Search This Blog

24.6.09

உண்மையிலேயே பிரபாகரன் இறந்திருந்தால்...




உங்களுடைய குழந்தைகளுக்கு பிரபாகரன் பெயர் - வீட்டில் பிரபாகரன் படம் - தொல். திருமாவளவன் எம்.பி.

கலைஞர் முதலமைச்சராக இல்லையென்றால் ஈழத்தமிழர் பற்றி பேச முடியுமா? - சுப.வீரபாண்டியன்

வைகோவை, நெடுமாறனை கைது செய்தவர் ஜெயலலிதா. உங்களுடைய குழந்தைகளுக்கு பிரபாகரன் என பெயர் சூட்டுங்கள் என்று தொல்.திருமாவளவனும், கலைஞர் முலமைச்சராக இல்லையென்றால் ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி மேடை போட்டு பேச முடியுமா? என்று சுப.வீரபாண்டியன் அவர்களும் நேற்று திருச்சியில் நடைபெற்ற ஈழத்தமிழர் வாழ்வுரிமை மீட்பு இயக்கப் பொதுக்கூட்டத்தில் பேசி விளக்கவுரையாற்றினர்.

தொல்.திருமாவளவன் எம்.பி

விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி தமது உரையில் குறிப்பிட்டதாவது:

ஈழம் தொடர்பாக பல குழப்பங்களை பலர் திட்டமிட்டு பரப்பி வருகிறார்கள். இந்திய அரசில் ரா என்ற உளவுத்துறை முழுநேரப் பணியாக இருக்கும் நேரத்தில் தெளிவைப் பெற வேண்டிய நிலையில் இருப்பதால் சென்னை மதுரைக்கு அடுத்து மத்திய மாவட்டங்களை ஒருங்கி-ணைத்து திருச்சியில் இக்கூட்டம் நடைபெறுகிறது. காட்டுமிராண்டி ராஜபக்சே போர் முடிந்துவிட்டதாக அறிவித்துள்ளார். பிரபாகரன் இல்லை என்கிறார். ஆம் என்கிறது இந்திய அரசு. உண்மையில் தமிழர்களின் தலைவர் பிரபாகரன் தலைமையில் 5ஆம் போர் வெடிக்கும். ஊடக உத்திகளை பயன்படுத்தி பிரபாகரன் இறந்துவிட்டதாக இனவெறி அரசால் செய்தி பரப்பப்படுகிறது. ஈழ விடுதலைப்போரின் அடுத்த கட்டபோர்தயாரிப்பில் தலைவர் பிரபாகரன் உள்ளார் என்பதை மட்டும் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். சிங்களனை கட்டுப்படுத்தும் வலிமையை இந்திய அரசு இழந்துள்ளது உண்மை. ஏனென்றால் சர்வதேச சூழல் அதுபோல் உள்ளது. தமிழ்நாட்டில் வாழும் மக்கள் இந்தியர்களா- _ இல்லையா? இந்திய அரசுக்கு அந்த உணர்வு வேண்டும். உலக நாடுகள் எல்லாம் சிங்கள அரசுக்கு ஆதரவு தருவதால் இந்தியாவை சிங்களர் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. வெளியுறவுக் கொள்கையில் எந்த ஒரு மாநில முதல்வருக்கும் அதிகாரமில்லை என்பது குரலெழுப்பும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. பிரபாகரன் தமிழ்ப் பெயர் இல்லைதான்.

உண்மையிலேயே பிரபாகரன் இறந்திருந்தால்

சிங்கள அரசு வழங்கிய குறுந்தகடை போட்டுக்காட்டி, வடஇந்திய தொலைக்காட்சிகள் அனைத்தும் பிரபாகரன் போல் உருவம் என காட்டியது. எந்த ஒரு நிருபராவது நேரில் சென்று பார்த்தது உண்டா? நிரூபிக்க முடியுமா? பிரபாகரன் உடல் உண்மையாக இருந்தால் கொழும்பிலே கொண்டுவந்து உலக ஊடகங்களை எல்லாம் அழைத்து காட்டியிருக்க மாட்டார்களா? 30 ஆண்டுகளாக தேடக்கூடிய மேதகு பிரபாகரன் அவர்களை தேட எவ்வளவு சிங்களர்களின் பணத்தை செலவு செய்திருப்பீர்கள். 14 வயதிலே வீட்டிலே தன்னுடைய அடையாளங்களை யெல்லாம் அழித்து விட்டு ஒரு துப்பாக்கியோடு போராட்டக் களத்திற்கு வந்தவர். சர்வதேச ஊடகங்களை சந்தித்து உங்களைப் போல் தரைப்படை, கடல்படை, விமானப் படையோடு உங்களை நேருக்கு நேர் சந்தித்து போராடுவேன் எனக் கூறினாரே- _ அதுவரை யாராவது பிரபாகரன் முகத்தை அறிந்திருக்க முடியுமா? தமிழர்கள் தெளிவு பெற வேண்டும்.

வைகோ, நெடுமாறனை சிறையில் தள்ளியவர் ஜெயலலிதா

வைகோவை, ஈழப்பிரச்சினையை பேசியதற்காக சிறையில் தள்ளியவர் ஜெயலலிதா. நெடுமாறன் ஈழப்பிரச்சினையை பேசியதற்காக சிறையிலே தள்ளியவர் ஜெயலலிதா. விடுதலைப் புலிகளை தடைசெய்ய வேண்டும்என்றவர் ஜெயலலிதா. பிரபாகரனை பிடித்து வந்து மரண தண்டனை வழங்க வேண்டும் என்றார் அவர். ஜெயலலிதா ஈழம் என்ற சொல்லையே பயன்படுத்தக் கூடாது என்று சொல்லி இப்போது ஈழம் என்று சொல்பவர் ஜெயலலிதா.ஈழ விடுதலை அரசியல் நீர்த்துபோகவில்லை.

பிரபாகரன் என பெயர் சூட்டுங்கள்

உங்களுக்கெல்லாம் இரண்டு வேண்டுகோள் விடுகிறேன். அனைவரின் வீட்டிலும் பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு பிரபாகரன் என பெயர் சூட்டுங்கள். அனைவரின் வீட்டிலும் பிரபாகரன் படம் கண்டிப்பாக இருக்க வேண்டும். பிரபாகரனின் போராட்ட வரலாற்றை சொல்லி குழந்தைகளுக்கு விளக்க வேண்டும். பிரபாகரன் என்ற சொல் வடமொழியாக இருந்தாலும் தமிழ் மொழியாக இல்லை யென்றாலும் பரவாயில்லை. தமிழ் சமூகம் தலை நிமிர வைத்த சொல் பிரபாகரன் எனக் கூறி விளக்கவுரையாற்றினார்.

சுப.வீரபாண்டியன்

திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

சிங்கள இனவெறி அரசால் ஆண் பெண் என தனித்தனியாக தமிழர்கள் மின்சார வேலி போட்ட பட்டிகளில் பிரித்து வைத்து இருக்கின்றனர். தமிழினம் விருத்தி ஆகிவிடக்கூடாது பகல் வேளையில் கொட்டங்கச்சியில் ஒரு கஞ்சியும் மாலை ஒரு வேளை உணவும் கொடுக்கப்படுகிறது. இருப்பதற்கும் இறப்பதற்கும் அல்ல பிரபாகரன். அவர் ஒரு சித்தாந்தம்.தோளில் துப்பாக்கியும் கழுத்தில் குப்பியுடனும் வாழ்பவர்கள் இந்திய வம்சாவழி-யினரே. 884 மெட்ரிக் டன் அரிசி மருந்து குழந்தைகள் உணவுடன் நிற்கும் வணங்காமண் கப்பலில் இருந்து நிவாரண உதவிகள் போர் முடிவுற்ற சூழலில் மிச்சமிருக்கும் தமிழர்களுக்கு போய்சேர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈழத்தமிழர் பிரச்சினையில் இரண்டு அணியாக இருப்பதாக என்னிடத்திலே சில பேர் கேட்டார்கள். நாங்கள் ஓரணியில் போராட தயாராக இருக்கிறோம். ஏனென்று சொன்னால் எங்களுக்கு ஈழத்தமிழர்கள் மீதுள்ள கவலை. ஆகையால் எங்கள் கண்களுக்கு ஈழத்தமிழர்களுக்கு எதிரியாகத் தெரிவது சிங்கள வெறியன் ராஜபக்சே.

இணைந்து போராடாததற்கு காரணம்

நெடுமாறன், மருத்துவர் ராமதாஸ் போன்றோருக்கு எதிரியாகத் தெரிவது முதல்வர் கலைஞர். ஆகையால்தான் இணைந்து போராட முடியவில்லை. முதல்வர் கலைஞர் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஈழத்தமிழர்களுக்காக போராடுகிறார். அவர் உங்களுக்கு உண்மையாக போராடுவதாக தெரியவில்லை. போயஸ் தோட்டத்து அம்மையார் நடத்திய ஒரு நாள் உண்ணாநிலை நாடகம் உண்மையாகத் தெரிகிறதா? நாங்கள் நடத்தக்கூடிய போராட்-டங்கள்,கண்டன ஆர்ப்பாட்டங்கள் தான் நீங்களும் செய்கிறீர்கள். அதைத் தாண்டி என்ன செய்கிறீர்கள்? இங்கே வந்து ஈழத்தமிழர்கள் கூட்டத்திலே நெடுமாறன் என்ன பேசுகிறார் தெரியுமா தோழர்களே? தா.பாண்டியன், வைகோ போன்றோர் தேர்தலில் தோற்று போய் விட்டார்களாம் அதுதான் அவர்களுக்கு கவலையாக இருக்கிறது. ஏன் டி.கே.எஸ் இளங்கோவன், திருமாவளவன், கனிமொழி போன்றோர்களெல்லாம் பேசவில்லையா? சிதம்-பரத்திலே நீங்கள் யாரை ஆதரித்திருக்க வேண்டும்? திருமாவளவனையல்லவா ஆதரித்-திருக்க வேண்டும்? பொன்னுசாமி ஈழத்தமிழர் பிரச்சினையை நாடாளுமன்றத்திலும் பேசவில்லை. சிதம்பரத்திலும் பேசவில்லை அவரையல்லவா நீங்கள் ஆதரித்தீர்கள்.

கலைஞர் ஒருவர் இல்லையென்றால்

வணங்காமண் கப்பலில் உள்ள பொருள்களை வீணாகாமல் காப்பாற்றப் படவேண்டுமென முதல்வரிடத்திலே குறிப்பிட்ட போது உடனே அவர் சென்னார், நேற்றுதான் தலைவர் வீரமணி சொன்னார். நான் கடிதம் எழுதி நேரிலே தர அமைச்சரையும் அனுப்பியுள்ளேன் எனக் கூறி உடனே அமைச்சர் வேலுவை அழைத்து டில்லிக்கு தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பொருள்கள் பயனற்று போகாமல் காப்பாற்ற வேண்டும் எனக் கூறினார். கலைஞர் அவர்களை விட்டால் வேறு ஒருவர்ஆட்சியில் அமர்ந்தால் இந்த கூட்டமே நடைபெறாது என தமது உரையில் குறிப்பிட்டார்.

---------------------"விடுதலை" 24-6-2009

2 comments:

Unknown said...

//வணங்காமண் கப்பலில் உள்ள பொருள்களை வீணாகாமல் காப்பாற்றப் படவேண்டுமென முதல்வரிடத்திலே குறிப்பிட்ட போது உடனே அவர் சென்னார், நேற்றுதான் தலைவர் வீரமணி சொன்னார். நான் கடிதம் எழுதி நேரிலே தர அமைச்சரையும் அனுப்பியுள்ளேன் எனக் கூறி உடனே அமைச்சர் வேலுவை அழைத்து டில்லிக்கு தொலைபேசியிலே தொடர்பு கொண்டு பொருள்கள் பயனற்று போகாமல் காப்பாற்ற வேண்டும் எனக் கூறினார். கலைஞர் அவர்களை விட்டால் வேறு ஒருவர்ஆட்சியில் அமர்ந்தால் இந்த கூட்டமே நடைபெறாது//

இதை யார் சார் புரிந்து கொள்கிறார்கள். கலைஞரை குறைகூறுவதிலெயே குறியாய் இருக்காங்க்க சார்

தமிழ் ஓவியா said...

தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி