Search This Blog

20.6.09

ஈழப் பிரச்சினையில் அநீதியாக நடந்துகொள்ளும் இந்திய அரசு இப்பொழுது என்ன செய்யப் போகிறது?


மேலும் பழி சுமக்க வேண்டாம்!

இலங்கைத் தீவில் போர் முடிந்துவிட்டது என்றால், அத்தீவின் அதிபர் ராஜபக்சே, இலங்கை இராணுவம் யாருடன் சண்டை போட்டது? யாரை வெற்றி கொண்டது? யாரை வெற்றி கொண்டதற்காக அரசு விடுமுறைவிட்டு கோலாகல வெற்றி விழாவைக் கொண்டாடுகிறது என்பது அறிவார்ந்த கேள்வியாகும்.

சொந்த நாட்டு மக்களை முப்படை கொண்டு தாக்கி அழித்த வீரத்தை மெச்சி இந்த விழாவா? இலங்கைத் தீவில் ஒரே ஒரு இனம்தான் இருக்கிறதா? சிங்கள இனத்தைத் தாண்டி தமிழர் என்கிற ஓர் இனமே இருக்கக் கூடாது என்கிற திசையில் முதல் கட்டப் போரை முடித்துவிட்டதாகக் கருதி குதுகலிக்கிறதா?

அப்பாவி மக்களைக் கொல்லாதே, போரை நிறுத்து என்று உலகின் பல நாடுகளும் வேண்டுகோள் விடுத்தாயிற்று - அய்.நா.வும் கேட்டுக்கொண்டது - எதையும் பொருட்படுத்தத் தயாராகவில்லை அந்தக் கொடுங்கோன்மை சிங்களப் பேரினவாத அரசு.

ராஜபக்சே சொன்னபடி போர் முடிந்துவிட்டதாகக் கருத்தில் கொண்டாலும், போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் போராளிகள் அல்லவே - போராளிகளைத்தான் முற்றிலும் ஒழித்து விட்டதாக மார் தட்டுகிறார்களே - இந்த நிலையில் போரின் காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அகதி முகாம்களில் அடைக்கலம் ஆன லட்சோபலட்ச மக்களுக்குத் தேவையான அடிப்படை நிவாரணப் பணிகளை செய்யவேண்டியது ஓர் அரசின் கடமையல்லவா?
போரினால் ஊனமுற்ற மக்களுக்கு மருத்துவ உதவியைச் செய்யவேண்டியது யார்? அரசுதானே - அதையும் செய்ய முன்வரவில்லை என்பதும், அம்மக்களுக்கு மருத்துவ உதவி செய்த மருத்துவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதும் எவ்வளவுக் கொடுமை!

பயங்கரவாதத்தை ஒழிப்பதுதான் எங்கள் நோக்கமே தவிர, ஈழத் தமிழர்கள் எங்களுக்கு எதிரிகள் அல்லர் என்று ஊர் மெச்ச எத்தனை முறை கூறியிருப்பார் இதே ராஜபக்சே!
அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இலங்கை அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு இருக்கவேண்டுமே!

போரைத்தான் தடுத்து நிறுத்த முடியவில்லை - உலக நாடுகளாலும், அய்.நா. மன்றத்தாலும்; நிவாரண உதவிகளைச் மேற்கொள்ள வைக்கக் கூட முடியாத நிலைதானா? குறைந்தபட்சம் இதைக்கூடச் செய்ய முடியவில்லையென்றால் மனித உரிமைகள்பற்றியும், மனித நேயம் பற்றியும் பேசிட எந்த நாட்டுக்கும், எந்த அமைப்புக்கும் தகுதியில்லாமல்தான் போய்விடும் - நம்பகத்தன்மையையும் இழக்கவே நேரிடும்.

அரசுதான் உதவி செய்யவில்லை; பாதிக்கப்பட்ட மக்களுக்கு மற்ற நாடுகள் உதவிட முன்வரும்போது அதனையாவது அனுமதிக்க வேண்டாமா?

கனடா, இங்கிலாந்து, பிரான்சு மற்றும் அய்ரோப்பிய நாடுகளில் வாழும் ஈழத் தமிழர்கள் உணவுப் பொருள்களைச் சேகரித்து, வாடகைக் கப்பல் ஒன்றையும் ஏற்பாடு செய்து (கேப்டன் அலி என்று அந்தக் கப்பலுக்குப் பெயர்) இலங்கைக்கு அனுப்பி வைத்தனர். 884 டன் உணவுப் பொருள்கள் அதில் உள்ளன.

அனுப்பப்பட்ட அந்தக் கப்பலை இலங்கைக் கடற்படை சோதனை செய்த பிறகும்கூட அந்த அத்தியாவசிய பொருள்களை கடும் பாதிப்புக்கு ஆளாகிக் கிடக்கும் அந்த மக்களுக்குக் கொடுக்க மனம் இல்லாமல் கப்பலை வெளியேற்றிவிட்டது. அந்தக் கப்பல் இப்பொழுது தமிழ்நாடு கடலோரப் பகுதிக்கு வந்துள்ளது.

இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அவசர அவசரமாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் கிருஷ்ணா அவர்களுக்கு, தமிழ்நாடு உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி அவர்கள் மூலமாகக் கடிதம் அனுப்பியுள்ளார்.
ஈழத்தில் பாதிக்கப்பட்டுக் கிடக்கும் பரிதாபத்திற்குரிய அந்த மக்களுக்குக் கப்பலில் உள்ள பொருள்கள் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற பன்னாட்டு அமைப்புகள்மூலம் வழங்கப்பட ஆவன செய்யவேண்டும். இதற்கு இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது காலத்தே மேற்கொள்ளப்பட்ட கடமை உணர்வு என்பதில் அய்யமில்லை.
இலங்கை அரசின் போர் நடவடிக்கைகளுக்கு இதுவரை ஒத்துழைப்புக் கொடுத்த நாடுகள்கூட, போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகும், அந்நாட்டின் குறிப்பிட்ட இன மக்களை பழி தீர்ப்பதில் இலங்கை அரசு எத்தகைய பேரினவாதத்துடன் நடந்துகொள்கிறது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டாமா?

கடந்த காலத்தில் செய்த தவறுகளுக்குக் கழுவாய் தேடிக்கொள்ளவாவது அந்த நாடுகளும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைத்திட குரல் கொடுப்பது அவசியமாகும்.

ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் தொடக்க முதலே அநீதியாக நடந்துகொள்ளும் இந்திய அரசு இப்பொழுது என்ன செய்யப் போகிறது? இந்தியா மட்டுமல்ல, உலகமே எதிர்பார்க்கிறது. மேலும் இந்தியா பழி சுமக்கவேண்டாம்!


---------------------"விடுதலை" தலையங்கம் 20-6-2009

2 comments:

ttpian said...

சரி:தேர்தல் சமயத்தில்,என்ன காரணத்திற்க்காக
,சோனிஅ கும்பலுக்கு ஓட்டு போட சொன்னீர்கல்?

v.pitchumani said...

all political parties including dk have no locusstandi speak for tamileelam. u r all good actors what else i have to say