Search This Blog

21.6.09

பக்தன் ஒரு மோசடி செய்தால், பகவான் இன்னொரு மோசடியைச் செய்கிறார்



சிக்கென...


அரசன் குதிரைகள் வாங்கக் கொடுத்த பணத்தைக் கொண்டு கோயில் கட்டிய அன்றைய அமைச்சர்தான் மாணிக்கவாசகர்.

அரசன் இட்ட கட்டளை ஒன்று - அமைச்சர் செய்ததோ இன்னொன்று - இதற்குக் காரணம் அமைச்சரை ஆட்டிப் படைத்த பக்தி என்னும் நோய்!

அரசனிடமிருந்து தன் பக்தனைத் தப்பிக்கச் செய்ய நரிகளைப் பரியாக்கிக் (குதிரையாக்கி) கொடுத்தானாம் சிவன்!

பக்தன் ஒரு மோசடி செய்தால், பகவான் இன்னொரு மோசடியைச் செய்கிறார் - பொழுது விடிந்தவுடன் அந்தப் பரிகள் எல்லாம் ஊளையிட்டு தன் உண்மையான முகவரியைக் காட்டிவிட்டனவாம்! நரிகளை நிரந்தரமாகப் பரியாக்கும் சக்தி பகவானுக்கு இல்லை என்பது இதன்மூலம் விளங்கவில்லையா?

தொடக்க முதல் கடைசி வரை எல்லாமே மோசடி, ஏமாற்று வேலை - இத்தியாதிக் கூட்டுத் தொகைக்குப் பெயர்தான் கடவுள், மதம், புராணம் இத்தியாதி... இத்தியாதி... சமாச் சாரங்கள்!

அந்த மாணிக்க வாசகனால் பாடப் பெற்ற தலம் தான் நாகப்பட்டினத்தையடுத்துள்ள சிக்கல்.
சிக்கல் என்ற பெயர் ஏன் வந்ததாம்? சிக்கல் என்னும் அந்த ஊரில் பால் குளம் ஒன்று இருந்ததாம். (தயிர் குளம், நெய்க்குளம் இல்லாமல் போய்விட்டதோ?).

வசிஷ்டர் அந்தப் பால் குளத்திலிருந்து வெண்ணெய்யைத் திரட்டி அதிலிருந்து சிவலிங்க உருவத்தைச் செய்தாராம்.

பூஜை முடிந்து அந்த வெண்ணெய்ச் சிவலிங்கத்தை எடுக்க வசிஷ்டர் முயன்றபோது, அது கல்லாக மாறி சிக்கெனப் பூமியைப் பிடித்துக் கொண்டதாம். விட்டலாச்சாரியாரின் மாயாஜாலம் சினிமாவெல்லாம் இவர்களிடத்தில் தோற்றுப் போகவேண்டும்; அவர்கூட இந்தக் கண்ணராவிப் புராணக் குப்பைகளிலிருந்துதான் தோண்டி எடுத்திருப்பாரோ, என்னவோ!
சிக்கென்று கல்லாக ஈசன் அமர்ந்துவிட்டதால் அந்த ஊருக்குச் சிக்கல் என்று பெயர் வந்ததாம். சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே! என்பது மாணிக்கவாசகரின் திருவாசகப் பாடல் வரி.


ஒவ்வொரு ஊருக்கும் இப்படி தலப் புராணங்கள் பாடி பக்தி வியாபாரம் வெகு ஜோராக நடக்க ஏற்பாடு செய்துகொண்டு விட்டனர்.

இந்த ஊர் கடவுளை விட அந்த ஊர் கடவுளுக்குப் பவர் அதிகம் என்று போட்டி போட்டுக்கொண்டு விளம்பரம் செய்வதுதான் கோயில் தலப் புராணங்கள்.

வேதாரண்யம் மண்ணை மிதித்தாலே பாவங்கள் போகும் - அந்த அளவுக்கு வேதபுரீஸ்வரருக்கு பவர் அதிகம் என்பார்கள் - திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரை நினைத்தாலே போதும்; பாவங்கள் பஞ்சாய்ப் பறந்து ஓடுமாம்!

வேதாரண்யத்துக்குப் போவதைவிட திருவண்ணாமலைக்கு வாருங்கள் என்று பக்தர்களுக்கு வலை போடுவதுதான் இதில் உள்ள சூட்சமம்!

பக்தி என்பது பிசினஸ் ஆகிவிட்டது என்று சும்மாவா சொன்னார் திருவாளர் காஞ்சி சங்கரன்!

------------------------- மயிலாடன் அவர்கள் 20-6-2009 "விடுதலை" இதழில் எழுதிய கட்டுரை

1 comments:

Unknown said...

//மாணிக்க வாசகனால் பாடப் பெற்ற தலம் தான் நாகப்பட்டினத்தையடுத்துள்ள சிக்கல்.
சிக்கல் என்ற பெயர் ஏன் வந்ததாம்? சிக்கல் என்னும் அந்த ஊரில் பால் குளம் ஒன்று இருந்ததாம். (தயிர் குளம், நெய்க்குளம் இல்லாமல் போய்விட்டதோ?).

வசிஷ்டர் அந்தப் பால் குளத்திலிருந்து வெண்ணெய்யைத் திரட்டி அதிலிருந்து சிவலிங்க உருவத்தைச் செய்தாராம்.

பூஜை முடிந்து அந்த வெண்ணெய்ச் சிவலிங்கத்தை எடுக்க வசிஷ்டர் முயன்றபோது, அது கல்லாக மாறி சிக்கெனப் பூமியைப் பிடித்துக் கொண்டதாம்//

புருடாவுக்கும் ஒரு அளவு வேண்டாமோ?
முட்டாள்களின் உளறல்களை எத்தனை நாளைக்குத்தான் கேட்பார்களோ?