Search This Blog

9.9.11

மீண்டும் ரத யாத்திரையா?-பக்தி என்னும் புற்றுநோய்!


ஊழலை ஒழிக்க இன்னொரு ரத யாத்திரையைத் தொடங்கப் போவதாக எல்.கே. அத்வானி மக்களவையில் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்ததில், முடியுமானால் என்னையும் கைது செய்யுங்கள் என்று சவாலும் விட்டுள்ளார். இந்த வழக்கில் இரு பி.ஜே.பி.யினரைக் கைது செய்வதில் இவருக்கு ஏன் இவ்வளவு ஆத்திரம்? பி.ஜே.பி.யினர் தவறு செய்தால் கைது செய்யக் கூடாதா?

ராமன் கோவில் கட்டுவதற்காக அத்வானி ரத யாத்திரை சென்றபோது நாட்டின் பல பகுதிகளிலும் கலவரங்கள் வெடித்தன; உயிர்ப்பலிகளும் ஏற்பட்டன!

குடம் நிறைய ரத்தத்தை நிரப்பி அத்வானிக்கு வரவேற்பு கொடுத்த இந்துத்துவா வெறியர்கள் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்ற நம்பிக்கையில் மீண்டும் ஒரு கலவரத்தை விதைக்க இந்துத்துவா வாதிகள் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிகிறது.
ஊழல் என்று எடுத்துக்கொண்டால் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியைவிட எந்த விதத்திலும் பா.ஜ.க.வினர் குறைந்தவர்கள் அல்லர். இன்னொருவர் மனைவியை தன் மனைவி என்று சொல்லி வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்த ஒழுக்கவாதிகள் பி.ஜே.பி.யில் தான் உண்டு. முதலாளிமார்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்களுக்காகக் கேள்வி கேட்பவர்களும் பி.ஜே.பி.யில் தான் அதிகம் உண்டு. இதுபோன்ற சாதனைகளை அவர்களால்தான் சாதித்துக் காட்ட முடியும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் கல்யாண்சிங் முதல் அமைச்சராவதற்கு பி.ஜே.பி. செய்த தில்லுமுல்லுகள் கொஞ்ச நஞ்சமல்ல; அதே முறையை மத்தியிலும் ஆட்சியை நிலைப்படுத்திக் கொள்ள பி.ஜே.பி. தயங்காது என்று வாஜ்பேயி கூறிடவில்லையா? பி.ஜே.பி.யின் வாடகை ஒலிபெருக்கியான துக்ளக் ராமசாமியாலேயே அதனை ஆதரிக்க முடியாமல் தலையில் அடித்துக் கொண்டு தலையங்கம் தீட்டியதைத்தான் மறக்க முடியுமா? சவப் பெட்டிகளை இறக்குமதி செய்வதில்கூட ஊழல் செய்ய முடியும் என்று ஊழலில் புதிய சாதனையை நிகழ்த்திக் காட்டியதில் பி.ஜே.பி.தான் நாட்டில் முதல் நிலையில் இருக்கிறது.

அன்றைய பி.ஜே.பி.யின் அகில இந்திய தலைவர் பங்காரு லட்சுமணனைப் பலி கொடுக்க முடிந்தது என்றால், அதற்கு முக்கியக் காரணம் அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதால்தான்.

அத்வானிகூட சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக இல்லாத நிலையில் தான், ஹவாலாவில் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. மக்கள் வரிப் பணத்தில் ஆளுநர் மாளிகை வளாகத்தில் ஆஞ்சநேயர் கோவிலைக் கட்டிய பி.ஜே.பியைச் சேர்ந்த ஆளுநர்களும் உண்டே!

கருநாடக மாநில முதல் அமைச்சராக இருந்த எடியூரப்பா மீது ஆதாரப் பூர்வமான ஊழல் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், அவரை முதல் அமைச்சர் நாற்காலியிலிருந்து நகர்த்த பி.ஜே.பி. உயர்மட்டம் பட்டபாடு நல்ல நகைச்சுவை!

பி.ஜே.பி.யின் தலைமைக்கே சவால் விட்டவர் எடியூரப்பா. டில்லி தலைநகரில் உட்கார்ந்து கொண்டு என்னை விலக்கிப் பாருங்கள் பார்ப்போம்! என்று பி.ஜே.பி. தலைமைக்குச் சவால்விடவில்லையா?

கட்சியின் மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள பி.ஜே.பி. தலைமையே அவரிடம் சரணடைந்த நிலை - வேறு எந்த அரசியல் என்ற திரைப்படத்திலும் காண முடியாத காணற்கரிய உச்சக்கட்ட காட்சியாகும்.

இந்த ஊழல்களையெல்லாம் மறைக்கத்தான் பி.ஜே.பி.க்கு முட்டுக்கொடுக்க அன்னாஹசாரே என்ற ஒருவர் காந்தி குல்லா போட்டு உட்கார வைக்கப்பட்டார்.

இவர் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நடைபெறும் ஊழலை எதிர்த்துத்தான் உண்ணாவிரதம் இருப்பார்.

கருநாடக மாநிலத்திலோ, குஜராத்திலோ நடக்கும் லஞ்ச ஊழல், சட்டவிரோத செயல்பாடுகள்பற்றி மூச்சவிட மாட்டார். முடிந்தால் குஜராத் மாநில முதல் அமைச்சர் நரேந்திரமோடிக்கு நற்சான்று பட்டம் வழங்குவார் (எதிர்ப்பு வலுத்தவுடன் கொஞ்சம் ஜகாவாங்கி விட்டார் - அவ்வளவுதான்)

2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில்கூட பிரமோத் மகாஜன், அருண்ஷோரிகள் காலத்தில் தவறு ஏதும் நடக்கவேயில்லை என்று பசப்பு வார்த்தை பேசுகிறார்கள். ஆனால் சிபிஅய் அந்தக் கால கட்டத்தில் நடைபெற்ற கோளாறுகள் பற்றியும் விசாரணை நடத்த இருக்கிறது. அப்பொழுது தெரியும் பி.ஜே.பி.யின் இன்னொரு பக்கம்.

நாடாளுமன்றத்தை செயல்படாமல் முடக்கிவிட்டால் அவர்கள் வீரர்கள், உத்தமர்கள் என்று மக்கள் நினைப்பார்கள் என்ற தப்பான அபிப்பிராயத்தில் மிதக்கிறது பி.ஜே.பி. ஆனால் மக்கள் வேறுவிதமாகத் தான் நினைப்பார்கள். தங்கள் வரிப்பணம் இத்தகைய முடக்குவாதத்தின் மூலம் கரியாக்கப்படுகிறதே என்கிற சினம் அவர்களுக்கு உரிய நேரத்தில் தக்க பாடம் கற்பிக்கும் - இது கல்லின்மேல் எழுத்தாகும்

--------------------"விடுதலை” தலையங்கம் 9-9-2011

பக்தி என்னும் புற்றுநோய்!

கருநாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையில் அமைந்திருந்த பா.ஜ.க. அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சுரங்க ஊழல் புகார் மன்னர்களான ரெட்டி சகோதரர்கள் அமைச்சர்களாக இடம்பெற்றிருந்தனர்.

தொடக்கம் முதலே அவர்கள் பிரச்சினைக்குரியவர்களாக இருந்தனர். தொடக்கத்தில் முதலமைச்சர் எடியூரப்பாவுடன் பிணக்கு ஏற்பட்டது. கணிசமான எண்ணிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ரெட்டிகளின் பக்கத்தில் இருந்ததால், எடியூரப்பா மிஞ்ச முடியாமல் கெஞ்சும் நிலைக்குத் தள்ளப்பட்டு ரெட்டி சகோதரர்களுடன் சமாதானம் செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார்.

சுற்றுலா மற்றும் கட்டுமானத் துறை அமைச்சராக இருந்த ஜனார்த்தன ரெட்டி மீது லோக் அயுக்தா அறிக்கை குற்றப்படுத்திய நிலையில், அமைச்சர் பதவியை இழக்கும்படி நேர்ந்தது - இதன் தொடர்ச்சியாக அவர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 2009 ஆம் ஆண்டில் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி 45 கோடி ரூபாய் மதிப்பில் 30 கிலோ எடை கொண்ட வைரத்தினாலான கிரீடம் காணிக்கையாக அளித்தார். அதை மகிழ்ச்சி யோடு கோயில் நிருவாகிகள் ஏற்றுக்கொண்டு ஜனார்த்தன ரெட்டிக்குப் பரிவட்டம் கட்டிக் குதூகலித்தனர்.

ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் இருப்பதால், திருப்பதி கோயில் ஏழுமலையான் பக்தர்கள் ஊழல் பேர்வழி ஜனார்த்தன ரெட்டி ஏழுமலையானுக்குக் காணிக்கை யாக அளித்த வைர கிரீடத்தைத் திருப்பி அளிக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளனர்.

இதனை நினைத்தால் அழுவதா, சிரிப்பதா என்றே தெரியவில்லை. கோயில்களில் காணிக்கை செலுத்துப வர்கள் நாத்திகர்கள் அல்லர். பக்த சிரோன்மணிகள்தான் காணிக்கைகளைக் கொட்டுகின்றனர் - அப்படிக் கொட்டுபவர்கள் யோக்கியர்களா அல்லாதவர்களா என்ற அளவுகோல் வைத்துப் பார்க்க ஏதாவது ஏற்பாடு இருக் கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்!

திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள் திருத்தணி மாநாட்டில் ஒரு கருத்தைச் சொன்னார். கோயில் உண்டியலில் பணம் போடுவோர் காசோலையாகவோ (செக்), வரைவோலையாகவோதான் (டி.டி.) போடவேண்டும் என்று விதியை வையுங்கள். எத்தனைப் பேர் காணிக்கை செலுத்துவார்கள்? இப்பொழுது குவியும் அளவுக்குப் பணம் குவியுமா என்ற அர்த்தம் நிறைந்த கேள்வியை யதார்த்தத்தோடு கேட்டார்.

என்ன பாவங்கள், குற்றங்கள் செய்திருந்தாலும், அவற்றை மன்னிக்கவேண்டும் கடவுள் என்பதற்காகத் தானே காணிக்கையே செலுத்துகிறார்கள்?

இதன் பொருள் என்ன? காணிக்கை செலுத்துவோர் அத்துணைப் பேரும் பாவம் செய்தவர்கள்தானே - குற்றம் புரிந்தவர்கள்தானே?
ஊர் நன்றாக இருக்கவேண்டும், உலகம் நன்றாக இருக்கவேண்டும் என்று கோரி காணிக்கை செலுத்துபவர் களைக் காட்டுங்கள் பார்க்கலாம்.

விஷ ஊசி போட்டுக் கொன்று பணத்தைக் கொள்ளை அடித்தவன், கொள்ளை அடித்த பணத்தை எந்தெந்த கோயிலில் காணிக்கையாகப் போட்டேன் என்று சொல்லவில்லையா?

பிரபல கடத்தல்காரனான வரதன் முனுசாமி மும்பையில் கோளிவாடா என்ற இடத்தில் சிவன் கோயில் ஒன்றைக் கட்டவில்லையா?

அவன் சொன்ன செய்தி ஒன்றும் ஏடுகளில் வெளிவந்தது (4.10.1974).

நான் கடந்த மாதம் 15 ஆம் தேதி பம்பாயிலிருந்து புறப்பட்டு திருப்பதிக்குச் சென்று, தரிசனம் செய்துவிட்டு, பிறகு ராமேசுவரத்துக்குப் புனித நீராடச் சென்றேன். பிறகு சென்னைக்குத் திரும்பியபோது போலீசார் என்னைத் தேடுவதாகப் பத்திரிகையில் பார்த்தேன். உடனே போலீ சில் சரணடைந்துவிட்டேன் என்று கூறவில்லையா?

இதேபோல், எத்தனை எத்தனையோ எடுத்துக்காட்டு களை அள்ளிக் கொட்ட முடியும்.

காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி கொலைக்குற்றம் சாற்றப்பட்டு, வேலூர் சிறையில் இருந்தவர் ஆயிற்றே! அவர் மூன்றரை கிலோ எடையில் இதே திருப்பதி வெங்கடாசலபதிக்கு தங்கப் பூணூல் அணிவித்தாரே!

அவர் கொலைக் குற்றத்திற்காகக் கைது செய்யப் பட்டபோது எந்தப் பக்தராவது ஏழுமலையான் தோளில் அணிவிக்கப்பட்ட அந்தத் தங்கத்தாலான பூணூலை அறுத்து எறியவேண்டும் என்று சொன்னதுண்டா?

ஒழுக்கக்கேட்டை வளர்ப்பதே பக்திதானே! பிராயச் சித்தம்தானே - பாவ மன்னிப்புதானே - தீர்த்தங்களில் முழுக்குப் போடுவதுதானே?

நாணயமற்ற முறையில் கொள்ளையடித்த பொருள் களைக் காணிக்கையாகச் செலுத்தும்பொழுது, எந்தக் கடவுள் ஓடிவந்து தடுத்து நிறுத்தியது? கடவுள் நம்பிக்கை என்ற ஒன்று தனி மனிதனையும், சமூகத்தையும் அரித்துத் தின்னும் புற்றுநோய் என்பதை உணர்க!

-------------------"விடுதலை” தலையங்கம் 8-9-2011

0 comments: