

9.3.1946-ந் தேதி கூடிய சேலம் பார்ப்பன மாநாட்டின்போது சர் சி.பி. இராமசாமி அய்யர் நிகழ்த்திய தலைமையுரையில் கீழ்க்கண்டவாறு பார்ப்பனர்களுக்கு அறிவுறுத்திப் பேசினார். எந்தப் பத்திரிகையும் அய்யரின் பேச்சை சரியாகப் பிரசுரிக்கப்படாததன் காரணம் தெரிகிறது.
1.பிறப்பின் காரணமாக ஒருவன் பார்ப்பனன் ஆகமாட்டான். குணத்தாலும் செயலாலுமே பார்ப்பனத்வம் நிச்சயிக்கப்படும்.
2.வாழ்க்கையில் தனக்குரிய உயர்ந்த குறிக்கோளையும் தூய, மனத்தையும் துறந்து உத்தியோகத்துக்கும் பதவிக்கும் செல்வத்துக்கும், கசாப்புக் கடைக்காரருடனும், சாப்பாட்டுக் கடைக்காரனுடனும் போட்டியிடுவோன் தன்னைப் பார்ப்பனன் என்று சொல்லிக் கொள்ளுவது பித்தலாட்டமாகும்.
3.“வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தால் அரசியல் நிர்வாகத்தில் தகுதியும் வினைத் திட்பமும் (merit and effiency) கெடலாயின” என்ற பல்லவியை நீங்கள் பாடப்பாட பார்ப்பனரல்லாதாரின் மனதைப் புண்படுத்துவதுமன்றி அவர்கள் பகைமையையும் பெருக்கிக் கொள்ளுகிறீர்கள்.
4.பார்ப்பனரல்லாதாரை ஏளனம் செய்து அவரை எதிர்த்துப் பகைக்கின் பார்ப்பன இனம் சீரழிந்து, வேரறுந்து போகும்.
5.யூதர் ஆதியில் அறிவுத்துறையிலும் அன்பின் வழியிலும் வாழ்ந்து வந்தனர். பின்னர் பணம் தேடுபவர்களாகிக் கடன் கொடுத்து ஏழை மக்களைத் துன்புறுத்திப் பல துறைகளிலும் ஆதிக்கம் பெற்று விட்டமையால் பிறர் அவர்களிடம் பொறாமை கொண்டு அவர்களை ஒடுக்கத் தொடங்கினர். அதனால் அவர்கள் இன்று கொடுமையான தாழ்ந்த நிலைக்கு வந்து விட்டனர்! ஆதலால் பார்ப்பனர்கள் அந்நிலை எய்தாமல் இருக்க தங்களைக் காலத்திற்கேற்றபடி திருத்திக் கொள்ள வேண்டுவது அத்தியாவசியமாகும்.
6.நிலைமைக்கேற்பவும், சுற்றுச் சார்புக் கொப்பவும் தம்மைப் பக்குவப்படுத்திக் கொள்ளுவதே பார்ப்பனரது இயல்பென வரலாறு கூறுகின்றது. அம்மரபியல்பை இன்று மறப்பதும் துறப்பதும் பேதமையாகும்.
7.யாகங்களைச் செய்து புலால் உண்ணுதலும், சோமபானம் அருந்துதலும் நமது பண்டைக் காலத்து வழக்கம். தென்னாடு போந்தபின்னர் இந்நாட்டின் தட்ப வெப்ப நிலைமைக்கேற்ப நம்மவர் புலாலையும் குடியையும் அறவே நீக்கிவிட்டனர்.
8.வேதங்களின் கர்மகாண்டத்தையே பின்பற்றிவந்த நம்மவர் க்ஷத்திரியரிடம் சென்று ஆத்ம வித்தையையும் உபநிடதங்களையும் கற்றுக்கொள்ளவில்லையா?
9.நமக்கு எதிர்ப்பாகத் தோன்றிய பவுத்தம், ஜைனம் முதலிய மதங்களின் சீரிய கொள்கைகளைத் தழுவி நமதாக்கிக் கொள்ளவில்லையா?
10. மிகவும் முந்திய காலத்திலேயே நம்மவர் கடல் கடந்துசென்று பல யாகங்களைச் செய்து மன்னர்கள் பால் பரிசு பெறவில்லையா?
11.நமது இனத்தவராகிய நம்பூதிரிகள் மலையாள நாட்டுப் பழக்க வழக்கங்களுக்கேற்ப தமது ஒழுக் கங்களை மாற்றியமைத்துக் கொள்ளவில்லையா?
12.மகம்மதிய ஆட்சி நிலவியபோது நம்மவர்கள் அமைச்சர்களாகவும் அலுவலர்களாகவும் இருந்து ஆக்கம் பெறவில்லையா?
13.ஆங்கிலேயர் வந்தபின்னர் அவர் தம் மொழியைக் கற்று நாம் வாழவில்லையா?
14.இங்ஙனம் காலத்திற்கேற்ற கோலம் தாங்கிய நம்மவர் இன்று ஏன் நம் மரபியலைக் கைவிட வேண்டும்? அதனால் இன்று பார்ப்பனரல்லாதார் நமது ஆதிக்கத்தையும் செல்வாக்கையும் கண்டு பொறாமை கொண்டு நம்மை வெறுப்பது உண்மைதான்! நீங்கள் செய்யவேண்டுவது என்னவெனில்; உத்தியோகம் உங்களை நாடிவந்தால் வரட்டும்; இல்லையேல் நீங்கள் அதனை நாடவேண்டாம்.
15.உங்கள் பிள்ளைகளுக்குக் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் இடம் மறுக்கப்படுகிறதென்கிறீர்கள். அப்படியாயின் திரண்ட நிதியைச் சேர்த்துப் புதிய கல்லூரிகளையும், பல்கலைக் கழகங்களையும், கைத்தொழிற்சாலைகளையும் தொடங்குங்கள். அவற்றில் எல்லா மாணவர்களையும் ஜாதி, குல, மத வேறுபாடின் றிச் சேர்த்துக் கொள்ளுங்கள். பண்டைக் காலத்தில் நமது பொருளாதார நிலைமை தாழ்ந்திருந்தது; இன்று அப்படியில்லை. ஆதலால் பிறர் உதவியின்றியே பிராமணர்களே இதனைச் செய்யக்கூடும்.
16.நகத்தில் மண்படாமல் வாழும் பழைய வழக்கத்தைவிட்டு விவசாயம், கைத்தொழில் முதலிய துறையில் புகுந்து செயலாற்றுங்கள்.
17.பார்ப்பனர்களுக்குள் இருக்கும் பல பிரிவுகளும் ஒன்றுபட வேண்டும், ஒன்றுபட்டு உலகத்தோடு ஒட்ட ஒழுகி முன்னேறவேண்டும்.
18.பழைய பெருமையை மறந்து புதிய உலகத்திற்கேற்ப நடந்துகொள்ள உங்களுக்கு விருப்பமில்லையேல் இம் மாநாடு இக்கணமே கலைந்து விடலாம்.
19. நமது முன்னோர் இரத்தலை ஒரு தொழிலாகக் கொண்டிருந்தனர். முற்காலத்தில் கொடுப்போரும் விரும்பிக் கொடுத்தனர். பார்ப்பனரும் மகிழ்ந்து ஏற்றனர். இக்காலத்தோ, அன்பால் உந்தப்பட்டு பார்ப் பனருக்குக் கொடுப்போர் இலர் என்பது வெள்ளிடை. ஆதலால் எவரிடத்தும் யாசிக்க வேண்டாம். தன் கையே தனக்குத் துணையாகத் தன்மானத்தோடு வாழுங்கள்” என்று பார்ப்பனர்களுக்கு அறிவுறுத்திப் பேசினார். இதை எந்தப் பத்திரிகையும் வெளியிடவில்லை.
சர். சி.பி. அறிவுரையைக் கேட்டு இன்றுவரை பார்ப்பனர்கள் திருந்தியுள்ளனரா?
-----------------"குடிஅரசு", 16.3.1946
4 comments:
//சர். சி.பி. அறிவுரையைக் கேட்டு இன்றுவரை பார்ப்பனர்கள் திருந்தியுள்ளனரா?//
பார்ப்பனர்களே பதில் சொல்லுங்கள்
இதெற்கெல்லாம் பர்ப்பனர்கள் பதில் சொல்ல மாட்டார்கள் தோழர்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
நான் ஒரு அய்யர் வகுப்பை சேர்ந்தவன். மற்ற இனத்தாரை போல் இந்த இனத்தில் ஒற்றுமை என்பது அறவே கிடையாது. போட்டியும், பொறாமையும்தான் அதிகம். ஒரு பிராமின் இன்னொரு பிராமின்-ஐ கீழே தள்ளவே பார்ப்பான். எனவேதான் 'பார்ப்பான்' என்கின்றனரோ? எவனொருவன் அறிவிலும், தர்மத்திலும், பண்பாட்டிலும், பிறர் மனதை புண் படுத்தாத வகையிலும் சிறந்து விளங்குகிரானோ அவனே அந்தணன். நான் கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது தாவரவியலில் ஒரு நண்பர் பயின்று கொண்டிருந்தார். மிக நன்றாக பாடுவார். கர்நாடக இசையில் நல்ல தேர்ச்சி. தினமும் கோவிலுக்கு செல்லாமல் அவர் பொழுது விடிவதில்லை. தூய சைவ உணவு பழக்கம் உள்ளவர். எப்போதும் இசை, ராகம், மற்றும் அவை சம்பந்தமான விஷயங்களை மட்டுமே பேசிக்கொண்டிருப்பார். நான் அறிந்த வரையில் கல்லூரியில் எல்லோராலும் விரும்பப்படும் ஒரு நல்ல பண்பாளராயிருந்தார். ஒரு முறை என் வீட்டிற்க்கு அழைத்தேன். வரும் வழியில் அவர் சொன்னார் "உங்கள் வீட்டிற்க்கு வருவதற்கு என் கால் கூசுகிறது..." என்றார் நானும் திடுக்கிட்டு என் என்று கேட்டேன். அவர் சொன்னார் "ஏனென்றால் நான் பிறந்த வயிறு அப்படி". பிறகுதான் தெரிந்தது அவர் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்று. நான் இவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகவே கருதுபவனல்லன் என்று அவரிடம் சொன்னேன். மேலும் உயர் குலம் என்று கருதும் இனத்தில் பிறந்தும் "தன் ஊன் பெருக்க பிறிதின் ஊன் உண்ணும்" மனிதர்களும், குடி போதையில் மிருகமாக மாறும் ஜென்மங்களும் நிறைந்துள்ள இவ்வுலகில் இவர் தாழ்ந்த குலத்தில் பிறந்ததற்காக போய் வருந்துகிறார்? பிறப்பால் வருவதல்ல சிறப்பு. அது ஒருவன் நடத்தையால் கிடைக்க வேண்டும். அறவாழி 'அந்தணன்' என்று வள்ளுவர் சான்றோரையே குறிப்பிடுகிறான். எக்குலத்தில் பிறந்தவராயினும் குணத்தினால் மட்டுமே ஒருவன் அந்தணனாக முடியும். எல்லா குலத்திலும் நல்லவர்களும் இருக்கிறார்கள், தீயவர்களும் இருக்கிறார்கள். பாரதியார் என்னும் பார்பனர்தான் "அய்யரை பார்ப்பான் என்ற காலமும் போச்சே" என்று பாடியுள்ளார். கக்கன் போல் ஒரு நேர்மையாளரை, தூய மத பற்றாளரை காண முடியுமா? பார்பனர்கள் மட்டும் இல்லை (பார்பனர்களிடம் இன வெறி கிடையாது.. குண ஏழ்மைதான் உண்டு) ... பிற சாதிகளிலும் இன வெறி மிக அதிகம். உதாரணத்திற்கு கொங்கு மண்ணில் கவுண்டர் சமுதாயத்தினர், அவர் எவ்வளவு கல்வி அறிவு பெற்றவராயினும், பிற தேசம் சென்று அநுபாவம் பெற்றவராயினும் முதலில் ஒருவரை சந்தித்தவுடனே அவர் என்ன சாதி என்று தான் அறிய தலை படுவார். எனவே தற்போது உள்ள நிலையில் நாம் எல்லோரும் சாக்கடைகள்தாம். என்று நாம் மொழியால் தமிழர் என்று ஒன்றுபட்டு, ஓரினமாக செயல் படுகிறோமோ அன்றுதான் நமக்கு பெருமை. இல்லையெனில் 1000 வருடங்கள் முகலாயர்கள், 300 பிரிட்டிஷ் ஆண்டது போல் நம் சொந்த இனத்தை விட்டு கொடுத்து அயலவரிடம் நம்மை அடமானம் வைக்கும் நிலை இன்னும் தொடரும்.
Santhosh Iyer:
முதல் பாயிண்ட் அனைவரும் கட்டாயமாக ஏற்று கொள்ள வேண்டியது,
நான்காம் பாயிண்ட் நெத்தியடி
15 பாயிண்ட் நடைமுறைக்கு சரிப்படுமா என்று தெரியவில்லை
17ம் பாயிண்ட் நிறைவேறுவதில் இடியாப சிக்கல் இருக்கிறது
Post a Comment