
அயர்லாந்து
12_ஆம் நூற்றாண்டில் கத்தோலிக்க மதத் தலைவரான போப் நன்கொடையாக பிரிட்டன் அரசுக்கு அளித்த நாடு அயர்லாந்து ஆகும். ஆனாலும் கூட 500 ஆண்டுகள் கழித்து 17 ஆம் நூற்றாண்டில்தான் அயர்லாந்தின் மீது பிரிட்டிஷ் முழு ஆட்சி அதிகாரத்தைச் செலுத்த முடிந்தது.
1801 ஆம் ஆண்டில்தான் அயர்லாந்தும் இங்கிலாந்தும் இணைந்ததற்கான சட்டம் நிறை வேற்றப்பட்டு, யுனைடெட் கிங்டம் ஆப் கிரேட் பிரிட்டன் மற்றும் அயர்லாந்து எனும் நாடு உருவானது. அதற்குப் பிறகு அயர்லாந்தின் பொருளாதார நிலை சீரழிந்தது. உருளைக் கிழங்குப் பஞ்சம் நாட்டை 1840 இல் பாதித்தது. பல ஆண்டுகளாக உருளைக் கிழங்கு விளைச்சல் பாதிக்கப் பட்டது. கிட்டத்தட்ட 20 லட்சம் பேர் அயர்லாந்தில் இருந்து வட அமெரிக்காவுக்கு இடம் பெயர்ந்திடும் நிலை ஏற்பட்டது.
1916 இல் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அயர்லாந்து நாட்டினர் கிளர்ச்சி செய்தனர். இதை வரலாறு, ஈஸ்டர் எழுச்சி எனப் பதிவு செய்துள்ளது. ஈஸ்டர் கலவரம என்றும் சிலர் கூறுவர். திங்கள்கிழமை ஈஸ்டர் பண்டிகையின் போது 14-1-1916 இல் டப்ளின் நகரில் நடந்ததால் இந்தப் பெயரே தவிர, யேசு உயிர்த் தெழுந்தார் எனக் கூறப்படும் பைபிள் கதைக்கும் கலவரத்திற்கும் தொடர்பில்லை. பிரிட்டிஷ் அரசு கலவரத்தை நசுக்கி, தலைவர்களைத் தூக்கில் போட்டது. ஆனாலும், அந்தக் கிளர்ச்சிதான் அயர்லாந்தில் பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவுக்கான தொடக்கம். 1919 இல் நாம் மட்டுமே எனும் பொருள் படும் சின் பெய்ன் (ளு குந) இயக்கம் டப்ளின் நகரில் அமைக்கப் பட்டது. இந்த இயக்கம் அயர்லாந்தின் விடுதலைக்குக் குரல் கொடுத்தது. அதே நேரத்தில் ஐ.சு.ஹ. எனும் (அய்ரிஷ் ரிபப்ளிகன் ஆர்மி) கொரில்லாப் போர்ப்படை உருவாகி பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராகப் போராடியது.
மற்றொரு திங்கள் கிழமை ஈஸ்டர் விழாவின்போது 1949 இல் அயர்லாந்து குடியரசானது. விடுதலைக் குரலை எழுப்பி 33 ஆண்டுகளுக்குப் பிறகு அதே நாளில் சாதித்துக் காட்டி வெற்றி பெற்றது அயர்லாந்து விடுதலை இயக்கம். அதிலும் ஒன்று. வட அயர்லாந்து புதிய குடியரசில் சேராமல், பிரிட்டனுடனேயே இருந்து கொண்டது. தெற்கு அயர்லாந்து மட்டுமே குடியரசு நாடானது. பிரிட்டிஷ் காமன்வெல்த்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது.
70ஆயிரத்து 280 சதுர கி.மீ. பரப்புள்ள இந்நாட்டில் 41 லட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் 88 விழுக்காட்டுக்கு மேல் ரோமன் கத்தோலிக்கர். 4 விழுக்காடு மக்கள் மதமற்றவர்கள். இங்கிலிஷ்தான் பெரும்பாலும் பேச்சுமொழி. அய்ரிஷ் மொழி பேசுவோர் குறைவு. அனைவரும் படிப்பறிவு பெற்றவர்கள் 6-12-1921 இல் விடுதலை நாள் கொண்டாடும் இந்நாட்டில் அதிபரும் ஆட்சித் தலைவராகப் பிரதமரும் உண்டு.
10 விழுக்காட்டினர் வறுமைக்கோட்டுக் கீழ் உள்ளனர். 4 விழுக்காட்டினர் வேலை கிட்டாதவர்கள்.
*********************************************************************************************************************
இத்தாலி
இத்தாலி நாட்டின் பகுதிகளில் எட்ருஸ்கன் நாகரிகம் பொது ஆண்டுக்கு முந்தைய நான்காம், மூன்றாம் நூற்றாண்டுகளில் செழித்திருந்தது. எட்ருஸ்கன் வமிச ஆட்சியை நீக்கி ரோமப் பேரரசு இத்தாலியை ஆண்டது. அவர்களையும் ஆட்சியில் இருந்து அகற்றியவர்கள் நாகரிகம் அற்றோர் என வரலாறு அழைக்கும் மக்கள். அவர்களின் படையெடுப்பு நான்காம், அய்ந்தாம் நூற்றாண்டுகளில் நடந்தது.
15 ஆம் நூற்றாண்டுக்கும் 18 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இத்தாலியைப் பல நாடுகள் ஆண்டு ஆதிக்கம் செலுத்தின. பிரான்சு, ரோமானிய அரசு, ஸ்பெயின், ஆஸ்திரியா எனப் பல நாடுகளும் அரசாட்சி செய்தன. ஆனாலும் கூட அய்ரோப்பிய நாகரிகத்தின் மய்ய இடமாக இத்தாலி விளங்கியதையும் வளர்வதையும் எவராலும் தடுக்க முடியவில்லை. மறுமலர்ச்சிக் காலம் எனக் கூறப்படும் காலப் பகுதியில் இத்தாலி பெரும் வளர்ச்சியை அடைந்தது.
1815 ஆம் ஆண்டில் நெப்போலியனின் ஆட்சி முடிவுக்கு வந்தது. அப்போது இத்தாலி சுதந்திரமான சின்னஞ்சிறு பகுதிகள் பல கொண்டதாக இருந்தது. இவற்றை ஒருங்கிணைக்கும் பணி தொடங்கப்பட்டு இத்தாலியைத் தீவுக்குறை (தீபகற்பம்) 1870 இல் ஒன்றானது. போப்பின் ரோம அரசும் இதில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. அரசியல் அமைப்புடன் கூடிய முடியாட்சியாக இத்தாலி உருப்பெற்றது.
இத்தாலியின் தலைவர் எனக் கூறப்பட்ட பெனிடா அமில்கர் ஆண்ட்ரியா முசோலினி எனும் பாசிசத் தலைவர் இத்தாலியின் பிரதமராக வந்தார். வயது குறைந்த பிரதமர் இவரே. இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியுடன் இத்தாலி சேர்ந்து கொண்டது. அச்சு நாடுகளில் ஒன்றானது. இந்தக் கூட்டு இரண்டு நாடுகளுக்கும் பாதகமானது என்பதை வரலாறு கூறுகிறது. இட்லர், முலோலினி என்கிற இவ்விரண்டு சர்வாதிகாரிகளுமே போரில் தோற்றுப் போய்ப் பிணமாகக் கிடந்தனர். அதிலும் முசோலினியின் செத்த உடல் அவன் வாழ்ந்த வீட்டின் வெளிக் கதவின் கம்பிகளில் தலைகீழாகக் கட்டித் தொங்கவிடப்பட்டுக் கிடந்தது.
ஜெர்மனி, இத்தாலி இரு நாடுகளுமே போரினால் பெரும் சேதத்தைச் சந்தித்தன. 1946 இல் இத்தாலி குடியரசு நாடானது.
இத்தாலித் தீவுக்குறைக்குப் பக்கத்தில் உள்ள சார்டினியா, சிசிலி ஆகிய தீவுகளையும் சேர்த்து, இந் நாட்டின் பரப்பு 3 லட்சத்து ஓராயிரத்து 230 சதுர கி.மீ. ஆகும். இங்கு வாழும் மக்கள் 5 கோடியே 82 லட்சம் ஆகும். இவர்களில் ரோமன் கத்தோலிக்கர்களே பெரும்பான்மை. மிகமிகச் சிறுபான்மையினராக புரொடஸ்டன்ட் கிறித்துவர்கள், யூதர்கள், குடியேறிய முசுலிம்கள் உள்ளனர்.
இத்தாலி மொழி பேசும் மக்கள் 99 விழுக்காட்டினர் கல்வியறிவு பெற்றவர்கள். அதிபரும் பிரதமரும் உள்ளனர். எட்டு விழுக்காடு மக்கள் வேலை கிட்டாமல் உள்ளனர். இசை, சிற்பம், ஓவியம், கட்டடம் முதலிய நுண்கலைகளில் சிறந்து விளங்கிய, விளங்கிக் கொண்டிருக்கும் நாடு என்றால் மிகையல்ல.
--------------------நன்றி:-"விடுதலை" 27-6-2009
0 comments:
Post a Comment