Search This Blog

6.6.09

கிருஷ்ண ஜெயந்தி,தீபாவளி,பக்ரீத்தை அரசின் விடுமுறை நாட்களாகக் கொண்டாடலாமா?


சர்க்கார் விடுமுறை நாட்கள்


எந்த ஒரு மதத்தின் அடிப்படையிலும் அரசியலை நடத்தப் போவதில்லையென்றும், மதக்கலப்பற்ற அரசியலே இனி நடைபெறும் என்றும் பிரதமர் நேரு அவர்கள் பல தடவைகளில் வற்புறுத்திக் கூறியுள்ளார். இதை நாமும வரவேற்கிறோம். பல திறப்பட்ட ஜாதிமதங்களைக் கொண்ட ஒரு நாட்டில், யாதாயினும் ஒரு குறிப்பிட்ட மதத்தின் பேரால் அரசியலை நடத்த முற்பட்டால், உண்மையாகவே அத்தகைய அரசியல் ஒழுங்காக நடைபெற முடியாதென்பதையும், அதனால் ஒற்றுமைக்குப் பதிலாக நாட்டில் பிளவே ஏற்படுமென்பதையும் எவரும் மறுக்க முடியாது.

மதக்கலப்பற்ற அரசியலையே நடத்துவதென்ற முடிவுக்கு வந்த சர்க்கார், இன்னொரு விஷயத்தையும் யோசித்து, அதற்கான ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியது அவர்களின் கடமை மட்டுமல்ல, மதக்கலப்பற்ற அரசியலை நடத்துவதென்பதற்கு அப்போதுதான் முழு அர்த்தமும் ஏற்பட்டதாகும். அதாவது, மதக்கலப்பற்ற அரசியலை நடத்தும் ஒரு சர்க்கார், மதசம்பந்தமான விடுமுறை நாட்களை அரசியலின் பேரால் ஏற்படுத்தக் கூடாதென்பதாகும்.

மதக்கலப்பற்ற அரசியலை நடத்துவதாகச் சொல்லிக் கொண்டு, மத சம்பந்தமான விடுமுறை நாட்களை அரசியல் அதிகாரத்தின் பேரால் ஏற்படுத்துவது எந்த வகையிலும் நியாயமாகாது. மதசம்பந்தமான விடுமுறைகளை அதிகாரபூர்வமாக ஏற்படுத்தும் ஒரு சர்க்காரை, அது மதக்கலப்பற்ற அரசியலை நடதுகிறதென்று எவருமே ஒப்புக்கொள்ளமாட்டார்கள். அது மட்டுமல்ல, மத அடிப்படையற்ற அரசியலை நடத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு சர்க்கார். தன்னுடைய ஆதிக்கத்திற்குட்பட்ட பள்ளிக் கூடங்களில் மதசம்பந்தமான போதனைகளை வைத்து, அவற்றை மாணவர்களுக்குப் பாடமாகக் கற்றுக்கொடுக்கும்படி செய்வதும் மதத்தை அரசியலோடு தொடர்புபடுத்த அதனை அரசியற்பாதுபாப்பினின்றும் தனித்து நிற்கவிடாமல் செய்வதுமாகும்.

மதங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதில் சர்க்கார் கவலை எடுத்துக்கொள்ளுமாயின், அதனை யாரும் தடுப்பதற்கில்லை தடுக்கவும் மாட்டார்கள். மதங்கள் தோன்றிய காலத்திலிருந்து அவையெல்லாம் அரசியலாரின் பாதுகாப்போடுதான் இருந்து வருகின்றன. அரசியலாரின் பாதுகாப்போடு மட்டுமல்ல. அரசியல் நடவடிக்கைகள் அனைத்துமே மதத்தை அடிப்படையாக வைத்துத்தான் இதுவரை நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலைமாறி, இனி அரசியலானது மதக்கலப்பற்ற முறையில் நடத்தப்படவேண்டுமென்பதே இன்றைய சர்க்காரின் முடிவாகும்.

அரசியல் மதக்கலப்பற்றதாக இருந்தாலும், அந்த அரசியலின் கீழ் இருக்கும், மதங்கள் அரசியலாரால் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறப்படுவதையும் நாம் குற்றமாகக் கொள்ளவில்லை. நாட்டில் மதங்கள் இருக்கும்வரை, அவை எந்த வகையிலாவது பாதுகாக்கப்படத்தான் வேண்டும். ஒரு மதம் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் அளவுக்குச் சக்தியற்றதாயின், அதனைப் பாதுகாத்துக் கொடுப்பது அரசியலாரின் கடமையுமாகும். பண்டைக் காலங்களில்கூட மதங்கள் எல்லாம் அரசாங்கத்தின் பாதுகாப்பின் கீழ்தான் இருந்து வந்தன. அது மட்டுமல்ல, புதுமதத்தை உண்டாக்குவதும்கூட அந்தக் காலத்து அரசர்களின் வேலைகளில் ஒன்றாகவே இருந்து வந்ததென்பதைச் சரித்திரம் கூறுகின்றது. எனவே, மதங்களை அரசாங்கம் பாதுகாப்பதை நாம் தவறென்றோ, பாதுகாக்கக் கூடாதென்றோ கூறவில்லை.

ஆனால், மதக்கலப்பற்ற ஒரு அரசியலில், மத சம்பந்தமான விடுமுறைகளை அரசியலாரே முன்னின்று ஏற்படுத்துவதும, அந்த விடுமுறைகளை அனுசரிக்கும் முறைகளைச் சர்க்கார் அறிக்கைகள் மூலம் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவதும் அவசியமான தேவையான காரியங்களா என்பதே நம்முடைய கேள்வியாகும். உதாரணமாக, அண்மையில் நிகழ்ந்த சூரியகிரகண விடுமுறையின்போது, சர்க்கார் ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், மக்கள் சமுத்திர ஸ்நானம் செய்யப்போகும்போது, கையாள வேண்டிய முறைகளைக் குறிப்பிட்டிருந்ததோடு, கடலுக்குள் ஆளை விழுங்கும் சுறாமீன் இருபபதாகவும், அதன் வாயில் சிக்கிக்கொள்ள வேண்டாமென்றும் எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது. சூரியகிரகணத்தின்போது, அலைபோதி மக்களை ஆபத்துக்குள்ளாக்கும் கடலில் முழுகுமப்டி செய்வதும், கடலுக்குள் இருக்கும் ஆள்விழங்கிச் சுறாமீனுக்குத் தப்பித்துக் கொள்ளும்படியான எச்சரிக்கை செய்வதும், எவ்வளவு பயங்கரமான ஆபத்தென்பதை உணர்ந்தும், சர்க்கார் அதிலும் மதக்கலப்பற்ற அரசியலை நடத்தும் சர்க்கார், மதசம்பந்தமான சூரியகிரகண நாளை அரசியல் விடுமுறை நாளாகக் கொள்ளலாமா? அண்மையில் நிகழ்ந்த சூரிய கிரகண ஸ்நானத்தின்போது, கல்கத்தாவிலுள்ள பத்துப்பேர் சமுத்திரத்துக்கு இரையாகிவிட்டனர் என்று பத்திரிகைகளில் வந்த செய்தியும் சர்க்காருக்கு எட்டியிருக்குமென்றே நம்புகிறோம்.

இவ்வளவு ஆபத்துக்கள் நிறைந்த ஒரு விழாவைச் சர்க்கார் ஏன் அரசியல் விடுமுறை நாளாக்க வேண்டும்? இத்தகைய உயிருக்கே ஆபத்தை உண்டாக்கக்கூடிய பயங்கர விழாக்களை மக்கள் கொண்டாடக் கூடாதென்று சர்க்கார் ஏன் தடைசெய்யக் கூடாது?


மக்களின் உயிருக்கு ஆபத்தையும், பொருளுக்கு அழிவையும் உண்டாக்கக் கூடிய மத சம்பந்தமான பண்டிகை நாட்களை அரசாங்க விடுமுறை நாட்களாகக் கொள்ளாமல் இருப்பதே, அதிலும் மதக் கலப்பற்ற அரசியலை நடத்தும் சர்க்கார் இந்த வகையில் மிகவும் விழிப்பாக இருப்பதே, அந்தச் சர்க்கார் பொதுமக்களுக்குச் செய்யும் பேருதவியாகும். மத சம்பந்தமான பண்டிகை நாட்களை, அந்தந்த மதங்களில் பற்றுக்கொண்டவர்களின் தனிப்பட்ட விஷயங்களாக விட்டுவிடலாமேயன்றி, அவற்றை அனைவர்க்கும் பொதுவான விடுமுறை நாட்களாக்குவதை அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றாகச் சர்க்கார் மேற்கொள்ளக் கூடாதென்பதே எமது கருத்தாகும்.

இனி, அரசியல் விடுமுறை நாட்களாக, நாட்டின் விடுதலைக்காகவும், நாட்டின் பொது நன்மைக்காகவும் பாடுபட்டு அதற்காகவே உயிரையும் தத்தம் செய்த உத்தமர்களின் நினைவாக அவர்கள் மறைந்த நாட்களைக் கொண்டாடுவதே சிறந்த முறையும், எவரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுமாகும். அதோடு இந்நாடு சுதந்தரமடைவதற்காக அடிகோலப்பட்ட நாளையும், சுதந்திரம் கிடைத்த நாளையும் அரசியல் விடுமுறை நாட்களாகக் கொள்ளலாம். மாகாண சர்க்கார், அந்தந்த மாகாணங்களில் இருந்து மக்களின் பொது நன்மைக்காகப் பாடுபட்டு அதன் பொருட்டாகவே தங்கள் உயிரையும் தியாகம் செய்த பெரியார்களின் நினைவாக அவர்கள் மறைந்த நாட்களை அந்தந்த மாகாண அரசியல் விடுமுறை நாட்களாகக் கொள்ளலாம்.

இப்படிப்பட்ட சிறந்த நாட்களை அரசியல் விடுமுறையாகக் கொள்வதில் யாருக்கும் வெறுப்போ பொறாமையோ ஏற்பட்டு விடாது. எந்தச் சாதியாரும், எந்த மதத்தாரும் இத்தகைய விடுமுறை நாட்களை வரவேற்றுக் கொண்டாடுவார்களேயன்றி, அவை தங்களுக்குரிய விடுமறை நாட்களல்லவென்று ஒதுங்கி நிற்கமாட்டார்கள்.

உதாரணமாகத் தமிழ்நாட்டில் கிருஷ்ண ஜெயந்தி என்ற மத நம்பந்தமான விடுமுறை நாளை எடுத்துக்கொள்வோம். இந்த விடுமுறை நாளை இங்குள்ள முஸ்லீம்களோ, கிறிஸ்தவர்களே, கொண்டாடமாட்டார்கள். அது மட்டும்ல்ல, இந்து மதத்தின் ஒரு பிரிவினரான சைவர்கள்கூட இதனைத் தங்கள் திருநாளாகப் பெரும்பாலும் கொள்வதில்லை. ஆனால் இது அரசாங்க விடுமுறை நாளாகக் கொள்ளப்பட்டிருக்கிறது. கிருஷ்ண ஜெயந்தி என்ற மத நம்பந்தமான விடுமுளை நாளுக்குப் பதிலாகத் திருவள்ளுவர் பிறந்த நாள் அரசியல் விடுமுறை நாள் என்று ஏற்படுத்திக்கொண்டால், தமிழ்நாட்லுள்ள முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும், சைவர்களும், வைணவர்களும் அதில் கலந்துகொள்வார்கள். திருவள்ளுவர் எந்த ஒரு குறிப்பிட்ட ஜாதியையோ சாராமல், மக்கள் அனைவருக்கும் அவசியம் தேவையான பொது அறிவைப் புகட்டியவர். சிலர், சுயநலங்காரணமாக, அவருக்கு மதப்பூச்சுப் பூசி அவரை தங்கள் மதத்தைச் சேர்ந்தவராகப் பாத்தியம் கொண்டாடின போதிலும், அவருடைய நூல் (திருக்குறள்) மக்கள் அனைவருக்குமே பொதுவான இன்றியமையாத அறிவைப் புகட்டும் முறையில் அமைந்துள்ளது என்பதை எவரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

எனவே, கிருஷ்ண ஜெயந்தி போன்ற மத சம்பந்தமான விடுமுறை நாட்களை அந்த நாட்களைக் கொண்டாட விரும்பும் தனிப்பட்டவர்களின் விருப்பத்திற்கு விட்டுவிட்டு, ஜாதி மதங்களைத் தாண்டி நின்று, மக்கள் அனைவருடையவும் நன்மைக்காகப் பொதுநலப் பணிபுரிந்த பெரியார்களின் நாட்களையே அரசியல் விடுமுறைநாட்களாகக் கொள்ளவேண்டுமென்று சர்க்காருக்க யோசனை கூறுகின்றோம்
. இந்த யோசனையை மதக்கலப்பற்ற அரசியலை நடத்தும் முடியவோடுள்ள இன்றைய சர்க்கார் நடுநிலைமை தாங்கி ஏற்றுக்கொள்ளுமா அல்லது சொல் ஒன்றம் செயல் இன்னொன்றுமாகக் காரியங்களை நடத்திச் செல்லுமா என்பது இன்றைய நிலையில் முடிவு கட்டிக் கூற முடியாததாகவே இருக்கிறது.

ஏனெனில், மதக் கலப்பற்ற அரசியலையே நடத்தப் போவதாக எந்தப் பண்டித நேறு கூறினாரோ, அவரே சில நாட்களுக்கு முன், மதக் கலப்பற்ற அரசாங்கத்தின் முதல் கப்பலான ஜலஉஷாவை இந்துமத முறைப்படியுள்ள சடங்குகள் எல்லாம் குறைவறச் செய்து, அதனைக் கடலில் மிதக்கவிட்டார். ஜலஉஷா என்ற கப்பலுக்கு ஒரு குறிப்பிட்ட மதச் சடங்குகள் செய்யப்படுமானால், அதனை மதக்கலப்பற்ற ஒரு அரசாங்கத்துக்குச் சொந்தமான கப்பல் என்று எப்படிக் கூறமுடியும்? ஒரு குறிப்பிட்ட மதச் சடங்குகளைச் செய்தால்தான் தங்களுடைய அரசியல் ஒழுங்காக நடக்குமென்ற மனப்போக்கோடு உள்ளவர்களை, மதக்கலப்பற்ற ஒரு அரசியலை நடத்துகிறார்கள் என்றுதான் எப்படிக் கூற முடியும்? விஞ்ஞான முறைப்படி இயந்திர சாதனங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட ஒரு கப்பல், விஞ்ஞான முறைகளை முற்றிலும் வெறுக்கும் மதக் கோட்பாடுகளுடன் சடங்குகள் செய்யப்பட்டுக் கடலில் மிதக்கவிடப்படுமாயின், அந்தக் கப்பல் விஞ்ஞான உதவியால் மதக்கின்றதா அல்லது மதத்தின் மகத்துவத்தால் மிதக்கின்றதா என்பதனை மக்கள் எப்படி அறிந்து கொள்வது, விஞ்ஞானம் எந்த அளவுக்கு உச்ச நிலையை அடைந்தபோதிலும், மதத்தின் துணை பெறாவிடின், அது பயனற்றதாகும் என்பதனையன்றோ இந்நிகழ்ச்சி எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

இனி, அந்தக் காலத்தில் மத சம்பந்தமான மந்திரபலத்தால் புஷ்பவிமானம் என்ற பெயரோடு ஒரு வாவூர்தி பறந்ததாகப் புராண இதிகாசங்களில் சொல்லப்பட்டிருக்கிறதே! குதிரை, யானை முதலான விலங்குகள்கூடப் பண்டைக்காலத்தில் பறக்கும் இயல்பைப் பெற்றிருந்தனவாமே! பரமசிவன்கூடக் காளை வாகனத்தில் ககனமார்க்கமாக வந்து அடியவர்களுக்குக் காட்சியளித்ததாகவும் சொல்லப்படுகின்றதே! தம்பூரை மீட்டியபடியே நாரதர், வாகனம் எதுவுமின்றியே திரிலோக சஞ்சாரம் செய்தாரென்றும் கூறப்படுகின்றதே! இவையெல்லாம் மதத் தொடர்பான மகத்துவத்தால் நடைபெற்றதாகவே சொல்லப்படுகின்றது. ஆனால், அந்த அற்புத நிகழ்ச்சிகள் எல்லாம் இன்று நடைமுறையில் இல்லை. என்றாலும விஞ்ஞானத்தின் துணையினால், அந்நிகழ்ச்சிகள் எல்லாம் படக்காட்சிகள் மூலம் இன்று காட்டப்படுகின்றன. இந்த அற்புத மாறுதலை ஊன்றிக் கவனிக்கும்போது, விஞ்ஞான முறையில் அமைக்கப்பெற்ற ஜலஉஷா என்ற கப்பலை மத சம்பந்தமான மந்திரங்களை ஓதிக் கடலில் மிதக்கவிட்ட நிகழ்ச்சி, எத்துணைக் கேலிக்குரியதாக இருக்கிறது என்பதனை எண்ணிப் பாருங்கள். ஒரு காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் மத அற்புதங்கள், எல்லாம், பயனற்றவை பொருளற்றவை உண்மைக்கு நேர்மாறானவை என்று கருதப்பட்டுக் காலப்போக்கு எத்தனையோ மாறுதல்களை உண்டாக்கிய இந்நாளிலும், விஞ்ஞானத்தின் பேராற்றலை மறந்து, விஞ்ஞானத்துக்கும் மேலாக ஏதோ ஒன்று இருப்பதாகக் கருதி, அதன் துணைகொண்டே விஞ்ஞான முறைகளை உருவாக்க முடியும் என்ற முறையில் காரியங்களைச் செய்வது அறிவுடைமையாகுமா? இன்று வளர்ச்சியடைந்து வரும் விஞ்ஞானம் என்று சொல்லப்படும் மதக் கோட்பாடுகளுக்குக் கூட உயிர்ப்பிட்சை அளிக்கும் நிலை பெற்றுள்ளதைப் பார்த்த பின்னரும், விஞ்ஞானத்தை மெய்ஞ்ஞானத்தின் துணை கொண்டு இயக்க முயல்வது கேலிக் கூத்தேயாகும்.

எனவேதான் ஆண்டுகளாக நாம் அடிமைப்பட்டுக் கிடந்தோம். நம்முடைய அடிமைத்தளைமையை எந்த மதமும் அறுக்கவில்லை. பார்த்துக்கொண்டுதான் இருந்தன. எப்படி? உன்னுடைய தலைவிதி, நீ அடிமையாக இருக்கும்படி நேரிட்டது என்று கூறுவதுபோல் இருந்தன. மதம் ஏற்படுத்திய அந்தத் தலைவிதியை, நாட்டின் நலிவை உணர்ந்த தலைவர்கள், தங்கள் உழைப்பால் மண்டையில் அடித்து நொறுக்கினார்கள் தலை நொருங்கவே தளை அறுபட்டது அடிமை நிலை மாறிற்று சுதந்திரம் கிடைத்தது. ஆனால், ஓயா உழைப்பின் பயனாகவும், பல உத்தமர்களின் தியாகத்தினாலும் பெற்ற சுதந்திரத்தை ஏற்று நடத்திய மறக்க முடியாத ஒரு சரித்திர நிகழ்ச்சியை மதக்கோட்பாட்டின்படி நாள் கோள் பார்த்தே நடத்தினர் என்றால் . அதிலும ஒரு குறிப்பிட்ட மதக்கோட்பாட்டின்படி நல்ல நாள் பார்த்துச் சுதந்திர அரசாங்கத்தைத் தொடங்கினர் என்றால், மதக்கலப்பற்ற அரசியலையே இவர்கள் நடத்துகிறார்கள் என்ற எப்படிக் கூற முடியும்? மகாத்மா நமக்குச் சுதந்திரத்தை வாங்கித் தந்தது? மக்களின் உழைப்பன்றோ இன்று நமக்குச் சுதந்திரமாக வாழ்வதற்கு அடிகோலித் தந்தது.

இதனை மறந்து, மதங்களின் பெயரால் ஏற்படுததப்பட்ட ஆவணி அவிட்டத்தையும், கிருஷ்ண ஜெயந்தியையும், விநாயக சதுர்த்தியையும், மகாளய அமாவாசையையும், ஆயுத பூஜையையும், பக்ரீத்தையும், மொகரத்தையும், தீபாவளியையும், வைகுந்த ஏகாதசியையும், சிவராத்திரியையும், அரசின் விடுமுறை நாட்களாகக் கொண்டாடலாமா?

நாம் சுதந்திரம் பெறுவதற்குத் துணைபுரிந்த புரிட்டிஷ் பிரதமர் அட்லி பிறந்த நாளைக் கொண்டாடுவது என்று வைத்துக்கொண்டாலாவது, அதில் சிறிதளவாவது பொருள் இருக்கிறது என்று திருப்தியடைய முடியும். ஆனால், நாங்கள் அவ்விதம் செய்யமாட்டோம்; இந்நாட்டின் விடுதலைக்கு முழு விரோதியாக இருந்த தோழர் சர்ச்சில் நாளையே கொண்டாடுவோம் என்று எவரேனும் கூறினால், அது எவ்வளவு கேவலமாகவும், கிண்டலுக்குரியதாகவும், செவி கொடுத்துக் கேட்க முடியாததாகவும் இருக்குமோ, அது போன்றதே நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட நல்லவர்களின் நாட்களைக் கொண்டாடாமல், மத சம்பந்தமான நாட்களை அரசியல் விடுமுறை நாட்களாக்கிக் கொண்டாடுவது.

இருநூறு ஆண்டுகளாக நாங்கள் அடிமைப்படுகுழியில் வீழ்ந்து கிடந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த மதமே! நம்முடைய அரசியல் விடுதலைக்கு உதவி புரியாத மதமே! சமுதாய ஓற்றுமையைக் குலைத்து எங்களுக்கிடையே ஒட்ட முடியாத பிளவை உண்டாக்கிய மதமே! இருக்கின்ற சிறிதளவு ஒற்றுமையையும், அரசியலில் நுழைத்து குலைத்துவிடாதே! அரசியலைவிட்டுச் சற்று விலகியிருப்பதே நீ எங்களுக்குச் செய்யும் பேருதவியாகும் என்று கூறி, அதனை அரசியலோடு பிளைணக்காமலும், அரசியலின் பேரால் அதற்கு விடுமுறை நாட்களை ஏற்படுத்தி, மீண்டும் அரசியல் நெருக்கடிகளை உண்டாக்கி, அரிதிற் பெற்ற சுதந்திரத்தை இழக்கமல் இருப்பதையுமே, மத அடிப்படையின் மீது எழுப்பப்படாத இன்றைய அரசாங்கம் தன்னுடைய கடமையாகக் கொள்ளவேண்டும் என்று கூறுகின்றோம்.

இங்ஙனம் கூறுவதால், மதங்கள் இருக்கக் கூடாதென்றோ, அவை பாதுகாக்கப்பட வேண்டியவை அல்லவென்றோ நாம் கூறுவதாக எவரும் பொருள் கொள்ளக்கூடாது. மதம் மக்களுக்குத் தேவை என்று கருதப்படும்வரை அவை இருக்கவேண்டியதும், பாதுகாக்கப்பட வேண்டியதும் அவசியம் என்று கூறப்படுவதை நாம் மறுக்கவில்லை. ஆனால், அந்தப் பாதுகாப்பு முறை, ஒரு சிலருக்கு மட்டும் பயன்படக்கூடிய மத சம்பந்தமான பண்டிகை நாட்களை, நாட்டிலுள்ள அனைவருக்கும் பொதுவான விடுமுறை நாட்களாக்குவதால், மக்களிடையே பிளவையும் பகைமையையுமே உண்டாக்குவதாகும்.

ஒரு குறிப்பிட்ட மதத்தின் பெயரால் ஏதாவது ஒரு நாளை அரசியல் விடுமுறை நாளாக்கினால், அந்த நாளைக் கொண்டாடுவதில் சம்பந்தமற்ற மக்கள், அந்த நாளைக் கொண்டாடுபவர்கள் மீது வெறுப்புணர்ச்சியைக் காட்டவும், கலகம் உண்டாக்கவும் காரணமாக நின்று, அந்நாளை விடுமுறை நாளாக்கிய அரசாங்கத்துக்கே தொல்லை பொடுப்பதாகவும் முடியும். எனவே தான் மத சம்பந்தமான பண்டிகை நாட்களை அரசியல் விடுமுறை நாட்களாக்காமல், நாட்லுள்ள அனைவருக்கும் ஒன்றுகூடிக் கொண்டாடி மகிழக்கூடிய நாட்களையே, அரசாங்கம் தனது விடுமுறை நாட்களாகக் கொள்ளவேண்டுமென்று கூறுகின்றோம்.


---------------- அறிஞர் அண்ணா - திராவிடநாடு 23.04.1948

2 comments:

Unknown said...

//மதங்களின் பெயரால் ஏற்படுததப்பட்ட ஆவணி அவிட்டத்தையும், கிருஷ்ண ஜெயந்தியையும், விநாயக சதுர்த்தியையும், மகாளய அமாவாசையையும், ஆயுத பூஜையையும், பக்ரீத்தையும், மொகரத்தையும், தீபாவளியையும், வைகுந்த ஏகாதசியையும், சிவராத்திரியையும், அரசின் விடுமுறை நாட்களாகக் கொண்டாடலாமா?//

கொண்டாடக்கூடாது. அரசு கண்டிப்பான நடவடிக்கைகள் எடுத்தால் இது போன்றவைகள் தடுக்கப்படும்.

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி