
மத்திய அரசுக்குச் சொந்தமான உயர்கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களை நியமிக்கும்போது இடஒதுக்கீட்டைப் பின்பற்றத் தேவையில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபல் தெரிவித்துள்ள கருத்து சட்ட விரோதமானதாகும். எந்த அரசமைப்புச் சட்டத்துக்கு உண்மையாக நடந்து கொள்வதாக சத்திய பிரமாணம் எடுத்துக் கொண்டாரோ அதற்கு முரண்பட்ட வகையில் இப்படி ஒரு கருத்தினைக் கூறியிருக்கிறார்
.
அவர் கூறும் காரணம் மிகவும் விசித்திரமானதாகும். குறிப்பிட்ட சமுதாயத்திலிருந்து பேராசிரியர் பணிக்குத் தகுதி பெற்றவர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும்போதுதான் இடஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டுமாம்; இப்போது பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர்கள் போதிய அளவு இல்லாத நிலையில் இடஒதுக்கீடு தேவையில்லை என்கிறார்.
அவர் கூறும் வாதப்படியே எடுத்துக் கொண்டாலும் குறைந்த அளவு எண்ணிக்கையில் உள்ள தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டவர்கள் இப்போது உயர் கல்வி நிறுவனங்களில் எந்த அளவு எண்ணிக்கையில் இடம் பெற்று இருக்கின்றனர்? இவர் கூறுகிற கருத்தின்படி இப்பொழுது படித்திருக்கிற தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் அத்தனைப் பேருக்கும் இடம் கிடைத்திருக்க வேண்டுமே! ஏன் கிடைக்கவில்லை? இடஒதுக்கீடு இல்லாததாலும், தகுதி வரம்பை அதிக அளவுக்கு உயர்த்தி வைத்திருப்பதாலும் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாத கவசப் பாதுகாப்பை ஏற்படுத்தி வைத்துள்ளனர் என்பதுதானே யதார்த்தம்? இந்தக் குறைந்த எண்ணிக்கையுள்ளவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்ற வேண்டுமானால், இடஒதுக்கீடுக்கு வகை செய்தால் தானே சாத்தியமாகும்?
தாழ்த்தப்பட்டவர்களிலும், பிற்படுத்தப்பட்டவர்களிலும் போதிய எண்ணிக்கையில் பேராசிரியர் ஆவதற்குப் போதிய எண்ணிக்கை இல்லையாம். அப்படி இருப்பதற்கு என்ன காரணம்? அதைப்பற்றி மெத்தப் படித்த அமைச்சர் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
உயர் கல்வி நிறுவனங்களிலும் இடஒதுக்கீடுக்கு வகையில்லாமல் கதவை அடைத்துவிட்டு, உயர்கல்வி நிறுவனவங்களில் பேராசிரியர்களாகப் பணியாற்றிட அவர்களில் போதிய எண்ணிக்கை உள்ளவர் கிடையாது என்று சொல்லுவதைவிட நயவஞ்சகம் வேறு உண்டா?
மக்கள் தொகையில் பெரும்பான்மை எண்ணிக்கையுள்ளவர்களை ஏதோதோ காரணங்களைச் சொல்லித் தடை செய்து கொண்டே போனால் ஒரு காலக் கட்டத்தில் அதன் விளைவு விபரீதமாக வெடிக்காதா? வன்முறைக்குத் தீனி போடும் காரியத்தை முக்கிய பொறுப்புகளில் இருக்கிறவர்கள் செய்யலாமா?
மனிதவள மேம்பாட்டுத்துறை போன்ற அடிப்படையான பெரும்பாலான மக்களுக்கான துறைகள் உயர் ஜாதியைச் சேர்ந்தவர்களிடம் ஒப்படைக்கப்படக் கூடாது.
பிற்படுத்தப்பட்டவர்களுக்குத்தான் உயர் கல்விநிறுவனங்களில் கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான இடஒதுக்கீடு இல்லையே தவிர தாழ்த்தப்பட்டவர்களுக்குச் சட்டப்படி இருக்கத்தான் செய்கிறது. அது சரியானபடி அமல்படுத்தப்படவில்லை என்பது வேறு சங்கதி.
சட்ட ரீதியான இந்த நிலைக்கு மாறாக தாழ்த்தப்பட்டவர்களையும் சேர்த்து, உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் வேலைக்கு இடஒதுக்கீடு தேவையில்லை என்று பொறுப்பு வாயந்த அமைச்சர் ஒருவர் சொல்லலாமா?
தொடக்கத்திலேயே மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் இப்படி நடந்து கொள்வாரேயானால் இவரை நம்பி சமூக நீதியை எப்படி ஒப்படைக்க முடியும்?
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (UPA) ஒப்புக் கொண்டுள்ள திட்டத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சரிடம் இதுகுறித்து பிரதமர் விளக்கம் கேட்க வேண்டும்; அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கு கொள்ளும் சமூகநீதியில் அக்கறை உள்ள அமைச்சர்கள் இதுபற்றி வினா எழுப்பிட வேண்டும். முளையிலேயே கிள்ளாவிட்டால், அமைச்சர் அடுத்தடுத்து சமூகநீதிக்கு எதிரான திசையிலேயே செயல்படக் கூடிய ஆபத்து இருக்கிறது. இதனை அலட்சியமாகக் கருதிவிடக் கூடாது.
-------------------"விடுதலை"தலையங்கம் 25-6-2009
2 comments:
/தொடக்கத்திலேயே மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் இப்படி நடந்து கொள்வாரேயானால் இவரை நம்பி சமூக நீதியை எப்படி ஒப்படைக்க முடியும்?
அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு (UPA) ஒப்புக் கொண்டுள்ள திட்டத்திற்கு எதிராகக் கருத்துத் தெரிவித்துள்ள அமைச்சரிடம் இதுகுறித்து பிரதமர் விளக்கம் கேட்க வேண்டும்; அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கு கொள்ளும் சமூகநீதியில் அக்கறை உள்ள அமைச்சர்கள் இதுபற்றி வினா எழுப்பிட வேண்டும். முளையிலேயே கிள்ளாவிட்டால், அமைச்சர் அடுத்தடுத்து சமூகநீதிக்கு எதிரான திசையிலேயே செயல்படக் கூடிய ஆபத்து இருக்கிறது. //
தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடித்து தொங்கிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. தமிழக அமைச்சர்கள் உடனடியாக செயல்பட்டு சமூக நீதியை நிலை நாட்ட வேண்டும்.
எச்சரிக்கை செய்த விடுதலைக்கு நன்றி
தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
Post a Comment