
பார்ப்பனர் தமிழரை வென்றது எப்படி? - 1
பார்ப்பனர் தமிழ்நாட்டிற்கு வந்து நாற்பது நூற்றாண்டுகளாகியும், தங்கள் தொகையைப் பெருக்கப் பல வழிகள் வகுத்தும், இன்றும் தமிழ்நாட்டு மக்கட்தொகையில் நூற்றுக்கு மூவராகவேயுள்ளனர். முதன்முதல் தமிழ் நாட்டிற்கு வந்த பார்ப்பனர் ஒருசிறு குழுவாரே யாவர். போர் செய்தற்குரிய தன்மைகளும், தமிழரை நாகரிகத்தால் வெல்லக் கூடிய உயர்வும் அவர்களுக்கிருந்ததில்லை. அவர்கள் தமிழரை வென்றதெல்லாம் வலக்காரத்தினாலேயே. அவ்வெற்றியும் ஒரு குறுங்காலத்தில் கூடியதன்று. அவர்கள் தமிழ் நாட்டில் மதவியலைக் கைப்பற்ற 2000 ஆண்டுகளும், அரசியலைக் கைப்பற்ற மற்றோர் 2000 ஆண்டுகளும் ஆயின. இவற்றுள், முன்னதற்குத் தமிழரின் கள்ளமின்மையும், பின்னதற்கு அவர்களின் அறியாமையும் காரணமாகும். விரலாற் சுட்டி யெண்ணக்கூடிய ஒரு சிறுகூட்டம். ஒரு மாபெரு நாட்டையும் வலக்காரத்தால் கைப்பற்றலாம் என்பதற்கு, தமிழ்நாட்டுப் பார்ப்பனீயத்தைப் போன்ற எடுத்துக்காட்டு இவ்வுலகத்திலேயே இல்லை.
தமிழர் வேறெவ்வெவ்வகையில் மடம் படினும், போரில் மடம் படுபவரல்லர். கி.பி.16ஆம் நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் அயலரசுகள் வந்து நிலைத்ததேயில்லை. அதன் பின்பும், தமிழர்க்குள் ஒற்றுமையின்மையாலேயே, அயலார் தமிழ்நாட்டைக் கைப்பற்ற நேர்ந்தது.
பார்ப்பனர் தமிழரை வென்ற வழிகள்
1. அரசரையடுத்தல்
பார்ப்பனர் தமிழ்நாட்டில் முதலாவது அரசரை வயப்படுத்தினால், பின்பு பொதுமக்கள் தாமே வயப்படுவர் என்று கருதி, அரசரிடத்தில் பாங்கரா யமர்ந்தனர்.
2. தவத்தோற்றம்
பார்ப்பனர் வைகறையெழுந்து ஆற்றிற் குளித்து, அதன் கரையிலமர்ந்து ஆரிய மந்திரங்களை நெடுநேரம் ஓதிக் கொண்டிருப்பதைத் தமிழர் கண்டு அவர்களை முனிவராகக் கொண்டனர்.
3. தமிழ் கற்றல்
பார்ப்பனர் தமிழைக் கற்றுத் தமிழாசிரியராகித் தமிழில் நூல்களை இயற்றினதினால், தமிழரால் மிக மதிக்கப்பட்டனர்.
4. வடமொழியில் நூலெழுதுதலும் தமிழ்நூல்களை மொழி பெயர்த்தலும்
பார்ப்பனர் ஆரிய மறைகளைத் தமிழர்க்கு மறைத்து வைத்து, நூலாக எழுதப்படாது வழக்கிலிருந்த பல தமிழ்நாட்டுக் கதைகளையும் செய்திகளையும் வடமொழியில் எழுதியும், நூல்களாக இருந்த பல தமிழ்க் கலைகளை வடமொழியில் மொழி பெயர்த்தும் வைத்துக் கொண்டு, அவ் வடநூல்களை முதனூல் களாகவும் தென்னூல்களை வழிநூல்களாகவும் காட்டினர்.
வடமொழியில் நூலெழுதுதலுக்கு ஹாலாஸ்யமான்மியத்தையும், மொழிபெயர்த்தலுக்குச் சங்கீத ரத்னாகரம் போன்ற இசை நூல்க-ளையும் காட்டாகக் கூறலாம்.
5. தற்புகழ்ச்சி
பார்ப்பனர் தங்களைத் தேவர் என்றும், பூசுரர் என்றும் தங்கள் மொழியைத் தேவமொழி யென்றும், தாங்கள் பிறப்பிலேயே உயர்ந்தவர் களென்றும், தங்களுக்கொப்பானவர் உலகத்தி லேயே இல்லையென்றும் கூறினதுமல்லாமல், நூல்களிலும் வரைந்து கொண்டனர்.
அவர்களின் வெண்ணிறமும் உரப்பியும் எடுத்தும் கனைத்தும் ஒலிக்கின்ற வடமொழி யொலி களும் அதற்குத் துணையாயிருந்தன.
6. மதத் தலைவராதல்
பார்ப்பனர் முருகன், திருமால் முதலிய தனித்தமிழ்த் தெய்வங்களுக்குச் சுப்பிரமணியன், விஷ்ணு முதலிய ஆரியப் பெயர்களையிட்டு, அவர்களை ஆரியத் தெய்வங்களாகக் காட்டி, அதற்கான கதைக ளையும் புனைந்துகொண்டு, தமிழ் மதாசிரியர்களாகித் தமிழரின் கோயில் வழிபாட்டையும் மங்கல அமங்கல வினைகளையும் நடாத்தி வரலாயினர்.
7. தமிழைத் தளர்த்தல்
பார்ப்பனர் தமிழரின் வழிபாடு, மங்கல அமங்கல வினைகள் முதலியவற்றை வடமொழியில் நடத்தியும், நூல்களையும் ஆவணங் களையும் வடமொழியிலெழுதியும், பார்ப்பனருள்ள ஊர்களில், ஊராண்மைக் கழக உறுப்பினர்க்கு ஆரிய மறையறிவைத் தகுதியாக விதித்தும், பல்வகையில் வடமொழியை வளர்த்துத் தமிழை வளர்க்காது போனதுடன், வேண்டாத வடசொற்களைக் கலந்து அதன் தூய்மையையுங் கெடுத்துவிட்டனர்.
8. பிரித்தாட்சி
பிரித்தல் என்னும் வெல்வழி ஆரியர்க்கே சிறந்த தன்மையாகும். ஒரு சிறுவகுப்பார் ஒரு பெருவகுப்பாரை வெல்வதற்கு அஃதொன்றே படையாம். பிரமா பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நால்வர்ணத்தாரையும் முறையே தமது முகம், மார்பு, அரை, கால் ஆகிய உறுப்புகளினின்றும் தோற்றுவித்தார் என்று கூறும்போதே, பார்ப்பனர் நம் நாட்டு மக்களைப் பிரித்துவிடுகின்றனர்.
கல்விக்கு வாயும், போருக்கு மார்பும், இருந்து விற்றலுக்கு அரையும் (அல்லது நிறுத்தலுக்குச் சீர்க்கோலின் நடு நாவும்) உழைப்பிற்குக் காலும் சிறந்த உறுப்புகள் என்பதே மேற்கூறிய அணியின் கருத்தாமாயினும், அதன் எழுத்தியற் (literal) பொருளையே உண்மையான பொருளாகப் பார்ப்பனர் கூறி வருகின்றனர்.
பிராமணர் முதலிய நால்வர்ணத்தார்க்கும் சிறப்புப் பெயர், அணி, தொழில், ஊன்றுகோல், உரிமை, தண்டனை, புதைக்கும் திசை முதலிய பல பொருள்களையும் வெவ்வேறாகவே மனு தருமங் கூறுகின்றது.
தமிழ்நாட்டிலுள்ள பல குலங்களும் தொழில் பற்றித் தொன்றுதொட்டு வழங்கி வருபவையே; ஆயினும், அவை கூடியுறவாடாதபடி செய்தது ஆரிய முறையாகும். இப்போது ஆதி திராவிடர் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்டோரை முதலாவது ஆரியர் மேலோரினின்றும் பிரித்ததை.
“மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம்
கீழோர்க் காகிய காலமும் உண்டே” (கற்பியல் 3)
என்னும் தொல்காப்பிய நூற்பாவாலறியலாம். இதில், மேலோர் என்றது அரசர், வணிகர், உழுவித்துண்ணும் உயர்ந்த வேளாளர் என் பாரை. அந்தணர் என்பார் துறவிகளாதலின். அவர்க்குக் கரணமில்லை. தாழ்த்தப்பட்டோர் இன்றும் தாங்களே மணவினை நடத்தி- வருகின்றனர்.
அக்கிரகாரங்கள் உள்ளவூர்களில் தாழ்த்தப்பட்டோர் மிகக் கொடுமையாகவும் பிறவூர்களில் அவ்வளவு கொடுமையில்லாமலும் நடத்தப்பட்டு வருவதை நோக்குக.
----------------தொடரும்...
-----------------------மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் எழுதிய நூல்:- “ஒப்பியன் மொழி”, - பக்கம் 43-51
1 comments:
//அவர்கள் தமிழ் நாட்டில் மதவியலைக் கைப்பற்ற 2000 ஆண்டுகளும், அரசியலைக் கைப்பற்ற மற்றோர் 2000 ஆண்டுகளும் ஆயின//
அய்யா , இதனை பேசிய பெரியோர் இதற்கு நூல் ஆதாரமோ அல்லது கல்வெட்டு ஆதாரமோ குடுத்தால் நன்றாக இருக்கும். ஏனெனில் சுமார் 4000 ஆண்டு வரலாற்றை சொல்லும்போது அது கி.மு.2000 ஆண்டுக்கு சென்று விடுகிறது, தமிழகத்தின் ஆதார பூர்வ வரலாறு சுமார் கி.பி.நான்காம் நூற்றண்டிலேயே தொடங்குகிறது, அதற்கு முன்பு உள்ள சங்க கால , சிலப்பதிகார காலத்து வரலாற்று ஆதாரங்கள், கல்வெட்டுகள், மிக மிக குறைவு.
மேலும் பார்பனர் தமிழரை வென்ற வழிகள் யாவும் , வரலாற்று ரீதியான ஆவணங்கள் / ஆதாரங்கள் இல்லாமலேயே உள்ளது, இதற்கும் புராணங்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.
இதை ஏன் எழுதுகிறேன் என்றால் பார்ப்பன எதிர்ப்பாக பேசும் போதும் அறிவியல் பூர்வமாக, ஆதார பூர்வமாக பேசினால்தான் அது பெரியார் வழியில் செல்வதாகும், இல்லை என்றால் 'பூமியை பாயாக சுருட்டி வைத்தது' போல இதுவும் ஒரு கற்பனை கதையாகவே இருக்கும்.
தமிழோவிய வலைத்தளத்தில், இம்மாதிரி ஆதார பூர்வமற்ற வரலாறுகள் வராமல் இருக்க வேண்டும்.
Post a Comment