Search This Blog

29.6.09

திராவிட தேசியமே - தமிழ்த் தேசியம்தான்!






14.6.2009 விடுதலை இதழின் ஞாயிறு இணைப்பில் திருமிகு.திருமாவளவன் எம்.பி., அவர்கள் அளித்த பேட்டியை கண்ணுற்றேன். அதில் திராவிடத் தேசியம். தமிழ்த் தேசியம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றுக்கு ஒன்று முரண்பட்டதல்ல என்ற சிறந்த கருத்தினைக் கூறியிருந்ததை வரவேற்கும் அதேவேளையில் இன்னும் தெளிவு பெறாதுள்ளவர்களுக்காக சில கருத்துகளை ஈண்டு எழுத முற்பட்டுள்ளேன்.

திராவிடம் என்ற சொல்லே தமிழ் என்ற சொல்லின் திரிபுதான் என அறிஞர் பெருமக்கள் பலரின் கருத்தாகும். தமிழ் - தமிள் - த்ரமிள - திரவிட - திராவிட என்று ஆயிற்று என்பர். இன்றும்கூட ஆந்திரநாட்டு தெலுங்கு மொழி அறிஞர்கள் பலர் தமிழ்மொழியை திராவிட பாஷா என்றும் தமிழ்நாட்டை திராவிட தேசம் என்றே குறிப்பிட்டு வருகின்றனர்.

அறிஞர் அண்ணா அவர்கள் பச்சையப்பன் கல்லூரியில் பயின்றபோது அக்கல்லூரியின் தெலுங்குப் பேராசிரியராக இருந்தவரும், பிற்காலத்தில் ஆந்திர மாநில கல்வித்துறையின் இயக்குநராகப் பதவி வகித்தவருமான திரு.ஜோதி சோமயாஜிலு அவர்கள் எழுதிய திராவிட பாஷா சரித்திரமு என்கிற தெலுங்கு நூலில் மிகவும் தெளிவாகவே இதை வலியுறுத்துகிறார்.

1950க்கு முன்னர் சென்னை மாநிலத்தின் பள்ளி, கல்லூரிகளில் வைத்திருந்த வரலாற்றுப் பாடநூல்களில் திராவிடர் என்போர் இந்தியாவின் பூர்வகுடிகள் என்றும், மத்திய ஆசியப் பகுதிகளில் இருந்து தங்களின் கால்நடைகளை மேய்ப்பதற்காக வேண்டி கைபர், போலன் கணவாய்களின் வழியாக இந்தியாவுக்கு வந்து தங்கிய ஆரியர்களுக்கும் - திராவிடர்களுக்கும் இடையே ஏற்பட்ட சண்டை காரணமாகத் திராவிடர்கள் வடஇந்தியாவை விட்டு விந்திய மலைக்குத் தெற்கேயுள்ள தென்னிந்தியாவுக்கு வந்து நிலைகொண்டனர் என்றும், அவர்கள் பேசிய மொழிதான் நாளடைவில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, எனப்பிரிந்து தனித்தனி மொழிகளாக பேசப்பட்டு வருகிறது என்றும் வடஇந்தியப் பகுதியை ஆரியவர்த்தம் எனவும், தென்னிந்தியாவை திராவிடதேசம் எனவும் குறிப்பிட்டு வந்துள்ளனர் என்றும் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

மேற்கண்ட வரலாற்று உண்மையானது திராவிட நாடு கோரிக்கையை எழுப்பிய திராவிட இயக்கத்திற்கு வலிவு சேர்த்துவிடும் என்ற அச்சம் காரணமாக அன்றைய ஆட்சியாளர்கள் திட்டமிட்டு, ஒருசில வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளார்கள் என்ற மேற்கோள் காட்டி திராவிடர்கள் இந்தியாவின் பூர்வீக குடிகள் என ஒருசில வரலாற்று ஆசிரியர்களும், இல்லை இல்லை திராவிடர்களும் ஆரியர் வருகைக்கு முன்னர் ஆப்பிரிக்கா மத்தியதரைக்கடல் பகுதிகளிலிருந்து வந்து இந்தியாவில் குடியேறியவர்கள் என்றும் கூறுகின்றனர். எது எப்படி இருப்பினும் ஆரியர் இந்தியாவில் குடியேறுவதற்கு முன்னரே திராவிடர்கள் இந்தியா முழுவதும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் என்று மட்டும் தெளிவாகிறது என்ற பைசல் முறை கருத்தைப் புகுத்திப் பார்த்தும் திருப்திப்படாமல் வரலாற்றுப் பாடம், - வரலாற்று விருப்பப் பாடம் என்பதை எல்லாம் கைவிட்டு சமூகப் பாடம் (social studies) எனும் அறிவியல்முறை பாடத்திட்டத்தை நிறைவேற்றினார்கள்.

அத்தகு பாடத் திட்டமேதான் இன்றளவும் நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

1950க்கு முன்னர் தனியே வரலாற்றுப் பாடங்கள் படித்த இன்று 70--, 80 வயது நிறைந்தவர்களாக உள்ள முதியவர்களில் பெரும்பாலோர் திராவிட சிந்தனையில் ஊறித் திளைத்தவர்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் இவைகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் எனும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர்கள். அத்தகையவர்கள் தென்னிந்தியா முழுமையிலும் இருந்த காரணத்தால்தான் தவிர்க்க முடியாமல் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிந்தபோதும், இணக்கமான முறையில், நட்பான முறையில் பிரிந்து செல்ல முற்பட்டனர். அப்போது எழுப்பிய மதராஸ் மனதே என்ற கோஷம்கூட பிசுபிசுத்து போனமைக்கும் திராவிடச் சிந்தனையே காரணம் எனக் கூறலாம்.

திராவிட இயக்கம் தமிழ்நாட்டில் ஏற்படுத்திய தாக்கத்தை இதர மொழி மாநிலங்களில் ஏற்படுத்த முடியவில்லை. மொழிப்பற்று மேலோங்கிவிட்ட காரணத்தால் இனப்பற்று குறைந்துபோனது மட்டுமல்ல. தனிஇனம் என்று நினைக்கும் அளவுக்குகூட சென்றுள்ளது என்பதையும் மறுக்கவில்லை. இதை மாற்ற எடுத்த பலரின் முயற்சிகள் போதிய பலன் அளிக்கத் தவறிவிட்டன.

ஆந்திர மாநிலம் குப்பம் நகரில் திராவிடப் பல்கலைக்கழகம், கேரளாவில் திராவிட மொழி ஆய்வு மய்யம் இவைகள் எல்லாம் ஏற்படுத்தியும்கூட எதிர்பார்த்த பலனைத்தர தவறிவிட்டது எனலாம். ஆராய்ச்சிவாதப் பிரதிவாதங்களில் திராவிட தேசியத்தை ஏற்றுக் கொண்டாலும்கூட மொழிப்பற்று மேலோங்கி விட்ட காரணத்தால் போதிய வலிவினைப் பெறாது உள்ளது.

இவற்றை எல்லாவற்றையும்விட, ஆந்திர, கர்நாடக, கேரள தேசத்திலே தற்போது வாழும் தலைமுறையினர் தங்கள் மொழியானது தமிழிலிருந்து பிரிந்து வந்தது என்கிற உண்மையை ஒத்துக்கொள்ள விருப்பம் இல்லாதிருப்பதும், தமிழுக்குத் தாய் அந்தஸ்தும் தங்கள் மொழிக்கு சேய் அந்தஸ்தும் கிடைத்துவிடுமே என்ற உள்ளுணர்வு தடுப்பதாலும் அப்படி ஒத்துக் கொள்வதானது தங்கள் மொழிக்கு இழுக்கு செய்வதாக ஆகிவிடுமோ என்ற அச்சம்கூட ஒரு காரணம்தான். அதனால்தான் திராவிட இனம் என்று அடையாளப்படுத்திக் கொள்ள தயக்கம் கொண்டுள்ளனர்.

அண்மையில் சென்னைப் பல்கலைக்கழக விழா ஒன்றில் பேசிய மாண்புமிகு அமைச்சர் பேராசிரியர் அன்பழகனார் அவர்கள் கூறிய மகத்தான கருத்தினை ஈண்டுகுறிப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன்.

தென்னிந்தியா முழுமையும் பரவி இருந்த திராவிடர்கள் அதாவது தமிழர்கள் அந்தந்தப் பகுதியில் பேசிய வட்டாரத் தமிழே உருமாறி, சிதைந்து, வடமொழியை ஏற்றுக்கொண்ட காரணத்தால் தெலுங்கு, கன்னடம், துளு, மலையாளம் எனும் மொழிகளாக மாறியது மட்டுமல்ல தனி அடையாளமும் படுத்திக் கொண்டது. அந்த மொழியிலுள்ள வடமொழிச் சொற்களை நீக்கிவிட்டுப் பார்த்தால் மீதம் இருப்பது தமிழாகவும், தமிழின் திரிபாகவும் அல்லது வழக்கொழிந்த தமிழ்ச் சொல்லாகவுமே இருக்கும் என்பது உண்மை

மறைந்த குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணன் அவர்களின் தெலுங்கு உரைகள் - _ எழுதிய தெலுங்கு நூல்கள் எல்லாம் அச்ச தெலுகு மொழியில் உள்ளவை. அச்ச தெலுகு என்பது வேறெதுவுமில்லை. தூய தமிழ்ச் சொற்களின் தாக்கம்தான். எனவே, திராவிட தேசியம் என்றாலும், தமிழ் தேசியம் என்றாலும் எல்லாம் ஒன்றுதான் என்று துணிந்து கூறலாம். தமிழ் என்று கூறும்போது ஆரிய ஊடுருவலுக்கு வாய்ப்பு உண்டு என்பதை எச்சரிக்கையுடன் கவனிக்கத் தவறக்கூடாது.

--------------------வேலை.பொற்கோவன் அவர்கள் 27-6-2009 "விடுதலை" ஞாயிறுமலரில் எழுதிய கட்டுரை

0 comments: