Search This Blog

19.6.09

உலக நாடுகள் -தூரப்பார்வை- கபோன்-காம்பியா-கானா -கிரீஸ்




கபோன் (Gabon)


ஆப்ரிக்க நாட்டின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள இந்நாட்டில் 1470 இல் போர்த்துகீசியர்கள் கால் வைத்தனர். பின்னர் 1593 இல் டச்சுக்காரர்கள் வந்தனர். 1630 இல் பிரெஞ்சுக்காரர்கள் வந்தனர். நாட்டை ஆண்டு கொண்டிருந்த மன்னர் முபாங்கே என்பவர் தம் நாட்டைப் பிரெஞ்சுக்காரர்களுக்கு 1839 இல் தாரை வார்த்துவிட்டார். 1910 முதல் பிரான்சு நாட்டின் ஆளுகைக்குட்பட்ட பிரெஞ்ச் பூமத்திய ஆப் ரிக்கா எனும் நாட்டின் ஒரு பகுதியாக
கபோன் ஆனது.

1960 இல் ஆகஸ்ட் 17 இல் இந்நாட்டுக்கு விடுதலை அளிக்கப்பட்டுக் குடியரசு நாடானது. அதிபர், பிரதமர் என்ற பதவிகள் உருவாக்கி ஆட்சி நடைபெறுகிறது.
2 லட்சத்து 67 ஆயிரத்து 667 சதுர கி.மீ. பரப்பளவுள்ள நாட்டின் மக்கள் தொகை 14 லட்சத்து 25 ஆயிரம் ஆகும். 55 விழுக்காட்டினர் கிறித்துவர்கள். மற்றவர்கள் மண்ணின் பூர்வமதக் கொள்கைக்காரர்கள். மக்களில் 63 விழுக்காட்டினர் படிப்பறிவு பெற்றவர்.

காம்பியா

மேற்கு ஆப்ரிகாவில் வடஅட்லாண்டிக் மாக் கடலின் ஓரத்தில் உள்ள இந்நாட்டின் எல்லையை பிரிட்டனும் பிரான்சும் வரையறுத்துத் தந்தன. 1889 இல் நடந்த எல்லை உடன்பாட்டுக்குப் பிறகு 1894இல் காம்பியா பிரிட்டனின் பாதுகாப்பில் அடைந்த நாடாகியது. 1965இல் நாட் டுக்கு விடுதலை வழங்கப்பட்டது. காமன்வெல்த் அவையில் இணைந்த நாடான இந்நாடு 1970 இல் குடியரசானது.

11 ஆயிரத்து 300 சதுர கி.மீ. பரப்பு உள்ள இந்நாட்டின் மக்கள் தொகை 17 லட்சம் ஆகும். 90 விழுக்காட் டினர் முசுலிம்கள். மீதிப் பேர் கிறித்துவர்கள்.

இங்கிலீசு ஆட்சி மொழி. 40 விழுக்காடு மக்கள் மட்டுமே படிப்பறிவு பெற்றவர்.
அதிபராக யாஹ்யா அம்மெ என்பவர் இருந்து வருகிறார். பிரதமர் என்ற பதவி கிடையாது.

ஜார்ஜியா


பொது ஆண்டுக் கணக்குக்கு நான்கு நூற்றாண்டுகள் முன்பாகவே தனி அரசாக விளங்கிய நாடு ஜார்ஜியா. 12 ஆம் நூற்றாண்டில் விரிவடைந்து டிரான்ஸ்காகசியன் எனப்படும் மத்திய ஆசியப் பகுதிகளைப் பெரும் பகுதியை உள்ளடக்கிய சாம்ராஜ்யமாகியது. 13 ஆம் நூற்றாண்டில் மங்கோலியர்கள் படையெடுத்து இம்மக்களின் பெரும் பகுதியை அழித்துக் கொன்றொழித்தனர். 18 ஆம் நூற்றாண்டில் ஜார்ஜியா நாடு ரஷ்யாவின் கட்டுப் பாட்டில் வந்தது. 1918 இல் ஜார்ஜியா தன் நாட்டு விடுதலையை அறிவித்தது.

1936 இல் சோவியத் நாட்டுடன் இணைந்த ஒரு குடியரசானது. 1991 இல் சோவியத் உடைந்த போது ஜார்ஜியா தனி நாடானது.

ரஷ்யாவுக்கும் துருக்கிக்கும் இடைப்பட்ட நாடான ஜார்ஜியாவின் பரப்பளவு 69 ஆயிரத்து 700 சதுர கி.மீ. ஆகும். இதில் 47 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இவர்களில் 84 விழுக்காட் டினர் பழமைவாதக் கிறித்துவர்கள். முசுலிம்கள் 10 விழுக்காடு. மீதிப்பேர் பலவித கிறித்துவப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள்.

ஆட்சி மொழியாக ஜார்ஜியன் மொழியும் பேச்சு மொழியாக ரஷியன், ஆர்மீனியன் மொழி களும்உள்ளன. நூற்றுக்கு நூறு கல்வி அறிவு பெற்றவர்கள். நாட்டின் அதிபராகவும் ஆட்சித் தலைவராகவும் குடியரசுத் தலைவர் மிக்கெயில் சாகாஷ் விலி என்பவர் 2004 முதல் இருக்கிறார்.

கானா (Ghana)

தங்கக் கடற்கரை என அழைக்கப்பட்ட கானா நாட்டின் பகுதிக்கு போர்த்துகீசியர்கள்தான் முதலில் வந்தனர். உள்ளூர் மக்களுக்கு உலகமே தெரியாத நிலையில் ஓரளவு நாகரிகம் பெற்றவர்களான அய்ரோப்பிய நாட்டினர் ஆப்ரிகக் கண்டத்தை ஊடுருவியது 15 ஆம் நூற்றாண்டில்.

ஆங்கிலேயர்களைத் தொடர்ந்து சுவீடன் நாட்டினரும் கானாவுக்கு வந்தனர். 1874 இல் கானா கடற்கரையைத் தங்கள் சாம்ராஜ்யத்தைச் சேர்ந்த குடியேற்ற நாடு என அறிவித்தது.
ஆப்ரிகக் கண்டத்தில் முதல் நாடாக கானா 1957 இல் விடுதலை பெற்றது. 6-3-1957 இல் விடுதலை பெற்ற இந்நாடு 1960 இல் குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது.
2 லட்சத்து 39 ஆயி ரத்து 460 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டின் மக்கள் தொகை 2 கோடியே 25 லட்சம் ஆகும்.

மக்களில் 63 விழுக் காடு கிறித்துவர்கள். முசுலிம்கள் 16 விழுக்காடு. ஆப்ரிக்கர்களின் பூர்வீக மத நம்பிக்கை கொண்டவர்கள் 21 விழுக்காடு. இங்கிலீஷ் ஆட்சி மொழி. மக்களின் பேச்சு மொழியாக ஆப்ரிக்க மொழிகளான அகான், மோஷி டகோம்பா, ஈவே, கா போன்றவை உள்ளன.

அதிபராகவும் ஆட்சித் தலைவராகவும் குடியரசுத் தலைவர் உள்ளார். குடியரசுத் துணைத் தலைவரும் உண்டு.


கிரீஸ்

பொது ஆண்டுக் கணக்குக்கு 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே, கற்காலத்தில் நாடாகவும், நாகரிகம் அடைந்த மக்களைக் கொண்டதாகவும் கிரீஸ் விளங்கியது. பொது ஆண்டுக் கணக்கு முந்தைய மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெண்கல உலோகக் காலத்தி லும் சிறந்து விளங்கிய நாடு கிரீஸ். அய்ரோப்பிய கண்டத்தில் நாகரிகம் மிகுந்த நாடாக கிரீஸ் விளங்கியது.

பழம் சிறப்பு வாய்ந்த கிரேக்க நாகரிகம் பொது ஆண்டுக் கணக்குக்கு 1200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 300 ஆண்டுகள் வரையிலும் உள்ள 900 ஆண்டுக் காலமும் நாகரிகம் சிறந்து ஓங்கி வளர்ந்த காலம். பொது ஆண்டுக் கணக்குக்கு முன்பு 323ஆம் ஆண்டில்தான் மகாஅலெக்சாண்டர் என்று வரலாறு கூறும் கிரேக்க மன்னர் மறைந்தார். இந்தக் காலத்தில் அரசியல், அறிவியல், தத்துவம், கலைகள், போன்றவை பெருத்த வளர்ச்சியுடனும் சிறப்புடனும் விளங்கிய காலம் அது. இவற்றின் தாக்கங்கள் தாம் அய்ரோப்பிய நாகரிகத்தை வடிவமைத்தன.

அந்தக் காலத்தைய பெரு நகரங்கள்தான் ராஜ்யங்களாக இருந்தன. நகர நாடு (City State) எனக் கருதப்பட்ட நாடுகளாக ஆதென்சும் ஸ்பார்ட்டாவும் விளங்கின. இவற்றைப் போலவே ரோம் நகரமும் விளங்கியது. பொது ஆண்டுக் கணக்குக்கு 431 ஆண்டுக்கும் 404 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலம் இது. இந்த இரு நகர நாடுகளும் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டதை வரலாறு பெலோப் பொன்னேசியப் போர் என பதிவு செய்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்டு வலுவிழந்திருந்த நாட்டை மாசிடோனிய மன்னர் இரண்டாம் பிலிப் வெற்றி கொள்ள வழி வகுத்துவிட்டது. இம்மன்னரின் மகன் தான் மகா அலெக்சாண் டர் என்று அழைக்கப் படும் மாவீரர்.

அதன் பின்னர், ரோமப் பேரரசின் ஒரு மாநிலமாக கிரீஸ் விளங்கியது. 1204 இல் கான்ஸ்டான்டிநோபில் (இன்றைய இஸ்தான் பூல்) வீழ்ச்சியடையும் வரை இந்த அடிமைத் தன்மை நீடித்தது. 1453 இல் கான்ஸ்டான்டி நோபில் துருக்கியிடம் வீழ்ந்ததால், கிரீஸ் துருக்கியின் மாநிலமாக ஆக்கப்பட்டது. 1821 இல் விடுதலை வேட்கை கிரேக்கர்களிடம் கிளர்ந்து எழுந்ததன் விளைவாக 1827 இல் கிரீஸ் விடுதலை அடைந்தது. பிரிட்டன், பிரான்சு, ரஷிய அரசுகள் அந் நாட்டின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தன. பவாரியாவின் ஓட்டோ இளவரசர் தற்கால கிரீசின் மன்னராக முடி சூடப்பட்டார்.

1973இல் கிரீசில் முடியாட்சி ஒழிக்கப்பட்டு குடியரசு நாடாக ஆனது. 1975 இல் புதிய அரசமைப்புச் சட்டம் எழுதி ஏற்கப்பட்டு கிரீசில் நாடாளுமன்ற ஜனநாயகம் ஏற்படுத்தப்பட்டு அதிபர் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

அதிபராக 2005 முதல் கரோலோஸ் பபவுலியாஸ் என்பாரும் பிரதமராக கான்ஸ்டான்டி னோஸ் கரமன்லிஸ் என்பாரும் தேர்ந்தெடுக் கப்பட்டுப் பதவி வகிக்கின்றனர்.
ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 940 சதுர கி.மீ. பரப்புள்ள இந் நாட்டின் மக்கள் தொகை 1 கோடியே எட்டு லட்சம் ஆகும். கிரீக் பழமைவாதக் கிறித்துவ மதத்தை மக்களில் 98 விழுக்காட்டினர் பின்பற்றுகின்றனர். முசுலிம்கள் ஒன்றரை விழுக்காடு உள்ளனர். கிரேக்கம் 99 விழுக்காடு மக்களால் பேசப்படுகிறது. அதுவே ஆட்சி மொழியாகவும் உள்ளது. இங்கிலீசும் பிரெஞ்ச் மொழியும் பேசப்படுகின்றன. 98 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்.

கிரெனடா

கரிபியன் கடலுக்கும் அட்லான்டிக் பெருங்கடலுக்கும் இடையில் கரிபியன் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்த கிரெனடா நாட்டின் பூர்வ குடிகள் அரவாக் இந்தியர்களும் கரிப் இந்தியர்களும் ஆவர். (இந்தியர்கள் என்றால் செவ்விந்தியர் - நாம் அல்ல.) 1672 ஆம் ஆண்டில் பிரெஞ்ச் படையினர் இந்நாட்டைப் பிடித்து 1762 வரை ஆட்சி செலுத்தினர். பிரிட்டன் படையினர் இந்நாட்டுக்கு வந்து போரிட்டுக் கைப்பற்றினர்.

1833 இல் இந்நாட் டில் அடிமைகளாக இருந்த கருப்பின மக்களை ஆங்கிலேயர் விடுவித்தனர்.அதன் பின்னர் 1885 முதல் 1958 வரை பிரிட்டிஷாரின் வின்ட்வார்ட் தீவுப் பிரதேசத்தின் தலை நகராக கிரெனடா விளங்கியது. 1967 இல் பிரிட்டனுடன் இணைந்த சுயாட்சி அதிகாரம் பெற்றநாடாக 1967 இல் ஆக்கப்பட்டது.

1974 பிப்ரவரி 7 இல் கிரெனடா விடுதலை பெற்ற நாடானது. 19-10-1983 இல் மார்க்சிஸ்ட் ராணுவக் கவுன்சில் ஆட்சி அதிகாரத்தைப் பிடித்தது. ஆறு நாள்களில் அமெரிக்கப் படைகள் இந்தத் தீவு நாட்டையும் வேறு ஆறு நாடுகளையும் தாக்கி, வளைத்துப் பிடித்து புரட்சித் தலைவர்களையும் கியூபா நாட்டு ஆலோசகர்களையும் கைது செய்தது. மறு ஆண்டு தேர்தல் நடத்தப்பட்டு ஆட்சி மாற்றப் பட்டது.

344 சதுர கி.மீ. மட்டுமே பரப்புள்ள இந்நாட்டின் மக்கள் தொகை 90 ஆயிரம். 53 விழுக்காட் டினர் ரோமன் கத்தோலிக்க மதத்தினர். புரொடஸ்டன்ட் பிரிவினர் 33 விழுக்காடு. ஆங்கிலி கன் பிரிவு கிறித்துவ மதத்தினர் 14 விழுக்காடு. இங்கிலீஷ்தான் ஆட்சி மொழி.
ஆட்சித் தலைவர் பிரிட்டிஷ் அரசி. அவரின் பிரதிநிதியாக கவர்னர் ஜெனரல் டேனியல் வில்லியம்ஸ் இருக்கிறார். பிரதமராக கீத் மிட் செல் உள்ளார்.

--------------------"விடுதலை" 18-6-2009

0 comments: