், இனியும் அனுமதிக்க முடியாது - மனித உரிமை என்ற தந்தை பெரியார் அவர்களின் கோட்பாட்டின் கீழ் இது வரும்.

சமூக நீதிக் களத்தில் இன்னும் எட்டப்பட வேண்டிய இலக்குகள் ஏராளம் உள்ளன. வட மாநிலங்களில் இத்திசையில் போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையில், தந்தை பெரியார் தத்துவங்களை அங்குக் கொண்டு போவதற்கான முயற்சிகள் படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் கூட வாரணாசிக்கு கழகத் தலைவர் சென்று அதற்கான அடித்தளத்தை அமைத்து விட்டு வந்துள்ளார். அய்யாவின் வகுப்புரிமை பற்றிய கருத்துகள் ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்டு, நூல்கள் அச்சிடப்பட்டு அங்கு விநியோகிக் கப்பட்டுள்ளன.

மூன்றாவதாக மதவாதம் சமூகத்திலும், அரசியலிலும் அத்துமீறி நுழைந்து கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும்கூட இந்த வகையில் அச்சுறுத்தல் ஒரு பக்கம் இருந்து கொண்டே இருக்கிறது.

அதற்கு மாற்றாக தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுச் சிந்தனைக் கதிர் அனைத்துத் திசைகளிலும் கொண்டு செலுத்தப்பட வேண்டிய கால கட்டம் இது.

டில்லி பெரியார் மய்யமும் பெரியார் பன்னாட்டு மய்யமும் இணைந்து இதில் செய்யக் கூடியவை திட்டமிடப்பட்டு வருகின்றன. பெரியார் பன்னாட்டு மய்யம் வேறு சில நாடுகளிலும் கிளைகளை உருவாக்கி வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பகுத்தறிவுப் பகலவனின் சிந்தனை வெளிச்சம் தேவைப்படுகிறது. நமது வெளியீடுகளும் வேகமாக பல மொழிகளில் கொண்டு வரப்பட உள்ளன.

தமிழர்களுக்கென ஒரு உன்னதமானது - தந்தை பெரியார் பிறந்தநாள் விழா - தன்மான உணர்வுக்கும், சமூக நீதிக்கும் பட்டை தீட்டக் கூடிய விழா.

தமிழர் பண்பாட்டு அடிப்படையில் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு. இரண்டையும் வீட்டுக்கு வீடு கொண்டாடுவோம்.
தமிழ்நாட்டில் உள்ள ஆட்சி அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டு, திராவிட என்ற இனச் சுட்டையும் பயன்படுத்திக் கொண்டு அடிப்படைக் கொள்கை களுக்குக் குழியை வெட்டிக் கொண்டு இருக்கிறது. பிரச்சாரப் பலத்தால் இதிலும் மாற்றம் கொண்டு வர வேண்டும்.

தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் சூட்டுவது முதல், கலாச்சார சீரழிவுகளிலிருந்து காப்பாற்றப்படுவது வரை பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

தந்தை பெரியார் சிந்தனை முழுமையான அளவுக்குப் பரவி பலம் பெறும் நிலையில்தான் சமதர்ம சமத்துவ சமுதாயமும் சீரழிவுக்கு இடமில்லாத போக்கும் உறுதிப்படுத்தப்பட முடியும்.

வீடெல்லாம் விழாக் கோலம் பூணட்டும் - வீதியெல் லாம் கொள்கை முழக்கம் கேட்கட்டும்! கேட்கட்டும்!!

--------------------" விடுதலை” தலையங்கம் 1-9-2011

0 comments: