
நாத்திகமும் சமதர்மமும்
என்னை நாத்திகன் என்று சொல்லுகிறவர்கள் நாத்திகன் என்பதற்கு என்ன அர்த்தம் கொண்டு சொல்லுகிறார்களோ, அந்த அர்த்தத்தில் நான் நாத்திகன்தான் என்பதை வலியுறுத்திச் சொல்லு கின்றேன். நாத்திகத்திற்குப் பயந்தவனானால் ஒரு காரியமும் செய்ய முடியாது. அதிலும், சமதர்மக் கொள்கையைப் பரப்ப வேண்டுமானால் நாத்திகத்தினால் தான் முடியும். நாத்திகம் என்பதற்குத்தான் சமதர்மம் என்று பெயர்.
அதனால் இரஷியாவையும் நாத்திக ஆட்சி என்கிறார்கள். புத்தரையும் நாத்திகர் என்பதற்குக் காரணம். அவர் சமதர்மக் கொள்கையைப் பரப்ப முயற்சித்ததால்தான். நாத்திகம் என்பது சமதர்மக் கொள்கை மாத்திரம் அல்ல; சீர்திருத்தம் - அதாவது, ஏதாவது பழைய கொள்கைகளை மாற்ற வேண்டுமானால் அந்த மாற்றத்தையும் - ஏன், எவ்விதச் சீர்திருத்தத்தையுமே நாத்திகம் என்றுதான் யதாப்பிரியர்கள் சொல்லித் திரிவார்கள்.
எங்கு எங்கு அறிவுக்கு மரியாதை இல்லையோ, சமத்துவத்திற்கு இடம் இல்லையோ அங்கு எல்லாம் இருந்துதான் நாத்திகம் முளைக்கிறது. ஏனென்றால், இப்பொழுது வழக்கத்தில் இருக்கும் கொள்கைகளும், பழக்கங்களும் - எல்லாம் கடவுள் செய்ததென்றும், கடவுள் கட்டளைகள் என்றும், கடவுளால் சொல்லப்பட்ட வேதங்கள் சாஸ்திரங்கள் ஆகியவைகளின் கட்டளை என்றுதான் யதாப்பிரியர்கள் சொல்லுகிறார்கள்.
ஆகவே, நாம் இப்பொழுது எதை எதை மாற்ற வேண்டும் என்கின்றோமோ அவைகள் எல்லாம் கடவுள் செய்ததாகவும் அல்லது கடவுள் தனது அவதாரங்களையோ தனது தூதர்களையோ செய்யச் சொன்னதாகவுமே சொல்லப்படுவதால், அவைகளைத் திருத்தவோ, அழிக்கவோ புறப்படுவது கடவுள் கட்டளையை மீறின - அல்லது கடவுள் கட்டளையை மறுத்ததே ஆகும்.
உதாரணமாக, மக்களில் நான்கு சாதி கடவுளால் உற்பத்தி செய்யப்பட்டது என்று சொல்லப்படுகையில், மேற்படி சாதி ஒழிய வேண்டுமென்றால், அவன் கண்டிப்பாகக் கடவுளை மறுத்தோ, அலட்சியம் செய்தோதான் ஆகவேண்டும். எல்லா மதங்களும், மதக் கொள்கைகளும் கடவுளாலோ, அவதாரங்களாலோ, கடவுள் தன்மையாலோ ஏற்பட்டவை என்று சொல்லப்படுகையில் அம்மத வித்தியாசங்கள் ஒழிய வேண்டும் என்றும் மதக் கொள்கைகள் மாற்றப்படவேண்டும் என்றும் சொல்லும்போது, அப்படிச் சொல்லுபவன் அந்தந்தக் கடவுள்களை, கடவுள்களால் அனுப்பப்பட்ட தெய்வீகத்தன்மை பொருந்தினவர்களை அலட்சியம் செய்தவனேயாகின்றான். அதனால்தான் கிறிஸ்தவர் அல்லாதார் `அஞ்ஞானி’ என்றும், முகமதியரல்லாதவர் `காபர்’ என்றும், இந்து அல்லாதவர் `மிலேச்சர்’ என்றும் சொல்லப்படுகின்றனர்.
அன்றியும், கேவலம் புளுகும் ஆபாசமும் நிறைந்த புராணங்களை மறுப்பதே - இந்து மதக் கொள்கைப்படி நாத்திகம் என்றும் சொல்லப்படும்போது, சாதியையும் கர்மத்தையும் மறுப்பதை ஏன் நாத்திகம் என்று சொல்லமாட்டார்கள்?
சாதி, உயர்வு - தாழ்வு, செல்வம், தரித்திரம், எஜமான், அடிமை ஆகியவைகளுக்குக் கடவுளும், கர்மமும் தான் காரணம் என்று சொல்வதானால், பிறகு மக்களுக்கு விடுதலையும் முன்னேற்றமும் எங்கே இருக்கின்றன? கடவுளையும், கர்மத்தையும் ஒழித்தாலொழிய அதற்காக மனிதன் எப்படிப் பாடுபடமுடியும்? மேடும் பள்ளமும் கடவுள் செயலானால், மேட்டை வெட்டிப் பள்ளத்தில் போட்டுச் சமன் செய்வது கடவுள் செயலுக்கு விரோதமான காரியமே ஆகும். மனிதனுக்கு முகத்தில், தலையில் மயிர் முளைப்பது கடவுள் செயலானால், சவரம் செய்து கொள்வது கடவுள் செயலுக்கு எதிராகவே செய்யும் - அதாவது ஓரளவுக்கு நாத்திகமான காரியமும் ஆகும். பிச்சைக்காரனுக்குச் சோறு போடுவதும் நாத்திகமேயாகும். ஏனெனில், கடவுள் பார்த்து ஒருவனை அவனது `கர்மத்திற்காக’ப் பட்டினி போட்டிருக்கும் போது நாம் அவனுக்குச் சோறு போடுவது கடவுளுக்கு விரோதமான காரியமேயாகும். அதாவது, கடவுளை நம்பாத - கடவுள் செயலை இலட்சியம் செய்யாத தன்மையே ஆகும். இப்படியே பார்த்துக் கொண்டு போனால், உலகத்தில் ஆத்திகன் ஒருவனும் இருக்க முடியாது. ஆதலால், நம்மைப் பொறுத்தவரையில் நாம் பல மாறுதல் ஏற்பட விரும்புவதால் அவை கடைசியாய் நாத்திகமேயாகும். நாத்திகமும் சாஸ்திர விரோதமும், தர்மத்திற்கு விரோதமும் செய்யாமல் யாரும் ஒரு சிறிதும் உண்மையான சீர் திருத்தம் செய்ய முடியவே முடியாது.
------------------- தந்தைபெரியார் அவர்கள் திருச்சியில் 1-9-1930- இல் நிகழ்த்திய சொற்பொழிவிலிருந்து -- நூல்:-"சமதர்மம் சமைப்போம்" பக்கம் 45-47
0 comments:
Post a Comment