Search This Blog
6.6.09
"இந்து நாகரிகமா- நயவஞ்சகமா?"
தீண்டாமை பற்றி அம்பேத்கர்
தீண்டப்படாதோரைப் பொறுத்தவரையிலும், அவமதிப்பும், வறுமையும் தான் அவர்களுடைய தலையெழுத்தாகக் கடந்த காலத்தில் இருந்தது. இந்து நாகரிகத்தின் கீழ் எதிர்காலத்திலும் அவர்களுக்கு விடுதலை இல்லை என்றே தோன்றுகிறது. இந்தத் தீண்டாமை அமைப்பில் அவமதிப்பும், வறுமையும் எந்த அளவில் உள்ளன என்பதை இந்தியர்கள் கூடப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை. ஒடுக்கப்பட்ட வகுப்பினர், பூர்வீகக் குடியினர் ஆகியோரின் குறைகளை விசாரிக்க 1928இல் பம்பாய் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழுவின் கருத்துரைகள் மிகவும் குறிப்பிடத் தக்கவை.
``அசுத்தமான மனிதன் அல்லது பொருள் வெறுப்பைத் தரும்’’. இந்தக் கருத்தில் புதுமை ஒன்றுமில்லை. இதன் அடிப்படையாகவே தீட்டு என்கின்ற கருத்து ஏற்படுகிறது. ஆனால் (தீண்டப்படாதவர்களுக்கு) இதனை நடை முறைப்படுத்துவதில் உள்ள பகுத்தறிவின்மைதான், இதில் வருந்தத்தக்க விசயமாகும். வெறும் தற்செயல் நிகழ்வாகிய ஒருவனுடைய பிறப்பைக் கொண்டே அவனை தீண்டப்படாதவன் என இது முத்திரைக் குத்துகிறது.
பிறப்பால் தீண்டப்படாதவனாகிய ஒருவன், தீண்டத் தகுதியானவன் எனக் கூறப்படும் ஒருவனைக் காட்டிலும் எவ்வளவுதான் மிகத் தூய்மையாக இருந்தாலும், தீண்டப்படாதவனாகவே இருக்கிறான். அவன் இந்தத் தலைவிதியிலிருந்து மீள எந்த வழியும் இல்லை.
ஒரு வைதீக இந்து, தன்னுடைய மதக்கருத்து களிலிருந்தும் வாழ்க்கை முறையிலிருந்தும் வாழ்க்கை பற்றிய கண்ணோட்டத்திலிருந்தும், முகம்மதியர்களும், பார்சிகளும், கிறித்துவர்களும் முரண்பட்டிருந்தாலும் அவர்களைத் தீண்டத் தகுதியுள்ளவர்களாகவே நடத்து கிறான்.
இதுதான் இதில் வியப்பானது. இதனால் தீண்டப்படாதவர்களின் நிலை மேலும் படுமோசமாகியுள்ளது. வைதீக இந்துக்களின் இந்த ஓரவஞ்சனையின் காரணமாக, அதனுடைய தாக்கத்தினால், குறிப்பாகக் கிராமங்களில், முகம்மதியர்கள், பார்சிகள், கிறித் தவர்கள் ஆகியோரும்கூட தங்களுடைய மதப் போதனை வேறாக இருந்தாலும் (தீண்டப்படாதவர்களிடத்தில்) தீண்டாமையைக் கடைப்பிடிக்கிறார்கள். தீண்டாமை தனிமையையும் தாழ்ச்சியையும் உள்ளடக்கியுள்ளது என்ற வகையில் தீண்டாமையின் தீமைக ளாக அவற்றைச் சுட்டிக் காட்ட நாம் மிகவும் அக்கறைப்படுகிறோம்.
ஆனால் தீண்டாமை என்ற வகையில் அதற்கே உரிய குறிப்பிடத்தக்க தீமைகளும் இருக் கின்றன. தீண்டாமை அதனுடைய நீட்சியின் எல்லையில், வைதீக இந்து சமூகத்தில், அரசாங்கச் செலவில் நடைபெற்றுவரும் பொதுப்பள்ளிக் கூடமேயானாலும், அதனுள் நுழைய விடாமல் (தீண்டப்படாதோரை) அது தடுக்கிறது. பொதுநிதியிலிருந்து பராமரிக்கப்படும் பொதுக்குடிநீர்ப் பகுதியேயெனினும் அதனின்றும் நீர்எடுக்க விடாமல் தடுக்கிறது. இக்கண் ணோட்டத்திலிருந்து பார்த்தால் தீண்டாமை வெறும் சமூகச் சிக்கல் மட்டும் அல்ல. இது மிக உயரிய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் சிக்கலுமாகும். குடிமக்களின் குடி உரிமைகள் பற்றிய அடிப்படையையே இது பாதிக்கிறது.’’
இது தீண்டத்தகாதோரின் துயரங்களைப் பற்றி மட்டுமே பேசுகிறது. ஆனால் இத்தகைய ஓர் அவமானகரமான வாழ்க்கைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் தீண்டப்படாதவர்கள் மட்டுமல்ல. இதை விட மோசமான நிலையில் உள்ள வர்க்கங்களும் உள்ளன. தொட்டால் மட்டுமே தீட்டு உண்டாக்கக் கூடியவர்கள் தீண்டப்படாதவர்கள். ஆனால் குறிப்பிட்ட தூரத்திற்குள் வந்து விட்டாலே தீட்டு உண்டாக்கக்கூடிய மக்களும் இருக்கிறார்கள். இவர்கள் நெருங்கத்தகாதவர்கள் என அறியப்படுகிறார்கள். இந்த நெருங்கத்த காதவர்களிலும் மோசமான நிலையில் உள்ள மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் பார்வையில் பட்டாலே தீட்டுப் பட்டுவிடும். இவர்கள் பார்க்கத்தகாதவர்கள் என அறியப்படுகிறார்கள்.
நெருங்கத்தகாதவர்கள் வகுப்பைச் சேர்ந்த நாயாடிகளைப் பற்றி கீழ்க்காணுமாறு கூறப்படு கிறது.
``நாய்களைச் சாப்பிடும் இவர்கள் இந்துக்களிலே மிகவும் கீழ்ச் சாதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் இரைந்து கூவி பிச்சைக் கேட்பதில் மிகவும் விடாப்பிடியர்கள். நடந்து செல்பவர்களையும் வண்டி ஓட்டிச் செல்பவர்களையும், படகில் செல்பவர்களையும் ஒரு குறிப்பிட்ட அளவு தூர இடை வெளியில் பல மைல்களுக்கும் பின் தொடர்ந்து செல்வார்கள். ஏதாவது அவர்களுக்குக் கொடுக்கப்படுவதென்றால் அது கீழே வைக்கப்படும். பொருளை ஈந்தவன் போதிய தூரம் சென்ற பின் அதைப் பெறுபவன் பணிவுடன் முன் வந்து எடுத்துக் கொள்வான்.
இவர்களைப் பற்றி தர்ஸ்ட்டன் கூறுவதாவது: ``சோரனூரில் நான் ஆய்வு செய்த அடிமைகள் (அதாவது நாயாடிகள்) மூன்று மைல்களுக்குள் வாழ்ந்தாலும், காலங்காலமாக வரும் தீட்டின் காரணமாக நீளமான ஆற்றுப் பாலத்தின் மீது நடந்து செல்வதைத் தவிர்க்கும் பொருட்டு பல மைல்களைக் கொண்ட சுற்றுப் பாதையைப் பயன்படுத்துவர்.’’
-----------------அண்ணல் அம்பேத்கர் - "இந்து நாகரிகமா- நயவஞ்சகமா?" என்ற நூலிலிருந்து
Labels:
அம்பேத்கர்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment